Published : 08 Nov 2013 12:00 AM
Last Updated : 08 Nov 2013 12:00 AM
இது எதுவுமே புதிதல்ல. கமால் பாஷா, “துருக்கிய மொழி ரோமன் வரிவடிவத்தில் எழுதப்படும்” என்று சொன்னவுடனேயே இந்தியாவின் தலைவர்கள், இந்திய மொழிகளும் ரோமன் வரிவடிவத்தில் எழுத வேண்டும் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர், நேரு போன்றவர்கள்.
ஆளுக்கொரு பார்வை
காந்தி இந்துஸ்தானியின் வரிவடிவம் தேவநாகரி என்பதில் தெளிவாக இருந்தார். ராஜாஜி மொழிகளின் வரிவடிவங்களை மாற்றக் கூடாது என்றார். பெரியார் தமிழ் ரோமன் வரிவடிவத்தில் எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.
வரிவடிவப் பிரச்சினை நமது அரசியல் சட்டம் எழுதப்படும்போது விரிவாக விவாதிக்கப்பட்டது. மசானி போன்றவர்கள், “இந்திய மொழி கள் ரோமன் வரிவடிவத்தில் இருக்க வேண்டும்” என்று சொன்னால், பாபு ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள், “எல்லா மொழிகளும் தேவநாகரி வரிவடிவில் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது என்று தலைவர்கள் கருதியதால், மொழி எந்த வரிவடிவத்தில் இருக்க வேண்டும் என்பதற்கான சுதந்திரம் பிராந்திய மக்களுக்கு இருக்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. அரசியல் சட்டம், இந்தி மொழி தேவநாகரி வரிவடிவத்தில் இருக்க வேண்டும் என்று சொல்கிறதே தவிர, மற்றைய மொழிகளின் வரிவடிவங்களைப் பற்றிப் பேசவில்லை.
தமிழ் வரிவடிவம் மாற்றப்பட வேண்டுமா?
ஒரு பேச்சுக்குத் தமிழின் வரிவடிவத்தை மாற்றுவதனால் சௌகரியங்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அது சரியா? சௌகரியங்கள் இருப்பதனாலேயே பண்பாட்டின் முதல் அடையாளமாக விளங்கும் மொழியின் வரிவடிவத்தை மாற்றுவது பாரம்பரியம் மிக்க ஒரு சமூகத்தின் செயலாக இருக்காது.
கோயில்களும், சர்ச்களும் மசூதிகளும் இருக்கும் இடங்கள் காலி செய்யப்பட்டால், பலர் இருக்க வீடுகள் கட்டப்படலாம் என்று சிலர் சொல்லலாம். மாற்றுத் திறனாளிகளை ஒழித்துவிட்டால் சமூகம் அதிக திறனோடு செயல்பட முடியும் என்று சிலர் சொல்லலாம். ஆனால், இத்தகைய யோசனைகளை நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்கள் எவரும் கொடுக்க மாட்டார்கள்!
- பி. ஏ. கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT