Last Updated : 16 Nov, 2013 12:00 AM

 

Published : 16 Nov 2013 12:00 AM
Last Updated : 16 Nov 2013 12:00 AM

ஆன்லைனில் ஆயுள் காப்பீடு எடுங்களேன்

ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் ஆரம்பித்த காலங்களில் ஆயுள் காப்பீடு பாலிசியை விற்பதற்குள் ஏஜென்ட்டின் ஆயுள் முடிந்துவிடும். அந்த காலத்தில் காப்பீடு ஏஜென்ட்களும் எமனும் ஒன்றாக வருவதுபோல ஜோக் பத்திரிக்கைகளில் பார்க்கலாம். இப்போது நிலைமையே வேறு. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை நன்றாகப் புரிந்துவைத்துள்ளனர். இறப்பு என்ற சோகம் எல்லார் வாழ்விலும் வருவது இயற்கை. அதனைத் தொடர்ந்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தயாராக இருப்பதில் தவறில்லையே.

‘Term Insurance’ என்று கூறப்படும் ஆயுள் காப்பீடுதான் மிகப் பழமையான காப்பீடு பாலிசி. Term Insurance பாலிசி எடுத்தவர் பாலிசி காலத்துக்குள் இறந்தால், அவர் குறிப்பிட்ட வாரிசுக்கு காப்பீடுத் தொகை சென்றடையும். இல்லையென்றால் பாலிசி பிரீமியம் தொகைகூட திரும்பக் கிடைக்காது (மோட்டார் காப்பீடு போல). இந்த காரணத்தினால், ஆயுள் காப்பீடு பாலிசிகளில் மிகக் குறைந்த பிரீமியம் உள்ளது Term Insurance ஆகத்தான் இருக்கும்.

இதே Term Insurance பாலிசியில் பிரீமியம் தொகை மட்டும் பாலிசி காலத்துக்குப் பிறகு திரும்பக் கிடைப்பது போன்ற பாலிசியும் உண்டு. ஆனால், அதற்கு பிரீமியம் தொகை அதிகம். வருடா வருடம் பாலிசி தொகை அதிகமாவது அல்லது குறைவது போலவும் பாலிசி எடுக்கலாம். அதற்கு ஏற்றாற்போல் பிரீமியம் தொகை மாறுபடும்.

உங்கள் வயது உயரும்போது உங்கள் குழந்தைகளின் பணத் தேவை குறையும் என்றால் பாலிசி தொகை குறைவது போலவும், அல்லது அவர்கள் கல்லூரிக்குச் செல்ல அதிக பணம் தேவைப்படும் என்றால் பாலிசி தொகை அதிகமாவது போலவும் Term Insurance பாலிசி எடுக்கலாம்.

பொதுவாக காப்பீடு ஏஜென்ட் மூலமாக காப்பீடு பாலிசி எடுப்போம். இப்போது பல காப்பீடு நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக Term Insurance பாலிசி விற்பனை செய்கிறார்கள். ஏஜென்ட் மூலமாக வாங்கும் Term Insurance பிரீமியம் தொகையைவிட குறைவாகவே ஆன்லைன் மூலமாக வாங்கப்படும் Term Insurance பாலிசி பிரீமியம் உள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று, காப்பீடு ஏஜென்ட்டுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகை கொடுக்கப்படாததால், அத்தொகை பிரீமியத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. இரண்டாவது, ஆன்லைன் காப்பீடு வியாபாரத்தில் அவ்வளவாக ‘claim’ இல்லாததால் பிரீமியம் தொகை குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆன்லைன் Term Insurance எடுப்பதிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. நிறுவனத்தின் வெப்சைட்டில் உள்ளதுபோல உங்கள் வயது, காப்பீடுத் தொகை, உடல் ஆரோக்கியம் என்ற அம்சங்களைக் கொண்டு ஒரு பிரீமியம் தொகையை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம், ஆனால் நிறுவனம் கணக்கிட்டுக் கொடுக்கும் பிரீமியம் அதைவிட அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு.

அந்த கூடுதல் பிரீமியம் தொகையை நீங்கள் கட்டவேண்டும். வருடா வருடம் பிரீமியம் தொகையை உங்களிடமிருந்து உங்கள் ஏஜென்ட் வாங்கிக் கட்டுவார். அவ்வாறான வசதி இங்கு இல்லை. எனவே, மறந்துவிட்டீர்கள் என்றால் பாலிசியை புதுப்பிக்காமல் போகும் வாய்ப்புகள் உண்டு.

அல்லது உங்கள் வங்கியில் சொல்லி வருடா வருடம் குறிப்பிட்ட தேதியில் கணினி வழியாக தன்னிச்சையாக பிரீமியம் தொகையைக் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாலிசி எடுத்தவர் இறப்புக்குப் பிறகு, இந்த பாலிசி பற்றிய எந்த பத்திரமும் இல்லாமல் அவரது வாரிசுகள் திண்டாடலாம். இந்த நேரத்தில் ஏஜென்டின் துணை நன்றாக இருக்கும். அல்லது, பாலிசி எடுத்தவர் Term Insurance பற்றிய எல்லா விபரங்களையும் தன் வாரிசுகளிடம் கூறி வைப்பது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x