Last Updated : 30 Oct, 2014 11:41 AM

 

Published : 30 Oct 2014 11:41 AM
Last Updated : 30 Oct 2014 11:41 AM

அறிவோம் நம் மொழியை: தொட்டால் சொல் மலரும்

ஐம்புலன்களுக்குரிய உறுப்புகள் வரிசையில் அடுத்தது தொடுவுணர்வுக்கான உறுப்பாகச் சொல்லப்படும் தோல்.

ஐந்து உணர்வுகளையும் அடிப்படையில் தொடுவுணர்வு என்றே சொல்லிவிடலாம். கண்ணை ஒளி தொடுவதால் பார்க்க முடிகிறது; செவியை ஒலி தொடுவதால் கேட்க முடிகிறது; வாசனையைத் தாங்கிவரும் காற்று மூக்கின் உட்பகுதியைத் தொடுவதால் வாசனையை முகர முடிகிறது; நாவின் சுவை அரும்புகளை உணவு தொடுவதால் அதன் சுவையை உணர முடிகிறது. ஒவ்வொரு புலனும் இந்த உலகத்தை, பிரபஞ்சத்தை, வாழ்க்கையை உய்த்தறிவதற்கான அமைப்புகள் வாய்க்கப்பெற்றிருக்கிறது. இதில் தொடுவுணர்வும் தனித்துவமிக்கது. மொழியை முதலில் உள்வாங்கிக்கொள்வதற்கு அவசியமான கேட்புத் திறனையும் கண்பார்வையையும் பிறவியிலேயே பெற்றிராத ஹெலன் கெல்லர் தொடுவுணர்வைக் கொண்டுதான் மொழியைக் கற்றுக்கொண்டார்; மாற்றுத் திறனாளிகளுக்கான பெரும் செயல்பாட்டாளராக உருவெடுத்தார். எனவே, தொடுவுணர்வும் மொழிக்கு அவசியமே.

தொடுவுணர்வுக்குரிய சொற்களான ‘தொடு’, ‘தொடுதல்’ போன்ற சொற்கள் தொடுவுணர்வைப் போலவே ஒரு நிலையை அடைதல், எட்டிப்பிடித்தல் போன்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றன. ‘நெஞ்சைத் தொட்ட பாடல்’, ‘மனதைத் தொட்டது’ என்று உருவக வழக்கிலும் ‘தொடு’ பயன்படுத்தப்படுகிறது.

தொடுதல், தொடுவுணர்வு, தோல் தொடர்பான சொற்களும், தொடர்களும்:

உற்றறிதல் – தொடுவதன் மூலம் அறிதல்; உற்றறிவு - தொடுவுணர்வு; உறுத்துதல் – (படுக்கும்போது மெத்தையில் ஏதோ உறுத்துகிறது);

ஊற்றம் – தொடுவுணர்வு; ஊறு - தொடுவுணர்வு; தடவுதல் – (கண் தெரியாமல் தாத்தா அலமாரியில் ஏதோ தடவிக்கொண்டிருந்தார்); தொட்ட தந்தை/ தொட்டப்பா (இலங்கை வழக்கு) – ஞானத்தந்தை; தொட்டதற்கெல்லாம்/ தொட்டது தொண்ணூறுக்கும் – (தொட்டதற்கெல்லாம் அவளையே குறை கூறாதே); தொட்ட தாய்/ தொட்டம்மா (இலங்கை வழக்கு) – ஞானத்தாய்; தொட்டாற்சிணுங்கி – (அவள் ஒரு தொட்டாற்சிணுங்கி, அவளைக் கிண்டல் செய்யாதே); தொட்டுக்கொள்ளுதல் – (தோசைக்குத் தொட்டுக்கொள்ள மிளகாய்த் துவையல்தான் எனக்கு வேண்டும்); தொட்டெழுதும் பேனா (இலங்கை வழக்கு) – முன்பு மையைத் தொட்டுத்தொட்டு எழுதும் விதத்தில் இருந்த பேனா; தொடுகறி - (பழையதுக்கு ஏற்ற தொடுகறி ஊறுகாய்தான்); தொடுதிரை - (தொடுதிரைக் கணினி/ தொடுதிரை செல்பேசி);

தோலுரித்தல் – (அந்தத் தலைவரின் சுயரூபத்தைத் தோலுரித்துக்காட்டுவேன்); நிரடுதல்/ நெருடல்/ நெருடுதல்- (முதுகில் ஏதோ நெருடியது); மயிர்க்கூச்செறிதல்- ராட்டினம் உச்சிக்குச் சென்றதும் எனக்கு மயிர்க்கூச்செறிந்தது.

வட்டாரச் சொல் அறிவோம்: மரவள்ளிக்கிழங்குக்குச் சில வட்டாரங்களில் வழங்கப்படும் பெயர்கள்: குச்சிக்கிழங்கு, ஏழிலைக்கிழங்கு, கப்பைக்கிழங்கு.

அவரவர் வட்டாரச் சொற்களை வாசகர்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

சொல்தேடல்: பேஷண்ட் (patient) என்ற சொல்லுக்குப் பல வாசகர்களின் பரிந்துரை: சிகிச்சையாளர், சிகிச்சையாளி.

சிகிச்சை தரும் மருத்துவரையும் இந்தச் சொல் குறிக்கக்கூடிய அபாயம் இருந்தாலும்கூட நீடித்த பயன்பாட்டில் இந்தச் சொற்களை ‘பேஷண்ட்’ என்ற பொருளில் நிலைபெறச் செய்துவிடலாம்.

இந்த வாரச் சொல் தேடல்: பகலும் இரவும் சம அளவு நேரத்தைக் கொண்டிருக்கும் இரண்டு நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் வரும் (பெரும்பாலும் செப்டம்பர் 22, மார்ச் 20 வாக்கில்). அதற்கு ஆங்கிலத்தில் ஈக்வினாக்ஸ் (equinox) என்று பெயர். தமிழில் இதற்கு என்ன சொல் இருக்கிறது?

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x