Published : 17 Dec 2013 12:00 AM
Last Updated : 17 Dec 2013 12:00 AM
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த 26 பேரில் 22 பேரை விடுவித்து 4 பேரின் தூக்கு தண்டனையை மட்டும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
நால்வரது கருணை மனுக்களும் ஆளுநரால் நிராகரிக்கப்பட, அவற்றைப் பரிசீலித்தாக வேண்டும் என்னும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மறுபரிசீலனைக்கு உள்ளானபோது, நளினி மட்டும் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது நடந்தபோதே 19 ஆண்டுகாலம் கடந்துவிட்டிருந்தது.
ஆட்சேபகரமான விதி
எஞ்சிய பேரறிவாளனும் முருகனும் சாந்தனும் இன்னும் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருந்துவருகின்றனர். இவ்வழக்கில் தண்டனை அளிக்க அடிப்படையாக இருந்த, தடா சட்டத்தின் ஒரு விதியே நீதியரசர் கே.சந்துரு குறிப்பிடுவதுபோல, ஆட்சேபகரமானது. மாவட்டக் கண்காணிப்பாளார் நிலையிலுள்ள ஒரு போலீஸ் அதிகாரி தரும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது அச்சட்டப் பிரிவு. இப்படிப் பதிவுசெய்திருந்த சி.பி.ஐ. அதிகாரி வி.தியாகராஜன், தனது வாக்குமூலத்தை சரிவரத் தரவில்லை என்றும், அதனைத் திருத்தியதாகவும் இப்போது ஒப்புக்கொண்டுள்ளார். நால்வருக்கான மரண தண்டனையை உறுதிப்படுத்திய உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ், தனது தீர்ப்பு தவறு என்று ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுத் தலைவர் டி.ஆர்.கார்த்திகேயன், மரண தண்டனை அதிகப்படியானது என்று அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்.
ஆக, தண்டனைக்கு அடிப்படையான தடா சட்டப் பிரிவு நீதியின் கண்களில் ஆட்சேபகரமானதாகிறது; தண்டனை முறையல்ல, அதிகப்படியானது என வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தவர்கள் ஒப்புக்கொண்டனர். இதற்கு மேலும், இம்மூவரும் ஏறக்குறைய இரட்டை ஆயுள் தண்டனைக்கால அளவுக்குச் சிறையில் வேதனை அனுபவித்துவிட்டனர்.
இனிமேலும் இவர்களைச் சிறையில் வைத்தி ருக்க நியாயமில்லை. மனித நேயமிக்க எந்தப் பண்பாடும் இதனைச் சகித்துக்கொள்ளாது. அத்துடன் உலகின் பல நாடுகள் தூக்கு தண்ட னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில், இந்தியா இன்னும் வதைப்பது சரியல்ல.
257-க்கு 1
புத்தரும் காந்தியும் பிறந்த நாட்டில் ஏன் தூக்கு தண்டனையை வைத்திருக்க வேண்டும் என்கிறார் வி.ஆர்.கிருஷ்ணய்யர். “மரண தண்டனை விதிக்கப்படும் ஒவ்வொரு 257 வழக்குகளிலும் ஒன்று குற்றமற்றதாயிருக்கக்கூடும்” என 1860-லேயே ஆலிவ்க்ராய்க்ஸ் என்னும் நீதித் துறையாளர் குறிப்பிட்டார். இந்த விகிதாச்சாரம் சிறியதா? சாதாரண தண்டனைகளைப் பொறுத்து இது சிறியதே. சாதாரண தண்டனைகளைப் பொறுத்து இது எல்லையற்றது என்று இதனை நோக்குகிறார் நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர் ஆல்பெர் காம்யு. 1950-களில் பிரான்ஸில் ஒரு வழக்கு… 14 வயதுப் பெண்ணைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட பர்ட்டன் அப்பாட் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கின் இறுதிவரை தான் குற்றவாளி அல்ல என்று அப்பாட் கூறிவந்தார். 1957 மார்ச் 15 அன்று காலை 10 மணிக்குத் தண்டனை என்று குறித்தாகிவிட்டது. மேல்முறையீடு அன்று காலை 11 மணிக்கு மறுதலிக்கப்பட, 11.15க்கு விஷ வாயு அறைக்குள் நுழைந்த அப்பாட் 11.18க்கு இறந்துபோகிறார். 11.20-க்குத் தான் எடுத்த முடிவு சரியில்லை என நினைத்து, இத்தண்டனையை நிறுத்திவைக்க முற்பட்ட அரசுச் செயலர், ஆளுநரிடம் தொடர்புகொள்ள, அவர் இல்லாததால், நேரடியாகச் சிறை அதிகாரிகளிடம் பேசும் வேளையில் மிகவும் தாமதமாகிவிட்டது.
“தாமதித்த தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி” எனும்போது தாமதித்த செயல்பாட்டினை என்னவென்பது? உயிரைக் குடித்த பின் பரிகாரம், மீட்பு எதுவும் இல்லை. குற்றமற்றவரைக் குற்றவாளி என்று தவறாகத் தீர்ப்புரைத்த பழிக்கு என்ன பரிகாரம் இருக்கிறது. வீண் பழியுடன் ஒரு ஆன்மா பலியாக்கப்பட்டதற்கு என்ன கழுவாய் தேட முடியும்? கழுவாய்தான் தேட முடியுமா? மரண தண்டனை வழக்கு ஒன்றில் தவறு நிகழ்ந்த பின், பெல்ஜியம் மரண தண்டனையை அறிவிப்பதை நிறுத்திக்கொண்டது. அதுபோன்றே ஹோயெஸ் வழக்கில் ஏற்பட்ட குழப்பத்துக்குப் பின், இங்கிலாந்து மரண தண்டனையைத் தன் சட்டப் புத்தகத்திலிருந்து அகற்றிவிட்டது. இப்போது இந்தியாவுக்கான தருணம். பேரறிவாளனும் முருகனும் சாந்தனும் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் மரண தண்டனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
- சா.தேவதாஸ், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: karuthuppattarai2013@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT