Last Updated : 20 Jul, 2016 09:34 AM

 

Published : 20 Jul 2016 09:34 AM
Last Updated : 20 Jul 2016 09:34 AM

பட்ஜெட் நடைமுறைகள்

ஒரு நிதி ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் தேதி துவங்கி மார்ச் 31-ல் முடிவடைகிறது

பட்ஜெட் என்பது ஒரு சட்ட ஆவணம்தான் என்றும், ‘மாநிலத் தொகு நிதி’யில் இருந்து செலவுகளுக்குப் பணம் ஒதுக்குவதற்குப் ‘பணம் ஒதுக்கு மசோதா’வை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்த நிதிக்கு வரி வருவாய் பெற ‘நிதி மசோதா’வை நிறைவேற்ற வேண்டும் என்றும் முந்தைய கட்டுரையில் பார்த்தோம்.

ஒவ்வொரு ஆண்டும் முதலில் சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் ‘ஆண்டு நிதி நிலை அறிக்கை’யைத் தாக்கல் செய்து, பட்ஜெட் உரை நிகழ்த்துவார். இதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்கள் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும். இதில் அரசின் பொருளாதாரக் கொள்கைகள், மாநிலத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் விவாதிக்கப்படும். இறுதியாக, நிதி அமைச்சர் பதில் அளிப்பார். அதன் பிறகு, ஒவ்வொரு துறைக்கான ‘பணம் ஒதுக்கு மசோதா’ விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

பட்ஜெட் நிறைவேற்றும் முறை

இவ்வாறு ‘பண ஒதுக்கு மசோதா’ நிறைவேற்றப்படும் முன், அத்துறைக்கான ‘கொள்கை அறிக்கை’யும் (Policy Note), ‘மானியக் கோரிக்கை’யும் ( Demand for Grants) சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். ஒரு துறையின் கடந்த ஆண்டு சாதனை, முக்கிய திட்டங்கள், துறை சார்ந்த புள்ளிவிவரங்கள் ஆகியவை அத்துறையின் கொள்கை அறிக்கையில் இருக்கும். துறையின் மானியக் கோரிக்கையில் அத்துறையின் செலவுகள் எல்லாம் விவரமாகக் கொடுக்கப்பட்டிருக்கும். மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்த பிறகு, ‘பணம் ஒதுக்கு மசோதா’ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

ஒவ்வொரு ‘பணம் ஒதுக்கு மசோதா’வையும் நிறைவேற்றும் முன், எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஒரு வெட்டுத் தீர்மானத்தைக் கொண்டுவரலாம். இதற்கு ‘ஒரு ரூபாய் வெட்டுத் தீர்மானம்’ என்று பெயர். ஒரு துறை சார்ந்த கொள்கை அல்லது திட்டங்களில் ஏதேனும் குறையிருப்பதாகக் கருதினால், உறுப்பினர்கள் இந்த ‘ஒரு ரூபாய் வெட்டுத் தீர்மான’த்தைக் கொண்டுவரலாம். ஒவ்வொரு ஆண்டும் பல நூறு வெட்டுத் தீர்மானங்கள் கொண்டுவரப்படும். அதில் பெரும்பாலானவை விவாதத்துக்குப் பிறகு திரும்பப் பெறப்படும் அல்லது ஆளும் கட்சியால் தோற்கடிக்கப்படும். வெட்டுத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அத்துறைக்கான ‘பண ஒதுக்கு மசோதா’நிறைவேற்றப்படும்.

எல்லாத் துறைக்கான ‘பணம் ஒதுக்கு மசோதா’க் களையும் நிறைவேற்றிய பிறகு, சட்டமன்றத்தில் ‘நிதி மசோதா’ தாக்கல் செய்யப்படும். நிதி மசோதாவையும் நிறைவேற்றிய பிறகே பட்ஜெட் நிறைவேற்றும் செயல்முறை முடிவடையும். இதன் பிறகு ‘பணம் ஒதுக்குச் சட்ட’த்துக்கும் ‘நிதி சட்ட’த்துக்கும் ஆளுநர் இசைவு அளித்த பிறகு பட்ஜெட் நடைமுறைப்படுத்தப்படும்.

ஒரு நிதி ஆண்டின் இடையில் வரி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்றாலும், பொதுச் செலவுகளை மாற்ற வேண்டும் என்றாலும் என்ன செய்வது? மீண்டும் நிதி மற்றும் ‘பணம் ஒதுக்கு மசோதா’க்களைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றலாம். இதற்கு ‘துணை மானியக் கோரிக்கை நிதி மசோதா’ என்று பெயர்.

ஒரு நிதி ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் தேதி துவங்கி, மார்ச் 31-ல் முடிவடைகிறது என்று பார்த்தோம். ஆனால், ஏப்ரல் அல்லது மே மாதத்தில்தான் ‘பணம் ஒதுக்கு மற்றும் நிதி மசோதா’க்கள் நிறைவேற்றப்படும். எனவே, இந்த இரண்டு மாதங்களுக்கு எப்படி வரி வசூலிப்பது, துறைகள் செலவு செய்யப் பணம் எப்படி எடுப்பது என்ற கேள்விகள் எழலாம். தமிழகத்தில் தற்போது நடந்துமுடிந்த தேர்தலுக்குப் பிறகு, புதிய பட்ஜெட் இனிமேல்தான் நிறைவேற்றப்பட உள்ளது. அப்படியெனில், ஏப்ரல் முதல் இன்று வரை தமிழக அரசு எப்படி வருவாய் ஈட்டுகிறது, செலவு செய்கிறது என்ற சந்தேகம் எழுகிறதல்லவா?

கணக்கில் வாக்கு

ஒவ்வொரு முறை சட்டமன்றத்தில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, அதனுடன் ‘கணக்கில் வாக்கு’ (Vote on Account) என்ற ஒரு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு, அதனைச் சட்டமன்றம் நிறைவேற்றும். இதன் அடிப்படையில், அடுத்த 6 மாதம் வரை அல்லது அடுத்த முழு பட்ஜெட் செயல்பாட்டுக்கு வரும் வரை ‘கணக்கில் வாக்கு’ என்ற பட்ஜெட்டில் உள்ளதுபோல் வரி வருவாய் பெற்றும், செலவுகள் செய்தும் அரசு தனது அன்றாட நடவடிக்கைகளைச் செய்துவரும். உதாரணமாக, 2015-16 ஆண்டுக்கான பட்ஜெட் 2015 மார்ச் மாதம் நிதி அமைச்சரால் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், செப்டம்பர் மாதம்தான் மானியக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, ‘பணம் ஒதுக்கு மசோதா’க்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் அரசின் நிதி தொடர்ந்து செயல்பட மார்ச் மாதமே நிதி அமைச்சர் ‘கணக்கில் வாக்’கைத் தாக்கல் செய்து சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்றிருப்பார்.

‘கணக்கில் வாக்கு’ என்றால் என்ன? ஓர் ஆண்டின் நிதி நிலை அறிக்கையை சட்டமன்றம் ஏற்றுக்கொண்டு, ஆளுநரின் இசைவுக்குப் பிறகு, நடைமுறைக்கு வருகிறது. அதே பட்ஜெட்டை இன்னும் 6 மாதங்கள் வரை நீட்டித்துச் சட்டமன்றம் வாக்களிப்பதுதான் ‘கணக்கில் வாக்கு’. ஏற்கெனவே சட்டமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 மாதத்துக்கான பட்ஜெட்டை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க எவ்வித விவாதமும் இல்லாமல் சட்டமன்றம் நிறைவேற்றும். மேலும் ‘கணக்கில் வாக்கு’ என்ற பட்ஜெட்டில் விவாதிக்க வேண்டிய புதிய அம்சங்கள் ஏதும் இருக்காது. அரசு இயந்திரம் தொடர்ந்து எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெறுவதற்காகவே இந்த வசதியை நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.

மாநிலத் தொகு நிதிக்கு நிதி சேர்ப்பதும், அதிலிருந்து பணம் ஒதுக்கி வெவ்வேறு நடவடிக்கைகளை அரசு செய்வதும், இவற்றுக்கான சட்டங்கள் இயற்றி ஆளுநர் இசைவு பெறுவதும்தான் பட்ஜெட் என்று பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக அரசு வெளியிடும் ஒவ்வொரு அரசாணையிலும் ‘ஆளுநரின் ஆணைப்படி’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். சில ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு விளம்பரங்களில்கூட நீங்கள் இதுபோன்ற வாசகத்தைப் பார்த்திருக்கலாம். ஆளுநர் ஒப்புதல் அளித்த ‘பணம் ஒதுக்கு சட்டப்படி’ இந்தத் தொகை ‘மாநிலத் தொகு நிதி’யில் இருந்து எடுத்து, இந்தக் காரியத்துக்குச் செலவு செய்யப்படுகிறது என்பதே அதன் அர்த்தம்.

இப்போது பட்ஜெட் பற்றி ஒரு தெளிவான புரிதல் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

- இராம.சீனுவாசன், பேராசிரியர். தொடர்புக்கு: seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x