Published : 12 Nov 2013 12:00 AM
Last Updated : 12 Nov 2013 12:00 AM
சினிமா, விளையாட்டு, இலக்கியம், அரசியல், பத்தி ரிகை என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் செயல்பாட்டுத் திறன்தான் தகவல் அறிவைவிட முக்கியமாகக் கருதப்படுகிறது. ஆனால், ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகள் மட்டும் விதிவிலக்கு. அங்கே ஒருவர் சரியாக பேசத் தெரியாதவராக, திக்குவாயராக, மேடைக்கூச்சம் கொண்டவராக, அந்த கற்பித்தல் கலையில் விருப்பமோ, திறனோ இல்லாதவராக இருக்கலாம். ஆனால், எழுத்துத் தேர்வில் தேறிவிட்டால் அவருக்கு ஆசிரியராகும் தகுதி வந்துவிட்டதென அரசு அறிவித்துவிடுகிறது. இதே முறையை ராணுவத்தில் செயல்படுத்தி வெடிகுண்டு, துப்பாக்கி பற்றிய கேள்விகளுக்கு விடை அளிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து காஷ்மீர் எல்லைக்கு அனுப்பினால் என்னவாகும்?
ஆசிரியரின் அடிப்படைத் தகுதி
ஆசிரியருக்கான அடிப்படைத் திறன்களில் மிக முக்கியமானது பேச்சுத்திறன் – அதாவது, மாணவனின் மனநிலை உணர்ந்து விஷயத்தை விளக்கும் திறன். நெட், ஸ்லெட், டெட் போன்ற தகுதித் தேர்வுகள் வெறும் நினைவுத்திறன் மற்றும் எழுத்துத்திறனைச் சோதிப்பவை.
விஷய ஞானம் உள்ள ஆனால், அதை வெளிப்படுத்தத் தெரியாத பல ஆசிரியர்களை, மாணவனாகவும் பின்னர் ஆசிரியனான பின்னரும் கண்டிருக்கிறேன். மாணவர்கள் இவர்களது வகுப்புகளைத் தொடர்ந்து புறக்கணிப்பார்கள் அல்லது கவனிக்க மாட்டார்கள். மாணவர்களை உளவியல்பூர்வமாகக் கையாளத்தெரிவது அடுத்த திறன். 70 பேர் கொண்ட வகுப்பைக் கட்டுப்படுத்தி 40 அல்லது 50 நிமிடங்கள் கேட்க வைப்பது, வேலை கொடுத்து செய்ய வைப்பதற்கு ஒரு மேலாளரின் நாசூக்கும், தலைவனின் மன உறுதியும் தன்னம்பிக்கையும் வேண்டும்.
இன்று தகவல்கள் அபரிமிதமாகக் கிடைக் கின்றன. வகுப்பில் பேசப்போகிற விஷயத்தை அதற்கு முன்னரே எளிய வடிவில் இணையத்தில் இருந்து மாணவன் பெற முடியும். இன்றைய காலகட்டத்தில் ஒரு ஆசிரியரின் மதிப்பே பாடத்தை அர்த்தப்படுத்துவதில், புதுக் கோணத்தில், ஆழத்தில் சொல்லித் தருவதில்தான் இருக்கிறது. இந்த மூன்று திறன்களையும் - பேச்சுத் திறன், மேலாண்மைத் திறன், ஆழமாக அர்த்தப்படுத்தும் அறிவுத்திறன் ஆகியவற்றை - இன்றைய எழுத்து வடிவிலான தகுதித் தேர்வுகளால் அளவிட முடியாது.
தகவல்களை ஒப்பிக்கும் கூடம்
கடந்த சில வருடங்களில் கல்லூரி அளவில் ஒரு பிரதான மாற்றத்தைக் காண முடிகிறது. படிக்கும் காலத்திலேயே நெட் தேறிவிட்டு, பலர் ஆசிரிய அனுபவம் இன்றி அரசு வேலைபெற்று வகுப்பெடுக்கத் திணறுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், அரசு ஆசிரியர்களின் அனுபவத்தை முக்கியமற்றதாகக் கருதுவதுதான். இந்தப் பிரச்சினை பள்ளி ஆசிரியர் தேர்வையும் பாதித்துள்ளது. இதேபோல் இந்தத் தேர்வுகள் மனப்பாடத்தை ஊக்குவிப்பதால், வெறுமனே தகவல்களை மட்டும் ஜீரணித்துத் தேறிவரும் ஆசிரியர்கள், கல்வி அரங்கில் அதிகமாகி வருகிறார்கள். இவர்களுக்கு என்று குறிப்பிட்ட துறையில் ஒரு தனிப்பட்ட பார்வையோ, ஈடுபாடோ, அபிப்பிராயங்களோ இருப்பதில்லை. வெறுமனே மனப்பாடம் செய்த தகவல்களை ஒப்பிக்கும் இடமாக இன்று வகுப்பறைகள் மாறி வருகின்றன.
சமீபத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு புத்தாக்கப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபோது, அங்கு வந்திருந்த 40-க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரி ஆசிரியர்களில் 5% பேர்தான் முனைவர் பட்ட ஆய்வு செய்துவருவதைக் கண்டேன். வெறும் முதுகலை படித்தாலே வேலை என்கிற நிலையில், இன்று ஆசிரியராகப் போகும் மாணவர்களின் கவனம் முழுக்க மனப்பாடத் தேர்வை நோக்கியே இருக்கின்றது. ஆய்வு மனப்பான்மை காலாவதி ஆகிவிட்டது.
பட்டப்படிப்பு ஏன்?
இன்னொரு பிரச்சினை… இன்று பட்டப்படிப்பு களின் மதிப்பு கேள்விக்குறி ஆகிவிட்டது. இன்று எந்தப் படிப்பு படித்தாலும் ஏதாவது ஒரு தகுதித் தேர்வில் வென்றால்தான் வேலை எனும் நிலை உள்ளது. பட்டப்படிப்பு முக்கியமில்லை என்றால், எல்லோரும் 12-ம் வகுப்பு முடித்ததும் தகுதித் தேர்வுக்குத் தயாராகத் துவங்கிவிடலாமே?
தகுதித் தேர்வுகள் ஏன் இவ்வாறு அசலான கல்வி நோக்கத்துக்கு எதிராக நடத்தப்படுகின்றன? இந்தத் தேர்வுகளின் தகவல்சார் முறை என்பது அறிவியல் பாடங்களுக்கு, ‘ஜிமேட்’ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு மட்டுமே ஏற்றவை. கலை மற்றும் சமூகப் பாடங்களுக்கு அல்ல. ஒரு ஆசிரியரைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதானால் அவரது அனுபவம், மாணவர்களுக்கு அவர் மீதுள்ள மதிப்பு ஆகியவற்றைக் கருத்துக்கணிப்பு மூலம் அறிதல், குறிப்பிட்ட நேரத்துக்கு எந்தத் தலைப்பிலும் பேசவைத்து மதிப்பிடுதல் மற்றும் தகவல்பூர்வத் தேர்வு ஆகிய வழிகளில்தான் செய்ய வேண்டும். ஆனால், அரசு இவற்றைச் செய்வதானால் நிறைய செலவாகும். அந்த செலவைக்கூட பங்கேற்பாளரிடமிருந்து பெற்று விடலாம். அப்போதும்கூட இது சிரமமாக, சிக்கலாக இருக்கும். ஆனால், எழுத்துத் தேர்வு குறைபட்டது என்றாலும் அதை நடத்துவது எளிது, சிக்கனமானது. எழுதுபவர்களில் மிகச்சிறு சதவீதமே தேறுவதாலும், மீண்டும் மீண்டும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பணம் செலுத்தி எழுதுவதாலும், இதன் மூலம் யு.ஜி.சி. அல்லது பிற அமைப்புகள் கோடிக்கணக்கில் லாபம் சம்பா திக்கின்றன. இன்று தகுதித் தேர்வுகள் நடத்துவது ஒரு லாபகரமான தொழிலாக மாறியுள்ளது.
அரசியல் உள்நோக்கம்
தகுதித் தேர்வுகளின் பின்னால் அரசியல் நோக்கமும் உள்ளது. மனப்பாடக் கிளிப்பிள்ளை கள், பொதுவாக நிறுவனங்களுக்கும் அடங்கி நடப்பவர்களாக இருப்பர். அவர்களுக்கு என்று தனியாக ஒரு கருத்தியலோ அரசியல் லட்சியமோ இருக்காது. இந்தியாவில் பெரும் அரசியல் போராட்டங்களை மாணவர்கள்தாம் நடத்தியுள்ளனர். அரசுகள் எப்போதுமே மாணவர்கள் ஓரணியில் திரள்வதைக் கண்டு அஞ்சுகின்றன. மாணவர்களை ஒருங்கிணைப்பதில் அரசியல் நாட்டமுள்ள ஆசிரியர்களின் பங்கையும் அரசுகள் அறியும். இன்று நம் மாணவர் சமூகத்தை அரசியலற்றவர்களாக மாற்றும் மத்திய அரசாங்கத்தின் முயற்சியில் முதல் படிதான் வெறும் தகவல்களை மட்டும் கற்பிக்கிற, கருத்தியல் வலு இல்லாத, மாணவர்களுக்குத் தலைமை தாங்கும் ஆளுமையற்ற ஆசிரியர்களை அதிக அளவில் உருவாக்குவது.
இந்தத் தேர்வின் மற்றொரு வெளிப்படையான மறைமுக நோக்கம் லஞ்சம். பள்ளி ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் சாதி ஒதுக்கீட்டை மீறி வேலையளிக்கும் போக்கு உருவாகியுள்ளது. தேர்வு மட்டுமே அளவுகோல் எனும்போது, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் அனுபவமும் பணிமூப்பும் மதிப்பிழக்கின்றன. விளைவாக, வேலைக்குத் தகுதியானவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. திரையரங்கில் வரிசை நீளும்போது பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு வியாபாரம் கொழிப்பதுபோல் இங்கு அரசியல்வாதிகள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கும் லட்சக் கணக்கான பணம் லஞ்சம் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. சமீபத்தில் தமிழகத்தில் ‘ஸ்லெட்’ கல்லூரி ஆசிரியர் தகுதித்தேர்வில், எதிர்பாராத விதமாக கணிசமான அளவில் பலர் தேர்வாக்கப்பட்டது நாடாளு மன்றத் தேர்தலுக்கான பணத்தை லஞ்சம் மூலம் சம்பாதிக்கத்தான் எனக் கூறப்பட்டது. கல்லூரி ஆசிரிய வேலையின் விலை ரூபாய் 15 லட்சத்தில் இருந்து 35 லட்சம் வரை என்று பத்திரிகைக் கட்டுரை ஒன்று கூறியது.
கல்வித் தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில் இப்படி ஒரு பெரும் அபத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
ஆர்.அபிலாஷ், எழுத்தாளர் - தொடர்புக்கு:abilashchandran70@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT