Published : 01 May 2017 08:57 AM
Last Updated : 01 May 2017 08:57 AM
டெல்லியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா நேற்று பேசினார். “முன்பு தாராளர்கள், இடதுசாரிகள் தரப்பிலுள்ள குறைகளை ஹசன் சரூர் அக்கறையோடும் உரிமையோடும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விமர்சித்து எழுதுவார். இப்போது ‘தி இந்து’ தமிழில் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள். ஆக்கபூர்வ விமர்சனங்கள்தான் அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்லும். வாழ்த்துகள்!”
தமிழகத்தின் முன்னணித் தலைவர்கள் பலரும் தொடர்புகொண்டு பேசினார்கள். அதேசமயம், ‘சங்கப் பரிவாரங்களின் பலத்தை எழுதுவதன் மூலம், அதன் எதிரேயுள்ள இயக்கங்களை நம்பிக்கை இழக்கச் செய்கிறீர்கள்’ என்ற தொனியிலான மின்னஞ்சல்களும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்கள் பலரிடமிருந்தும் வந்திருந்தன.
ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட நினைக்கிறேன். நாடு மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது. பன்மைத்துவம் நொறுங்குகிறது. பாஜகவின் அசாதாரண வெற்றிகளுக்கான ஒரே காரணம் மோடி என்று நம்ப விரும்புவது ஒருவகையில் பாஜகவின் பிரச்சார வலையில் சிக்கிக்கொள்வதுதான். மோடி வெற்றியின் குறியீடு அல்ல; மாறாக, தாராளர்களின் பல்லாண்டு காலத் தோல்விகளின் திரட்சியின் குறியீடு. சங்கப் பரிவாரங்களின் உழைப்பு, மோடியின் ஆளுமை இவை எல்லாவற்றையும் தாண்டி, மோடியின் வெற்றியில் காங்கிரஸின் குடும்ப அரசியலுக்கும் மக்களால் சகித்துக்கொள்ளவே முடியாத அதன் ஊழல்களுக்கும் பங்கிருக்கிறது.
ஒரு மாற்றுத் தலைமையையும் மாற்றுப் பொருளாதாரக் கொள்கையையும் மக்களிடம் கொண்டுசெல்லத் தவறிய கம்யூனிஸ்ட்டுகளுக்குப் பங்கிருக்கிறது. தம்முடைய பதவி, அதிகாரத்துக்காக எல்லாவற்றையும் பறிகொடுத்து நிற்கும் மாநிலக் கட்சிகளுக்குப் பங்கிருக்கிறது. முக்கியமாக வெகுமக்களிடம் பேசும் மொழியை இன்று தாராளர்கள் இழந்து நிற்கிறார்கள். மோடி அலை என்று சொல்லப்படும் வெகுமக்கள் திரளை உண்மையில் இன்று எதிர்த் தரப்பில் இருப்பவர்களே திரட்டித் தருகிறார்கள். மோடியைத் திட்டித் தீர்ப்பதன் வாயிலாக மட்டுமே தாராளர்கள் தம் பொறுப்புகளிலிருந்தும் தவறுகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியாது.
காங்கிரஸைப் போலவோ, ஏனைய மாநிலக் கட்சிகளைப் போலவோ அரசியலதிகாரப் பலம் இல்லாவிட்டாலும்கூட இந்தத் தொடரில் அதிகம் கம்யூனிஸ்ட்டுகள் விமர்சிக்கப்பட காரணம் உண்டு. காந்தி, நேரு காலத்துக்குப் பின் சித்தாந்தரீதியிலான பலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவந்த காங்கிரஸ், கிட்டத்தட்ட இன்று பல தளங்களில் தரைதட்டி நிற்கிறது. மாநிலக் கட்சிகள் பெருமளவில் குடும்ப அரசியல் கட்சிகளாகிவிட்ட நிலையில், முதல் தலைமுறைக்குப் பின்வந்தவர்கள் முழுக்க அதிகாரத்தின் ருசியில் ஊறி வளர்ந்ததால், அவர்களில் பெரும்பாலானோருக்கு எந்தச் சித்தாந்தப் பின்புலமும் இல்லை. நிலைகுலைகிறார்கள்.
ஆக, கருத்தியல் தளத்திலும் கல்விப் புலத்திலும் கம்யூனிஸ்ட்டுகளே தொடர்ந்து பயணத்தில் இருக்கிறார்கள். மறைமுகமாக ஏனைய தாராளக் கட்சிகளின் கருத்தியலை வடிவமைப்பதிலும் அவர்கள் செல்வாக்கு செலுத்துகிறார்கள். நாட்டின் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் மக்கள் பிரச்சினைகளில் எதைப் பேச வேண்டும் என்று அடையாளம் காட்டுவதில் அவர்களே முன்னணியில் நிற்கிறார்கள்.
ஆக, பெரும்பான்மையான தாராளர்களின் குரல் பல விஷயங்களில் - முக்கியமாக நாட்டின் ஜனநாயக உயிர்நாடியான பன்மைத்துவத்தைக் காக்கும் விஷயத்தில் - கம்யூனிஸ்ட்டுகளோடு ஒத்துப்போகிறது. கம்யூனிஸ்ட்டுகள் இந்த விஷயங்களைப் பேசும் மொழியிலேயே பெரும்பான்மை தாராளர்கள் தம் குரல்களையும் அமைத்துக்கொள்கின்றனர். ஆனால், எல்லாத் தாராளர்களின் குரல்களைத் தாண்டியும் எதிர்த் தரப்பு ஜெயிக்கிறது. நாட்டின் பல்வேறு முனைகளிலும் அப்பட்டமாக மதவாதமும் சாதியவாதமும் தலை தூக்குவதைப் பார்க்கிறோம். அப்படியென்றால், இதற்கு யார் பொறுப்பேற்பது? யாருடைய மொழியில் பிரச்சினை இருக்கிறது? இதைத்தான் பேச விழைகிறேன்.
பாடலிபுத்திர விரைவு ரயிலில் பயணித்த அந்தப் பெரியவர்தான் கேட்டார்,
“பாஜகவுக்கு ஏற்கெனவே மக்களவையில் பெரும்பான்மை இருக்கிறது. அடுத்த மக்களவைத் தேர்தலிலும் இதே முடிவுதான் என்றால், மாநிலங்களவைப் பெரும்பான்மையும் சீக்கிரமே வந்துவிடும். மாநிலத் தேர்தல்களையும் இதே வேகத்தில் கைப்பற்றினால் 2020 வாக்கிலேயே பெரும்பான்மை அதிகாரம் அவர்கள் வசம் வந்துவிடும். இன்றைக்கெல்லாம் நம்முடைய கடைசி நம்பிக்கை அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. ஆனால், மக்களவை, மாநிலங்களவை, மாநிலங்கள் இவை மூன்றிலும் மூன்றில் இரண்டு பங்கு பலம் இருந்தால், அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றிவிட முடியும் அல்லவா? ஏற்கெனவே, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க வழிவகுக்கும் வெங்கடாஜலய்யா அறிக்கை அவர்கள் கைகளில் இருக்கிறது அல்லவா?”
கண் அதிரப் பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் மேலும் அவர் கேட்டார், ‘‘காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் இரண்டு இயக்கங்களைத் தவிர, வேறு எல்லா இயக்கங்களும் இன்றைக்கு மத்திய அரசு கொஞ்சம் மிரட்டினால் வழிக்கு வந்துவிடக் கூடியவை. வருமான வரித் துறையும் மத்தியப் புலனாய்வு அமைப்பும் போதும், மாநிலக் கட்சிகளை முடக்க. இன்னும் இரண்டு வருஷம். அடுத்த தேர்தல் வந்துவிடும். 2014 தேர்தலுக்குப் பின் எதிர்க்கட்சிகள் என்ன மாறியிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? நாளுக்கு நாள் சிறுத்துதான் போய்க்கொண்டிருக்கிறார்கள்!’’
1975 ஜூன் 25 அன்று இந்திரா அரசால் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. தேசிய அளவில் பெருவாரியாகக் கைதுசெய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்களும் மார்க்ஸிஸ்ட்டுகளும். இரு தரப்பினருக்குமே தலைமறைவு வாழ்க்கை ஏற்கெனவே பழக்கப்பட்ட ஒரு கலாச்சாரம். எந்த நேரமும் இயக்கத்தை அரசு தடைசெய்யலாம்; இயக்கத்தவர்களைக் கைதுசெய்யலாம் என்ற எச்சரிக்கையுணர்வு இரு தரப்பினருக்குமே ஒரு பாடம்போல அரசியல் வகுப்புகளில் கற்பிக்கப்பட்ட காலம் உண்டு. எல்லாவற்றையும் தாண்டியும் சிக்கினார்கள். ஏன்?
1975 செப்டம்பர் 3 அன்று மார்க்ஸிஸ்ட் கட்சி நடத்திய தன்னுடைய மத்தியக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை இன்று ஒரு முறை வாசித்துப் பார்ப்பது எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் உபயோகமாக இருக்கும்.
“நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத நிலையில், திகைத்துவிட்டோம். நாடாளுமன்ற வாதத்தில் உறைந்துவிட்டதன் விளைவு இது. ஒரு சர்வாதிகார நிலையை எதிர்கொள்ள தயார் நிலையில் கட்சி இல்லை. இதன் விளைவாகவே பெரிய அளவில் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கைதாகும் நிலை ஏற்பட்டது... அரசியல்ரீதியாகவும் அமைப்புரீதியாகவும் தயார் நிலையில் இல்லாமல் போனதே இதற்கான காரணம்!’’
இன்றைய சூழலில் எத்தனை இயக்கங்கள் / தலைவர்கள் / தொண்டர்கள் ஒரு சர்வாதிகாரச் சூழலுக்கு முகங்கொடுக்கத் தயார் நிலையில் தம்மை வைத்திருக்கின்றனர்?
அரசியல் களமானது, எதிர்பாராததை எதிர்பார்த்துக் காய் நகர்த்துபவர்கள் கைகளிலேயே பெருமளவில் இருக்கிறது. மோடியின் வியூகங்களின் வெற்றி அடங்கியிருக்கும் இடம் இதுவே. இன்று சங்கப் பரிவாரங்கள் தாராளர்களிடம் எதை எதிர்பார்த்துக் காய் நகர்த்துகின்றனவோ அதற்கேற்றவாறே தாராளர்கள் காய்களை நகர்த்துகிறார்கள். தாராளர்கள் எதைப் பேச வேண்டும் / எழுத வேண்டும் / எதற்காக அவர்கள் போராட வேண்டும் என்பதை இன்று சங்கப் பரிவாரங்களால் தீர்மானிக்க முடிகிறது.
நாளைக்கு சுப்பிரமணியன் சுவாமி அல்லது சாக்ஷி மஹராஜ் அல்லது மாடுகள் இப்படி எந்த விவகாரம் நோக்கி ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் திசைதிருப்ப வேண்டும் என்று சங்கப் பரிவாரங்கள் நினைக்கின்றனவோ, அதை தாராளர்களின் வழியாகவே அவர்களால் வெற்றிகரமாகச் சாதிக்க முடிகிறது. தாராளர்களைப் பொறுத்த அளவில் இது வியூகச் சிக்கல் அல்ல; சித்தாந்தச் சிக்கல்; சமூக உளவியல் சிக்கல்; வரலாற்றுச் சிக்கல்!
(உணர்வோம்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT