Published : 21 Oct 2013 12:52 PM
Last Updated : 21 Oct 2013 12:52 PM
மரணம் ஒன்றைத் தவிர மேட்ச் ஃபிக்ஸிங் இல்லாத ஏரியாவே கிடையாது போலிருக்கிறது. அழகிப் போட்டிகளானாலும் சரி, கிரிக்கெட் போட்டிகளானாலும் சரி, என்னவாவது அவார்டு சங்கதியானாலும் சரி. ஒரு திட்டம், ஒரு மேத்தமேடிக்ஸ், ஒரு நோக்கம் யாருக்காவது இருந்துவிடுகிறது.
அரசியலை எல்லாம் கொஞ்சம் தள்ளி வையுங்கள். இந்தச் சேதியைக் கேளுங்கள். உலகின் மிக காஸ்ட்லியான நகரம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு? எங்கு வாழ்வது அதிக செலவு சாப்பிடக்கூடியது? நியூ யார்க்? மாஸ்கோ? டோக்கியோ? பாரிஸ்?
நிச்சயமாக இல்லை. ஆப்பிரிக்க தேசமான அங்கோலாவின் தலைநகரம் லுவாண்டாவைச் சுட்டிக்காட்டுகின்றன புள்ளிவிவரங்கள். என்னடா விசேடம் என்று பார்த்தால் மாஸ்கோவில் நாலாயிரத்தி ஐந்நூறு டாலர் (சுமார் ரூ.2.7 லட்சம்) மாசாந்திர வாடகைக்குக் கிடைக்கக்கூடிய ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு இங்கே பத்தாயிரம் டாலர் (சுமார் ரூ. 6.1 லட்சம்) கொடுத்தாக வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் ஓரளவு டீசண்ட்டான ஓட்டல் அறை நமக்குக் கிடைத்துவிடும். லுவாண்டாவில் அதற்கு நீங்கள் ஆறாயிரத்தி முன்னூறு டாலர் (சுமார் ரூ. 3.8 லட்சம்) கொடுத்தாக வேண்டும். ஒரு ஃபுல் மீல்ஸுக்கு நமக்கு நூறு ரூபாய் செலவா? அங்கே அதுவே நாநூற்று எழுபது ரூபா. சாப்பாடு, போக்குவரத்து, பொழுதுபோக்கு என்று ஆரம்பித்து சகட்டு மேனிக்கு எல்லாவற்றுக்கும் மற்ற ஊர்களின் விலை விவரங்களைக் காட்டிலும் குறைந்தது ஐந்து மடங்கு அதிகம். இதிலேயே இன்னும் கொஞ்சம் பணக்காரத்தனம் தேவையென்றால் இன்னும் எடு, இன்னும் கொடு, அள்ளி வீசு!
வரவர லுவாண்டா படு பயங்கர பணக்காரர்களின் க்ஷேத்திரமாக மாறிக்கொண்டே போகிறது. இது எங்கே போய் முடியுமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிரு க்கிறார்கள் அங்கோலாவாசிகள்.
இதில் கவலைப்பட என்ன இருக்கிறது? நாடு நகரம் வளர்ந்தால் நல்லதுதானே? என்றால், இது அப்படியல்ல. ஒரு நகரம் பெரிய அளவில் வளர்ச்சியுறுகிறது என்றால் சகலமான இனங்களிலும் வளர்ச்சி தெரிந்தாக வேண்டும். அங்கோலா ஒன்றும் அமெரிக்காவை நிகர்த்த தேசமல்ல. ஏழைமைக்குப் பேர் போன ஆப்பிரிக்க நாடுகளில் இதுவும் ஒன்று. கொஞ்சம் காப்பி இருக்கிறது. டெக்ஸ்டைல் துறையும் சிமெண்டு உற்பத்தித் துறையும் ஓரளவு காசு கொடுக்கிறது. ஏற்றுமதிக் காசு. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றாலும் ஏதோ கொஞ்சம் பெட்ரோலிய உற்பத்தியும் இருக்கிறது.
நாளது தேதி வரை குடிஜனங்களுக்குக் குடிக்க நல்ல தண்ணீர் கொடுப்பதற்கும் தேவையான அளவுக்கு மின்சார சப்ளை செய்வதற்கும் அரசாங்கமானது திண்டாடி, தெருப்பொறுக்கிக் கொண்டுதான் இருக்கிறது. மெஜாரிடி ஏழைகள்; பத்தாத குறைக்கு 2002ம் வருஷம் வரைக்கும் சிவில் யுத்தம் வேறு. பத்தே வருஷத்தில் சிலிர்த்துக்கொண்டு எழுந்துவிட்டதாகச் சுட்டிக்காட்ட நாலைந்து உதாரணங்கள் கூடத் தேறாத தேசம்தான்.
ஆனாலும் அங்கோலாவின் தலைநகரம்தான் உலகின் அதிபயங்கர செலவாளி நகரம். நீங்களும் நானும் சுற்றுலாவுக்காகப் போனால்கூட சொத்து பத்தாது. நிம்மதியாக நாலு இட்லி தின்ன முடியாது. பர்ஸ் பழுத்துவிடும்.
வளரா தேசங்களின் ஏதோ ஒரு நகரை எடுத்துக்கொண்டு, திட்டமிட்டு அதன் வாழ்க்கைத் தரத்தை மிக உயர்த்திக் காட்டுவதன்மூலம் பெரும் வர்த்தக முதலைகள் பல தகிடுதத்தக் காரியங்களைச் சாதிக்க இயலும். கண்ணுக்குத் தெரியாமல் இதில் சில அரசுகளும் சம்மந்தப்படும். அதெல்லாம் பெரும்பணக் கணக்கு. ஒன்றுமே இல்லாது போனாலும் சுற்றுலா வருமானத்தை நம்பவே முடியாத அளவுக்கு உயர்த்திக்கொள்ளும் சாலாக்கு. லாபத்தின் பங்குகள் ஈரேழு பதினாலு லோகங்களுக்கும் சௌக்கியமாகப் பாய்ந்து செல்லும். ஆனால் கண்ணுக்குத் தெரியாது.
இதனை நாகரிகக் கொள்ளை என்பார்கள். அவஸ்தையெல்லாம் உள்ளூர்வாசிகளுக்குத்தான். நியூயார்க்கைக் காட்டிலும், மாஸ்கோவைக் காட்டிலும், டோக்கியோவைக் காட்டிலும் அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவைப் பெரும் பணக்கார நகரமாக முன்வைப்பதன் அரசியல், பொருளாதார சூழ்ச்சி நோக்கங்கள் காலப்போக்கில் அந்த தேசத்தை இன்னும் வறுமையின் கோரப்பிடியில்தான் இழுத்துச் சேர்க்கும்.
இப்போதைக்கு உலகின் அதி உன்னத சாராய சங்கதிகளை மொத்தமாக ருசிக்க விரும்பும் பெரும்பணக்காரர்கள் கண்ணை மூடிக்கொண்டு லுவாண்டாவுக்கு ஃப்ளைட்டு பிடிக்கலாம். எங்குமே கிடைக்காது என்று சொல்லப்படுவதெல்லாம்கூட அங்கே கிடைக்கும். போகிறபோது ஆளுக்கு ஒரு தண்ணி கேன் எடுத்துச் சென்று அந்த ஊர் மக்களுக்கு தட்சிணையாகக் கொடுக்க முடிந்தால் போகிற வழிக்குப் புண்ணியமாய்ப் போகும்.
அங்கோலாவில் சாராயத்துக்குப் பஞ்சமில்லை. குடிதண்ணீர்தான் பெரும்பாடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT