Published : 25 Sep 2016 09:42 AM
Last Updated : 25 Sep 2016 09:42 AM
இந்திய விடுதலை வயது 70-ஐத் தொட்டுள்ள இதே ஆண்டில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் 60-வது வயதை நிறைவுசெய்து வைர விழாவைக் கொண்டாடுகிறது. திலகரின் சுயராஜ்ய முழக்கம் சுதேசி காப்பீட்டு நிறுவனங்களின் பிறப்புக்கும், 1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டின் தீர்மானம் காப்பீட்டு நிறுவனங்களின் தேசியமயத்துக்கான விதைப்பிற்கும் வழிவகுத்தன என்பது வரலாறு. தொழிலகங்கள் இன்று மீண்டும் அந்நிய முதலீடுகளின் குறியிலக்குகளாக மாறிவரும் நிலையில், எல்ஐசி-யின் சாதனையை நாம் நினைவுகூர்வது நம்முடைய ஆட்சியாளர்கள் இன்று சென்றுகொண்டிருக்கும் பாதை எந்த அளவுக்குச் சரியானது என்பதை யோசிக்க உதவக் கூடியது.
விதேசி டயப்பர்கள்…
கடந்த ஜூன் மாதம் அந்நிய முதலீடுகளை மேலும் அதிகமாக அனுமதிப்பதற்கான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. இதையொட்டி பேசிய பிரதமர் “உலகிலேயே அந்நிய முதலீட்டுக்கு அதிகமாகத் திறந்துவிடப்பட்டுள்ள நாடு இந்தியா” என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார். அந்நிய முதலீடுகளுக்கு ஆட்சியாளர்கள் கற்பிக்கும் நியாயங்களில் ஒன்று, “அந்நிய முதலீடுகள் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவரும்” என்பது. ஆனால், நம் கைவசம் இருக்கிற தொழில்நுட்பங்களையே நாம் முறையாகப் பயன்படுத்துகிறோமா என்கிற கேள்வியை இதே அமைப்புக்குள் இருப்பவர்களே எழுப்புகிறார்கள்.
மார்ச் 15, 2016 அன்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் வி.கே.சுப்புராஜ் இப்படி ஒரு கேள்வியை முன்வைத்தார்: “உலக மருந்தகம் என்று அழைக்கப்படுகிற அளவுக்குப் பல வெளிநாடுகளுக்கு மருந்துகளை உற்பத்திசெய்து ஏற்றுமதிசெய்யும் இந்தியாவால் குழந்தைகளுக்குப் போடும் டயப்பர்களை உற்பத்திசெய்ய முடியாதா? ரூ.200 கோடிக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது ஏன்? மருத்துவமனைப் படுக்கைகளை இங்கேயே தயாரிக்க முடியாதா? புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை இயந்திரங்களை மூன்றிலொரு பங்கு விலையில் இங்கேயே உற்பத்திசெய்து மாவட்ட அரசு மருத்துமனைகளுக்கெல்லாம் தர முடியாதா?”
பாதுகாப்புத் துறையில் ஜூலை 2014-ல் 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது. ஆனால், பிப்ரவரி 2016 வரையிலான 18 மாதங்களில் இங்கே வந்த அந்நிய முதலீடுகள் எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.1 கோடி மட்டுமே. இதன் பின்னணி என்ன தெரியுமா? “அந்நிய முதலீடுகளோடு வரும் நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத்தையும் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்று ஒரு நிபந்தனை இருந்தது. இது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. விளைவாக 2016 ஜூனில் இப்படியான நிபந்தனைகள் யாவும் கைவிடப்பட்டன.
இது ஒரு உதாரணம்தான். எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், அந்நிய முதலீடுகளுக்கு நாட்டைத் திறந்துவிடும்போது ஆயிரம் நியாயங்களை அரசு சொல்கிறது. ஆனால், கடைசியில் என்ன நடக்கிறது என்றால், அந்நிய நிறுவனங்கள் லாபம் ஒன்றே தம் இலக்கு என்பதைத் தெளிவாக நமக்கு வெளிக்காட்டிவிடுகின்றன. இவை பொதுவெளியில் பலரின் பார்வைக்கு வருவதில்லை.
அடுத்த இலக்கு காப்பீடு
உலகமயப் பொருளாதாரத்துக்குச் சரியான பதிலை இன்றைக்கு இந்தியாவில் கொடுத்துக்கொண்டிருக்கும் துறை காப்பீட்டுத் துறை. அடுத்து அந்நிய முதலீட்டாளர்கள் அதையே குறிவைக்கிறார்கள். இந்தியக் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 26%-ல் இருந்து 49% வரை உயர்த்தப்பட்டபோது கடும் எதிர்ப்பு எழுந்தது.
2015-ல் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, “இந்தியர்களின் கட்டுப்பாடு உறுதிசெய்யப்படும்” என்ற ஷரத்து அதில் இணைக்கப்பட்டது. இப்போது அந்த நிபந்தனையையும் தளர்த்துமாறு அந்நிய முதலீட்டாளர்கள் கேட்கிறார்கள்.
இந்தத் துறையில் அந்நிய முதலீடுகளின் நோக்கம் தெளிவாகப் புரிகிறது. அவர்களின் இறுதி இலக்கு பொதுத் துறை நிறுவனங்களையே கைப்பற்றுவதுதான். அதற்காக வகுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அரசுப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு விற்பனை நோக்கி அடுத்து நகர்கிறார்கள். “யுனைட்டெட் இந்தியா, ஓரியன்டல், நியூ இந்தியா, நேஷனல் ஆகிய அரசுப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் பங்கு விற்பனைக்கு ஆளாகும்” என்று அறிவித்திருக்கிறார்கள். இதனால் தேசத்துக்கு என்ன லாபம்? ஏற்கெனவே, 18 தனியார் பொதுக் காப்பீடு நிறுவனங்கள் வணிகக் களத்தில் உள்ளன. இவர்கள் பொதுக் காப்பீட்டு பரவலுக்காகச் சாதித்திருப்பது என்ன?
இந்திய நகரங்களை ஆறு தட்டுகளாகப் பிரித்துக்கொண்டால், இன்றைக்குத் தனியார் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் எதைத் தங்கள் மைய நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் 1,742 அலுவலகங்களில் 1,706 அலுவலகங்கள் எங்கே இருக்கின்றன தெரியுமா? முதல் தட்டு நகரங்களில். அதாவது, 98% அவை முதல் தட்டு நகரங்களை மையமாகக் கொண்டே செயல்படுகின்றன.
ஐந்தாவது, ஆறாவது தட்டு சிறு நகரங்களில் தனியார் பொதுக் காப்பீட்டு அலுவலகம் ஒன்றுகூட இல்லை. அரசு பொதுக் காப்பீட்டு நிறுவன அலுவலகங்களை எடுத்துக்கொண்டால், இந்த இரு தட்டு நகரங்களிலும் 1,285 அலுவலகங்கள் உள்ளன. இது 2015-ம் ஆண்டு காப்பீட்டு வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டு ஆணைய ஆண்டறிக்கை தருகிற தகவல். யார் தேசத்துக்காகவும், யார் லாபத்துக்காகவும் பணியாற்றுகிறார்கள் என்பதற்கு இதைவிடவும் சாட்சியம் தேவையா?
60 ஆண்டு ஆச்சரியம்!
இன்று 24 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் எதிர்த்து நிற்கும்போதும் புது வணிக பாலிசிகளில் 76% என்ற சந்தைப் பங்கோடு எல்ஐசி எடுத்துள்ள விஸ்வரூபம் சாதாரணமானது அல்ல. 1956-1961-ல் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்துக்கு ரூ.184 கோடிகளைத் தந்த எல்ஐசி 12-வது ஐந்தாண்டு திட்டத்துக்கு முதல் நான்கு ஆண்டுகளில் (2012-2016) மட்டும் தந்திருக்கும் பங்களிப்பு ரூ.10,86,720 கோடி. பெரும் சாதனை அல்லவா இது!
உலகமய யுகத்தில் அந்நிய முதலீடுகள் சர்வரோக நிவாரணி அல்ல. முறையாக நிர்வகிக்கப் பட்டால், பொதுத்துறை நிறுவனங்கள் வணிக லாபங்களைத் தாண்டி தேசக் கட்டுமானத்தோடும் வளர்ச்சியோடும் தொடர்புடையவை என்பதற்கு அற்புதமான உதாரணமாகத் திகழ்கிறது எல்ஐசி. காப்பீட்டுத் துறையில் இருந்து அது அனுப்பும் சமிக்ஞைகளை இந்திய அரசு புரிந்து செயல்பட்டால், இந்தியாவின் வளர்ச்சி உலகுக்கே முன்னுதாரணமாகத் திகழும்!
க.சுவாமிநாதன், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர்,
தொடர்புக்கு: swaminathank63@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT