Published : 08 Jun 2016 08:56 AM
Last Updated : 08 Jun 2016 08:56 AM
கட்சிகளின் வேட்பாளர் தேர்வுகூட சில நேரம் வாக்காளர்களின் உரிமையின் மதிப்பைக் குறைத்துவிடுகிறது
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வி. நாராயணசாமி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராகிறார். ஆர். வைத்திலிங்கம் தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வாகிறார். ஜனநாயகத்தில் அக்கறையுள்ளவர்கள் சமீபத்தில் நடைபெற்ற இந்த மூன்று நிகழ்வுகளையும் கவனித்திருப்பார்கள்.
மகாராஷ்டிரத்தில் சிதம்பரம்
சிதம்பரம் ஏன் மகாராஷ்டிர மாநிலத்துக்கு வருகிறார் என்று சிவசேனை எதிர்ப்பு தெரிவித்தது. இந்த எதிர்ப்பின் தொனி நமக்குப் புரியாததல்ல. அந்த மாதிரியான எதிர்ப்பைப் பற்றி ஆராய்வதை நாம் சிறிது நேரம் தள்ளிவைத்துவிடுவோம். ஆனால், இந்த நிகழ்வுகளைக் கோட்பாடுகளின் அடிப்படையில் புரிந்துகொள்ள முயலுவோம். அரசியல் சாசனத்தின் நோக்கத்தின்படி நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநிலங்களவையில் அந்தந்த மாநிலங்களின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். மாநிலங்களவைக்கு நியமிக்கப்படுகிற உறுப்பினர்களைத் தவிர மற்ற உறுப்பினர்களை மாநிலத்தின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
சிதம்பரம் திறமையுள்ளவர்தான். நாடு முழுதுமே அவரை நன்றாக அறியும்தான். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவரை மகாராஷ்டிரத்தில் ஒரு வேட்பாளராக்குவது கட்சித் தலைமையின் உரிமை, சுதந்திரம் என்றும் சொல்லலாம்தான். ஆனால், அந்த மாநிலத்தை அவர் எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்பது தவிர்க்க முடியாத கேள்வி. இந்த விஷயத்தில் ஒரு கட்சி செய்யும் வேட்பாளர் தேர்வு கூடச் சில நேரம் வாக்காளர்களுக்கு இருக்கிற உரிமையின் மதிப்பை ஏதோ ஒருவகையில் குறைத்துவிடுகிறது. மாநிலத்தின் சட்டப்பேரவைதான் மாநிலங்களவை தேர்தலுக்கான தொகுதி. எனவே, மகாராஷ்டிர மாநிலத்தின், மாநில மக்களின் பிரதிநிதியாகச் சிதம்பரம் நாடாளுமன்றத்துக்குச் செல்வார். ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றொரு மாநிலத்தின் பிரதிநிதியாக முடியாது என்பதல்ல எனது வாதம். மாநிலங்களவைக்கு நடப்பது மறைமுகத் தேர்தல். ஒரு வகையில் சொன்னால், முன்பே முடிவு நிர்ணயிக்கப்பட்ட பெயரளவிலான சம்பிரதாயமான தேர்தல்.
சிதம்பரம் மகாராஷ்ரத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால் அது வேறு விஷயம். அது அவரை அந்த மாநிலத்தின் பிரதிநிதியாக ஆக்கும். அப்படித்தான் கேரளாவைச் சேர்ந்த வி.கே. கிருஷ்ண மேனன் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அன்றைய மகாராஷ்ட்டிரத்தின் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை மகாராஷ்ட்டிரத்தின் பிரதிநிதியாக மக்களவைக்குச் சென்றார். மூன்றாவது முறையாக அங்குப் போட்டியிட அவரது கட்சியே அவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்தது. அவர் மராட்டியர் அல்ல என்பது காரணமாகச் சொல்லப்பட்டது. அவர் அப்போது சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
ஒரு வாதத்துக்காக ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்து பார்ப்போம். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தபோது தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாகத் தொடர்ந்து இருப்பது சரியானதல்ல என்ற நிலைமை உருவானது. அவர்கள் அமைச்சரவைப் பொறுப்பை விட்டுவிடுவது தமிழ்நாட்டு காங்கிரசுக்கும், தமிழக அரசுக்கும் அப்போது இருந்த நெருக்கடியை மேலும் தீவிரமாக்கும் என்ற நிலைமை. இருந்தாலும், தமிழகத்தின் மத்திய அமைச்சர்கள் ராஜிநாமா செய்து தமிழகத்துக்குத் திரும்பிவிட்டார்கள். அதைப் போன்ற ஒரு சூழ்நிலை மகாராஷ்ட்ரத்தில் உருவாகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அதே போன்ற தார்மிக நெருக்கடி எதுவும் சிதம்பரத்துக்கு வராது. ஏனென்றால் அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதற்காக மகாராஷ்ட்டிர மக்களுக்குக் கடன்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது.
ராஜாஜி வழியில் நாராயணசாமி
வி. நாராயணசாமி பிரச்சினைக்கு வருவோம். புதுச்சேரி பொதுத் தேர்தலில் அவர் வேட்பாளராகப் பங்கேற்கவில்லை. அவர் சட்டப்பேரவையின் உறுப்பினருமல்ல. இருந்தாலும், அவர் முதல்வர் பதவியை விரும்புவதைக் கட்சித் தலைமை அங்கீகரித்துள்ளது. அதே கட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சட்டப்பேரவை உறுப்பினர்களான இருவர் முதல்வர் பதவிக்கு உரிமை கோரினார்கள். நாராயணசாமியின் முயற்சிக்கு எதிர்ப்பு கடுமையாகவே இருந்தது. நாம் விவாதித்துக்கொண்டிருக்கிற ஜனநாயகக் கோட்பாடே அந்த எதிர்ப்புக்கு அடிப்படை என்பதை நாம் ஏற்கவேண்டும். இந்தக் கோட்பாடு கட்சித் தலைமைக்குத் தெரியாததல்ல.
இதேபோலத்தான் 1952- ல் சென்னை மாகாணத்தில் நடந்த தேர்தலில் போட்டியிடாத ராஜாஜி அப்போது முதல்வர் பொறுப்பை ஏற்கவிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் முதல்வராவதை அவர் கட்சியைச் சேர்ந்த பிரதமர் நேரு ஏற்கவில்லை. ராஜாஜியின் நண்பர்கள் சிலருக்கே இது பிடிக்கவில்லை. சட்டப்பேரவையின் மேலவையில் நியமன உறுப்பினராகி ராஜாஜி முதல்வரானது அவரது மதிப்பை மேலும் குறைத்தது.
புதுவைப் பிரதேசத்தில் நாராயணசாமி ஆறு மாதத்துக்குள் சட்டப்பேரவைக்கு ஒரு இடைத்தேர்தல் நடத்தும் நிலையை ஏற்படுத்துவார். அப்போது முதல்வர் என்ற கூடுதலான அந்தஸ்து பெற்ற வேட்பாளராகக் களத்தில் இறங்குவார். வேட்பாளர்களிடம் சமத்துவமற்ற நிலையை ஏற்படுத்தும் இந்தத் தந்திரமும் விவாதிக்கப்படவேண்டியதே.
அண்ணாவும் நேருவும்
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட ஆர். வைத்திலிங்கம் வெற்றி பெறவில்லை. சட்டப்பேரவைக்கு அவரை மக்கள் தேர்ந்தெடுக்காவிட்டாலும் அவர் மாநிலத்தின் பிரதிநிதியாக மாநிலங்களவைக்குச் சென்றுள்ளார். மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கோட்பாட்டுக்கு ஒவ்வாத ஒன்றுதானே இது! 1962-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் நிறுவநர் அண்ணாதுரை காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்றார். ஆனால், கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். அண்ணா எவ்வளவோ புகழ்பெற்றிருந்தாலும் சில ஜனநாயகப் பற்றாளர்களும், மற்றவர்களும் அவரது அணுகுமுறையை விமர்சிக்கத் தயங்கவில்லை.
ஜனநாயகத்தின் விசித்திரமான சம்பவங்களில் மேலும் ஒன்று, நாட்டின் முதல் பொதுத்தேர்தலில் நடந்தது. 1952- ல் ரயில்வே அமைச்சராக மத்திய அரசில் இருந்தவர் குமட்டித்திடல் சந்தானம். அவர் மாயூரம் தொகுதியில் போட்டியிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே. அனந்த நம்பியாரிடம் தோற்றார். உடனே ஒரு நெருக்கடி உருவானது. சுதந்திரப் போராட்ட வீரரான சந்தானத்தை நியமனம் செய்தாவது நாடாளுமன்ற உறுப்பினராக்க வேண்டும். அவரது திறமையை நாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்கள் சிலர். அவர்களின் கருத்துக்கு நேரு காது கொடுக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரட்டும் என்பதே அவரது கொள்கை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற ஜனநாயகக் கோட்பாட்டுக்கான மதிப்பு சில நேரங்களில் உயர்வதும், சில நேரங்களில் தாழ்வதும் இந்திய ஜனநாயகத்தில் வழக்கம். இது எப்போது நடக்கிறது, யாருக்காக, எப்படி நடக்கிறது என்பதைக் கவனிப்பதில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. கட்சிகள் இந்தக் கோட்பாட்டினைத் தளர்த்த வேண்டிய அளவுக்கு மக்களாட்சியில் யாரும் இன்றியமையாதவர்கள் அல்ல. அவரோ, இவரோ இல்லாவிட்டால் என்னாவது என்று சொல்லும்படியாக யாரும் இருக்கக்கூடாது, அப்படி யாரையும் கருதக் கூடாது என்பதுதானே ஜனநாயகம்!
- தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்,
தொடர்புக்கு: profjayaraman@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT