Last Updated : 18 Feb, 2014 09:39 AM

 

Published : 18 Feb 2014 09:39 AM
Last Updated : 18 Feb 2014 09:39 AM

சிங்காரவேலரின் புரட்சிக் குரல்

சுயராஜ்யமா? சமதர்ம ராஜ்யமா? என்று அன்று தேசியவாதிகளிடம் நடைபெற்ற கருத்து மோதல்களுக்கு விடையளிக்கும் வகையில், சிங்காரவேலர் தனது பேனா ஆயுதத்தின் மூலம் பொதுவுடைமைபற்றிய கருத்துகளைத் தீவிரமாக வெளியிட்டார். இன்றைக்குப் பார்க்கும்போதும் தீவிரம் குறையாமல் இருக்கின்றன, அவருடைய கருத்துகள். அவருடைய எழுத்துகளிலிருந்து சில பகுதிகள் இங்கே…

வரப்போகும் துர்பாக்கியம்

காந்தியார் சுயராஜ்யத்தில், தனியுடைமை ஆதரிக்கப்படும். அதில் அடங்கியுள்ள பொருளாதார அடிமைத்தனமும் நிலைத்துவரும். தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் உண்ணப் போதுமான உணவு இல்லாமை இன்றைக்கு உள்ளதைப் போலவே இருந்துவரும். தோழர்களே! இந்த சுயராஜ்யமா வேண்டுமெனக் கேட்கின்றேன்? ஏனெனில், காந்தி ராஜ்யத்தில் தற்போதுள்ள நிலைமையாகிய பொருளாதார வித்தியாசமே நிலைத்துவரப்போகின்றது.

ஆயிரம் பதினாறாயிரம் பேர்கள் மாத்திரம் எல்லா நிலங்களையும் நீர்நிலைகளையும் தொழிற்சாலைகளையும் ரயில்வேக்களையும் வீடுவாசல்களையும் வங்கிகளையும் சொந்தமாக ஆண்டுவரப்போகின்றார்கள். ஆனால், கோடானுகோடி மக்களோ, இவை எதுவும் சொந்தமின்றி, உண்ணப் போதுமான உணவின்றி, அறிவு விளங்க சரியான கல்வியின்றி, வசிக்கச் சுகாதாரமான வீடின்றி, போதுமான கூலியின்றி, வேலை நிச்சயமின்றி உழைத்துவரப்போகிறார்கள்.

காந்தியாரின் சுயராஜ்யத்தில் அதுதான் சிலருக்கு வரப்போகும் நற்பாக்கியம். இதுதான் பெரும்பான்மையோருக்கு வரும் துர்பாக்கியம்

மக்களுக்கு ஒரு வேண்டுகோள்

தோழர்களே, இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டியது எது? எல்லோருக்கும் எளிய வாழ்க்கை, அன்றாட உணவு பற்றிய கவலையற்ற வாழ்வு, அகால மரணத்திலிருந்தும், உடல்நலக் கேட்டிலிருந்தும் விடுதலை பெற்ற வாழ்வு, அறியாமை நீங்கிய வாழ்வு ஆகியவையே. கம்யூனிஸக் கொள்கைகளைப் படிப்படியாகவும் அமைதியாகவும் கடைப்பிடிப்பதால், இந்தியாவில் மக்களுக்குச் சிறந்த வாழ்க்கையைக் கொண்டுவர முடியும் என கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம் நம்புகிறோம்.

இந்தியாவின் எதிர்காலம் நம் கையிலுள்ளது. மிக உயர்ந்த இந்தியாவைக் காண, நாம் கனவு காண்கிறோம்.

ஆகையால், எளியோரை வலியோர் சுரண்டுவது, பட்டினி, நோய், சாவு ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற நம் எண்ணங்களை, எத்தடையும் இடையூறுமின்றி வெளிப்படுத்த, கலையுருவாக்கம், மிக உயர்ந்த பொருள்கள், விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவற்றை அனுபவிக்கும் உரிமையுள்ள தொழிலாளர்தம் புரட்சிக் கீதத்தை இசைக்கும் சுதந்திர இந்தியா பற்றிய கனவை நிறைவேற்ற முயல்வோம்.

சுயராஜ்யம் யாருடையது

இந்தத் தேசிய முதலாளிகளே, இந்த வர்த்தகர்களே, இந்த ஜட்ஜுகளே, இந்த லாயர்களே, சுயராஜ்யத்தில் அரசு புரியப்போகின்றவர்கள். இவர்களுடைய செல்வத்தையும் செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் பாமர மக்களுக்குச் சரிசமமாக விட்டுக்கொடுக்கப்போகின்றார்களோ? அது ஒருபோதுமில்லை. பிற நாட்டிலுள்ள செல்வத்தின் மேல் இவர்களுக்கெல்லாம் ஒரு கண் இருந்தே தீரும்.

ஏற்றத்தாழ்வு எதனால்?

புலியும் பசுவும் ஓர் துறையில் நீர் அருந்தினாலும் அருந்தும். ஆனால், முதலாளியும் தொழிலாளியும் சரிசமத்துவமாகத் தங்கள் தேசப் பொருள்களை, காந்தியாரின் சுயராஜ்யத்தில் அனுபவிப்பார்கள் என்பது பகற்கனவே.

உடையவன், இல்லாதவன் என இனி மனிதக் கூட்டம் பிரிந்திருப்பதும், இந்தத் தனிச்சொத்து உரிமையால் நிகழ்ந்துவரும் வித்தியாசம் என அறிதல் வேண்டும். முதலாளி-தொழிலாளி என்ற வித்தியாசமும் சுதந்திர மனிதன் - அடிமை என்னும் வித்தியாசமும் மக்களுக்குள் ஏற்பட்ட காரணம் என்னவெனில், சிலரிடம் பொருள் தங்கவும், பலரிடத்தில் ஒன்றும் இல்லாமையாலும் என அறிக.

எல்லாம் யாருக்காக?

இந்தப் பொருளாதார வேற்றுமை உள்ளவரை எந்த அரசாயினும் சரி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதெல்லாம் பொய்ப்பேச்சே. உடையவனுடைய பொருளைக் காப்பதற்குத்தான் எல்லா போலீஸும், எல்லா நீதியும், எல்லாச் சேனை சிப்பந்திகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால், எந்த இல்லாதவனுடைய வறுமையைப் போக்க, எந்த நியாயம், எந்தச் சட்டம், எந்த அரசு ஏற்பட்டுள்ளது?”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x