Last Updated : 21 Apr, 2017 09:11 AM

 

Published : 21 Apr 2017 09:11 AM
Last Updated : 21 Apr 2017 09:11 AM

ஆங்கிலத்துக்காகத் தமிழகம் இன்னொரு மொழிப் போர் நடத்த வேண்டுமா?

கல்லூரி மாணவர்களுடனான உரையாடல்களின்போதெல்லாம், நான் சில கேள்விகளைக் கேட்பது வழக்கம். அவற்றில் கட்டாயம் இடம்பெறும் ஒரு கேள்வி: “மொழிப் போர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” மாணவர்களின் பதில் பெரும்பாலும் இப்படியிருக்கும். “தமிழகத்தின் நலனுக்காக, இந்திக்கு எதிராக நாம் நடத்தியது!”

நான் சொல்வேன், “தம்பி, அது இந்திக்கு எதிராக நடத்தியது அல்ல, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக நடத்தியது, தமிழ்நாட்டின் நலனுக்காக நடத்தப்பட்டது அல்ல, உண்மையில் இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலத்துக் காகவும் நடத்தப்பட்டது, ஆங்கிலத்திற்காக நடத்தப்பட்டது! இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 1950-ல் தீர்மானிக்கப்பட்ட போது, நாட்டினுடைய ஒரே அலுவல் மொழி இந்தி என்று முடிவெடுத்துவிட்டார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? ரயில் நிலையத்திற்குப் போகிறோம். அங்கே பெயர்ப்பலகையில் இந்தி மட்டுமே இருக்கும். வங்கிகளுக்குப் போகிறோம். படிவங்களில் இந்தி மட்டுமே இருக்கும். நாடாளுமன்றத்தில் இந்தியில்தான் பேச முடியும். அப்படியென்றால், நாட்டின் 60% மக்கள், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? ஒரே நாளில் அவ்வளவு பேரையும் இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் ஏற்பாடு இல்லையா இது? இதை எதிர்த்து நம் முன்னோர் போராடினார்கள். இந்தி பேசாத மக்களின் நலனுக்காக, கூடுதல் அலுவல் மொழியாக ஆங்கிலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார்கள். போராட்டத்தின் விளைவாக, எண்ணற்றோரின் உயிர்த் தியாகத்தின் விளைவாக ஆங்கிலமும் அலுவல் மொழியானது. ஆனால், இன்றைக்கும் அந்த ஏற்பாடு ஊசலாடும் நிலையில்தான் இருக்கிறது!”

இப்போது அந்த ஏற்பாட்டின் மீதான ‘துல்லியத் தாக்குதல்’ தொடங்கிவிட்டது. குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி சமீபத்தில் ஒப்புதல் அளித்திருக்கும், ஆட்சிமொழி தொடர்பிலான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் இன்னொரு மொழிப் போருக்கான தேவையைக் கூறுகின்றன. இதைப் பரிந்துரைத்த குழுவின் தலைவர் ப.சிதம்பரம் ஒரு தமிழர் என்பதும் இப்போது அதற்கு ஒப்புதல் அளித்திருக்கும் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி ஒரு வங்காளி என்பதும் சோகமுரண். ஏனைய இனங்களுக்கான முடிவுரை முயற்சிகளைக்கூட இன்றைக்கு அவரவர் கைகளாலேயே எழுதவைக்கிறது இந்தி தேசியம்!

என்ன பரிந்துரைக்கிறது ஆட்சிமொழிக் குழு?

மொத்தம் 117 பரிந்துரைகள். அவற்றில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கும் பரிந்துரைகளில் சில இவை.

* இந்தி படிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலய பள்ளிக்கூடங்களில் பத்தாவது வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும்.

* எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்விக்கூடங்களிலும் இந்தி மூலம் பாடம் கற்பிப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

* மத்திய அரசின் எல்லா விளம்பரங்களிலும் 50% செலவு இந்திக்காகவும் எஞ்சிய செலவு ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளுக்காகவும் இருக்க வேண்டும்.

* அறிவியல் ஆய்வு இதர ஆய்வு நிறுவனங்கள் ஏராளமான தொகையைப் புத்தகங்கள் வாங்கச் செலவிடுகின்றன. இவற்றில் 50% இந்தியில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்று ஆணையிட வேண்டும். நூல்கள் வாங்க நிதி ஒதுக்கப்படாத துறைகளில் அலுவலகத் தின் மொத்தச் செலவில் 1% புத்தகம் வாங்கச் செலவிடப்பட வேண்டும். அந்தத் தொகையில் சரிபாதி இந்திப் புத்தகங் களுக்குச் செலவிடப்பட வேண்டும். நூல்கள் வாங்குவதற்கான தொகையில் 50% அல்லது மொத்த அலுவலகச் செலவில் 1% என்ற இரண்டில் எது அதிகமோ அந்தத் தொகைக்கு இந்திப் புத்தகங்கள் வாங்கச் செலவிட வேண்டும்.

* குடியரசுத் தலைவர் உள்ளிட்ட உயர் பதவியாளர்களும், அமைச்சர்களும் இந்தியில் பேச, படிக்க முடியும் என்றால் இந்தியில் மட்டுமே பேச வேண்டும், அறிக்கைகளை அளிக்க வேண்டும்!

இதைப் பரிந்துரைத்த மூளைகள் இந்தி பேசாத மாநில மக்களை எவ்வளவு துச்சமெனக் கருதுபவை என்பதை இந்தப் பரிந்துரைகளைத் தாண்டியும் புரிந்துகொள்ள குடியரசுத் தலைவர் அனுமதி தராத பரிந்துரைகள் மேலும் அடையாளம் காட்டுகின்றன.

* அரசியல் சட்டத்தின் 120 (2) ஷரத்துப்படி, நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது தாய்மொழியை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

* ஆங்கில ஆதிக்கத்தை (பயன்பாட்டை அல்ல) முடிவுக்குக் கொண்டுவர, இந்தி அல்லது தாய்மொழியைக் கற்பிக்காத பள்ளிக்கூடங்களுக்கு அரசு அங்கீகாரம் தரக்கூடாது.

* மத்திய அரசுப் பணியில் சேர விரும்புவோர் இந்தித் போட்டித் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட வேண்டும்.

* ஆட்சிமொழிச் சட்டத்தை அமல்படுத்தாத அதிகாரி களுக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

ஆங்கிலத்தின் மீதான குரூரத் தாக்குதல்

சுதந்திர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று இது என்பது போக, ஆங்கிலத்தின் மீதான நேரடியான, குரூரமான தாக்குதலும் இது.

ஏன் ஆங்கிலத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்? ஏனென்றால், இந்தி பேசாத மாநிலங்களுக்கும் அதிகாரத்துக்குமான நேரடிப் பாலம் ஆங்கிலம். அந்தப் பாலம் இந்திய ஒன்றியத்துடன் மட்டும் இன்றி, சர்வதேசத்துடனும் ஏனைய சமூகங்களை இணைக்கிறது; மறைமுகமாக இந்தி தேசியர்களின் ஒரே கலாச்சார ஆதிக்கத்தைத் தடுக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் பிற்போக்குத்தனங்களை அது உடைத்து நொறுக்கும் கருவியாகிறது. பன்மைத்துவத்துக்கான ஊடகமாகிறது.

ஆங்கிலத்தின் மீதான இந்த வெறித் தாக்குதல் புதிதல்ல. அதற்கு நீளமான வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. 1957-ல் நடத்தப்பட்ட ‘ஆங்கிலத்தை ஒழிப்போம் இயக்கம்’ (அங்க்ரேஸி அடாவோ) இந்தி பேசும் மாநிலங்களில் சங்கப் பரிவாரங்களின் வளர்ச்சிக்கு உதவிய முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று. 1963-ல் “பள்ளிக்கூடங்களில் மட்டும் அல்ல; கடைப் பெயர்ப் பலகைகளிலும் கார் நம்பர் பிளேட்டுகளிலும்கூட ஆங்கிலம் கூடாது” என்று நடந்த போராட்டங்களில் முதலில் முன்னின்றவை ஆர்எஸ்எஸ்ஸும் இன்றைய பாஜகவின் அன்றைய முகமான ஜனசங்கமும்.

அதிகம் பேசப்படாத குஜராத் கதை

குஜராத் வளர்ச்சியை முன்மாதிரியாக வைத்து மோடி பேசத் தொடங்கியிருந்த நாட்களில் வெளியானவற்றில் முக்கியமான ஒன்று ‘ப்ரதம்’ அறிக்கை. தேசிய அளவில் தொடக்கக் கல்வித் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆண்டுதோறும் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கும் இந்த அமைப்பு, “ஆங்கிலத்தைப் பொறுத்தவரை நாட்டிலேயே மாணவர்கள் கடைசி இடத்தில் இருக்கும் மாநிலம் குஜராத்” என்றது.

பிற்பாடு நான் குஜராத் சென்றேன். ‘குஜராத் மாதிரி’ தொடர்பில் தெரிந்துகொள்ள குஜராத்தின் தொழில் துறை, கல்வித் துறை தொடர்பில் கொஞ்சம் தெரிந்துகொள்ள விரும்பினேன். குஜராத்திலுள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் கிடையாது என்பதும் அங்குள்ள மாணவர்கள் ஆறாம் வகுப்பில்தான் ‘ஏ,பி,சி,டி’ கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள் என்பதும் தெரியவந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. உடன் வந்த நண்பர் அரசு சொன்னார், “இது தேவலாம். முன்பு எட்டாவது வரை ஆங்கிலம் கிடையாது. தொடக்கக் கல்வியிலேயே ஆங்கிலத்தைக் கொண்டுவர பல வருஷங்களுக்கு முன்பே காங்கிரஸ் அரசாங்கத்தில் முயன்றார்கள். ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் விடவில்லை!”

குஜராத்தில் ஒரு சாதாரண தொழிலாளியின் வருமானம் நம்மூர் தொழிலாளியைக் காட்டிலும் அதிகம். அதற்குக் காரணம் அவர்கள் காலையில் ஒரு வேலை, மாலையில் ஒரு வேலை என்று இரண்டு வேலைகள் பார்ப்பது அல்லது ஒரே வேலையை அதிக நேரம் பார்ப்பதே என்பதும் அங்கு சென்ற பின்னரே தெரியவந்தது. உண்மையில் நம்மூரில் திராவிடக் கட்சிகள் கடந்த ஐம்பதாண்டுகளில் ‘ஒயிட் காலர்’ வேலைகளை அதிகம் வளர்த்திருக்கின்றனர்; மாறாக குஜராத்தின் பொருளாதாரம் ‘ப்ளூ காலர்’ வேலைகளால் நிறைந்தது.

குஜராத் மக்கள்தொகையில் 20% பேர் படேல்கள். மாநிலத்திலுள்ள 120 சட்டசபை உறுப்பினர்களில் 40 பேர் படேல்கள். அமைச்சர்களில் பெரும்பான்மையினரும் அவர்கள்தான். இவ்வளவு பெரிய அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தும், நிலவுடைமையாளர்களான அவர்கள் இன்று ஏன் இடஒதுக்கீட்டுக்காகப் போராடும் நிலையில் இருக்கிறார்கள்? வேலைவாய்ப்பின்மை. உலகமயமாக்கல் சூழலுக்கு முகங்கொடுக்க முடியாமை. ஆங்கில எதிர்ப்புக்கு இதில் முக்கியமான பங்குண்டு.

உத்தர பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக இருந்தபோதே அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் தீவிரமாகத் தொடங்கின. இன்றைக்கு இந்தி பேசும் மாநிலங்கள் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பின்தங்கியிருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, உலமயமாக்கல் சூழலுக்கு முகங்கொடுக்க முடியாத அவர்களுடைய பிற்போக்குத்தனமான ஆங்கில எதிர்ப்புக் கொள்கை. வட இந்தியாவில் குஜ்ஜார்கள், ஜாட்டுகள் என்று பல நிலவுடைமைச் சமூகங்கள் இன்று வேலைவாய்ப்பின்மையால் இடஒதுக்கீட்டின் பெயரால் வீதியில் நிற்பதற்கும் இந்தி பேசும் மாநிலங்களில் சங்கப் பரிவாரங்கள் செல்வாக்கு ஓங்கியிருப்பதற்கும் முக்கியமான தொடர்பு உண்டு. இந்தி வெறி பிடித்த ஆங்கில எதிர்ப்புக் கொள்கை இதன் அடிநாதங்களில் ஒன்று.

தமிழகம் உலகமயமாக்கல் சூழலில் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் நிமிர்ந்து நிற்கக் காரணமும் அதே ஆங்கிலம்தான். அண்ணா தேர்ந்தெடுத்த இருமொழிக் கொள்கை. பெரும்பான்மைவாதத்துக்காக இந்தியை ஒரு ஆயுதமாகக் கையில் எடுத்து நிற்பவர்களுக்கு ஆங்கிலத்தின் முக்கியத்துவம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்நாட்டின் சாமானிய மக்கள் அதன் அவசியத்தைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ராமேஸ்வரம் போன்ற ஒரு கடைக்கோடிக் கிராமத்தில் ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்த ஒரு ஏழை முஸ்லிம் இந்நாட்டின் மக்களின் ஜனாதிபதியாக உயர்ந்தது ஆங்கிலத்தின் துணையால்தான். ஒரு ஏழை விவசாயியும், ஒரு ரிக்‌ஷாக்காரரும், ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியும்கூட இந்நாட்டில் தம் பிள்ளைகளுக்கு எப்பாடு பட்டாவது ஆங்கிலம் புகட்டிவிடத் துடிப்பது அதனால்தான்.

உலகில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அத்தனை கல்வி ஆய்வுகளும் தாய்மொழிக்கல்விக்கே முதல் கவனத்தை அளிக்கச் சொல்கின்றன. அடுத்து, ஆங்கிலத்தின் மேன்மையை அவை உரக்கச் சொல்கின்றன. இந்தி போன்ற மூன்றாவது மொழி ஒன்றைப் பிற்பாடு கற்பதில் தடை ஏதுமில்லை. இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் எல்லாமே கற்றுக்கொள்ளலாம். ஆனால், உலகமயமாக்கல் சூழலில் இந்தியின் பொருத்தப்பாடு என்ன என்பதற்குப் பதில் வேண்டும். தாய்மொழியும் ஆங்கிலமும் தராத எதை ஒரு இந்தி பேசா மாநிலக் குழந்தைக்கு இந்தி தந்துவிடும் என்பதற்குப் பதில் வேண்டும்.

இந்திய அரசு இதே அக்கறையை ஆங்கில வளர்ச்சியில் திருப்பினால், உண்மையிலேயே நாட்டின் வளர்ச்சியில் மகத்தான மாற்றங்கள் நிகழும். மக்களை அது மேன்மை அடையச் செய்யும். பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், உண்மையான சமூக, நாகரிக வளர்ச்சியையும் அது வளர்த்தெடுக்கும். மாறாக, இந்நடவடிக்கை இதுநாள் வரையிலான நம்முடைய வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளும் முயற்சி.

மௌனம் அமைதி அல்ல!

பள்ளிக்கூடங்களில் தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்தி ஆதிக்கத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது மோடி அரசு. இந்தி பேசும் மாநிலங்களின் அமைச்சர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் யாவருடைய உரைகளும் இனி இந்தியில்தான் இருக்கும் என்பதற்கும் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்பதற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. “இந்தி பேசத் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்கத் தகுதியற்றவர்கள்” என்று ஐம்பதுகளில் நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல் ஞாபகத்துக்கு வருகிறது.

தமிழகத்தின் அரசியல் கட்சிகளிடம் அறிக்கைகளைத் தாண்டி இது தொடர்பில் சலனங்கள் ஏதும் இல்லை. பெரியார், அண்ணா என்று வந்த ஆதிக்க எதிர்ப்பு மரபில், ஒரு கருணாநிதியும் ஜெயலலிதாவும்கூட இன்று அரசியல் களத்தில் இல்லாததன் வெற்றிடம் அப்பட்டமாக இச்சூழலில் தெரிகிறது. மத்தியில் பெரும்பான்மைவாத அரசு எக்களித்துச் சிரிக்கிறது. இளைஞர்கள் மெளனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மௌனம் அமைதி அல்ல!

- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x