Published : 27 Oct 2014 09:16 AM
Last Updated : 27 Oct 2014 09:16 AM
பயங்கரவாதிகள் கேள்விப்பட்டிருக்கிறோம். பாலியல் பயங்கர வாதிகளை அறிவீர்களா? எங்கேயோ இருப்பவர்களல்ல அவர்கள். உங்கள் பக்கத்து வீட்டிலோ, பக்கத்துத் தெருவிலோகூட அவர்கள் இருக்கலாம்.
மதுவின் மிக மோசமான எதிர்மறைத் தாக்கங்களில் இதுவும் ஒன்று. மனநல மருத்துவம் இவர்களை ‘மிகவும் அபாயமான பாலியல் பழக்கங்களைக் கொண்டவர்கள்’ என்கிறது.
மகள், தாய், தங்கை போன்ற ரத்த உறவுகளிடமே தங்கள் பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்துவது, வரைமுறையற்ற பாலியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது - வக்கிரமான இந்தப் பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களே பாலியல் பயங்கரவாதிகள். காவல் துறையினர் சொல்லும் தகவல்களைக் கேட்டால் திருவாரூரில் தீபாவளி அன்று மது அருந்தி இறந்துபோன ராமரத்தினமும் இந்த வகையைச் சேர்ந்தவரோ என்று தோன்றுகிறது.
தந்தையே ஓநாயாக…
ராமரத்தினத்துக்கு நான்கு பிள்ளைகள். மூத்த மூன்று பெண் பிள்ளைகளும் தலைக்கு மேல் வளர்ந்தவர்கள். திருமணத்தை நெருங்கும் வயதில் இருப்பவர்கள். படித்த, பக்குவப்பட்ட பிள்ளைகள். ஆனால், ராமரத்தினத்துக்குத்தான் கொஞ்சமும் பக்குவம் இல்லாமல் போய்விட்டது. வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு யாரேனும் நண்பர்களுடன் வீட்டில் மது அருந்துவார்களா? சீட்டு விளையாடுவார்களா? “மீன் வறுத்துக்கொண்டு வா… ஆம்லேட் போட்டுக்கொடு” என்று விதவிதமான கட்டளைகள் வேறு. வீட்டை மதுக்கூடமாக ஆக்கியிருக்கிறார். கூடுதலாக, கூட்டாளிகளின் குரூரப் பார்வைகள் வேறு. ஒருநாள், இருநாள் அல்ல... பல ஆண்டுகளாக இப்படித்தான் நடந்திருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, தனது 19 வயது மகளுக்குப் பல மாதங்களாகப் பாலியல்ரீதியான நெருக்கடி கொடுத்திருக்கிறார் ராமரத்தினம். பாலியல் தொழிலாளியுடன் தான் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை செல்போனில் காட்டியிருக்கிறார். தந்தைதான், உலகிலேயே ஒரு பெண் அதிகபட்சமாக நம்பக்கூடிய ஆண். அந்த நம்பிக்கையைத் தனது தந்தையே சின்னாபின்னமாக்குவதை எந்தப் பெண்ணாலும் தாங்கிக்கொள்ள முடியுமா? தந்தையின் நெருக்கடியும் வக்கிரமும் தாங்க முடியாமல், வேறு வழியே இல்லாமல்தான் அந்தப் பெண் மதுவில் பூச்சிமருந்தைக் கலந்து வைத்திருக்கிறார். அதைக் குடித்த அவரும், அவரது நண்பர்கள் இருவரும் இறந்திருக்கிறார்கள். உண்மையில், தனது நம்பிக்கையைப் படுகொலை செய்த ஒருவரைத்தான் அந்தப் பெண் கொலை செய்திருக்கிறாள்.
சமூக வரையறை
எது சரி, எது தவறு என்பதற்கு ஒரு சமூக வரையறை இருக்கிறது இல்லையா? ஒருவர் தன் தாயிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? நண்பரிடம், ஆசிரியரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? உறவுகளின் மதிப்பு என்ன? இவைதான் சமூக வரையறை. ஆனால், ஒருவர் மதுவின் தாக்கத்துக்கு மிக அதிகமாக ஆட்படும்போது, இந்தச் சமூக வரையறைகளெல்லாம் மொத்தமாக மறைந்துபோகின்றன. மதுவின் தொடர்ந்த வீரியத்தால் மூளை நரம்புகள் உறைந்துபோகின்றன. இதன் ஒரு பிரிவினர்தான் பாலியல் பயங்கரவாதிகள்.
பெங்களூருவில் தேசிய மனநல மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் மையம், மது மறுவாழ்வு சிகிச்சைப் பிரிவு ஒன்றை நடத்துகிறது. அங்கு சிகிச்சை பெறும் தமிழகத்தின் இப்படியான நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாகக் கவலைகொள்கின்றனர் மருத்துவர்கள். அங்குள்ள மருத்துவர் ஒருவரிடம் பேசியபோது, “சமீப காலமாக மது மீட்பு சிகிச்சைக்கு வருபவர்களில் ‘மிகவும் அபாயமான பாலியல் பழக்கங்களைக் கொண்ட’ நபர்களுக்கு இணையாக வேறொரு மனநோய் பாதிப்புடன் வருபவர்களும் அதிகரித்துள்ளனர். இவர்களுக்கு இருப்பது ஸூவோபைலியா (Zoophilia) அல்லது பெஸ்டியாலிட்டி (Bestiality) என்கிற மனநோய். மனிதர்கள் அல்லாத பிராணிகளுடன் பாலியல் உறவு கொள்பவர்கள் இவர்கள். இதில் குடியும் பெரும் பங்குவகிக்கிறது. இந்தப் பிரச்சினையுடன் இங்கு வருபவர்கள் பெரும்பாலும் குடிநோய் காரணமாக மனைவி/கணவரைப் பிரிந்தவர்கள். வீட்டில் தனிமையில் இருக்கும் இவர்கள் நாய், பூனை, போன்ற செல்லப் பிராணிகளிடம் கொஞ்சம்கொஞ்சமாக அன்பு செலுத்தத் தொடங்குவார்கள். ஒருகட்டத்தில் கிட்டத்தட்ட அந்தப் பிராணியே இவர்களின் துணையாகிவிடும். இதன் மூலமாகப் பல்வேறு பாலியல் நோய்களுக்கு ஆளானவர்களும் உண்டு” என்றார் அவர். அதிர்ச்சியாக இருக்கிறதா?
விடை எங்கே?
இந்தப் பிரச்சினைகளெல்லாம் சமூகத்தில் காலம்காலமாக இருப்பவைதான். எனினும், தற்காலத்தில் பெருமளவில் இவை அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்ன? நம்மில் கணிசமான பகுதியினர் கொஞ்சம்கொஞ்சமாக மனோ ஆற்றலை, மனித ஆற்றலை இழந்துகொண்டிருக்கிறார்கள்; அழித்துக்கொண்டிருக்கிறார்கள். சமூகத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பில் இருப்பவர்களும் குடிநோயின் தீவிரத்தைப் பற்றி உணர்ந்ததாகத் தெரியவில்லை. சொந்தத் தகப்பனையே கொலை செய்யும்படி ஒரு கிராமத்துப் பெண்ணைத் தூண்டியது எது? தந்தை என்கிற பாசத்தையே தகர்த்தெறிய வைத்தது எது? திருச்சி பெண்கள் சிறையில் அடைபட்டிருக்கும் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் மனநிலையை நம்மால் சற்றும் நினைத்துப்பார்க்க முடிகிறதா? நினைப்பவருக்கே அப்படி எனில், அந்தப் பெண்ணுக்கு எப்படி வலிக்கும்? அவர் செய்த பாவம் என்ன? சிறைக்குள் இருக்கும் அசாதாரணச் சூழல்களை எப்போதாவது அந்தப் பெண் நினைத்துப் பார்த்திருப்பாரா? சில நாட்களுக்கு முன் குடிநோயாளி கணவரின் கொடுமை தாங்காமல் தன் குழந்தையைக் கொன்றார் ஒரு பெண். இப்போது தந்தையைக் கொன்றிருக்கிறார் இன்னொரு பெண். இவர்களெல்லாம் என்ன போதை வெறியிலா கொலை செய்தார்கள்? இதற்கெல்லாம் காரணம் என்ன? இதையெல்லாம் தடுத்து நிறுத்த என்ன செய்யப்போகிறோம் நாம்?
(தெளிவோம்)
- டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT