Published : 09 Jun 2017 10:20 AM
Last Updated : 09 Jun 2017 10:20 AM
தெலங்கானா என்ற புதிய மாநிலம் 2014-ல் உருவானபோது, பொருளாதாரரீதியாக அதற்கு எதிர்காலமே இல்லை என்றுதான் கருதப்பட்டது. புதிய மாநிலத்திலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேறிவிடுவார்கள், வர்த்தகத்துக்குப் புதிய முதலீடு கிடைக்காது, மனை வணிகத் துறை தொய்வடைந்துவிடும் என்றெல்லாம் அச்சம் தெரிவிக்கப்பட்டது.
மனை வணிகத் துறையில் அதிகம் ஈடுபடுகிறவர்கள் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் தெலங்கானா பகுதியைவிட்டுச் சொந்த ஊர்கள் இருக்கும் ஆந்திரத்துக்குக் குடியேறிவிடுவர் என்றும் பேசப்பட்டது. அஞ்சியபடி எதுவும் நடந்துவிடாமல் தடுத்துவிட்டார் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ். தெலங்கானா பகுதியில் குடியிருப்பவர்கள் பற்றிய கணக்கெடுப்புக்கு அவர் முதலில் உத்தரவிட்டபோது, ஆந்திரர்களை அடையாளம் கண்டு வெளியேற்றிவிடுவார் என்ற அச்சம்கூட இருந்தது. அப்படி எதுவும் நடக்கவில்லை.
இப்போது ஆந்திரத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையில் முதலீட்டை ஈர்ப்பதில் பலத்த போட்டி காணப்படுகிறது. தனிநபர் வருமான வீதம், வேளாண்மை, தொழில்துறைச் செயல்பாடு ஆகியவற்றில் தெலங்கானாவைவிட ஆந்திரம் முன்னேறிய நிலையில் இருந்தாலும், 2016-ல் எளிதாகத் தொழில்செய்ய வாய்ப்பளிக்கும் மாநிலங்களுக்கான தரப்பட்டியலில் ஆந்திரத்துக்கு இணையாக தெலங்கானாவும் சம இடத்தைப் பெற்றது. மின்உற்பத்தி மின்பகிர்மான நிலையை மேம்படுத்துவதில் ராவ் மிக நன்றாகச் செயல்பட்டுவருகிறார்.
இதனால், தொழில்நிறுவனங்கள் தெலங்கானாவைவிட்டு வேறு மாநிலங்களுக்கு இடம்பெயரவில்லை. ஹைதராபாதில் முதலீடு செய்ய ஆப்பிள், ஊபர், அமேசான், ஐகேஇஏ, ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. சமூக, பொருளாதார ஏணியில் மேல்படிகளுக்குச் செல்லும் நிலையில் தெலங்கானா இருக்கிறது.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தெலங்கானாவின் நிதிநிலை நன்றாகவே இருக்கிறது. 2016 -17-ல் தெலங்கானாவின் வருவாய்க் கணக்கு செலவில் 75%, தெலங்கானா அரசு திரட்டும் நிதியைக் கொண்டே மேற்கொள்ளப்படுகிறது. அனைத்திந்திய அளவில் இந்த சராசரி 57%தான். ஆந்திர சராசரி 51%. வாங்கிய கடனுக்காக தெலங்கானா செலுத்தும் வட்டி 8%தான். அனைத்திந்திய சராசரி 12%. இப்படி நிதி நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதால்தான் தன்னம்பிக்கை அதிகரித்து, தெலங்கானா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர் வாரி, ஆழப்படுத்தி, வாய்க்கால்களால் இணைத்துப் புத்துயிர் ஊட்டும் பெருந்திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.
அதேநேரத்தில், வேளாண் துறை வளர்ச்சியில் தெலங்கானா பின்தங்கியிருக்கிறது. 3 ஆண்டுகளில் சுமார் 2,300 விவசாயிகள் பயிர்கள் பொய்த்ததாலும், கடன் சுமையாலும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT