Published : 17 Oct 2013 11:59 AM
Last Updated : 17 Oct 2013 11:59 AM
திருட்டு வழக்கு தொடர்பாக இரு சட்டக் கல்லூரி மாணவர்கள் நெல்லையில் கைது என்கிற செய்தி திடுக்கிட வைத்தது. "களவும் கற்று மற" என்பதை கடைபிடித்தார்களோ என்னவோ?
தமிழகத்தில் உள்ள பல்வேறு சட்டக் கல்லூரி மாணவர்களைப் பற்றி கடந்த இரு மாதங்களாக வரும் செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன. நெல்லையில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் சொத்துத் தகராறில் கொலை செய்யப்படுகிறார். சட்டக் கல்லூரிக்கு சென்றுவரும் மாணவர்களை திருப்பூர் வரை சென்றுத் தாக்கிய கோவை சட்டக் கல்லூரி மாணவர் கும்பல் ஒன்றை காவல் துறையினர் கைது செய்கின்றனர். காமன்வெல்த் கூட்டத்துக்கு செல்லக்கூடாது என்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் நிறுத்தப் போராட்டம், செங்கை சட்டக் கல்லூரியில் சாகும் வரை உண்ணாவிரதம். இதுபோக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் தனிச்சிறப்பு பள்ளியில் முதலாண்டு தேர்வு பெறாமல் அடுத்த ஆண்டுக்கு செல்லத் தடை விதித்ததை எதிர்த்துப் போராட்டம்.
சமீபத்தில் கோவை சட்டக் கல்லூரி ஆசிரியர்களுடன் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டேன். மாணவர்களின் அமைதியின்மையையும் அவர்களது சட்ட விரோத செயல்களைப் பற்றியும் ஆசிரியர்கள் பட்டியலிட்டனர். மருதமலையில் உள்ள அக்கல்லூரி மாணவர்கள் சிலரது செயலால் ஆசிரியர்களுக்கும் வாடகை வீடு கொடுக்கக்கூடாது என்றும், சட்டக் கல்லூரியை மருதமலையை விட்டு இடம்பெயர்த்து செல்ல வேண்டும் என்றும் கிராமத்தினர் தீர்மானங்கள் நிறைவேற்றினராம்.. சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாத அரசு தலையீட்டை பற்றியும் கூறினர். நடவடிக்கை எடுக்க முடியாமல் நெல்லைக்கு ஊர் மாற்றம் செய்யப்பட்ட மாணவர் ஒருவர்தான் கோயில் நகைத் திருட்டு வழக்கில் நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு சட்டக் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பள்ளிக்கும் செய்யப்படும் அனுமதி சேர்க்கைகள் மேனிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே செய்யப்படுவதும், சட்டக் கல்வி பயில்வோருக்கு அக்கல்வி பயில நாட்டமின்மையும் காரணம் என்று முன்னாள் துணைவேந்தர் ஒருவர் கூறியது நினைவுக்கு வருகிறது. சட்டக் கல்லூரிகளில் அனுமதி பெற்ற பலர் மேனிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி படித்தவர்களே. பொறியியல் கல்லூரிகளில் சேரும் எண்ணத்தில் அப்பாடப்பிரிவில் சேர்ந்து மதிப்பெண் குறைவினால் கடைசி இருப்பிடமாக சட்டக் கல்லூரிகளில் நுழைகின்றனர். மற்ற பாடப் பிரிவுகள் (குறிப்பாக கலைப்பிரிவு) படித்த மாணவர்கள் மேனிலைப் பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாமையால் சட்டக் கல்வி பயில ஆர்வம் இருந்தாலும் அவர்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை.
இக்குறையை நிவர்த்தி செய்யவும், நாட்டமுள்ள மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றால் சட்டக் கல்லூரிகளுக்காவது நுழைவுத் தேர்வு என்பது காலத்தின் கட்டாயம். சமூக நீதிக்கு இதனால் எவ்வித குந்தகமும் ஏற்படாது. சமீபத்தில் நடந்த 22 மாவட்ட நீதிபதி பதவிகளுக்கான தேர்வில் தேர்வு பெற்ற பெரும்பான்மையோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தோரே என்பதே சாட்சி.
இந்த முயற்சிக்கு வழிகாட்டும் வகையில் ஸ்ரீரங்கத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட தேசிய சட்டப் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் (வெளிநாடு வாழ் இந்தியர் தவிர) அனைவரும் மத்திய சட்ட நுழைவுத் தேர்வு (CLAT) அடிப்படையிலே சேர்க்கப்பட்டுள்ளனர்.
சட்டம் ஓர் இருட்டறை. அதில் வழக்கறிஞர்கள் வாதம் ஒளி விளக்கு என்று அண்ணா சொன்னார். முதலமைச்சர் மனது வைத்தால் சட்டக் கல்லூரிகளிலும் நுழைவுத் தேர்வு வைத்து நாட்டமுள்ள மாணவர்கள் சேர்ப்பின் மூலம் இருட்டறையில் ஒளி படரச் செய்யலாம். செய்வாரா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT