Published : 03 Feb 2014 09:43 AM
Last Updated : 03 Feb 2014 09:43 AM
ஒரு விமர்சன வாக்கியம் உண்டு: கடைசி கிறிஸ்துவரும் சிலுவையில் அறையப்பட்டுவிட்டார்’ என்று. அதாவது, இயேசுதான் மெய்யான கிறிஸ்துவராக இருந்த ஒரே கிறிஸ்துவர் என்பது இதன் பொருள். அதுபோல, கடைசி தி.மு.க-காரரும் 1969-ல் இறந்துவிட்டார் என்று சொல்லலாம். அவர்தான் அண்ணா.
பெரியாரிடம் பகுத்தறிவையும் நாத்திகத்தையும் சுயமரியாதையையும் சமூக நீதியையும் கற்றுக்கொண்டு, அவருடைய திறமையான தளபதியாகத் திகழ்ந்த அண்ணா, பெரியாரிடம் விலகிய புள்ளிகள் முக்கியமானவை. சமூகச் சீர்திருத்த இயக்கம் வேறு, அரசியல் இயக்கம் வேறு என்ற தெளிவான புரிதலே அந்தப் புள்ளியில் முதன்மையானது. அரசு அதிகாரத்தை வசப்படுத்தினால்தான், நாம் விரும்பும் பல மாற்றங்களை விரைவாக ஏற்படுத்த முடியும் என்பது அண்ணாவின் பார்வை.
விலகிய புள்ளிகள்
சமூக இயக்கமாக இருந்துகொண்டு அரசியல் அதிகாரத்தை வைத்திருப்பவர்களுக்கு அழுத்தம் கொடுத்து நாம் விரும்புவதைச் சாதித்துக்கொள்ளலாம் என்பது பெரியார் பார்வை. காமராஜர் ஆட்சிக் காலம் முழுக்க பெரியார் அதைத்தான் செய்தார். பின்னாளில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களிலும் அதே அணுகுமுறையைத்தான் பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகமும் அதிலிருந்து பிரிந்து சென்ற அமைப்புகளும் பின்பற்றுகின்றன.
ஆனால், அண்ணா அதிகாரத்தை நேரடியாக வசப்படுத்தும் பாதையையே தேர்ந்தெடுத்தார். அதற்குத் தேர்தல் ஜனநாயகம்தான் இந்தியாவில் ஒரே அறவழியாக இருந்தது; இருக்கிறது. தேர்தல் ஜனநாயகத்தில் பங்கேற்கும் முடிவை அண்ணா எடுத்த நாளிலிருந்து, அவர் பெரியாரின் சில வழிமுறைகளை நிராகரிக்க வேண்டியிருந்தது.
பெரியாருக்கு உட்கட்சி ஜனநாயகம் என்பது தேவையற்றதாகத் தோன்றியது. காங்கிரஸிலும் சுயமரியாதை இயக்கத்திலும் பின்னர் நீதிக் கட்சியிலும் அவர் விரும்பிய எதையும் செய்ய முடியாமல் அவரைத் தடுக்கும் பெரும் தடையாக அவர் உட்கட்சி ஜனநாயகத்தைக் கணித்திருக்கக் கூடும். அதனால்தான், பின்னாளில் திராவிடர் கழகத்தில் அவர் உட்கட்சி ஜனநாயகத்தை ஏற்படுத்தவோ வளர்க்கவோ முயற்சிக்கவில்லை. தன் தலைமையைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு செயல்பட விரும்புவோரைக் கொண்டு மட்டுமே இயக்கம் நடத்த விரும்புவதாக அவர் அறிவிக்கவும் செய்திருக்கிறார். சேருவதற்கு முன்னால் நன்றாகச் சிந்தித்துக்கொள்; சேர்ந்தபின் கேள்வி கேட்காதே என்பது அவர் நிலை.
இன்க்ளூசிவ் பாலிடிக்ஸ்
அண்ணா இந்த வழியை நிராகரித்தவர். தனக்கு நிகரான புகழும் மக்கள் செல்வாக்கும் உடைய இரண்டாம் நிலைத் தலைவர்கள் கட்சியில் இருப்பதை அவர் தடுக்க முற்பட்டதில்லை. ஓரங்கட்டியதில்லை. அப்படிப் பலர் கட்சியில் தன்னுடன் இருந்தால்தான் பரந்துபட்ட மக்கள் திரளிடம் கட்சி சென்று சேர்ந்து வளர முடியும் என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். தேர்தல் ஜனநாயகத்தின் வழியே அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால், சமூகத்தில் எல்லாரையும் சேர்த்துக்கொள்ளும் ‘இன்க்ளூசிவ் பாலிடிக்ஸ்’தான் செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். இது சமரசம் அல்ல. சமூக நல்லிணக்கத்துக்கான உத்தி. கொள்கை சமரசம் என்பது வேறு. கொள்கையில் எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களை நோக்கி வெவ்வேறு கருத்துடைய மக்களையும் ஒரு பொதுப்புள்ளிக்கு நகர்த்திவந்து ஒன்றுபடுத்தி, அதிகாரத்தை வசப்படுத்துவது வேறு.
எல்லாரும் எல்லாமும்
அண்ணா உருவாக்கிய தி.மு.க-வில் 50-க்கு மேற்பட்ட பத்திரிகைகள் வெளிவந்தன. கட்சியில் அடுத்த நிலையில் இருந்த எல்லாரையும் எழுதவும் படிக்கவும் அண்ணா தூண்டினார். உற்சாகப்படுத்தினார். தான் படித்த ஓர் ஆங்கிலக் கட்டுரையையோ நூலையோ இன்னொருவரிடம் கொடுத்து, அந்தக் கருத்துக்களைத் தமிழில் எழுதி, கட்சி இதழ்களில் வெளியிடச் செய்திருப்பதாக அவருடன் பழகியவர்கள் தெரிவிக்கின்றனர். எல்லாவற்றையும் தானே செய்துவிட வேண்டும் என்றோ தன் பெயர் மட்டுமே ஓங்கியிருக்க வேண்டும் என்றோ அண்ணா நினைத்ததில்லை. தன் பலவீனங்களை அவர் மறைத்தோ மழுப்பியோ இருக்கவில்லை. “அவரும் படிதாண்டா பத்தினி அல்ல; நானும் முற்றும் துறந்த முனிவனல்ல” என்ற அவரது புகழ்பெற்ற வாக்கியம் இதற்குச் சான்று.
தன் கருத்துப் பிரச்சாரத்துக்காகத் திரைப்படங்களையும் நாடகத்தையும் பயன்படுத்திய அண்ணா, அதை தான் பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறையாக மட்டும் கருதவில்லை. கட்சியைக் குடும்பமாகக் கருதி, அன்பு செலுத்திய அண்ணா, குடும்பத்தைக் கட்சியாக மாற்ற முனைந்ததே இல்லை. அவர் குடும்பத்திலிருந்து யாரையும் அவர் கட்சிப் பதவிகளுக்கு எந்தக் கட்டத்திலும் கொண்டு வர முற்படவில்லை.
அண்ணாவின் பாரம்பரியம்
மிகக் கடுமையாகத் தான் எதிர்த்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் யார் மீதும் தனிப்பட்ட துவேஷத்தையோ வன்மத்தையோ அவர் காட்டவே இல்லை. ஆட்சிக்கு வந்த பின்னர், மிகக் கடுமையான சுயவிமர்சனப் பார்வையுடன் அவர் இருந்தார் என்பதற்கு ஆதாரமாகப் பல நிகழ்ச்சிகள் சொல்லப்படுகின்றன. அரசு நிர்வாகத்தை நடத்தப் போதுமான திறன்களை வளர்த்துக்கொள்ளாமலே ஆட்சிக்குத் தன் கட்சி வந்துவிட்டதோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. இன்னும் சில வருடங்கள் எதிர்க் கட்சியாக இருந்து, தங்களைச் செம்மைப்படுத்திக்கொண்டிருக்க வேண்டுமோ என்று அவர் யோசித்தார்.
இன்றைய தி.மு.கழகமோ, அதிலிருந்து பிறந்த அ.இ.அ.தி.மு.க-வோ அண்ணாவின் எந்தக் கொள்கையையும் பின்பற்றுவன அல்ல. உட்கட்சி ஜனநாயகம் இல்லாத சர்வாதிகாரம் அல்லது இருப்பது போலப் பாவனை செய்யும் நாடகம், தலைமைக்கு நெருக்கமான குடும்பங்களுக்கே அதிகாரம், மாற்றுக் கட்சியினரிடம் வன்மம் எல்லாம் அண்ணாவின் பாரம்பரியமே அல்ல.
எழுத்தும் பேச்சும் அரசியலுக்கே
அவ்வப்போதைய அரசியல் பிரச்சாரத்துக்காகவே தன் எழுத்தும் பேச்சும் தன் காலத்தில் பயன்படுவதை அறிந்திருந்த அண்ணாவுக்கு, இவையெல்லாம் காலத்தை வென்று நிற்குமா என்ற இயல்பான கேள்வியும் இருந்திருக்கிறது. 60-ஐத் தாண்டிய பின்னர் ஓய்வுபெற்று, எந்த நாளும் பயன்படக்கூடிய அரசியல் சித்தாந்தம் பற்றி ஓர் நூலை எழுத வேண்டும் என்றும் அதற்கான குறிப்புகளை எல்லாம் சேகரித்துவருவதாகவும் அவர் தன் நண்பர்கள் சிலரிடம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட நோய், அவரை அதிவிரைவில் கொல்லாமல் இருந்திருந்தால், இன்னொரு அண்ணாவை நாம் சந்தித்திருக்க வாய்ப்பிருந்திருக்கிறது!
- ஞாநி, மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: gnanisankaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT