Published : 21 Oct 2013 11:01 AM
Last Updated : 21 Oct 2013 11:01 AM
மொகமட் அலியைப் பல வருடங்களுக்குப் பின்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது என் குரலை அவர் உடனேயே அடையாளம் கண்டுகொண்டது ஆச்சர்யமாக இருந்தது. மொகமட் அலி கானா நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் வசிக்கிறார். ‘தி ப்ராஃபட் ஆஃப் ஜாங்கோ ஸ்ட்ரீட்’ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர். பல வருடங்களுக்கு முன்னர் இவரை நேர்காணல் செய்து எழுதியிருக்கிறேன். இவர் தீவிரமான எழுத்தாளர். ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘தி நியூயார்க்கர்’ போன்ற பத்திரிகைகளுக்குச் சிறுகதைகள், கட்டுரைகள் என்று எழுதுவார். பல்கலைக்கழகம் ஒன்றில் படைப்பிலக்கியத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். அத்துடன் இசைக் குழு ஒன்று வைத்து நடத்துகிறார். ‘தி விசிட்டர்’என்ற திரைப்படத்துக்கு இசையமைத்தது இவர்தான். 2009-ல் வெளியான இந்தப் படத்தைச் சமீபத்தில்தான் பார்த்தேன். பல வருடங்களுக்கு முன்னர் கேட்ட அதே கேள்வியை மீண்டும் அலியிடம் கேட்டேன். "இரண்டு குதிரைகளில் எப்படி உங்களால் சவாரிசெய்ய முடிகிறது?"
அவர் சொன்னார் "தனித்தனியாகத்தான்."
‘தி விசிட்டர்’படத்தின் இயக்குநர் பெயர் டாம் மெக்கார்த்தி. இயக்குநர் ஒருநாள் அலியை அழைத்து, திரைப்படத்தின் திரைக்கதை அமைப்பில் உதவிசெய்ய முடியுமா எனக் கேட்டார். அந்தச் சமயம் அலியின் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இவரும் சம்மதித்து வேலையை ஆரம்பித்த பின்னர், இவருக்கு இசையிலும் ஈடுபாடு இருப்பதை இயக்குநர் கண்டுகொண்டார். படத்தின் முக்கியப் பகுதிகளுக்கு இசையமைத்தது இவர்தான். படம் முழுக்க இயக்குநருக்குப் பக்கத்தில் இருந்து அவருக்கு ஆலோசகராகச் செயல்பட்டார்.
நான் சமீபத்தில் பார்த்த படங்களில் என்னை வெகுவாகக் கவர்ந்தது இந்தப் படம்.
இதை விவரிக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு காட்சியாகச் சொல்லிக்கொண்டே போக வேண்டும். சில காட்சிகள் ஐந்து நொடிகள் மட்டுமே வரும்; சில இரண்டு நொடிகள். இன்னும் சில ஒரேயொரு நொடி. ஒவ்வொன்றும் அளந்து அளந்து பொருத்தப்பட்டிருக்கும். தேவையில்லாத காட்சி என்று ஒன்றையும் தள்ளிவைக்க முடியாது. அவ்வளவு இறுக்கமாக இருக்கும். ஒரு படத்தை எப்படித் தொகுக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்தப் படத்தைச் சொல்லலாம்.
வால்டர் தனியாக வாழும் ஒரு பேராசிரியர். 20 வருடங்களாக ஒரே பல்கலைக்கழகத்தில் ஒரே பாடத்தைப் படிப்பித்துப் போரடித்துப்போயிருக்கிறார். பியானோ இசைக் கலைஞரான அவருடைய மனைவி சமீபத்தில் இறந்துபோனார். இவர் வீட்டு யன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். இதுதான் முதல் காட்சி. இவருடைய முதுகுதான் காண்பிக்கப்படுகிறது. முகம் தெரிவதில்லை. ஆனால், அவர் நிற்கும் தோரணையில் அவருக்கு ஏதோ கிலேசம், வெறுப்பு, உற்சாகமின்மை இருப்பது தெரிகிறது. அவருக்கு பியானோ படிப்பிக்கும் ஆசிரியைக்காக அவர் காத்திருக்கிறார். விருப்பமில்லாத ஒன்றைச் செய்வதற்காகக் காத்திருப்பது தெரிகிறது. பியானோ படிப்பிக்கும் ஆசிரியை வந்து பாடத்தை ஆரம்பிக்கிறார்.
"விரல்களை வளையுங்கள்... வளையுங்கள்" என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். இவரால் முடியவில்லை. பாடம் முடிந்ததும் இருவர் முகத்திலும் நிம்மதி தெரிகிறது. ஆசிரியை புறப்படுகிறார்.
இவர் "இனிமேல் பாடம் வேண்டாம்" என்கிறார்.
ஆசிரியை கேட்கிறார் "எனக்கு முதல் எத்தனை பேர் உங்களுக்குப் பியானோ சொல்லித்தந்தார்கள்?"
அவர் "நாலு" என்று பதில் கூறுகிறார்.
ஆசிரியை சொல்கிறார், "உங்களுக்கு இயற்கையான இசை ஆர்வம் இல்லை. பியானோவை விற்பதாக இருந்தால் நான் வாங்கிக்கொள்கிறேன்."
பேராசிரியருக்கு நியூயோர்க் ஆய்வரங்கில் கலந்துகொள்ளும்படி உத்தரவு வருகிறது. முதலில் மறுக்கிறார். மேலதிகாரி கண்டிப்பாகச் சொல்லவே, வேண்டா வெறுப்புடன் புறப்படுகிறார். அந்தப் பயணம் அவருடைய வாழ்க்கையையே மாற்றும் என்பது அவருக்குத் தெரியாது. நியூயோர்க்கில் தொடர்மாடிக் கட்டடம் ஒன்றில் வால்டருக்குச் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. சாவியை நுழைத்து உள்ளே சென்றபோது அவருக்கு அதிர்ச்சி. இரண்டு இளம் காதலர்கள் அங்கே குடியிருந்தார்கள். யாரோ கள்ளத்திறப்பைக் கொடுத்து அவர்களிடம் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்கள். காதலன் இவரைத் திருடன் என்று நினைத்து அடிக்க வந்துவிட்டான்.
இவர் "நான்தான் வீட்டுக்காரன். இதோ என்னுடைய சாவி" என்று கதறவேண்டி வந்துவிட்டது.
நிமிடத்தில் நிலைமை மாறியது. காதலன் பெயர் தாரிக். அவள் பெயர் ஸைனாப். அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறிய அகதிகள். வால்டர் பொலீஸுக்கு அறிவித்தால் நிலைமை மோசமாகிவிடும். அவசரஅவசரமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு தங்கள் உடமைகளுடன் காதலர்கள் வெளியேறுகிறார்கள். அந்த நேரத்தில் எங்கே போவார்கள்? வால்டருக்கு இரக்கம் பிறக்கிறது.
"வேறு இடம் கிடைக்கும் வரைக்கும் இங்கேயே தங்குங்கள். எனக்கு ஆட்சேபம் இல்லை" என்கிறார்.
அப்படித்தான் அவர்கள் நட்பு ஆரம்பமாகியது. ஒரு வெள்ளைக்காரன். ஓர் அரேபியன். ஓர் ஆப்பிரிக்கக்காரி. அந்தப் பெண்மணி மாலைகள் செய்து சந்தையில் போய் விற்றுவருவாள். அவன் இசைக் கலைஞன். இரண்டு தொடைகளுக்கும் நடுவில் சரித்து வைத்து, நீளமான ஆப்பிரிக்க மேளத்தை உணவகங்களில் வாசிப்பான். அதிலே பணம் கிடைக்கும். சில நேரங்களில் பாதாள ரயில் நிலையங்களிலும் வாசிப்பான். எளிய வாழ்க்கை. அவர்கள் வாழ்க்கையில் காணப்பட்ட அந்நியோன்யமும் பிணைப்பும் வால்டரை நெகிழவைக்கிறது. அவர்களுக்குள் நட்பு வளர்கிறது.
வால்டர் ஒருநாள் தற்செயலாக மேளத்தை அடித்துப் பார்க்கிறார். அது அவரை ஈர்க்கிறது. இயற்கையாக அவர் விரல்கள் வளைந்துகொடுத்தன. தாரிக் அவருக்குச் சொல்லித்தருகிறான்.
“இது ஜிம்பே மேளம். விசேடமான மரத்தில் செய்தது. மேற்கத்திய இசைபோல 1,2,3,4 என்று எண்ணக் கூடாது. ஆப்பிரிக்க இசையில் 1,2,3-தான். மூளையால் சிந்திக்கக் கூடாது. இதயம் சொல்வதை விரல்கள் வாசிக்க வேண்டும்’’.
அவன் வாசிப்பதுபோலவே இவரும் வாசிக்கிறார். இவர் விரல்கள் இயற்கையாகவே லயத்துடன் இணைகின்றன. வாழ்க்கையில் முன்பு எப்போதும் அனுபவித்திராத ஒருவித போதையை அவர் அனுபவிக்கிறார். புதுவித தரிசனம் ஒன்று கிடைக்கிறது.
ஒருநாள் பாதாள ரயில் நிலையத்தில் எதிர்பாராமல் தாரிக்கை பொலீஸார் கைதுசெய்துவிடுகிறார்கள். அவனிடம் ஆவணம் ஏதும் இல்லை. சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் அகதி என்பது தெரிந்து அவனை அகதிகள் தடுப்பு நிலையத்தில் கொண்டுபோய் அடைத்துவிடுகிறார்கள். சில நாட்களே பழகியிருந்தாலும் வால்டரால் நண்பனை உதறிவிட முடியவில்லை. அவன் கொடுத்த இசை இன்பத்தையும் இதய சுதந்திரத்தையும் நினைத்துப்பார்க்கிறார். அவன் வாசிக்கும்போது முகம் முற்றிலும் மலர்ந்திருக்கும். உடல் பரவசத்தில் திளைத்திருக்கும். அவன் வாயிலே சிரிப்பு பெரிசாகிக்கொண்டேபோகும். அந்த இசையையும் அவனையும் பிரிக்க முடியாது. அவனுக்காகக் குடிவரவு வழக்கறிஞர் ஒருவரை அமர்த்துகிறார். அவன் காதலி அவனைப் பார்க்க முடியாது. இன்னொரு மாநிலத்தில் வாழும் தாயார் பார்க்க முடியாது. இருவருமே சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்கள். அவர்கள் எல்லோருக்காகவும் வால்டர் அவனைத் தினமும் சென்று சிறையில் பார்க்கிறார்.
ஒருநாள் அவரிடம் தாரிக் கேட்டான், "தினமும் மேளத்தை அடித்துப் பயிற்சியெடுக்கிறீர்களா?"
அவர் "ஆம்" என்றார்.
"எங்கே காட்டுங்கள் பார்ப்போம்.’’
சிறையிலே வலைக்கம்பிகளுக்கு அந்தப் பக்கம் கைதிகள் நின்றார்கள். இந்தப் பக்கம் பார்க்க வந்தவர்கள் நின்றனர்.
"எப்படி இங்கே?" என்றார் அவர் தயங்கியபடி.
அவன் தன் நெஞ்சிலே தாளம் போட, இவர் யன்னல் மரப்பலகையில் மேளம் வாசித்தார். இருவர் முகத்திலும் அளவு கடந்த மகிழ்ச்சி பொங்குகிறது. அவன் சிறைக்குள் இருக்கிறான். இவர் வெளியே இருக்கிறார். இருவரையும் பிணைக்கிறது இசை.
ஒருநாள் வேறு மாநிலத்திலிருந்து தாரிக்கின் தாயும் வந்துவிடுகிறார். இருவருமாக தாரிக்கைப் பார்க்கப் போய்வருவார்கள். தாயார் வெளியே நிற்பார். இவர் உள்ளே போய் அவனைப் பார்த்துவிட்டு வருவார். தாயார் இரவு உணவு சமைத்துவைப்பார். இருவரும் சேர்ந்து உண்பார்கள். மெள்ளமெள்ள அவர்களுக்குள் காதல் உணர்வு வளர்கிறது. எப்படியும் தாரிக்கை வெளியே கொண்டுவரும் முயற்சியில் இருவரும் இருக்கிறார்கள்.
ஒருநாள் காலை தகவல் வருகிறது. இருவரும் அவசரமாகச் சிறைக்குப் போகிறார்கள்.
அதிகாரி "இது பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் அல்ல. வெளியே போங்கள்" என்பார்.
"மன்னிக்க வேண்டும். ஒரு சிறு உதவி. தாரிக் என்பவர் இருக்கிறாரா?"
அவர் கணினித் திரையைப் பார்த்துவிட்டு, "அவன் அகற்றப்பட்டுவிட்டான்" என்கிறார்.
அகற்றப்பட்டுவிட்டான். வெளியேற்றப்பட்டுவிட்டான் அல்ல. நாடுகடத்தப்பட்டுவிட்டான் அல்ல. அகற்றப்பட்டுவிட்டான். ஒரு விஷப் பாம்பை அகற்றுவதுபோல, உடம்பிலே வளரும் உயிர்க்கொல்லிக் கட்டியை அகற்றுவதுபோல அகற்றிவிட்டார்கள்.
"எங்கே? எங்கே?" என்று கத்துவார்.
அதிகாரி "நகருங்கள்" என்று மட்டுமே சொல்வார்.
இத்தனை நேரமும் மிகவும் சாதுவாக மதிக்கக்கூடிய ஒரு மனிதராகத் தெரிந்த மனிதர் கோபப் பிழம்பாக மாறுவார்.
அதிகாரி முன் நின்று மேலும் கீழும் நடந்தபடி கத்துவார். "அவன் நல்ல மனிதன். இது நீதியல்ல. கேட்கிறதா, இது நீதியல்ல" - இப்படிச் சத்தமிட்டுக்கொண்டே நிற்பார்.
உச்சகட்டமான இந்தக் காட்சி மனதை அதிரவைக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தாரிக்கின் தாயார் தன் நாட்டுக்குப் போய் மகனுடன் வாழ்வது என்று முடிவுசெய்கிறார். வால்டர் அவரைப் போக வேண்டாம் என்று தடுப்பார். அவர் மறுத்துவிட்டுப் புறப்படுகிறார். விமான நிலையத்தில் அவரை ஏற்றிவிட்டு வால்டர் திரும்புகிறார். ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அப்படி ஆகிவிட்டார். ஒருவிதப் பிடிப்பும் இல்லாத உப்புச்சப்பற்ற அவருடைய வாழ்க்கையில் திடீரென சில பரவசமான நாட்கள் குறுக்கிட்டு முடிந்துவிட்டன. இருட்டிலே தனியாக சாலையோரத்தில் நிற்கும்போது, வேகமாகக் கடக்கும் காரின் முகப்பு வெளிச்சம் படுவதுபோல அவர் வாழ்க்கையில் சிறு பிரகாசம். மறுபடியும் இருட்டு.
இத்துடன் படம் முடிந்துவிட்டது. இன்னொரு காட்சி மட்டும். வால்டர் ஜிம்பே மேளத்தைத் தோளிலே காவியபடி வேகமாக நடக்கிறார். பாதாள ரயிலில் பயணம்செய்து பிராட்வே ரயில் நிலையத்தை வந்தடைகிறார். ஓர் ஆசனத்தில் அமர்ந்து மேளத்தைச் சரித்து இரண்டு தொடைகளுக்கும் நடுவில் பிடித்துக்கொண்டு மெதுவாக வாசிக்க ஆரம்பிக்கிறார். ஒரு பொது இடத்தில் தனியாக வால்டர் மேளம் வாசிப்பது இதுவே முதல் தடவை. ரயில் ஒன்று குறுக்கே ஓடுகிறது. காட்சிகள் வெட்டிவெட்டித் தெரிகின்றன. சுற்றிலும் ஆட்கள் சேர்ந்துவிட்டார்கள். தலையைக் குனிந்து மேளத்தை அரைக்கண்ணால் பார்த்துக்கொண்டு வேகமாக அடிக்கிறார். வாசிப்பு உச்ச நிலையை அடைகிறது. இரண்டு கைகளும் படுவேகமாக அசைகின்றன. அவர் இதயம் சொல்வதைக் கைவிரல்கள் செய்கின்றன. மறுபடியும் ஒரு ரயில் வருகிறது. அவர் வாசிக்கும் காட்சி துண்டுத்துண்டாகத் தெரிகிறது. படம் முடிகிறது.
இந்தப் படத்தைப் பார்த்த பின்னர், இது இரண்டு நாட்களாக மனதில் ஓடியபடியே இருந்தது.
கனடாவில் இதுபோலப் பல அகதிகள் ‘அகற்றப்பட்டிருக்கிறார்கள்’. மேல்முறையீடு நடந்துகொண்டிருக்கும்போதே திடீரென்று அவர்களை அனுப்பிவிடுவார்கள்.
‘இன்னும் மேல்முறையீடு நடந்துகொண்டிருக்கிறதே?’என்று கேட்டால், ‘வெற்றிபெற்றால் திரும்பிவரலாம்தானே’என்று பதில் வரும்.
நுணுக்கமான காட்சியமைப்பு மட்டுமல்லாமல், நுட்பமான சின்னச் சின்ன சம்பவங்களுக்கும் குறைவில்லை. ‘தி விசிட்டர்’ என்றால் விருந்தாளி. யார் விருந்தாளி? தன் சொந்த வீட்டில் வேறு யாரோ தங்கியிருக்கும்போது வால்டர் விருந்தாளியாக வருவதாக இருக்கலாம். அல்லது வால்டர் வீட்டுக்கு இரண்டு அகதிகள் விருந்தாளிகளாக வருவதாகவும் இருக்கலாம். அல்லது அமெரிக்காவுக்குப் பல நாடுகளிலிருந்து வரும் அகதிகளாகவும் இருக்கலாம்.
இந்தப் படம் சின்ன பட்ஜெட்டில் உருவானது. 4 மில்லியன் டொலர்கள்தான். ஆனால், நாலு மடங்கு லாபம் ஈட்டியது. வால்டராக நடித்த ரிச்சார்ட் ஜென்கின்ஸுடைய நடிப்பை மறக்க முடியாது. 2009-ம் ஆண்டு ஒஸ்கார் சிறந்த நடிகர் பட்டியலில் 5 பெயர்கள் இருந்தன. அதில் இவர் பெயரும் ஒன்று. பரிசை வென்றது என்னவோ ஸோன்பென் என்ற நடிகர். ஆனால், ஜென்கின்ஸின் நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
இந்தப் படத்தில் உங்கள் பங்கு என்ன என்று மொகமட் அலியிடம் கேட்டேன். அவர் பங்கு இன்னவென்று சொல்ல முடியாமல் எல்லாப் பகுதியிலும் இருந்தது. அவருடைய இசைக் குழுதான் உணவகத்தில் இசை வாசித்தது. அவருடைய வசனங்கள் படத்தில் பல இடங்களில் வருகின்றன. அவர்தான் ஜிம்பே மேளம் அடிக்கப் பயிற்றுவித்தார். அவருடைய மேளம்தான் படத்திலே வருகிறது. தாரிக்கின் வாழ்க்கை ஒருகாலத்தில் நியூயோர்க்கில் அலி வாழ்ந்த அதே வாழ்க்கையைப் பிரதிபலித்தது. இறுதியாக, பிராட்வேயில் மேளம் வாசிக்கும் காட்சி அப்படித்தான் படமானது. ஒருகாலத்தில் அலி பிழைப்புக்காக அதே ரயில் நிலையத்தில், அதே இருக்கையில் அமர்ந்து மேளம் வாசித்திருக்கிறார்.
"இந்தப் படத்தினால் நான் எதிர்பார்க்காத ஒரு லாபம் எனக்குக் கிட்டியது. நானும் மனைவியும் பல வருடம் நியூயோர்க்கில் வாழ்ந்தாலும் எங்களுக்கு கிரீன் கார்டு நிராகரிக்கப்பட்டது. இந்தப் படம் வெளியான பின்னர், இதில் நான் பணியாற்றினேன் என்று என் விண்ணப்பத்தில் எழுதிவைத்தேன். கலைஞர்கள் வகைப்பாடு என்று ஒரு பிரிவு இருக்கிறது. அந்த வகைப்பாட்டின்கீழ் எனக்கு கிரீன் கார்டு வழங்கப்பட்டிருக்கிறது. படத்தில் சம்பளம் என்று பெரிதாக ஒன்றும் எனக்குக் கிடைக்கவில்லை. எனக்குக் கிடைத்த ஆகப் பெரிய சன்மானம் கிரீன் கார்டுதான்" என்றார்.
திரைக்கதை அமைப்புக்காக அழைக்கப்பட்ட அலி, இசைத் துறையிலும் வேலைசெய்ய நேர்ந்தது. "சினிமாவில்கூட இரண்டு குதிரைகளில் சவாரிசெய்திருக்கிறீர்கள்" என்றேன்.
"இரண்டு குதிரைகளும் எனக்குப் பிடித்த குதிரைகள்" என்றார் அலி.
"ஆனால், இரண்டு குதிரைகளுமே வென்றுவிட்டன" என்றேன்.
அ. முத்துலிங்கம், மூத்த எழுத்தாளர் - தொடர்புக்கு: amuttu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT