Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM
இந்தியாவில் மதச்சார்பின்மை என்ற அரசியல் சமூகப் பார்வை மிக ஆழமாக வேர்விட்டிருக்கும் மாநிலமாகத் தமிழகம் பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் முக்கியமான மாநிலக் கட்சிகளில் எவையும், த.மு.மு.க. நீங்கலாக, மதச்சார்புடைய கட்சிகள் இல்லை. இந்நிலை திராவிட இயக்கத்தின், குறிப்பாகப் பெரியாரின் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
மோடிக்கு எதிர்நிலை
இந்திய அரசியலில் ஒப்பீட்டளவில் உயர்சாதியினராக கருதப்பட்டவர்களின் அரசியல் ஆதிக்கம் குறைவாகக் காணப்படும் மாநிலங்களுள் தமிழகமும் ஓன்று. மண்டல் ஆணையத்துக்குப் பின்னர் இந்திய அரசியலில் ஓரளவுக்கு ஏற்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினரின் அரசியல் அதிகாரம், தமிழகத்தில் அதற்கு முன்னரே ஏற்பட்டுவிட்டது. அத்தோடு, இந்தி ஆதிக்கம், இந்துத்துவம், அதி வலுவான மத்திய அரசு, கார்ப்பரேட் ஆதிக்கம் போன்றவற்றைக் கொள்கை அளவில் எதிர்ப்பவை தமிழக அரசியல் கட்சிகள். மேற்படி எதிர்நிலைகளை மோடியைப் போலப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் இந்திய அரசியலில் அதிகம் இல்லை.
இந்தப் பின்புலத்தில், பா.ஜ.க. பெரிதும் முயன்றும் தமிழகத்தில் இதுவரை வளர்ச்சி காண முடியவில்லை. தனியாக பா.ஜ.க. வெற்றி பெறும் ஒரு சட்டமன்றத் தொகுதிகூடத் தமிழகத்தில் இல்லை.
வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. இப்போதைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதும், அதே நேரம் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்பதுமே அரசியல் நோக்கர்களின் ஊகம். இந்நிலையில், பா.ஜ.க. கிட்டத்தட்ட 200 தொகுதிகளில் வென்றால், ஆட்சி அமைக்கக் கூட்டணி ஆதரவு அவசியம். எனவே, தேர்தலுக்குக் கூட்டணி அமைப்பதில் பா.ஜ.க. ஆர்வத்துடன் செயல்பட்டுவருகிறது.
மோடி தலைமையில் தேர்தல் கூட்டணி அமைவதும் கூட்டணி ஆட்சி அமைவதும் கடினம் என்பதே யதார்த்தம். மோடி கூட்டுத் தலைமைக்குப் பொருத்தமான ஆளுமையல்ல என்பது வெளிப்படை. பிற அதிகார மையங்களையும் தலைமைகளையும் அனுசரிக்கும் பண்பு அவரிடம் இல்லை. சர்வ வல்லமை படைத்த, துணிச்சலான சர்வாதிகாரத் தலைமை என்பதே அவருடைய பிம்பம்.
பா.ஜ.க. கூட்டணிக்கு முந்தும் மாநிலம்
கேரளம், வங்காளம், வட கிழக்கு மாநிலங்கள், ஒடிசா, பிகார், உத்தரப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் பா.ஜ.க-வுக்குக் கூட்டணிக் கட்சிகள் அமையும் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை. நாம் முன்னர் கண்ட அரசியல் கோட்பாட்டுப் பின்புலத்தில், மோடிக்குத் தமிழகத்தில் கூட்டணி அமைவது ஆகக் கடினமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதே தர்க்கப்பூர்வமானது. ஆனால், உண்மை நிலை என்ன?
அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க. ஆகிய கட்சிகள் முன்னர் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தவை. மீண்டும் கூட்டணிக்குத் தயாராகவே இருப்பவை. தே.மு.தி.க-வும் புதிய தமிழகமும் இனி கூட்டணி அமைக்காது என்று நம்ப எந்தக் காரணியும் இல்லை. ஆக, கூட்டணி அமைக்க பா.ஜ.க-வுக்குத் தமிழகம்போல வளமான மாநிலம் வேறு எதுவும் இந்தியாவில் இல்லை.
கொள்கை அளவில் பா.ஜ.க-வுக்கும் குறிப்பாக, மோடிக்கும் எதிர்நிலையில் இருக்கும் தமிழகக் கட்சிகள், நடைமுறையில் பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு முந்துபவையாக இருப்பதன் முரண்பாடு கவனத்துக்கும் விவாதத்துக்கும் உரியது. அத்தகைய திறந்த விவாதம் தமிழகத்தில் நடைபெற வேண்டியது மிக அவசியமானது.
இலங்கைத் தமிழர் காரணி
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மோடி லேசாகக் கோடி காட்டினால் மேற்படிக் கட்சிகள் பலவும் தமிழ்த் தேசியக் கட்சிகள் சிலவேனும் அவருக்குப் பச்சைக் கொடி காட்டும் சாத்தியம் வலுவாகத் தெரிகிறது. இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்பை விட, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவானது எனத் தாம் நம்பும் சமரில் ஈடுபடுவதே தமிழ் உணர்வாளர்கள் பலருக்கும் முக்கியமானதாக இருக்கிறது. காங்கிரஸை விட, பா.ஜ.க. இலங்கைத் தமிழருக்கு ஆதரவானது என்று நம்ப வலுவான காரணங்கள் இல்லாத நிலையிலும் காங்கிரஸ் வெறுப்பு அத்தகைய கற்பனைக்கு அடிப்படையாக உள்ளது.
இந்த அரசியல் யதார்த்தத்தை எதிர்கொள்ளும் செயல்திட்டம் தமிழக முஸ்லிம் கட்சிகளிடம் இல்லை. அவர்களுடைய அரசியல் வீச்சு, தோட்டத்துக்கும் புரத்துக்கும் பச்சைக் கொடியுடன் நடைபயில்வதாலும் அரசியல் சாரமற்ற மத அடிப்படையிலான உணர்ச்சிக் கொந்தளிப்புகளாலும் நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு மூத்த அரசியல் செயல்பாட்டாளர் என்னிடம் கூறியதுபோல, தமிழகத்தில் உண்மையான மதச்சார்பற்றவரின் இடம் ‘நடுத்தெரு’தானா?
கண்ணன்,
பதிப்பாளர், சமூக விமர்சகர்.
தொடர்புக்கு: kannan31@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT