Last Updated : 20 Aug, 2015 09:58 AM

 

Published : 20 Aug 2015 09:58 AM
Last Updated : 20 Aug 2015 09:58 AM

தாமிரபரணி: மண்ணைப் பொன்னாக்கும் 8 நீர்த்தேக்கங்கள்

தாமிரபரணியில் ஸ்ரீவைகுண்டம் தவிர மற்ற 7 நீர்த்தேக்கங்களும் பண்டைய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. அவற் றுள் மிக உயரமான நீர்த்தேக்கம் தலை யணை. இது நதியின் சமவெளிப் பகுதியின் முதலாவதாக வருகிறது.

தலையணை

தாமிரபரணி, பாபநாசம் அருவியிலிருந்து விழுந்து குறுகலான மலையிடுக்கு வழியே செல்கிறது. அம்மலையிடுக்குப் பாதை பெரிய கூழாங்கற்களாலும் பெரிய கற்பாறைகளாலும் தடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் துவாரங் கள் போடப்பட்டு அவற்றில் பனைமர கம்பங்கள் செருகப்பட்டிருக்கின்றன. இந்த குறுக்குக் கம்பங்களின் அருகே மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. இவ்வாறு தண்ணீர் இரு கரைகளிலுமிருந்தும் சேகரமாகி கால் வாய்க்குள் பாய்ச்சப்படுகின்றன. இதிலிருந்து பிரியும் தெற்கு, வடக்கு கோடைமேலழகியான் கால்வாய்கள் மூலம் 20 குளங்களில் நீர் சேமிக்கப்படுகிறது. இதன்மூலம் 1282 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

நதியுண்ணி

நீர்த்தேங்கங்களில் மிக பழமையானது நதி யுண்ணி நீர்த்தேக்கம். இது அம்பாசமுத்திரத் திலிருந்து 1.5 மைல் தொலைவில் உள்ளது. சிமெண்ட் பூசப்படாத பெரும் கற்களால் கட்டப்பட்டது. நதியுண்ணி என்றால் நதியை குடிப்பது என்று பொருள். இந்த நீர்த்தேக்கம் குறித்த கல்வெட்டு ஆற்றுப்படுகையில் இப்போதும் காணப்படுகிறது. நதியுண்ணி அணை கி.பி. 1759-ம் ஆண்டில் இந்தப் பகுதியை ஆண்ட கான்சாகிபுவின் அறக்கொடை யாக கட்டப்பட்டது. ஆனால், இது முதலில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது; பின்னர் கான்சாகிபு அதை செப்பனிட்டு பலப்படுத்தினார் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இதன்11.55 கி.மீ. நீள கால்வாய் மூலம் 1,053 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.

கன்னடியன்

கன்னடியன் நீர்த்தேக்கம் மதுரை அரசின் பிரதிநிதியாக இருந்த கன்னட இனத்தை சேர்ந்த வரால் கட்டப்பட்டதால் இப்பெயர் வழங்கப் பெற்றிருக்கும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படு கின்றன. இதன் அருகே சிறு கோயில் உள்ளது. அங்கு ஜூன் மாதம் 5-ம் தேதி உள்ளூர் தேவதைக்கு ஆண்டுதோறும் பலி கொடுக்கப் படுகின்றன. அன்றைய தினத்தில் கால்வாயில் பல சடங்குகளை செய்து தண்ணீர் திறக்கப் படுகிறது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து 33.95 கி.மீ. நீளம் செல்லும் கன்னடியன் கால்வாய் 16 குளங்களுக்கு தண்ணீர் வழங்கி 5,058 ஏக்கர் நிலத்தை செழிப்பாக்குகிறது.

அரியநாயகிபுரம்

அரியநாயகிபுரம் நீர்தேக்கம், அருகில் உள்ள கிராமத்தின் பெயரால் இதற்கு அப்பெயர் வரக் காரணமாக அமைந்துவிட்டது. அரியநாயகிபுரம் அணைக்கட்டிலிருந்து பிரியும் 27 கி.மீ. நீளமுள்ள கோடகன் கால்வாய் மூலம் 2,900 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கூடவே 17 குளங்களையும் நிறைக்கிறது.

சுத்தமல்லி

சுத்தமல்லி நீர்த்தேக்கம் திருநெல்வேலி மாநகரத்தின் சுற்றுவட்டார பகுதிகளின் விவ சாயத்துக்கு தேவையான தண்ணீரை வழங்குகிறது.

இதிலிருந்து பிரியும் திருநெல் வேலி கால்வாயின் நீளம் 28.6 கி.மீ. இந்த கால்வாய் நயினார்குளம் முதல் குப்பக் குறிச்சி கிராமத்துக் குளம் வரையில் 23 குளங்களுக்கு நீர்பெருகவும் 4190 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறவும் உதவுகிறது.

பழவூர்

பழவூர் நீர்தேக்கம் பாளையங்கோட்டைக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் தண்ணீர் தருகிறது. பழவூர் என்பது ஆற்றின் இடது கரையில் அமைந்திருக்கும் கிராமம். பழவூர் அணைக்கட்டிலிருந்து பிரியும் பாளையங் கால்வாய் 42.6 கி.மீ. நீளம் கொண்டது. இந்தக் கால்வாய் 57 குளங்களின் நீராதாரமாக இருக்கிறது. இதன் மூலம் 5,027 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த கால்வாய் திருநெல்வேலி நகரப் பகுதியில் மட்டும் 9.6 கி.மீ. தூரம் ஓடுகிறது.

மருதூர்

தாமிரபரணியின் மற்ற நீர்த்தேக்கங்களைவிட அதிகப்படியான நெல் விளைச்சலுக்கு தேவை யான தண்ணீரை கொடுப்பது மருதூர் நீர்த் தேக்கம். பாளையங்கோட்டைக்கு அருகே யுள்ள இந்த நீர்நிலை, 1792-ல் முற்றிலும் திரும்ப கட்டப்பட்டிருக்கிறது. கல்வெட்டு கூறும் தகவலின்படி இது டோரின் என்பவர் திருநெல்வேலி ஆட்சியராக இருந்தபோது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. கர்னல் கால்டு வெல்லினால் 1807-ல் மறுபடியும் இந்த அணைக்கட்டில் அதிகமான பணிகள் செய்யப் பட்டிருக்கின்றன. மருதூர் மேலக்கால்வாய் மூலம் 16 குளங்களில் நீர் பெருகுகிறது. 5,173 ஏக்கர் பாசனம்பெறுகின்றன. மருதூர் கீழக் கால்வாய் மூலம் 15 குளங்களில் நீர் பெருகு கிறது. 3154 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

ஸ்ரீவைகுண்டம்

நிறைவாக வருவது ஸ்ரீவைகுண்டம் நீர்தேக்கம். தாமிரபணியில் இடம்பெற்றுள்ள வற்றில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஒரே நீர்தேக்கம் இதுதான். இந்த நீர்த்தேக்கங் களில் எல்லாம் பரா மரிப்பு பணிகளை யும், கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை யும் தொடர்ச்சியாக மேற்கொண்டால் மட்டுமே திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்ததாக அதிக நெல் விளையும் பூமி என்ற பெருமையை தொடர்ந்து தக்கவைக்க முடியும்.

(தவழ்வாள் தாமிரபரணி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x