Published : 25 Mar 2014 12:33 PM
Last Updated : 25 Mar 2014 12:33 PM
அமெரிக்க நீதிபதி ரிச்சர்ட் போஸ்னர், “மிகைப்படுத்தல் மற்றும் அச்சத்தைத் தூண்டிவிடுதலின் வழியேதான் ஊடகங்கள் செழித்து வளர்கின்றன” என்றார். இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம்; ஆனால், பெருமளவு உண்மை.
‘‘இங்கே பணிபுரிய உங்களுக்கு வெறிபிடித்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அப்படியிருப்பது உதவிகரமாக இருக்கும்’’ என்று ‘பிளிட்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் கரஞ்சியாவின் அறைக்கு வெளியே எழுதப்பட்டிருக்கும் என்று கரஞ்சியாவுக்கு எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் மூத்த பத்திரிகையாளர் பி. சாய்நாத் குறிப்பிட்டிருந்தார்.
அவசியமான வெறி!
ஒருசில செய்தித் தொலைக்காட்சிகளில் பணிபுரிவோருக்கு வெறிபிடித்திருப்பதே அத்தியாவசியமான தகுதியாக இருக்கும்போல் தெரிகிறது. அந்தத் தொலைக்காட்சிகளின் செய்திகளை வழங்கும் விதத்தையும் அதன் மூத்த பொறுப்பில் அமர்ந்து விவாதங்களை நடத்தும் விதத்தையும் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஒரு பத்திரிகையாளருக்குப் பிடித்திருக்கும் வெறி உண்மையின் மீதானது என்றால் நல்லது.
ஒருவேளை அது அவர் நம்பிக்கை கொண்டுள்ள சித்தாந்தத்தின் அல்லது கட்சியின் அல்லது தலைவரின் மீதானது என்றாலோ... வேறு நோக்கங்கள் தொடர்புடையது என்றாலோ, அது மிகவும் ஆபத்தானது.
ஊடகங்களில் சித்தாந்தச் சார்பு பெரும்பாலும் தவிர்க்க முடியாதது. ஆனால், ஒரு பத்திரிகை அல்லது தொலைக்காட்சி தனது சித்தாந்தச் சார்புக்கும் உண்மைக்கும் இடையே முரண்பாடு அல்லது மோதல் எழுகிறபோது, உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். ‘‘விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், உண்மைகள் புனிதமானவை’’ என்ற ‘தி கார்டியன்’ நாளிதழின் ஆசிரியர் சி.பி. ஸ்காட்டின் கருத்தைப் பின்பற்றும் ஊடகங்கள் எத்தனை?
கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டு
சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால், இந்தியாவில் ஊடகங்கள் அனைத்தும் விலைபோய்விட்டதாகவும், அதன் காரணமாகவே அவை நரேந்திர மோடியை உயர்த்திப் பிடிப்பதாகவும், இதற்காக ஊடக நிறுவனங்களுக்குப் பெரும் பணம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். அத்துடன் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதுகுறித்து விசாரணை நடத்தி, அவ்வாறு நடந்துகொண்டவர்களைச் சிறைக்கு அனுப்புவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடக நிறுவனங்கள் அனைத்தும் மோடியிடம் விலைபோய்விட்டதாக கேஜ்ரிவால் ஒட்டுமொத்தமாகக் குற்றம்சாட்டியிருப்பது மிகைப்படுத்தல் மற்றும் பொதுமைப்படுத்தல் என்பதில் சந்தேகமில்லை. மேலும், தன்னைப் பற்றியும் தனது கட்சியைப் பற்றியுமான விமர்சனங்கள்குறித்த அவரது சகிப்பின்மையை இந்தக் குற்றச்சாட்டு வெளிப்படுத்துவதாக ஒருவர் கருத முடியும்.
ஆனால், விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதப் பசுவாகத் தங்களை ஊடகங்கள் கருதுவதையே கேஜ்ரிவாலுக்கு எதிரான சில ஊடகங்களின் அதீத எதிர்வினை காட்டுகிறது. எல்லாவற்றையும் ஈவிரக்கமற்ற விமர்சனத்துக்கு ஆளாக்கும் ஊடகங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையாக இருக்க முடியாது. மேலும், தங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் வைக்கப்படும்போது, பிற எந்தத் துறையினரையும்விட ஊடகத்தினரால் அவற்றை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் எதிர்கொள்ள முடியும். அதாவது, உண்மை அவர்கள் பக்கம் இருக்கும்பட்சத்தில்!
மோடி, அம்பானி…
அண்ணா ஹசாரேயின் இயக்கத்தையும், ஆ.ஆ.க-வை அதன் தொடக்கக் காலத்திலும் எந்த விமர்சனங்களும் இன்றி மிகப் பெருமளவில் ஆதரித்த சில தொலைக்காட்சிகள் ஆ.ஆ.க-வின் டெல்லி வெற்றிக்குப் பிறகு, குறிப்பாக பா.ஜ.க., மோடி, முகேஷ் அம்பானி ஆகியோரை ஆ.ஆ.க. கடுமையாகத் தாக்கத் தொடங்கிய பின்னர், தங்கள் நிலைப்பாட்டை 180 டிகிரி மாற்றிக்கொண்டதைப் பார்த்தோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஊழல்களை ஆ.ஆ.க. தாக்கியபோது அதை ஆர்ப்பரித்து ஆதரவளித்த இந்த சில ஊடக நிறுவனங்கள், தாக்குதலின் மையம் மோடி மற்றும் அம்பானி என்று ஆனபோது ‘விழித்துக்’கொண்டன. ஆ.ஆ.க-வின் தவறுகள் மற்றும் சறுக்கல்கள் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டன.
கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்துக்காக மும்பை சென்றபோது, கூட்ட நெரிசலின் காரணமாக ரயில் நிலையத்திலிருந்த பாதுகாப்பு சோதனை வாயில்கள் உடைந்ததைப் பெரும் வன்முறையாகச் சித்தரித்தன சில ஊடகங்கள். கேஜ்ரிவாலை வரவேற்க ரயில் நிலையத்தில் பெருமளவில் கூடியிருந்த ஆ.ஆ.க. தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டிருக்க வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால், இதை வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட வன்முறையாக - அதிலும் சிவசேனா மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல்களுடன் சமப்படுத்துவது என்பது ஆ.ஆ.க-வுக்கு எதிரான திட்டமிடப்பட்ட சதி என்பதில் சந்தேகமில்லை.
விமர்சனங்கள் அவசியமே
காப் பஞ்சாயத்துக்கு ஆதரவாக ஆ.ஆ.க. எடுத்த நிலைப்பாடு, வேட்பாளர் தேர்வில் நிலவும் தவறுகள் மற்றும் குளறுபடிகள், எளிமையே தனது தாரக மந்திரம் என்று கூறும் கேஜ்ரிவால் தனி விமானத்தில் பயணம் செய்தது போன்ற விஷயங்களைக் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்குவது என்பது ஊடகங்கள் கண்டிப்பாகச் செய்தாக வேண்டியவை.
இந்த விமர்சனங்களை ஆ.ஆ.க-வுக்கு எதிரான சதியாகப் பார்ப்பது கேஜ்ரிவால் மற்றும் ஆ.ஆ.க. தலைவர்களின் சகிப்பின்மையைக் காட்டுகிறது.
பணம் கொடுத்துச் சாதகமான செய்திகளை வெளியிடச் செய்வது என்பது பரவலாக நடக்கும் விஷயம் என்பது அனைவரும் அறிந்த ரகசியம் மட்டுமல்ல; நிரூபிக்கப்பட்ட விஷயமும்கூட. மேலும், விளம்பரங்கள் மூலம் அரசும் பெருநிறுவனங்களும் ஊடகங்களை எப்படிக் கட்டுப்படுத்துகின்றன என்பதும் அனைவரும் அறிந்த விஷயமே. தனக்கு அதிக விளம்பரங்களைத் தரும் நிறுவனங்களுக்கு, கட்சிக்கு, அரசுக்கு எதிராக ஊடகங்கள் செய்திகள் வெளியிடத் தயங்குகின்றன.
அப்படியிருக்க... ஊடகங்கள் விலைபோய்விட்டன என்ற கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டு ஏதோ மாபாதகச் செயல் என்பதைப் போல் சில ஊடகங்கள் சித்தரிக்க முயல்வது சரியல்ல.
கேஜ்ரிவாலின் மற்றும் ஆ.ஆ.க-வின் ஒவ்வொரு சறுக்கல் மீதும், சில சமயங்களில் பூதாகாரப்படுத்தியும், தேவைக்கு அதிகமான விமர்சனங்களை வைக்கும் சில ஊடகங்கள் மோடி விஷயத்தில் நேர்மாறாக நடந்துகொள்வதையும் பார்க்க முடிகிறது. 2002 குஜராத் கலவரம் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுவதை எரிச்சலுடன் இவை பார்க்கின்றன.
2002 நிகழ்வை மீண்டும் மீண்டும் எழுப்புவது அர்த்தமற்றது என்றும் அதைக் கடந்து, அதாவது மறந்துவிட்டு நாம் மேலே செல்ல வேண்டியது அவசியம் என்றும் அவை கூறுகின்றன. மோடிக்கும் சில பெருநிறுவனங்களுக்குமான அந்நியோன்யமான உறவை விவாதிக்க இவை மறுக்கின்றன.
அதேசமயம், கேஜ்ரிவால் மற்றும் ஆ.ஆ.க-வின் சமீபத்திய சில செயல்பாடுகள் ஆ.ஆ.க-வும் விரைவில் எல்லாக் கட்சிகளையும் போன்ற மற்றுமொரு கட்சியாக மாறிவிடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே, அதன் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாவது என்பது அந்தக் கட்சிக்கு நல்லதே. ஆனால், விமர்சனங்கள் உண்மைகளின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
- க. திருநாவுக்கரசு, சமூக - அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: kthiru1968@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT