Last Updated : 31 Oct, 2013 01:07 PM

 

Published : 31 Oct 2013 01:07 PM
Last Updated : 31 Oct 2013 01:07 PM

கிராமப் பொருளாதாரத்துடன் ஒரு குஸ்தி!

அந்தக் கூட்டத்தைப் பார்த்தால் சச்சின் டெண்டுல்கரின் கடைசி டெஸ்ட் போட்டியைப் பார்க்கத் திரண்டுவிட்ட கூட்டத்தைப்போலத் தோன்றும். தொடர்ந்து மழை தூறிக்கொண்டிருந்தாலும் போட்டி தொடங்க இன்னும் 5 மணி நேரம் இருக்கும் நிலையிலும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நிற்கும் அந்த மைதானத்தைப் பார்க்கும் எவருமே அப்படித்தான் நினைப்பார்கள். குந்தள நகருக்கு இது வழக்கத்தைவிட குறைவான ரசிகர் கூட்டம். மகாராஷ்டிரத்திலேயே மிகவும் பிரபலமானதொரு விளையாட்டுப் போட்டியை ஆண்டுதோறும் நடத்தும் நகரம் இது. இந்த விளையாட்டு கிரிக்கெட் அல்ல மல்யுத்தம் என்று அழைக்கப்படும் குஸ்தி. மகாராஷ்டிரத்தின் கிராமப்புற பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துவிட்ட ஒரு சில விளையாட்டுகளில் குஸ்தியும் ஒன்று. மகாராஷ்டிரத்தின் மேற்கு மாவட்டங்களில் இது மிகவும் பிரபலம்.

கடந்த ஆண்டு நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தால் குந்தள நகரில் நடைபெறவிருந்த குஸ்தி போட்டியே ரத்துசெய்யப்பட நேர்ந்தது. “போட்டி யைக் காணத் திரளும் 3 லட்சம் பேருக்குத் தண்ணீர் தருவதென்றால், சாதாரணமா, அதனால்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது” என்று ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தின் அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், கலை ஆகிய அனைத்துத் துறைகளுடனும் ஒன்றுகலந்ததுதான் குஸ்தி. போட்டிகள் நகர்ப்புறங்களில் நடைபெறுகின்றன. ஆனால் குஸ்தி வீரர்கள் பெரும்பாலும் கிராமங்களிலிருந்துதான் வருகின்றனர். அதிலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் குஸ்தி பயில்கிறார்கள்.

பின்னடைவு:

மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து விவசாயத்துக்கு அடுத்தடுத்து ஏற் பட்டுவரும் பாதிப்புகளால் குஸ்தி நிகழ்ச்சிகளுக்கும் பயிற்சிக்கும் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு நிலவிய வறட்சி, இந்த ஆண்டு முன்பகுதியில் காணப்பட்ட தண்ணீர் பற்றாக்குறை ஆகியவை நிலைமையை மோசமாக்கிவிட்டன.

“வறட்சியால் நாங்கள் மோசமாக பாதிக்கப்பட்டோம்” என்கிறார் அப்பா சாஹேப் கடம். கோலாபூர் நகரில் குஸ்தி பயிற்சி நிலையம் நடத்தும் இவர் இந்த விளையாட்டின் பிதாமகர்களில் ஒருவர். மிகச் சிறந்த குஸ்தி வீரர். ஏராளமானோரை இப்போது பயிற்றுவித்துக்கொண்டிருக்கிறார்.

“வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக ஏராளமான போட்டிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. பல இடங்களில் போட்டிகள் நடந்தபோதிலும் பரிசுத் தொகையும் இதர சன்மானங்களும் குறைந்துவிட்டன. ஏராளமான மாணவர்கள் குஸ்திப் பயிற்சிக்கு வருவதை நிறுத்தி விட்டார்கள். விவசாய வருமானம் குறைந்துவிட்டதால் அவர்களுடைய குடும்பத்தாரால் பிள்ளைகளை குஸ்திப் பயிற்சிக்கு அனுப்ப முடியவில்லை. இந்தப் பருவத்தில் வழக்கத்துக்கு அதிகமாக பெய்த மழையாலும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது” என்று கவலைதோயக் குறிப்பிட்டார் கடம்.

“சிறிய அளவில் நடைபெறும் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் குஸ்தி வீரருக்கு விவசாய டிராக்டரைப் பரிசாகத் தரலாம், தனியார் நிறுவனங்கள் பரிசுத் தொகையை அளிக்க முன்வரலாம்” என்கின்றனர் பாளாசாஹேப் லட், அருணா லட் ஆகியோர். சாங்லி மாவட்டத்தில் குந்தள குஸ்திப் போட்டிகளை நடத்துகிறவர்கள் இவர்கள்தான். இந்தப் போட்டியை நடத்தச் செலவாகும் ஒவ்வொரு 25 லட்ச ரூபாயிலும் விவசாயிகளின் பங்கு மட்டும் 15 லட்ச ரூபாயாக இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். இதனால்தான் விவசாயம் நொடிக்கும்போது இந்த விளையாட்டும் நொடிக்கிறது.

வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டி:

மகாராஷ்டிர ஏழை விவசாயக் குடும்ப இளைஞர்களைப் பொருத்தவரை குஸ்தி என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, வளமான எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி. வறுமையிலிருந்து விடுபடவும், அந்தஸ்தைப் பெறவும் குஸ்திதான் ஏற்ற வழி. குஸ்திப் பயிற்சிக்கு வரும் சிறுவர்கள், இளைஞர்களில் 90% பேர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், தச்சு வேலை செய்கிறவர்கள் போன்ற இதர தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் யாருமே நல்ல கல்விப் பயிற்சி பெற்றவர்கள் அல்லர். இவர்களுக்கு குஸ்தி என்பது வாழ்நாள் லட்சியம். இந்தப் பயிற்சிகளை இவர்கள் ஆர்வமாகக் கற்றாலும் நூற்றுக்கு ஐந்து பேர்தான் ‘பயில்வான்’ என்ற சிறப்பைப் பெறுகின்றனர்.

கடுமையான பயிற்சி:

குஸ்தி என்பது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல. அதிக அளவு உடல் திறனும் விடாமுயற்சியும் தேவைப்படும் அருங்கலை. சுமார் எட்டு வயது முதல் சிறுவர்கள் இதில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். தலீம் என்று அழைக்கப்படும் குஸ்தி பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு சிறு அறையிலும் மூன்று அல்லது நான்கு பயிற்சி வீரர்கள் தங்குகின்றனர். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து கிராமத்தைச் சுற்றி ஓட்டப்பயிற்சியில் சுமார் ஒரு மணி நேரம் ஈடுபடுகின்றனர். காலை ஐந்து மணிக்கு களத்தில் இறங்கி பயிற்சி செய்கின்றனர். இந்தப் பயிற்சி காலை எட்டரை மணி வரை நீடிக்கிறது.

இந்த மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவைத் தாங்களே சமைத்துக் கொள்கின்றனர். பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் காலையில் பள்ளிக்கூடம் சென்றுவிட்டு மாலை பயிற்சிக்கூடத்துக்கு வந்துவிடுகின்றனர். மாலை ஐந்தரை மணி முதல் மீண்டும் பயிற்சி தொடங்கி இரவு எட்டரை மணி வரை நடக்கிறது. கிரிக்கெட்டுக்கு ஆண்டின் நான்கு மாதங்களில் பயிற்சி பெற்றால் போதும், குஸ்திக்குப் பத்தாண்டுகளுக்குத் தொடர்ந்து பயிற்சி தேவைப்படுகிறது. விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் தலீம்களுக்குத் தங்களுடைய பிள்ளைகளைக் கூட்டிவந்து குஸ்திப் பயிற்சியில் சேர்த்து எப்படியாவது பயில்வான்களாக ஆக்கிவிடுமாறு ஆசிரி யர்களிடம் கெஞ்சுவார்கள்.

83 வயது அந்தால்கர்:

கோலாப்பூர் நகரில், கணபத்ராவ் அந்தால்கர் என்ற பயில்வான் தனது 83-வது வயதிலும் காலை ஆறு மணிக்கெல்லாம் தலீமுக்கு வந்து எட்டு வயது சிறுவர்கள் குஸ்திப் பயிற்சி செய்வதை இமைகொட்டாமல் கண்காணிக்கிறார். ஆசியாட் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றவர், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். சொல்லிக்கொடுத்தபடி மூத்த வீரர்கள் குஸ்தி பயில்கிறார்களா என்று பார்க்கிறார். இளையவர்களுக்கு ஒரு சில பிடிகளைச் சொல்லித்தருகிறார். அதை அவர்கள் சரியாகச் செய்கிறார்களா என்று கவனமுடன் பார்க்கிறார். எப்போதாவது சில கட்டளைகளைப் பிறப்பிக்கிறார், அல்லது திருப்தியில்லாவிட்டால் திட்டு கிறார்.

“குஸ்தி என்பது விவசாயப் பொரு ளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது. இப்போது கிராமப் பொருளாதாரம் மிகவும் வலுவற்று இருக்கிறது. தலீம்களில் கட்டணம் எல்லாம் மிகமிகக் குறைவு. ஒவ்வொரு மாணவனிடமும் மாதத்துக்கு நூறு ரூபாய் முதல் இருநூறு ரூபாய்தான் வாங்குகிறோம். ஏழைக் குடும்பம் என்றால், அதையும் வாங்குவதில்லை. ஆனால் சாப்பாட்டுச் செலவை அவர்கள்தான் ஏற்க வேண்டும். இந்த விளையாட்டுக்குப் பயிற்சி பெற வேண்டும் என்றால் நன்றாகச் சாப்பிட வேண்டும். அதுவுமே பலருக்குச் சவால்” என்கிறார் அந்தால்கர்.

அரசின் பாராமுகம்:

ஏராளமான குஸ்தி வீரர்களை நாட்டுக்கு மகாராஷ்டிரம் தந்திருந்தாலும் மிகப் பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்தச் சங்கங்களுக்கும் சம்மேளனங்களுக்கும் தலைவர்களாக இருந்தாலும் மாநில அரசு இந்த விளையாட்டுக்குத் தரும் ஆதரவு மிகமிகக் குறைவு. அறவே இல்லையென்றுகூடச் சொல்லிவிடலாம். பஞ்சாபிலும் ஹரியாணாவிலும் குஸ்தி வீரர்களுக்குக் கிடைக்கும் வசதிகள் மகாராஷ்டிரத்தில் கிடைப்பதில்லை என்று பரவலாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

சாப்பாட்டுச் செலவு மிக அதிகம்:

“குஸ்திப் பயிற்சி வீரர்கள் சாப்பாட்டுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டும். பெரிய பையன்களாக இருந்தால் தினமும் 400 கிராம் பாதாம் பருப்பு, 4 லிட்டர் அளவுக்கு சுத்தமான பால், 500 கிராம் நெய், முட்டைகள், பழங்கள், காய்கறிகள் என்று சாப்பிட வேண்டும். இதுபோக வாரத்தில் மூன்று நாள்களுக்கு ஆட்டுக்கறி அவசியம். எல்லாம் கூட்டிப்பார்த்தால் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு நாளைக்கு ரூ. 700 தேவைப்படும். சிறுவர்களாக இருந்தால் ரூ.500 தேவைப்படும். இந்தச் செலவை குஸ்தி பயிலும் மாணவனின் குடும்பம்தான் ஏற்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டுகிறார் காகா பவார். இவர் ஆசிய விளையாட்டுப்போட்டி, காமன்வெல்த், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றவர். புணே நகரில் தலீம் நடத்திவருகிறார்.

ஏழை மாணவனின் குடும்பமும் ஏழையாக இருப்பதால் சில வேளைகளில் அந்த கிராமத்தார்கூட செலவை ஏற்றுக் கொள்கின்றனர். சில ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு இளைய குஸ்தி வீரர்களுக்குப் போட்டிக்கு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையிலும்கூட ஊதியமாகக் கிடைக்கும். பயில்வானின் திறமையும் வெற்றியும் அதிகரிக்க அதிகரிக்க அவருக்கான ஊதியமும் உயர்த்தி வழங்கப்படும். “ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை சம்பாதிக்கும் பயில்வான்களும் இருக்கிறார்கள்” என்கிறார் அப்பாசாஹேப் கடம்.

இந்த ஆண்டு பல ஊர்களிலும் போட்டிகள் ரத்துசெய்யப்பட்டதால் இளம் பயில்வான்களான சச்சின் ஜம்தார், யோகேஷ் போம்பாளே போன்றோருக்குப் பெருத்த வருமான இழப்புதான்.

போட்டிக்களம் மாறுகிறது:

இந்த நிலையில், குஸ்திக்கு இப்போது இன்னொரு புதிய ஆபத்து பிறந்திருக்கிறது. மகாராஷ்டிரத்தில் போட்டிகள் அனைத்தும் களிமண் தரைகளில்தான் நடக்கின்றன. ஆனால் இப்போது மேட் என்று அழைக்கப்படும் செயற்கைக் களங்களில் நடத்தத் தொடங்கிவிட்டார்கள்.

ஹாக்கி விளையாட்டுக்கு நேர்ந்த கதி இனி குஸ்திக்கும் ஏற்படலாம் என்று இதனுடன் தொடர்புள்ளவர்கள் கவலைப்படுகின்றனர். இந்திய, பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் மண் தரையில் சிறப்பாக விளையாடுவார்கள். ஜெர்மனியிலும் பிற நாடுகளிலும் செயற்கைத் தரையில் ஹாக்கியைப் பயிற்சி செய்துகொண்டு அதிலேயே சர்வேதசப் போட்டிகளை நடத்தினார்கள். அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய, பாகிஸ்தானிய வீரர்கள் ஹாக்கிப் போட்டியில் கடைசி இடத்துக்குச் சென்று செல்வாக்கிழந்தனர். அதே நிலைமை இப்போது குஸ்திக்கும் ஏற்பட்டுவருகிறது.

40 அடி நீளம் 40 அடி அகலம் உள்ள செயற்கைக் களத்துக்கு ரூ.7 லட்சம் செலவாகிறது. கிராமங்களில் தலீம் நடத்துகிறவர்களால் இந்தச் செலவை ஏற்க முடியாது. எனவே இதில் அவர்களால் பயிற்சி தர முடியாது. களிமண் தரையில் பயிற்சி பெற்றுவிட்டு போட்டிக்குச் செயற்கைக் களத்தில் இறங்கும்போது அவர்களால் நன்கு வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

“இந்திய குஸ்தி வீரர்கள் மண்ணில்தான் பிறந்தார்கள், செயற்கைக் களங்களில் அல்ல. களிமண் தரையிலான களத்தைத் தயாரிக்கவே நிறைய உழைப்பும், பணமும் தேவைப்படுகிறது.

வெறும் களிமண்ணால் களம் அமைத்துவிடுவதில்லை. களிமண்ணுடன் தயிர், சுண்ணாம்பு நீர், நெய், மஞ்சள் ஆகியவையும் சேர்க்கப்படுகின்றன. களிமண் தரையில் சண்டையிடும்போது குஸ்தி வீரர்களுக்கு ஏற்படும் ரண காயங்கள் உடனே ஆற வேண்டும் என்பதற்காக, களத்திலேயே மஞ்சள் சேர்க்கப்படுகிறது. சில ஊர்களில் ஆட்டுக்கறித் துண்டுகளைக்கூட களி மண்ணுடன் சேர்த்து களம் தயாரிப்பார்கள்.

செயற்கைக் களத்தில் மின்னல் வேகத்திலும் படு ஆவேசமாகவும் தாக்குதலைத் தொடுத்து எதிரியைக் களத்தில் ஒரு சில நிமிஷங்களில் வீழ்த்திவிடுகிறார்கள். நம்மைப்போல பாரம்பரியமான களிமண் தரைகளில் நடை பெறும் ஒவ்வொரு குஸ்திப் போட்டியும் சுமார் 25 நிமிஷங்கள் வரை நீடிக்கும். ஆற அமர ரசிப்பதற்கும் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதற்கும் நிறைய வாய்ப்புகள் உண்டு. மோது வோர்களின் உடல் திறனும் சமயோசிதமும் சேர்ந்து போட்டியைத் தரமுள்ளதாக்கும். பார்வையாளர்கள் போட்டியுடன் ஒன்றவும் உற்சாகமாகப் பார்த்து ரசிக்கவும் நல்ல வாய்ப்பாக அவை அமைந்தன. இனி இதற்கு வேலையே இருக்காதுபோலத் தெரிகிறது” என்று வருத்தப்பட்டார் அந்தால்கர்.

தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக கடந்த பருவத்தில் அட்பாடி என்ற ஊரில் எல்லா குஸ்திப் போட்டிகளையும் ரத்துசெய்துவிட்டார்கள். “தொடர்ந்து தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுவதால் ஒவ்வொரு பருவத்திலும் ஏராளமானோர் இனி விவசாயமே நமக்கு வேண்டாம் என்று கிராமங்களை விட்டு நகரங்களில் வேலை தேடிச்செல்கின்றனர். விவசாயம் நசிந்துவிட்டால் குஸ்தியும் நசிந்துவிடும்” என்று அச்சப்படுகிறார் குஸ்தி ஆசிரியர் நாம்தேவ் படாரே.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x