Last Updated : 15 Nov, 2013 12:00 AM

 

Published : 15 Nov 2013 12:00 AM
Last Updated : 15 Nov 2013 12:00 AM

முதலீடு செய்வது எப்படி?

முதலீட்டின் முதல் பாடம், நீங்கள் முதலீடு செய்யும்போது அதிலிருந்து உடனடியாக வரவை எதிர்பார்க்கக்கூடாது. ஒரு வங்கியில் ஓராண்டு வைப்புக் கணக்கில் பணம் முதலீடு செய்தால், உங்களுக்கு ஓராண்டுக்குப் பிறகுதான் வட்டி கிடைக்கும், அது போன்றுதான் எல்லா முதலீடுகளும், சில காலம் கடந்த பிறகுதான் வருவாய் ஈட்டும்.

முதலீட்டின் இரண்டாம் பாடம், நீங்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்க வேண்டும். ரிஸ்க் அதிகமானால், வரவும் அதிகமாக வாய்ப்பு உள்ளது. ரிஸ்கை எப்படி புரிந்துகொள்வது? எந்த ஒரு முதலீட்டின் வருவாய் நிலையில்லாமல் இருக்கிறதோ அதில் ரிஸ்க் இருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய நெருங்கிய நண்பருக்கு நீங்கள் கடன் கொடுத்தீர்கள். அவரின் சொத்து, வருமானம் பற்றிய விவரங்களும், அவர் நேர்மையானவர் என்றும் உங்களுக்கு தெரியும். எனவே, அவர் மாதந்தோறும் வட்டியை முறையாகக் கொடுப்பார், சில ஆண்டுகள் கழித்து முதலையும் முழுமையாகக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதுபோல் அவரும் நடந்துகொள்கிறார். மிக அசாதாரணக் காரணங்களைத் தவிர இந்த முதலீட்டில் உங்களுக்கு பெரிய ரிஸ்க் இல்லை.

இதுபோல் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்தீர்கள் என்று வைத்துகொள்வோம். 2011, நவம்பர் மாதம் 11-ம் தேதி நீங்கள் 24 காரட் தங்கத்தில் 10 கிராம் வாங்கி இருந்தால், அன்றைய விலை ரூ. 28641. இதை நீங்கள் 2012, நவம்பர் மாதம் 11-ம் தேதி விற்றிருந்தால் உங்களுக்கு ரூ. 31333 கிடைத்திருக்கும், அதாவது ஓராண்டில் உங்கள் முதலீடு 9.40% வருமானத்தைப் பெற்றிருக்கும். மாறாக, தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று நினைத்து 2013, நவம்பர் மாதம் 11-ம் தேதி விற்றிருந்தால் உங்களுக்கு ரூ. 29970 கிடைத்திருக்கும், அதாவது வருவாய் ஆண்டுக்கு 2.32%தான். இதில் நஷ்டமும் ஏற்படும். யோசித்துப் பாருங்கள், கடந்த ஆண்டு ரூ. 31333-க்கு

10 கிராம் தங்கத்தை வாங்கி இந்த ஆண்டு ரூ .29970-க்கு விற்றால் உங்களுக்கு 4.35% நஷ்டம் ஏற்பட்டிருக்கும். இப்போது ஒரு முதலீட்டிலிருந்து பெறப்படும் வருவாயின் அளவு ஒவ்வொரு ஆண்டும் மாறுபட்டால், அந்த முதலீடு ரிஸ்க் உள்ளது என்று புரிந்துகொள்க.

அதிக ரிஸ்க் உள்ள முதலீடுகளை எப்போது ஆரம்பித்து எப்போது முடிப்பது என்பதுதான் முதலீட்டுக் கலை. இது யாருக்கும் முழுமையாக கைவரவில்லை.

எப்போதும் முதலீட்டிலிருந்து வரும் வருவாய் விகிதம் பணவீக்கத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும். பணவீக்கம் 10% என்றால், அதைவிட அதிக வருவாய் உள்ள முதலீடுகளை இனம் கண்டு முதலீடு செய்யவேண்டும். இது எல்லா நேரங்களிலும் சாத்தியம் இல்லை.

கடந்த 12 மாதங்களில் நுகர்வோர் விலை குறியீடு (இது பணவீக்கத்தின் அளவு) 10.70% அதிகரித்துள்ளது. எனவே உங்கள் முதலீடு குறைந்தபட்சம் 11% வருவாய் பெற்றுத்தரவேண்டும். ஏற்கெனவே, தங்கத்தில் கடந்த ஓராண்டில் 4.35% நஷ்டம் ஏற்பட்டதாக பார்த்தோம். தேசிய சந்தையில் உள்ள முதன்மைப் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் 5.08% வருவாய் உயரும். மும்பை பங்குச் சந்தையில் முதன்மை பங்குகளில் முதலீடு செய்திருந்தால் 9.66% வருவாய் உயர்ந்திருக்கும். இவை இரண்டும் பணவீக்கத்தைவிட குறைவான உயர்வு விகிதங்கள். அரசு கடன் பத்திரத்திலோ அல்லது வங்கிகளில் ஓராண்டு வைப்புக் கணக்கில் முதலீடு செய்தாலோ 8.5% விட குறைவாகவே வட்டி கிடைக்கும்.

இவற்றை எல்லாம் மீறி நீங்கள் அதிக வருவாய் கிடைக்கும் முதலீடுகள் செய்யவேண்டும் என்றால் குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு அல்லது அதிக வட்டி கொடுக்கும் சிலரிடம் கடன் கொடுக்க வேண்டும். இவை போன்ற வேறு பல முதலீடுகளும் உள்ளன. ஆனால், வெவ்வேறு முதலீடுகள் வெவ்வேறு ரிஸ்க்குடன் இருப்பதால் நம் பணத்தை ஒரே இடத்தில் முதலீடு செய்வது மடமை. இந்த சூழலில், முதலீடு செய்வதற்கு நிறைய படித்து அறிந்து செயல்படவேண்டும். அல்லது ஓரளவுக்கு குறைவான வருவாய் வந்தாலும், முதலுக்கு மோசமில்லை என்று அரசு வங்கியிலோ, ஓய்வூதிய தொகுப்பிலோ பணம் போடுவதைத் தவிர வேறு வழி இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x