Published : 25 Apr 2017 08:26 AM
Last Updated : 25 Apr 2017 08:26 AM

புதுமைப்பித்தனும் நூல் அன்பளிப்புரைகளும்

ஏப்ரல் 25 - புதுமைப்பித்தன் பிறந்த நாள்

‘தொடர்புப் பிரதிகள்’ என்று அறியப்படும் நூற்படிகள் மூலமாக எழுத்தாளர்களுக்கிடையே உறவும் தொடர்வும் துலக்கம் பெறுகின்றன

ஒரு நூலாசிரியர் தான் படைத்த நூலொன்றின் பிரதியைச் சக எழுத்தாளருக்கோ நண்பருக்கோ கையெழுத்திட்டுக் கொடுப்பது வாடிக்கை. இத்தகைய நூற்படியை அரிய நூல் சேகரிப்பாளர்கள் ‘அசோசியேஷன் காப்பி’ (association copy) என்பர். நூலாசிரியர் மட்டுமல்லாமல் அந்த நூலோடு தொடர்புடைய பிறர் (அச்சிடுபவர், வெளியீட்டாளர், முகப்போவியர், அணிந்துரை வழங்கியவர்) நூற்படியை இதே போல் வழங்கினாலும் அதனையும் இவ்வாறே சுட்டுவர். பெயர் பெறாத ஒருவருக்கு நூலாசிரியர் கையெழுத்திட்டுத் தரும் பிரதி ‘ப்ரெசன்டேஷன் காப்பி’ (presentation copy) எனப்படும். இதன் மதிப்பு ‘அசோசியேஷன் காப்பி’யைவிட மிகக் குறைவாகும். இவ்வாறு பெயர்பெற்ற இருவருடன் தொடர்புடையதால் இப்பெயர் பெறுகின்றது. அவ்வாறு கையெழுத்திட்டுத் தரும்போது ஏதேனும் சில வாசகங்களை எழுதுவதுமுண்டு. இதனை ‘எபிகிராஃப்’ (epigraph) என்பர். இத்தகைய நூற்படிகளுக்கு அரிய நூல் சந்தையில் விலை மதிப்பு அதிகம்.

‘தொடர்புப் பிரதிகள்’ என்பது 1890-களில்தான் பிரிட்டனில் தனிக் கவனம் பெறத் தொடங்கி யிருக்கிறது. தமிழகத்தில் இன்றளவும் இது கவனிக்கப்படுகின்றது என்று சொல்வதற்கில்லை. 19-ம் நூற்றாண்டின் கடைப் பகுதியில்தான் தமிழகத்தில் அச்சு நூல்கள் பரவலாயின. ஆனால், அக்காலத்தில் அவற்றின் விலை மிக அதிகம். பின்னாளில் புத்தக விலை குறைந்திருப்பினும் எளிதில் ஓர் ஏழை நூலாசிரியர் இலவசமாக அதனை இன்னொரு எழுத்தாளருக்குக் கையெழுத்திட்டுக் கொடுப்பார் என எதிர்பார்க்க இயலாது. அவ்வாறு சிலபல எழுத்தாளர்கள் தம் நூற்படிகளைத் தம் நட்பு எழுத்தாளர்களுக்குக் கையெழுத்திட்டுக் கொடுத்திருந்தாலும் அவற்றைப் பேணும் வழக்கம் அதிகம் இல்லை. நல்வாய்ப்பாகப் புதுமைப்பித்தனின் மனைவியும் மகளும் அவருடைய புத்தகச் சேகரத்தை அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பாதுகாத்துச் சில ஆண்டுகளுக்கு முன்னர் நாகர்கோவில் சுந்தர ராமசாமி நினைவு நூலகத்துக்கு அதனைக் கொடையளித்தனர். அதில் புதுமைப்பித்தனின் நண்பர்கள் சிலர் கையெழுத்திட்டுக் கொடுத்த நூற்படிகள் உள்ளன.

இன்று நமக்குக் கிடைக்கப்பெறும் புதுமைப்பித்தன் ‘தொடர்புப் பிரதிக’ளில் முந்தியது, அவருடைய மேதைமையை முதன்முதலில் இனங்கண்டவர்களில் ஒருவராகிய மூத்த இதழாளர் டி.எஸ்.சொக்கலிங்கம் கொடுத்ததாகும். ‘காந்தி’ என்ற பெயரில் காலணா இதழை நடத்தியவரும், ‘தினமணி’யைத் தொடங்கியவரும் இவரே. காந்தி எழுதிய ‘தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரம்’ (முதல் பாகம்) நூலைச் (மொழிபெயர்ப்பு: தி.சு. அவினாசிலிங்கம்; என்.எம்.ஆர். சுப்பராமன்) சொக்கலிங்கம் தமது ‘காந்தி’ மூலம் 1933-ல் வெளியிட்டிருந்தார். அதனைப் ‘புதுமைப்பித்தனுக்கு அன்பளிப்பு, ச.சொ., 7-7-34’ எனக் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்.

காலம் அற்ற நட்பு

ரசிகமணி டி.கே. சிதரம்பரநாத முதலியாரின் புகழ்பெற்ற நூலான ‘இதய ஒலி’யை (புதுமைப் பதிப்பகம், சென்னை, 1941) அதன் ஆசிரியரே ‘நண்பர் விருத்தாசலத்துக்கு. டி.கே.சி.’ எனக் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார். புதுமைப் பித்தனைவிட இருபத்திரண்டு வயது மூத்த வராகவும், சமூகத்தில் உயர் கௌரவம் பெற்ற கன வானாகவும் இருந்தபோதும் இளமை முதலே அவருடன் தொடர்புகொண்டிருந்த அன்புறவின் காரணமாக நண்பர் என்று டி.கே.சி. சுட்டியிருக் கலாம்.

அந்நாளில் பெயர் பெற்ற கவிஞராக இருந்தவரும், பின்னாளில் ஒலிமாற்றப் படங் களுக்குப் பாடல்களும் வசனமும் எழுதிய வரான கம்பதாஸன் தமது ‘கனவு முதலிய கவிகள்’ நூலைப் ‘புதுமைப்பித்தன் அவர்கட்கு அன்பளிப்பு. கம்பதாசன் 2.8.41’ எனக் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார். ‘நாமிருவரும் ஓராயிரம் ஆண்டு தப்பிப் பிறந்துவிட்டோம்’ என்று கம்பதாசன் குறிப்பிட, ‘ஆமாம், நான் ஆயிரம் ஆண்டு முந்தியும் நீங்கள் ஆயிரம் ஆண்டு பிந்தியும் பிறந்துவிட்டோம்’ என்று புதுமைப்பித்தன் பதிலிறுத்திருக்கிறார்.

சிஷ்ய குரு

க.நா.சுப்ரமண்யம் கையெழுத்திட்டுக் கொடுத்த இரண்டு நூல்களும் கிடைத்துள்ளன. முதல் நூல், அல்லயன்ஸ் வெளியிட்ட ‘கதைக் கோவை’யின் முதல் தொகுதி. நாற்பது கதைகள் கொண்ட அந்நூலில் அவர் எழுதிய ‘சாவித்திரி’ என்ற கதையும் அடக்கம். நூலின் முகப்புப் பக்கத்தில் க.நா.சு. எழுதிய வாசகம்: ‘சொ.வி.க்கு. முப்பத்தொன்பது கதைகளைப் படிக்க வேண்டாம்; என்னுடையதை மட்டும் படித் தால் போதும். க.நா.சு. 12.9.41.’ சில ஆண்டுகள் கழித்து, அதே அல்லயன்ஸ் கம்பெனி ‘தமிழ்நாட்டுச் சிறுகதைகள்’ என்ற வரிசையில் க.நா.சு.வின் ‘அழகி முதலிய கதைகள்’ (1944) என்ற நூலை வெளியிட்டது. அதன் முகப்பில் க.நா.சு. எழுதியது புதுமைப்பித்தன் அன்பர்கள் நன்கறிந்த வாசகம்: ‘குருவினிட மிருந்து சிஷ்யனுக்கா அல்லது சிஷ்யனிடமிருந்து குருவுக்கா? க.நா.சு. 21.9.44.’

புதுமைப்பித்தன் கையெழுத்திட்டுக் கொடுத்த நூற்படிகள் என எந்த நூலும் அவருடைய எழுத்துலக நண்பர்களின் தொகுப்பிலும் கிடைக்க வில்லை. ஆனால், அதைப் பற்றிய விவரணை ஒன்று கிடைத்திருக்கிறது. புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த மேரி ஷெல்லியின் ‘பிரேத மனிதன்’ வெளிவந்திருந்த சமயத்தில் (ஜோதி நிலைய வெளியீடு, சென்னை, டிசம்பர் 1943) இலங்கை யாழ்ப்பாண ‘ஈழகேசரி’ வார இதழின் ஆசிரியர் ராஜ அரியரத்தினம் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அவருக்குப் ‘பிரேத மனிதன்’ நூலின் படியை, ‘அறம் செய விரும்பு ஆனால் செய்யாதே!’ என அவருக்கே உரிய அங்கதத்தோடு கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார் புதுமைப்பித்தன்.

‘கண்மணி கமலாவுக்கு’ என விளித்துத் தன் மனைவிக்குப் புதுமைப்பித்தன் எழுதிய கடிதங்கள் நன்கறியப்பட்டவை. மனைவியைத் தனக்கு இணையான வாழ்க்கைத் துணையாகக் கருதி கடிதம் எழுதிய கணவன்மார்கள் அக்காலத்தில் அபூர்வம். புதுமைப்பித்தன் தன் மனைவிக்குக் கையெழுத்திட்டுக் கொடுத்த மூன்று நூல்கள் கிடைத்துள்ளன. டி.எஸ். சொக்கலிங்கம் எழுதிய ‘ஜவஹர்லால் நேரு’ (அல்லயன்ஸ் கம்பெனி) என்ற நூலில் ‘எஸ். கமலாம்பாளுக்கு ‘புதுமைப்பித்தன் அன்பளிப்பு’ என எழுதிக் கொடுத்துள்ளார். எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் எழுதிய ‘காங்கிரஸ் சரித்திரம்’ (அல்லயன்ஸ் கம்பெனி) என்ற நூலில் இரண்டு இடங்களில் கையெழுத்திட்டுத் தந்துள்ளார். திருமணமான முதலாண்டுகளில் இவ்வாறு எழுதிக் கொடுத்தார் என்றால், பத்தாண்டுக்குப் பிறகும் ‘தியாகி இராமாயணம்: சுந்தர காண்டம்’ (வடுவூர் இராம. சடகோபன், விழுப்புரம், 1941) என்ற நூலைக் ‘கமலாம்பாளுக்கு என் அன்பு. 4.3.42’ எனச் சுருக்கமாக எழுதியிருக்கிறார்.

‘தொடர்புப் பிரதிகள்’ என்று அறியப்படும் நூற்படிகள் மூலமாக எழுத்தாளர்களுக்கிடையே உறவும் தொடர்வும் துலக்கம் பெறுகின்றன. சமகாலத்தில் எத்தனை எழுத்துலகப் பிரமுகர்களோடு அவருக்குத் தொடர்பு இருந்தது என்பதும், அவர்களுடனான உறவு எத்தன்மையது என்பதையும் இவை காட்டுகின்றன.

- ஆ. இரா. வேங்கடாசலபதி, வரலாற்றுப் பேராசிரியர், புதுமைப்பித்தன் படைப்புகளின் பதிப்பாசிரியர்.

தொடர்புக்கு: arvchalapathy@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x