Published : 19 Aug 2016 09:17 AM
Last Updated : 19 Aug 2016 09:17 AM

என்ன எதிர்பார்க்கிறது இந்தியா?

புதிய கல்விக் கொள்கையின் நகல் அறிக்கை, தாய்மொழி வழிக் கல்வி குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் மிகச் சரியாகவே இனம் கண்டிருக்கிறது. ஆனால், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி என்று வரம்பு விதிக்கிறது. உயர் கல்வியும் தாய்மொழியில் அல்லது மாநில மொழியில் இருந்தாக வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணத்தில், மக்களின் மொழிகளில் உயர் கல்வி குறித்து இந்த அறிக்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பது பெரும் குறை. மக்களின் தாய்மொழிகளில் உயர் கல்வி இருக்க வேண்டும் என 1948-ல் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆணையம் முன்மொழிந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

அந்நிய மொழி ஒன்றைப் பயிற்றுமொழியாகக் கொண்டு, இந்த உலகத்தில் எந்த ஒரு நாடும் நீண்ட கால வளர்ச்சியையும் செழுமையையும் பெற்றதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். முன்னாள் காலனி நாடுகள் மட்டுமே தங்களுடைய உயர் கல்வி நிறுவனங்களை அந்நிய மொழிகளில் உருவாக்கி நடத்துகின்றன. ஆனால், வளர்ந்த நாடுகள் அனைத்துமே தங்கள் உயர் கல்வி நிறுவனங்களைத் தமது மக்களின் மொழிகளிலேயே நடத்துகின்றன. இந்நிலையில், உலகளாவிய தரவரிசைப் பட்டியல்களில் இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் பின்தங்கிவருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

நடப்பு வேறு

தேசிய, சர்வதேச அளவில் புலம்பெயர்பவர்களுக்கு ஆங்கிலம் ஒரு இன்றியமையாத மொழி என்று இந்த நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதிகரித்துவரும் உலகமயச் சூழலில் அந்நிய மொழிக்கான திறன், கூடுதலான ஒரு அனுகூலம் என்பது உண்மையே என்றாலும், நடைமுறை உண்மை முற்றிலும் வேறு. இந்தியாவில், மாநிலங்களுக்கு இடையில் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை வெறும் 4%தான் (2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி). இந்தியாவை விட்டு வெளியே புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையும் குறைவுதான். எனவே, தேசிய கல்விக் கொள்கையில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை அளிப்பதைவிட, பள்ளிகளில் அதை ஒரு விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்துவதே நல்லது.

பயிற்று மொழியாக ஓர் அந்நிய மொழி இருப்பதற்கும் கல்வி, அறிவியல் -தொழில்நுட்பம், பன்னாட்டு வர்த்தகம் மற்றும் வணிகம் ஆகியவற்றில் வளர்ச்சியையும் வெற்றியையும் எட்டுவதற்கும் இடையிலான உறவு எதிர்மறையானதாகவே இருப்பதைப் பன்னாட்டுப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஒரு அந்நிய மொழியைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பதற்கும் அந்த அந்நிய மொழியையே கற்றுத் தேர்வதற்கும் இடையிலான உறவும்கூட எதிர்மறை உறவாகவே இருக்கிறது என்பதுதான் ஆச்சரியமான உண்மை.

இந்தத் துறைகளில் முறையற்ற வகையிலும் உண்மைக்குப் புறம்பாகவும் ஆங்கில மொழிக்கு நாம் அளித்துவரும் அழுத்தமானது இந்தியாவுக்கு மிகப்பெரிய செலவினமாகவே இருக்கிறது. அத்துடன் தாய்மொழிகளைப் புறக்கணிப்பது இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான மொழிகளை அழிவை நோக்கித் தள்ளுகிறது. இது ஒரு நாகரிகமே அழிந்துபோவதற்கு ஒப்பானதாகும்.

அரசியல் சாசனத்தின் எட்டாம் அட்டவணையில் உள்ள மொழிகள், இந்தி உட்பட, கல்வித் துறையில் மிகப்பெரிய அளவுக்குப் பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றன. கல்வித் துறைதான் எந்த ஒரு மனித வள ஆற்றலையும் படைக்கிறது. அதே சமயம், ஒரு மொழி உயிர்த்திருப்பதற்கும் நிலைத்து நீடிப்பதற்குமான அடிப்படைத் துறையும் கல்வித் துறைதான்.

எதற்குச் சிறப்பிடம்?

சம்ஸ்கிருதத்தை இந்த ஆவணம் தனிச் சிறப்பான இடத்தில் வைத்திருக்கிறது. சம்ஸ்கிருதத்தையும் இந்தியையும் இந்திய ஒன்றியத்திலுள்ள பெரும் எண்ணிக்கையிலான பிற மொழிகளுக்கு இணையாகவே வைத்து நடத்த வேண்டும். ஒரு தேசத்தின் ஒற்றுமைக்கு மொழிச் சமத்துவமானது ஒரு முன்நிபந்தனையாகும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குக் காட்டிவருகிறது. மொழிச் சமத்துவம் எங்கெல்லாம், எப்போதெல்லாம் மீறப்படுகிறோ, அப்போது அச்சுறுத்துலுக்கு உள்ளாவது ஒற்றுமைதான். எனவே, எந்த ஒரு மொழிக்கும் சிறப்பிடம் கொடுத்து நகல் ஆவணத்தில் சுட்டிக்காட்டுவது தேவையற்றது.

இந்தியா போன்ற பன்மைத்தன்மையுள்ள ஒரு நாட்டில், மொழிச் சமத்துவம் தொடர்பாக முக்கியமளித்துப் பேசுவதும் இன்றியமையாதது. அரசால் நடத்தப்படும், உயர் கல்விக்கான சேர்க்கைகளுக்கும் வேலைகளுக்குமான நுழைவுத் தேர்வுகளை அவரவர் தாய்மொழியில் எழுதுவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் கோடிக்கணக்கான இந்தியர்களின் மொழி உரிமைகள் அவமதிக்கப்படுகின்றன. மொழி உரிமைகள் தொடர்பான இந்த வெளிப்படையான மீறல் குறித்து நகல் ஆவணம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. எந்த ஒரு மாணவருக்கும் அல்லது வேலை தேடுவோருக்கும் அவரது மொழியில் தேர்வு எழுதுவதற்கான உரிமை பறிக்கப்படக் கூடாது.

என்ன செய்ய வேண்டும்?

கல்வியின் எல்லா மட்டங்களிலும் பயிற்று மொழி, குழந்தையின் தாய்மொழியாக இருக்க வேண்டும். கல்வி மற்றும் பிற துறைகளிலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருப்பதன் மூலமாக அழிவை எதிர்கொண்டிருக்கின்ற, இதுவரை அட்டவணையில் சேர்க்கப்பட்டிராத மொழிகளின் விவகாரத்தில் குறிப்பான கவனம் செலுத்துவதும் அவசியம்.

மேலும், எல்லாப் படிப்புகளுக்குமான நுழைவுத் தேர்வு களையும் அனைத்து தாய்மொழிகள் / அட்டவணை மொழி களில் நடத்துவதும், மத்திய அரசு வேலைகளுக்கான எல்லாப் போட்டித் தேர்வுகளையும் எல்லா அட்டவணை மொழிகளிலும் நடத்துவதும் அவசியமானவை. கல்விக் கொள்கையின் எல்லா விவகாரங்களிலும் மொழிச் சமத்துவம் மற்றும் மொழி உரிமைக் கோட்பாடுகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.

(இந்தியாவிலுள்ள 40-க்கும் மேற்பட்ட மொழி களின் பிரதிநிதிகளின் ஆதரவில் இயங்கும் ‘மொழி நிகர்மைக்கும் உரிமைகளுக்குமான பரப்பியக்கம்’ (CAMPAIGN FOR LANGUAGE EQUALITY AND RIGHTS, CLEAR), ஜூலை 27, 2016 அன்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் அளித்த கடிதத்தின் சாரம்)

- ஆழி செந்தில்நாதன் (தமிழ்நாடு, கூட்டக ஒருங்கிணைப்பாளர், கிளியர்),

மற்றும் உறுப்பினர்கள்: பேரா.ஜோகா சிங் (பஞ்சாப்), பிரியங்க் பார்கவ் (கர்நாடகம்), பேரா.பி.பவித்திரன்(கேரளம்), பேரா. கோர்கோ சாட்டர்ஜி (மேற்கு வங்கம்), பேரா. ரவேல் சிங் (புது டெல்லி), பேரா.தீபக் பவார் (மகாராஷ்டிரம்), சாகேத் ஸ்ரீபூஷண் சாகு (ஒடிசா)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x