Published : 13 Jul 2016 09:17 AM
Last Updated : 13 Jul 2016 09:17 AM

தினம் தினம் நிஜ அவதார்

உலகின் நிலப் பரப்புகள் அனைத்தும் ஒரு காலத்தில் இணைந்திருந்தன. அந்த நிலத்துக்கு கோந்த்வானா (கோண்ட்வானா) என்று பெயர். இந்த வார்த்தையின் வேர், இந்தியாவின் பண்டைய கோந்த் பழங்குடிகளிடமிருந்து தொடங்குகிறது. இவர்கள் திராவிட வழி வந்தவர்கள். இவர்கள் பேசுவது திராவிட மொழி என்று பேராசிரியர் பக்தவத்சல பாரதி குறிப்பிட்டுள்ளார். ஒடிசாவில் வாழும் இந்தப் பழங்குடிகளின் மையமாக இருப்பது நியமகிரி மலை. இந்த மலையை அவர்கள் கடவுளைப் போலக் கருதுகிறார்கள். எழுத்தறிவற்ற பழங்குடிகள் மலையைப் பற்றி என்ன நினைத்தால் நமக்கென்ன? நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் கண்டுபிடித்த அனைத்துப் பேரியந்திரங்களும், அந்த இயந்திரங்களுக்கு வேலை தரும் தொழிற்சாலைகளை இந்த மண்ணுலகுக்குத் தருவதையே ஒரே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவத்துக்கும் அது அலுமினிய மூலப்பொருளின் சுரங்கம். காலம்காலமாக இயற்கையோடு இசைந்து வாழும் அந்தப் பழங்குடிகள் நாகரிகமற்றவர்கள். அறிவில் சிறந்த நாமோ, நாகரிக வளர்ச்சியின் மூலம் நமக்குக் கிடைத்த ஆகச் சிறந்த ‘பண்பான’ மலிவு விலைக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் இந்திய-பன்னாட்டு முதலாளியான அனில் அகர்வாலின் வேதாந்தாவுக்கு அந்த மலையைத் தாரை வார்க்க முயற்சிக்கிறோம்.

நியமகிரிக்கு எதிரான கோந்த் மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும், அதே ஒடிசாவில் கொரிய பன்னாட்டு நிறுவனமான பாஸ்கோ அமைக்க இருந்த இரும்பு ஆலைக்கு எதிரான போராட்டங்களுக்குக் கிடைத்த முடிவும் சரி, மந்தையிலிருந்து வழிதவறிய இரண்டு ஆடுகள் மட்டுமே. இந்தியாவின் இயற்கை வளத்தைக் காவு கேட்கும் மற்ற அனைத்துத் திட்டங்களும், பெரும்பாலும் வெற்றி எனும் மந்தையில் சேர்ந்துவிடுவதே வழக்கமாக இருக்கிறது.

சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் ஆசிஷ் கோத்தாரியும் சூழலியல் பொருளியல் அறிஞர் அசீம் வாஸ்தவாவும் எழுதிய 'Churning the Earth: The Making Of Global India' என்ற புத்தகம் உலகமயமாக்கலுக்கும் இந்திய சுற்றுச்சூழலுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றி விரிவான தரவுகளோடு ஆராய்ந்து இருக்கிறது. இந்திய சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட தாக்கத்தை எடுத்துரைக்க, அந்நூல் முன்வைக்கும் முக்கிய வாதங்கள்:

உலகமயமாக்கம் இந்திய சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய அடிப்படைத் தாக்கங்கள் என்ன?

உலகமயமாக்கத்தின் முதன்மைக் கூறுகளில் ஒன்றான தாராளமயமாக்கம், இரண்டு முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் ஒரே நோக்கத்துடன் ராக்கெட் வேகத்தில் இயற்கை வளம் சூறையாடப்பட்டுள்ளது. மற்றொன்று, இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் தயாரிப்புகளும் குப்பையும் கடுமையாக அதிகரித்துவிட்டன. இயற்கையைச் சீர்குலைப்பதால் உருவாகும் கழிவையும், நுகர்வோர் பயன்பாட்டால் உருவாகும் கழிவையும் அகற்றும் வேலையும் மோசமடைந்துள்ளது. உடல்நலப் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய மற்றும் நச்சுக் கழிவுகள் இந்தியாவில் ஏகபோகமாக உற்பத்தியாவதை உலகமயமாக்கத்தின் முக்கியச் சாதனையாகச் சொல்லலாம்.

அந்நிய நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களின் முதலீ்ட்டை ஈர்ப்பதை மட்டுமே ஒரே நோக்கமாகக்கொண்டு, சுற்றுச்சூழல் சட்டங்கள், தரக் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் சுற்றுச்சூழல், சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்து அவப்பெயரெடுத்த நிறுவனங்கள், இந்தியாவுக்கு வரும்போது ஏற்கெனவே உறுதியில்லாமல் இருக்கும் சுற்றுச்சூழல், சமூக சமத்துவ நெறிமுறைகளைத் தளர்த்த வலியுறுத்துகின்றன. உள்நாட்டுப் பெரு நிறுவனங்களும் இதை வழிமொழிகின்றன. முன்பு டாடா, எஸ்ஸார் நிறுவனங்களின் நிலம் கையகப்படுத்துதலை காங்கிரஸ் ஆட்சி விமர்சித்துவிட்டுப் பின்வாங்கியதும், அதானி குழுமத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.200 கோடி சுற்றுச்சூழல் அபராதத்தை பாஜக அரசு திரும்பப் பெற்றதும் இதற்குச் சிறந்த உதாரணங்கள். மரபணு மாற்று விதைகளுக்கு எதிராக முந்தைய அரசு விதித்த தடையை விலக்கி, மரபணு மாற்றுக் கடுகை அறிமுகப்படுத்துவதில், சுதேசி பொருளாதாரம் பேசிய பாஜக அரசு தீவிரம் காட்டிவருகிறது.

நாட்டில் குவிந்த முதலீட்டுக்குக் கொடுக்கப்பட்ட விலை என்ன?

உலகமயமாக்கத்துக்குப் பின் ஒவ்வொரு நாளும், இந்திய அரசு சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழ் அளிக்கும் பெருந்திட்டங்களின் எண்ணிக்கை சராசரியாக மூன்று. கனிமச் சுரங்கம், தொழிற்சாலை அல்லது கட்டுமானத் திட்டங்களே இவற்றில் முதன்மையானவை.

கோயில் கருவறைக்குச் சிறப்பு டிக்கெட் இருப்பதைப் போல, அதிரடியாக அனுமதிக்கப்படும் திட்டங்கள் அதற்குப் பிறகு குறைந்தபட்சமாகக்கூட 3-4 ஆண்டுகள் கழித்தே கண்காணிக்கப்படுகின்றன. இங்கே கண்காணிப்பு என்பதே பெரிய வார்த்தை. ஏனென்றால், கடந்த 15 ஆண்டுகளில் பெரும் தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு, கடலோர ஒழுங்குமுறை மண்டலச் சட்டம் போன்றவற்றை நீர்த்துப்போகச் செய்யும் 30-க்கும் மேற்பட்ட அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒருபுறம் சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்யப்படுவதுடன், மறுபுறம் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுத்து ஒழுங்குபடுத்துவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகையும் ஒரு சதவீதமாக மட்டுமே இருக்கிறது. சுருக்கமாக சுற்றுச்சூழல் என்பது மதிப்பில்லாத, அதே நேரம் அநாவசியத் தொந்தரவு என்று உலகமயத்துக்குப் பிந்தைய மத்திய அரசுகள் நினைப்பதுதான் நிதர்சனம்.

எதை விற்கிறோம், எதை இழக்கிறோம்?

இந்தியாவில் அந்நிய முதலீடு குவிந்துவருவதைப் பற்றி இந்நாள், முன்னாள் பிரதமர்கள் அடிக்கடி சிலாகிப்பது உண்டு. அந்த சிலாகிப்புக்குப் பின்னால், அவர்கள் மறைக்கும் விஷயம் காடுகளையும், எளிய உழைப்பாளிகளின் உழைப்பையும் விற்றே அந்த முதலீடு வாங்கப்படுகிறது என்பதுதான். 1980-81-க்குப் பிறகு, காடுகள் திருத்தப்பட்ட செயல்பாடுகளில் பாதிக்கு மேல் (55 %) 2001-க்குப் பிந்தைய பத்தாண்டுகளில் நிகழ்ந்தவை. அதேபோல், 1997-க்குப் பிந்தைய பத்தாண்டுகளில்தான் 70% காடுகள் கனிமச் சுரங்கத்துக்காகத் திறந்துவிடப்பட்டன.

என்ன துரதிர்ஷ்டம் பாருங்கள், இந்தியாவின் 70% மக்கள் காடுகள், நீர்நிலைகள், கடல், வயல் என நிலத்தை மையமாகக் கொண்ட தொழில்களை நம்பியே வாழ்கிறார்கள். இவர்களுக்கான தண்ணீர், உணவு, எரிபொருள், இருப்பிடம், கால்நடைத் தீவனம், மருந்து என எல்லா அடிப்படைத் தேவைகளையும் இந்த இயற்கை அமைப்புகளே பூர்த்திசெய்கின்றன. 10,000 வகைத் தாவரங்களும், நூற்றுக்கணக்கான உயிரினங்களும் மக்களை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன. காடுகளில் வெட்டு மரமல்லாத மற்ற வாழ்வாதாரங்களுக்காக 28 கோடிப் பேர் காடுகளைச் சார்ந்திருக்கிறார்கள். உலகமயமும் பெருநிறுவனங்களும் இந்தச் சூழலியல் தொகுப்புகளை நேரடியாக அழித்தொழிக்கும் போது, இந்த மக்கள் தங்கள் நிலத்திலிருந்து துரத்தப்படுவது மட்டுமல்லாமல், அவர்களுடைய வாழ்வாதாரமும் முற்றிலும் அழிக்கப்படுகிறது.

வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறதா?

உலகமயமாக்கத்தின் காரணமாக, இந்தியாவின் பேரளவு மக்கள் பல்வேறு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். உணவுப் பாதுகாப்பின்மை, நீர் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை, வாழ் வாதாரம் பறிக்கப்பட்டு, மாற்று வேலைவாய்ப்பும் சொற்பமாக இருப்பது போன்றவையே அந்த நெருக்கடிகள்.

உணவுப் பாதுகாப்பை எடுத்துக்கொள்வோம். உலக மயமாக்கத்துக்கு முன் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்போர் தொகை 24% ஆக இருந்தது.

15 ஆண்டுகளுக்குப் பின் சொற்பமாக, அதில் 2% மட்டும் குறைந்திருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 25% ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘உணவு, வேளாண் நிறுவனம்’(FAO) தெரிவிக்கிறது. உணவு உற்பத்திக்கோ, கிடங்கில் உள்ள உணவு சேகரிப்புக்கோ குறைவில்லை. ஆனாலும், நான்கில் ஒருவர் உணவின்றியே வாழ்கிறார். உலகமயமாக்கம், கண்மூடித்தனமான தொழில் வளர்ச்சியால் லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் வாழ்ந்த சூழலியல் தொகுப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதே இதற்கு முதன்மைக் காரணம்.

சிறு விவசாயிகளாகவும், இயற்கையில் கிடைத்த பொருட்களை உண்டும் வாழ்ந்துவந்த பலர் சந்தைப் பொருளாதாரத்துக்குள் பிடித்துத் தள்ளிவிடப்பட்டுள்ளனர். தங்கள் அடிப்படை வளங்களை இழந்த அவர்கள், காசு கொடுத்து மட்டுமே உணவை வாங்கும் நெருக்கடியில் உள்ளனர். ஒவ்வொரு தனிநபருக்கும் 1990-களில் கிடைக்க வாய்ப்பிருந்த பருப்பின் அளவு, தற்போது 26% குறைந்திருப்பது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. உலகமயத்துக்குப் பின் காசு இருந்தால் வாங்கிச் சாப்பிடலாம், இல்லாவிட்டால் செத்துத்தான் போக வேண்டும். அதேபோல கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் குடிக்கும் தண்ணீருக்கு இன்றைக்கு அல்லாடுகிறோம், அதிகபட்சமாகக் காசு கொடுத்து வாங்குகிறோம். கோக கோலா, பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பான ஆலைகளுக்குத் தண்ணீர் மிகக் குறைந்த காசுக்கு விற்கப்படுகிறது. அதேநேரம், சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை.

சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் வேலைவாய்ப்பு-மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

உலகமயம் உத்தரவாதம் அளித்த முதன்மை அம்சம், மிகப் பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. வாழ்வாதாரத் துக்கும் வேலைக்கும் முன்பு இருந்த குறைந்தபட்ச உத்தரவாதம் பறிபோய், நெருக்கடி மோசமடைந்திருக்கிறது. சூழலியல் தொகுப்பு சிதைக்கப்படுதல், நிலம்/நீர் சீரழிவு தீவிரமடையும்போது, இயற்கை வளத்தைப் பெறுவதற்கான சாத்தியம் பாரம்பரிய நுகர்வோரிடம் குறைகிறது. அவர்கள் அவ்வளவு காலம் மேற்கொண்டுவந்த சுயதொழிலும் சேர்ந்து பறிபோகிறது. காடு வாழ் பழங்குடிகள், மீனவர்கள், கால்நடை மேய்ச்சல் சமூகங்கள், உழவர்கள், கைவினைக் கலைஞர்களைப் போன்று இயற்கை வளங்களை ஆதாரமாகக் கொண்ட தொழில்களில் உலகமயமாக்கத்துக்குப் பின் வாழ்வாதாரம் இழந்தவர்கள் அல்லது வேலை இழந்தவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பு இல்லாதது, இந்தத் துறைகள் எவ்வளவு புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தெரிவிக்கிறது.

உலகமயமாக்கத்தால் இந்தியாவுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லையா?

வல்லரசாகத் துடித்துக்கொண்டிருக்கும் இந்தியா, சுற்றுச்சூழல் சீரழிவு சார்ந்த விஷயங்களில் ஏற்கெனவே முன்னணியில்தான் உள்ளது. ‘சூழலியல் தடம்’ அதாவது, இயற்கைச் சுற்றுச்சூழல் மீது மனிதர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நாட்டில் கிடைக்கும் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில், அதன் தாங்கும் திறனை மீறி இரண்டு மடங்கு சுரண்டிவருகிறோம். ‘உலகத் தட வலைப் பின்னல்’ (Global Footprint Network) என்ற அமைப்பும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பும்(CII) இணைந்து 2008-ல் வெளியிட்ட அறிக்கையில்தான் இந்தத் தகவல் தெரியவந்திருக்கிறது.

அதிலும், இந்திய மக்கள்தொகையில் 0.01 % மட்டுமே இருக்கும் அதி பணக்காரர்கள், இந்தியாவில் ஏழ்மையில் வாடும் 40% மக்களைவிட 330 மடங்கு அதிகமாக இயற்கையைச் சுரண்டுகிறார்கள். உலக அளவிலும் இது மிகமிக அதிகம், வளர்ந்த நாடொன்றில் வாழும் மக்களைவிட 12 மடங்கு அதிகமாக இந்திய அதி பணக்காரர்கள் இயற்கையைச் சுரண்டுகிறார்கள். இந்த வசதியை உருவாக்கிக் கொடுத்தது உலகமயமாக்கத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிதான். மற்றொருபுறம் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் கடைத்தேற வழியின்றி வறுமையின் ஆழத்தில் புதையச் செய்திருக்கிறது.

இந்தச் சீரழிவுகள் அனைத்துக்கும் உலகமயமாக்கத்தை ஒற்றைக் காரணமாகச் சுட்ட முடியாது என்பது என்னவோ உண்மைதான். நாடு விடுதலை பெற்ற பிறகு எப்படிப்பட்ட வளர்ச்சி மாதிரி முன்னெடுக்கப்பட்டது என்பதையும், ஆட்சி நிர்வாகத்தில் புதைந்துகிடக்கும் பிரச்சினைகள், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்படாதது போன்றவையே இந்தியா இன்றைக்கு உள்ள மோசமான சூழ்நிலைக்குக் காரணம். ஆனால், இதையெல்லாம் போக்கிவிடும் சர்வரோக நிவாரணி என்றே 25 ஆண்டுகளுக்கு முன் உலகமயமாக்கம் முன்மொழியப்பட்டது. கால் நூற்றாண்டுக்குப் பின் நடந்திருப்பது என்ன? இந்தியா சந்தித்த நெருக்கடிகளை உலகமயமாக்கம் தீவிரமடையச் செய்துள்ளது, அது மட்டுமல்லாமல், இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் புதிய ஆபத்துகளையும் அது கொண்டுவந்து சேர்த்திருக்கிறது!

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x