Published : 07 Oct 2013 04:00 PM
Last Updated : 07 Oct 2013 04:00 PM
சரி, இனிமேல் நம்மூர்க் குழந்தைகள் யாரையும் பரதேசிகளுக்கு தத்து கொடுக்காதீர்கள். கொடுத்தால் குற்றம். தீர்ந்தது விஷயம்.
கெமரோவோ நகரசபை உறுப்பினர்கள் இவ்வாறாக ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவார்கள் என்று ரஷியாவில் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒப்புக்கு ஒரு எதிர்ப்பு ஓட்டு கூட இல்லாமல் ஏக மனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உடனடியாக சட்டமாக அமல்படுத்தப்பட்டிருப்பது, ரஷியாவில் மட்டுமல்லாமல் பல ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும்கூட அதிர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது. ஏனென்றால் குழந்தையில்லாத பணக்கார அமெரிக்கர்களும் வேறு பல ஐரோப்பியப் பெரும் பணக்காரப் பிரகஸ்பதிகளும் தத்தெடுப்பதற்குத் தளதளவென்று ஒரு குழந்தையை உத்தேசித்தால் உடனே ரஷியாவுக்குத்தான் டிக்கெட் எடுப்பது வழக்கம்.
ஏழைகள் அதிகம். கஷ்டப்படுபவர்கள் அதிகம். பணத்தேவை உள்ளவர்கள் அதிகம். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை வைத்துக்கொண்டு வேளைக்குச் சோறு போட வழியில்லாமல் அவஸ்தைப்படுபவர்களுக்கு உதவி செய்தது போலவும் இருக்கும், நமக்கும் காரியம் ஆகும் என்று நினைத்து ரஷியாவுக்கு வரும் அமெரிக்கப் பணக்காரத் தத்தெடுப்பாளர்கள், அப்படி தத்தெடுத்துச் செல்லும் குழந்தைகள் கொஞ்ச நாளில் போரடித்துவிட்டால், ரொம்பக் கொடுமைப்படுத்திக் கதற வைத்துவிடுகிறார்கள் என்பது பொதுவில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.
தத்து கொடுக்கப்படும் எல்லா குழந்தைகளுமே இப்படிக் கஷ்டப்படுகின்றன என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் கவலைப்படுமளவுக்கு என்னவோ சில அசம்பாவிதங்கள் நடக்காமல் இப்படியொரு சட்டம் கொண்டுவரமாட்டார்கள் அல்லவா?
இதில் பொதிந்திருக்கும் ஒரு நூதன ஏடாகூடமும் கவனிக்கப்பட வேண்டியது. மேலை நாடுகள் சிலவற்றில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டிருக்கிறது. அந்த ரக ஜோடிகள் தமக்கொரு வாரிசு வேண்டும் என்று முடிவு செய்து ரஷ்யக் குழந்தைகளைத் தத்தெடுத்துச் சென்ற பிறகு, என்னவோ உப்புப் பெறாத காரணத்துக்காகப் பிரிய நேர்ந்தால் இந்தக் குழந்தைகளின் பாடு பேஜாராகிவிடுகிறது. சொல்லொணாச் சித்திரவதைகள் தொடங்கி கொலை வரைக்குமே சகஜமாக நடைபெறுவதாக ரஷியர்கள் வருத்தப்படுகிறார்கள்.
அமெரிக்கர்களுக்குத் தத்து கொடுக்கப்படாது, அமெரிக்க நிறுவனங்கள் இது சம்பந்தமாக ரஷியாவுக்குள் எவ்வித ரகசிய கேன்வாசிங் திருப்பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், ஒருபால் ஜோடிகள் - அவர்கள் எந்நாட்டைச் சேர்ந்தவரானாலும் ரஷியக் குழந்தைகளைத் தத்தெடுத்தல் தகாது என்றும் ரஷியாவில் ஏற்கெனவே சட்டம் உண்டு.
ஆனால் சட்டத்தையெல்லாம் யார் மதித்தார்கள்? ரொட்டிக்குப் பணம் முக்கியம். பசித்தவர்களுக்கு ரொட்டி முக்கியம். பணக்காரர்களுக்குப் பசித்தவர்களின் பிள்ளைகள் முக்கியம். தீர்ந்தது விஷயம்.
இன்னொரு சங்கடமும் இதிலே இருக்கிறது. இவ்வாறாகத் தத்துப் போகும் பிள்ளைகளின் தேசிய அடையாளம் எது? ரஷியாவில் பிறந்தால் ரஷியக் குழந்தைதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் சிறு வயதிலேயே கப்பலேறிப் போயாகிவிட்ட பிற்பாடு அவர்கள் ரஷியாவுக்கு வருவதென்றால் பாஸ்போர்ட் போதுமா? விசா வேண்டுமா? எந்த நாட்டுக் குடியுரிமை அவர்களிடம் இருக்கப் போகிறது? போன இடத்தில் சௌக்கியமாக இருக்க நேர்ந்தால் பிரச்னையில்லை. தத்து எடுத்துச் சென்றவர்கள் தத்தாரியாக இருந்து பிள்ளையை வாட்டி வதைத்தால் அவர்கள் எங்கே போவார்கள்? ஒரிஜினல் பெற்றோரிடம் திரும்பி வர நினைத்தால் என்னவாக வந்து சேருவார்கள்? அவர்களை ரஷிய அரசாங்கம் எப்படிப் பார்க்கும், எந்த வகையில் ஏற்கும்?
எல்லாம் சிக்கல், பெரும் சிக்கல். இதற்காகத் தத்துக் கொடுப்பதே தப்பென்றா சொல்ல முடியும்? அப்பா தாயே உள்நாட்டிலேயே யாராவது உத்தமோத்தமர்கள் கேட்டால் தத்துக் கொடுத்துக்கொள்ளுங்கள்; பிள்ளைகளுக்குப் பரதேசப் பிராப்தம் வேண்டாமே என்று மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் ஏழைமை ஒழிப்பில் இருக்கிறது. அது நடந்துவிட்டால் இதெல்லாம் ஒரு விஷயமா? வளர்ப்பதற்கு வசதி இருந்துவிட்டால் பெற்ற பிள்ளையை யார் தூக்கிக் கொடுக்கப் போகிறார்கள்?
கேட்க எளிமையாகத்தான் இருக்கிறது. பாழாய்ப் போன வறுமையை எங்ஙனம் ஒழித்துக் கட்டுவது? அமைதிக்கான நோபல் பரிசை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்த பிற்பாடு காலக்கிரமத்தில் விளாதிமிர் புதின் இதற்காக யோசித்து ஒரு நல்ல முடிவை அவசியம் எடுப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT