Last Updated : 25 Jun, 2017 11:21 AM

 

Published : 25 Jun 2017 11:21 AM
Last Updated : 25 Jun 2017 11:21 AM

அரசியலில் சோனியா காலம் முடிந்துவிட்டதா? - கேப்டன் அமரிந்தர் சிங் பேட்டி

பஞ்சாப் காங்கிரஸ் அரசின் முதல்வர் கேப்டன் அமரிந்தர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தவர். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸிலிருந்து விலகி அகாலி தளத்தில் சேர்ந்தவர். மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்புவதற்கு முன்னர் சொந்தக் கட்சியையும் தொடங்கி நடத்திக்கொண்டிருந்தவர். 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர்களில் ஒருவர். டெல்லி சென்றிருந்த அவரிடம் எடுத்த பேட்டியில் பஞ்சாப் அரசு, காங்கிரஸின் எதிர்காலம், தேசியப் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசினார். பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல்வராகப் பதவி வகிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கடந்த முறை (2002) நான் புதிய ஆள். இப்போது ஒரு அனுபவஸ்தனாக, பதவிக்கு வந்திருக்கிறேன். எனவே, முதல் நாளிலிருந்தே பணி எளிதாக இருக்கிறது. கடந்த முறை, சூழலைச் சமன்படுத்துவதற்குச் சற்று நேரம் பிடித்தது. இப்போது பொருளாதாரரீதியாகப் பஞ்சாபை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்செல்கிறோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறோம்.

கடந்த முறை உங்களுக்கு எதிர்க்கட்சி ஒன்றுதான். இந்த முறை இரண்டு அல்லவா?

எதிர்க்கட்சியே இல்லை. அவர்கள் சொல்வதற்கு ஏதுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் சிரோன்மணி அகாலி தளம் கட்சியினர் பஞ்சாபைச் சீர்குலைத்துவிட்டனர். ஆம் ஆத்மி கட்சி முற்றிலும் அனுபவம் இல்லாதது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சத்தம் போடுவதுதான். ஷுக்பால் கைரா தவிர பிற எம்.எல்.ஏக்கள் அனுபவமே இல்லாதவர்கள்.

சிரோன்மணி அகாலி தளம், ஆஆக இவற்றில் உங்கள் முக்கியமான எதிர்க்கட்சி எது?

எந்தக் கட்சி வளர்ச்சிபெறும் என்று கேட்டால், சிரோன்மணி அகாலி தளத்தைத்தான் சொல்வேன். இன்றைக்கு எங்களுக்கு எதிர்க்கட்சி இல்லை. எனினும், காங்கிரஸ் கடந்த 120 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவரும் கட்சி. அகாலி தளம் கடந்த 100 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. மூன்று தலைமுறை ஆகிவிட்டது. கிராமங்களில் அக்கட்சிக்கு உறுதியான தளம் உண்டு. ஆனால், ஆஆக ஊதிப் பெரிதாக்கப்பட்ட கட்சி; சமூக ஊடகங்களின் தயாரிப்பு.

முந்தைய அரசு விட்டுச்சென்ற மிகப் பெரிய கடன் சுமையை எதிர்கொண்டுவருகிறீர்கள். மக்களுக்கு வாக்குறுதி அளித்த திட்டங்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு நிதி உதவி அளிக்குமா?

தேர்தல் பிரச்சாரத்தின்போது எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி மாநிலத்தின் கடன் சுமை ரூ.1.3 லட்சம் கோடி. இப்போது கிடைத்திருக்கும் வெள்ளை அறிக்கையின்படி அது கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி. எங்கள் தேர்தல் வாக்குறுதிகள் வழக்கத்தைவிடச் சிறப்பானவை. பட்ஜெட் மூலம் அவற்றை நிறைவேற்ற முடியாது.

விவசாயக் கடன் ரத்து பற்றிச் சொல்லுங்கள்…

வங்கிகளுக்குச் செலுத்தும் அளவுக்கு பட்ஜெட்டில் பணம் திரட்டப்படவில்லை. எனவே, குறிப்பிட்ட அளவுக்கு எல்லாக் கடன்களையும் ரத்துசெய்திருக்கிறோம். வங்கிகளிடம் பேசி, வட்டியைக் குறைக்கும் பணியைக் கூட்டுறவுத் துறை மேற்கொண்டிருக்கிறது.

வழக்கத்துக்கு மாறான திட்டங்கள் என்றீர்களே, அவை என்னென்ன?

4ஜி திறன்பேசிகள் கொடுப்பதாக நாங்கள் வாக்குறுதி அளித்தபோது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறோம் என்று எங்களைக் குற்றம்சாட்டினார்கள். அப்படி அல்ல. 99 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். போதைப்பொருள் பழக்கம் அதிக அளவில் இருக்கிறது. அத்தகைய இளைஞர்களின் சிந்தனையை மாற்ற இதை முன்வைத்தோம். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, 10-ம் வகுப்பு வரை படித்த இளைஞர்களுக்கு மட்டும்தான் திறன்பேசி அளிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். போதைப்பொருள் பிரச்சினையைக் கையாளச் சிறப்புப் படையை அமைத்திருக்கிறோம்.

நீங்கள் முதல் முறை முதல்வராக இருந்தபோது அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவருடன் உங்களுக்கு நல்ல உறவு இருந்தது. மோடி அரசுடன் உறவு எப்படி இருக்கிறது?

பயிர்க் கடனுக்கான வரம்பு விஷயத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. கோதுமை அறுவடை சமயத்தில்தான் பஞ்சாபில் காங்கிரஸ் அரசு அமைந்தது. இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை நான்கு முறை சந்தித்தேன். அவர் எனக்கு உதவிசெய்தார். பிரதமரும் எனக்கு உதவினார். நான் சந்தித்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் மிகவும் உதவிகரமாக இருந்தனர். அரசியல் களத்தில் நிலைமை வேறுமாதிரியாக இருக்கலாம். ஆனால், அரசு நிர்வாகம் விஷயத்தில் பிரச்சினை எதுவும் இல்லை.

சட்லெஜ் - யமுனா இணைப்புக் கால்வாய்த் திட்டம் தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்?

நீர்வளத் துறையின் வழிகாட்டுதலில் ஏன் இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தியிருக்கிறேன். பஞ்சாபிடம் உபரியாக நீர் இருந்தால் தண்ணீர் தர நாங்கள் மறுக்கப்போவதில்லை.

பசு விற்பனைக்கும், மாட்டிறைச்சிக்கும் சில கட்டுப்பாடுகளை மோடி அரசு விதித்திருக்கிறது. தங்கள் அதிகாரத்தில் தலையிடும் விஷயம் என்று சில மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. பல்வேறு உயர் நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் இது. இதுதொடர்பான வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

பஞ்சாபைப் பொறுத்தவரை, நாங்கள் மாட்டிறைச்சி சாப்பிடும் மாநிலம் அல்ல என்பதால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டால், என்ன சாப்பிட வேண்டும் என்பது அவரவர் உரிமை. அது தென்னிந்தியாவாக இருக்கட்டும் வடகிழக்கு இந்தியாவாக இருக்கட்டும் அது அவர்கள் விருப்பம். தனிப்பட்ட உணவுப் பழக்கங்கள் அவரவர் விருப்பம் என்று அருண் ஜேட்லிகூட பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

காங்கிரஸைப் பொறுத்தவரை, சமீபத்திய சட்ட மன்றத் தேர்தல்களில் பஞ்சாப் மட்டும்தான் நம்பிக்கையளித்த ஒரே மாநிலம். தேசிய அளவில் காங்கிரஸ் புத்துயிர்ப்பு பெறுமா?

பாஜக கூட ஒரு முறை இரண்டே இடங்களில்தான் வென்றது. அப்புறம் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் சாதி அடிப்படையிலான அரசியலாக மாறியது. மாநிலக் கட்சிகள் வளர்ந்தன. சில கட்சிகள் பிற கட்சிகளுடன் புரிந்துணர்வு கொண்டிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் 120 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் கட்சி. ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து முதல் 50 பேர் காங்கிரஸ் ஆதரவாளர்கள். அரசியலில் வெற்றி- தோல்வி இருக்கும். நாங்கள் மீண்டெழுவோம்.

காங்கிரஸ் கட்சிக்குள் பகிரங்கமாகவே துணிச்சலாகப் பேசக்கூடிய சில தலைவர்களில் நீங்களும் ஒருவர். கட்சியில் என்ன பிரச்சினை என்பது பற்றி, கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் மூத்த தலைவர்கள் ஏன் பேசக் கூடாது?

ராகுலுடனான எனது கடைசிச் சந்திப்பின்போது 45 நிமிடங்கள் பல்வேறு விஷயங்கள் பற்றி வெளிப்படையாகப் பேசினோம்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் விஷயத்தைப் பொறுத்தவரை உங்களுக்குத் திருப்தி இருக்கிறதா? எதிர்க்கட்சிகளிடம் ஒரு தலைவரும் ஒரு தெளிவான செய்தியும் தேவை அல்லவா?

முதலில் தான் செய்ய விரும்பும் விஷயங்கள் என்ன என்பதைக் காங்கிரஸ் முடிவுசெய்ய வேண்டும். அதன்பிறகு, ஒரு முடிவை எடுக்கலாம். ஒருமித்த சிந்தனை கொண்ட கட்சிகள், மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று கருதுகிறேன். 1950-களில் இருந்த நிலைமை திரும்பிவிடாது. அப்போது காங்கிரஸின் நிலைமை வேறு. தேசம் தொடர்பான கருத்தாக்கமும் வேறு மாதிரியானது. தற்போதைக்கு இருக்கும் வரையறைகளுக்குள் காங்கிரஸின் இடத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொள்வாரா?

கட்சித் தலைவராக அவர் சிறப்பாகச் செயல்படுவார். கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் நெருக்கமாக உரையாடியிருக்கிறேன். அவர் மிக எளிதான மனிதர். அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

சோனியா காந்தியின் காலம் முடிந்துவிட்டதா?

இல்லை. அப்படி நான் நினைக்கவில்லை. அவர் இன்னமும் தொடர்கிறார். 1998-ல் அவர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து அவருடன் பணிபுரிந்துவருகிறேன். அதே ஆண்டில்தான் அவர் என்னை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக்கினார். அவர் சிறந்த நிர்வாகி. இத்தனை ஆண்டுகளில் அவர் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறார், ஒரு உதாரணம் சொல்கிறேன். உங்களுக்கென்று ஒரு அணியை உருவாக்கிக்கொள்ளுங்கள் என்று என்னிடம் சொன்னார். நானும் எனக்கென ஒரு அணியை உருவாக்கிக்கொண்டேன். இவர் யார்... அவர் யார் என்று என்னிடம் கேட்பார்.

ஒருவருக்குப் பொதுச் செயலாளர் பதவி வழங்கியது ஏன் என்று அவரிடம் விளக்கம் தர வேண்டியிருந்தது, அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அப்போது எனது அணியினரின் செயல்பாடுகளைப் பொறுத்து அதில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சொன்னார்.

ஒரு வருடத்திலேயே பஞ்சாப் பற்றி அவர் முற்றிலுமாகத் தெரிந்துகொண்டார். மற்ற மாநிலங்கள் பற்றியும் அவருக்குத் தெரியும். அபாரமான நினைவுத் திறன் கொண்டவர். அவர் கொடுக்கும் பணிக்கு நீங்கள் பொருத்தமானவர் என்றால், முழுமையாக ஆதரவு தருவார். ராகுலும் அப்படித்தான். நாங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதை முழுமையாக ஆதரிப்பார்.

ராஜீவ் காந்தியை நன்கு அறிந்தவர் நீங்கள். ராஜீவுக்கும் ராகுலுக்கும் என்ன வித்தியாசம்?

நான் படித்த பள்ளியில் ராஜீவும் படித்தார். என்னைவிட ஆறு மாதம் இளையவர். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். ராஜீவ், சஞ்சய் இயல்பு வேறு மாதிரியானது. மற்றபடி அவர்கள் இருவரும் ஒரே மாதிரியானவர்கள்தான். நான் ராணுவத்தில் சேர்ந்தபோது அவர் விமானியானார். டெல்லி வரும்போதெல்லாம் அவரைச் சந்திப்பேன். சஞ்சய் காந்தி இறந்தபோது அவர் அமேதி தொகுதியிலிருந்து போட்டியிட முடிவெடுத்தார். அப்போது அமேதியில் இரண்டு மாதங்கள் தங்கினேன். தொடக்க நாட்களில் ஒரு கூட்டத்தில் பேசவந்த அவர், ஒரு சின்ன தாளில் நான்கு வரிகள் எழுதி என்னிடம் கொடுத்தார். அது என்னவென்று கேட்டேன். என் பின்னால் உட்கார்ந்துகொள்ளுங்கள், நான் ஏதேனும் வரிகளை மறந்துவிட்டால் அதை வாசித்துக்காட்டுங்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து, ஐநா சபையில் அவர் பேசியதைக் கேட்டேன். முற்றிலும் மாறியிருந்தார். சூழல்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ராகுலும் அப்படியானவர்தான். அவர் பேசிக் கேட்டிருக்கிறேன். அவர் நன்றாகப் பேசுகிறார். அவரை மலினப்படுத்தும் வகையில் சிலர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இன்றைய இந்தியாவில் ஒரு தலைவரை மலினப்படுத்த செய்யப்படும் உத்தி அது. ஆனால், ராகுல் நன்றாக வருவார். கொச்சைப்படுத்துவதன் மூலம் ராகுலை வீழ்த்த முடியாது!

மேஜர் லீதுல் கோகய்க்கு ஆதரவாக எழுதினீர்கள். அவரது பணி கடினமானது; அவர் தண்டிக்கப்படக் கூடாது என்று ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியாக நீங்கள் சொல்லலாம். ஆனால், விருது வழங்கப்படுவதற்கு அவர் தகுதியானவரா?

நிச்சயமாக. உடனடியாக ஒரு முடிவை அவர் எடுத்தார். உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. அவரை நாம் பாராட்ட வேண்டும்.

ராணுவத்துக்குள் வேண்டுமானால் அவர் பாராட்டப்படலாம். எனினும், ராணுவத்திலும் நடத்தை விதிகள் இருக்கின்றன அல்லவா?

அமைதியை நிலைநாட்டுவது ராணுவத்தின் பணி அல்ல. மத்தியில் இருக்கும் பாஜக அரசு, காஷ்மீரின் மெஹ்பூபா முப்தியின் அரசின் பணி அது. அவர்கள் இணைந்து அமைதியைக் கொண்டுவர வேண்டும். சூழலுக்கு ஏற்பத்தான் ராணுவம் எதிர்வினையாற்றும். பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இளைஞர்களின் கோபத்துக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போது மேஜர் லீதுல் கோகய் தேவைப்பட மாட்டார். அதுவரை இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம். ஒவ்வொரு நாளும் நாம் வீரர்களை இழந்துகொண்டிருக்கிறோம். எத்தனை பேரை இப்படி இழக்கப்போகிறோம்? இந்தப் பிரச்சினையை நமது அண்டை நாடு தூண்டிவிடுகிறது. அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களைச் சமாதானம் செய்ய முடியும். இது உங்கள் நாடு. நீங்கள்தான் இவற்றை எதிர்கொள்ள வேண்டும். இது மட்டுமல்ல, நக்ஸல் பிரச்சினையையும் எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரையும் கொல்வதல்ல தீர்வு!

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x