Published : 01 Nov 2013 02:59 PM
Last Updated : 01 Nov 2013 02:59 PM
கோழிப்பண்ணைக்குள்தான் அவன் பதுங்கியிருக்கிறான் என்று முதல் முதலில் கண்டறிந்து வந்து சொன்னது ஒரு சின்னப் பையன். நாலைந்து முறை கேட்டு ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பிறகு கிராம மக்கள் அந்தப் பண்ணையை ரவுண்டு கட்டினார்கள். திடகாத்திரர்கள் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பி வைத்தார்கள்.
அவன் நமக்கு உயிருடன் வேண்டும். சேதாரமில்லாமல். எனவே ஆயுதங்களை மிரட்டலுக்கு மட்டும் பயன்படுத்தினால் போதும் என்று முடிவானது.
சுமார் அரை மணிநேரம் கூடப் பிடிக்கவில்லை. பண்ணைக்குள் நுழைந்த கிராமத்து மக்கள் அவன் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஒரு கோழியைப் போலவே அவனைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கிக் கொண்டு வந்து வெளியே கடாசிவிட்டார்கள். மரியாதையாக உண்மையைச் சொல். நீதானே மினி பஸ்ஸில் குண்டு வைத்தாய்? எத்தனை அப்பாவிகள் இறந்து போனார்கள் தெரியுமா? ஒரு கல்யாண கோஷ்டியே கூண்டோடு கைலாசம் போய்விட்டது.
அவன் இல்லை என்று மறுத்துப் பார்த்தான். பிறகு கொஞ்சம் தயங்கினான். அப்புறம் அழுதான். தன்னை விட்டுவிடும்படிக் கெஞ்சிப் பார்த்தான். அதற்குள் அவன் பதுங்கியிருந்த கோழிப் பண்ணையை சல்லடை போட்டுத் துழாவி ஒரு ரிமோட்டைக் கண்டுபிடித்து எடுத்து வந்துவிட்டார்கள். அந்த ரிமோட்டின் உதவியுடன் தான் மினி பஸ்ஸில் பாம் வைத்து அவன் வெடிக்கச் செய்திருக்கிறான்.
இதற்குமேல் என்ன பெரிய புடலங்காய் விசாரணை? இனி தண்டனையைத் தொடங்கிவிடலாம்.
சுமார் நூறு பேர் ஒன்று கூடி அவனைச் சுற்றி நின்றார்கள். ஒவ்வொருவர் கையிலும் கற்கள். உதவிக்கு நின்ற வேறு சிலநூறு பேர்கள் கரசேவைக்குக் கல்லெடுத்தாற்போல கொண்டு வந்து கொண்டு வந்து குவித்து வைக்க ஆரம்பித்தார்கள். யார் தொடங்கினார்கள் என்று தெரியாது. ஒரு கிராமமே கூடி அவனைக் கல்லால் அடித்துக் கொன்றது.
அப்படியும் ஆத்திரம் அடங்காமல் ஆளுக்கொரு நாட்டுத் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அவன் உடலைச் சல்லடையாகத் துளைத்தெடுத்தார்கள். பிறகு எண்ணிப் பார்த்ததில் மொத்தம் இருநூறு தோட்டாக்கள் அவன்மீது பாய்ந்திருந்தன.
ஆப்கனிஸ்தானில் கஜ்னி மாகாணத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் இந்தக் கலவர களேபரம் நடந்து முடிந்ததைக் கர்ம சிரத்தையாக ரிப்போர்ட் செய்திருப்பதே போலீசார்தானே தவிர பத்திரிகையாளர்கள் அல்லர். கொந்தளிப்பின் உச்சத்தில் இருந்த மக்களை எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
மக்களிடம் விசாரித்தபோது, அவன் ஒரு தாலிபன் என்று சொன்னார்கள். உண்மையா இல்லையா என்று தெரியாது. யாரையும் எளிதில் குற்றம் சாட்டிவிட முடியாது. உடனடியாக எந்த முடிவுக்கும் வந்துவிடவும் சாத்தியமில்லை. குண்டு வைத்தவன் குற்றவாளியென்றால், அவனைக் கல்லால் அடித்துக் கொன்றவர்கள் யார்?சட்டத்தைக் கையிலும் கல்லிலும் எடுத்துக் கொள்ளும் மாபெரும் மக்கள் கூட்டம் இப்போதும் இருக்கவே செய்கிறது. அரசு என்ன செய்யும்? யார்தான் என்ன செய்வார்கள்?
ஆப்கனிஸ்தான் அப்படித்தான். முன்னாள் அதிபர் நஜிபுல்லாவின் மரணம் தொடங்கி, நவீன காலத்தில் இதற்கான எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போக முடியும். தாலிபன்கள் ஒரு நிறுவனமாக நாலைந்தாண்டுகள் ஆட்சியில் இருந்தபடியால் அவர்கள் அளித்த கொடூர தண்டனைகள் உலகுக்கு வெளிச்சமாயின. அவர்கள் மட்டும் தமது தண்டனைத் திருவிழாக்களை எங்கிருந்து பெற்றார்கள்? எல்லாம் மண்ணளித்த உத்திகளே அல்லவா!
இல்லை என்று யாரும் மறுத்து விட முடியாதபடிக்கு மேற்படி சம்பவம் சராசரி மக்களுக்குள் இருக்கும் தாலிபன் மனோ பாவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. ஒரு வினா. ஒருவேளை அவன் நிரபராதியாக மட்டும் இருந்திருந்தால்? யாரைப் போய்க் கேட்பது?
ஆப்கன் மக்களுக்கு உடனடித் தேவை அமைதியும் நிம்மதியும் என்கிறார்கள். யார் திட்டினாலும் பரவாயில்லை. சொல்லாமலிருக்க முடியவில்லை. அவர்களுக்கு அவசரத் தேவை கல்வி மட்டுமே. காட்டுமிராண்டித்தனத்தைக் கைவிடவைக்கிற கல்வி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT