Last Updated : 24 Feb, 2014 12:00 AM

 

Published : 24 Feb 2014 12:00 AM
Last Updated : 24 Feb 2014 12:00 AM

எப்படிக் கற்பது ஆங்கிலம்?

ஆங்கிலத்தின் தேவையைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் புதிதாக எழுதத் தேவையில்லை. ஆங்கிலம் இன்று நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார, கலாச்சார அடையாளம். இந்த நிலை இக்கால உலகப் பொருளாதார அமைப்பின் விளைவு. ஆங்கிலம் நமக்கு இரண்டாம் மொழி. அதைக் கற்க வேண்டும் என்பதில் நம்மில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், அதை எப்படிக் கற்க / கற்பிக்க வேண்டும்?

நடக்கப் படி… பின் ஓடப் படி!

மொழி இல்லாமல் கல்வி பெற முடியாது; அறிவு பெற முடியாது. அனுபவத்தின் மூலம் அறிவு பெறவும் மொழி தேவை. இந்த மொழி, தெரிந்த மொழியாக இருந்தால் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த முடியும். தெரியாத மொழியில், தெரியாத அறிவைப் பெற விரும்புவது கண்ணைக் கட்டிக்கொண்டு நடக்கப் பழகுவது போன்றது. ‘‘வீட்டில் பயின்ற தாய்மொழியின் மூலம் பள்ளியில் கல்வி கற்பதே முறையானது’’ என்று கல்வியாளர்கள் சொல்வதற்கு இந்த இயற்கை விதி ஒரு காரணம். ஆங்கிலத்தின் மூலம் கல்வி பெற வேண்டும் என்றால், முதலில் ஆங்கிலத்தை மொழியாகப் படியுங்கள் என்று அவர்கள் சொல்வதற்கும் இது ஒரு காரணம். முதல் மொழியை முறையாகச் சில ஆண்டுகள் படித்துப் பெறும் மொழியின் பயன்பாட்டுத் திறன்களை இரண்டாவது மொழிக்கு மாற்றம் செய்யலாம். நடக்கப் படித்த பின் ஓடப் படிப்பது எளிது.

ஆனால், இன்று இந்தியாவில் கல்விக்கொள்கை இந்த இயற்கை விதியைத் தலைகீழாகப் பிடிக்கிறது. மொழிவழிக் கல்வி என்பதற்குப் பதில் கல்விவழி மொழி என்னும் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. அதாவது, பாடங்களைப் படிப்பதன் மூலம் மொழியைப் படிப்போம் என்று சொல்கிறது. இதன் விளைவு, கல்வி என்பதே ஆங்கிலத்தைப் படிப்பதற்காகத்தான் என்னும் நிலை.

இதனால், இரண்டு, மூன்று தலைமுறைகளாக ஆங்கிலம் படித்த குடும்பங்களைத் தவிர, மற்ற குடும்பத்துப் பிள்ளைகள் கல்வியையும் சரியாகப் பெறுவதில்லை; ஆங்கிலத்தையும் நன்றாக அறிந்துகொள்வதில்லை. கல்விக்கும் மொழிக்கும் உள்ள

உறவைத் தலைகீழாகப் பார்க்கும் எண்ணத்தோடு ஒரு வகையில் தொடர்புடையதுதான் ‘தமிழ்வழிக் கல்வி என்பது தமிழை வளர்ப்பதற்காக' என்ற கருத்தும். தமிழின் வளர்ச்சி இக்கல்வியின் விளைவாக நிகழலாம்; அதுவே, இதன் நோக்கமாக அமையக் கூடாது. தமிழ்வழிக் கல்வியின் நோக்கம் தரமுள்ள கல்வியைத் தருவது. மற்றதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

நடைமுறை எது?

அரைகுறை ஆங்கிலம் இல்லாவிட்டால் தரமான கல்வியறிவும்கூட சந்தையில் விலைபோகாது என்பது நடைமுறை உண்மை. இது, ஆங்கிலத்தை ஒரு மொழியாக, அதில் நல்ல திறன் பெறும் அளவுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்னும் கொள்கையை முன்னிறுத்துகிறது. இது முடியும்.

சீன மொழியை நன்றாகக் கற்க விரும்பும் ஒருவர், எல்லாப் பாடங்களையும் சீன மொழியின் மூலம் படிப்பதால் அந்த மொழியைக் கற்பேன் என்று சொல்வதில்லை. தமிழிலும் ஆங்கிலத்திலும் திறன்படப் பேசவும் எழுதவும் வல்ல அண்ணா, ராஜாஜி போன்ற பழைய தலைமுறையினர் பலர் பள்ளிக்கல்வியைத் தமிழ் மூலமே பெற்றவர்கள்; ஆங்கிலத்தை மொழியாகக் கற்றவர்கள். பழைய தலைமுறை விஞ்ஞானிகளும் அப்படியே.

கல்வியியலில் உலக அளவில் ஒப்புக்கொள்ளப்படும் ஒரு ஆராய்ச்சி முடிவு, தாய்மொழியின் வழி முதல்நிலைக் கல்வி பெறுவது தன்னிச்சையாகவும் புதுவழியில் சிந்திப்பதற்கும் ஏற்றது என்பது; தன்னைப் பற்றியும் தன் மொழியைப் பற்றியும் வரும் கழிவிரக்கத்தைத் தவிர்க்கும் ஒன்று என்பது. இக்கல்வி மனவளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் அடிப்படை. சமூகம், மனிதன் தொடர்பான ஆய்வில் பல ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளும் கொள்கைகள் அபூர்வம். ஆகவே, இந்த முடிவு முக்கியமான ஒன்று.

காற்று வீசும் திசையில்…

இருப்பினும், இன்றைய தமிழ்நாட்டில் பொதுமக்களில் - கற்றவர்களும் கல்லாதவர்களும் - பெரும்பான்மையினர் இதை ஏற்றுக்கொள்வதில்லை. கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் தங்கள் பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் பின்பற்றுவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம், பொருளாதார உலகம் வேறுவகையில் நடப்பதே. இதை மக்களால் மாற்ற முடியாததால், காற்று வீசும் திசையிலேயே தங்கள் வாழ்க்கை வண்டியை ஓட்டுகிறார்கள்.

நிரூபணமான ஆய்வு உண்மைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் போக்கில் போவது புதிது அல்ல. புகைபிடிப்பதால் புற்றுநோய் வரலாம் என்பது நிரூபணமான விஷயம் என்றாலும், வேறு காரணங்களுக்காகப் புகைப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களால் லாபம் பெறுவதற்காக சிகரெட் தயாரித்து விற்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. கல்வி வியாபாரிகளும் ஆங்கிலவழிக் கல்வி தரும் பள்ளிகளை இதே காரணத்துக்காக நடத்துகிறார்கள்.

மக்கள் விரும்புவதைத் தருவது

மக்கள் விரும்புவதைத் தருவதுதான் இன்றைய அரசியல். இது, சந்தை வியாபாரத்தைப் போல. இலவசப் பொருள்கள் தருவதிலிருந்து ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகளைத் தருவதுவரை இதுதான். குறைந்த விலைக்கு உயர்ந்த கல்வி என்பது சமாதானப்படுத்திக்கொள்ளும் குரல். மக்கள் தங்கள் வாக்குகளைக் கொடுத்து இந்தக் கல்வியை வாங்குகிறார்கள். பின், தங்கள் சக்திக்கு மீறிச் செலவும் செய்கிறார்கள்.

கொடுக்கும் விலை

ஆங்கில அறிவு காலத்தின் கட்டாயம் என்பது கல்வியாளர்களும் பொதுமக்களும் உணரும் ஒன்று. இந்த அறிவை உயர்ந்த முறையில் எப்படிப் பெறுவது என்பதில்தான் கருத்து வேறுபாடு. ஆங்கிலத்தை முதல் வகுப்பிலிருந்து எல்லாப் பாடங்களிலும் படிப்பதே ஆங்கில அறிவு பெற வழி என்பது பரவலாக இருக்கும் கருத்து. அதாவது, அதிகக் காலமும் அதிகச் சூழ்நிலைகளிலும் இரண்டாவது மொழியைக் கற்க வேண்டும் என்ற கொள்கை. இது எல்லோருக்கும் பொருந்தும் உண்மை அல்ல. உண்மையாக இருந்தாலும், இதற்குக் கொடுக்கும் விலையை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மனப்பாடம் செய்வதே கற்பது என்று நம்புவது, மொழியிலும் பாடத்திலும் திறன் குறைவது, ஆங்கிலத்தில் இருந்தால் அபத்தமும் சரியாகத் தோன்றுவது முதலியனவும் நாம் கொடுக்கும் விலையில் அடங்கும்.

ஒரு மொழியாகக் கற்று ஆங்கிலத்தில் நல்ல திறன் பெற முடியும் என்றும், தமிழில் முதலில் பெறும் மொழியின் பொதுத்திறன்களை ஆங்கிலத்துக்கு மாற்ற முடியும் என்றும் செய்துகாட்டினால், மொழிக்கல்வி பற்றிய தங்கள் தவறான, ஆதாரம் இல்லாத எண்ணத்தை மக்கள்

மாற்றிக்கொள்ளலாம். இதைச் செய்துகாட்டும் பள்ளிகளை அரசும் லாபநோக்கற்ற தனியார் நிறுவனங்களும் நடத்திக்காட்ட வேண்டும். இதற்கு ஆங்கிலத்தையும் தமிழையும் கற்றுக்கொடுக்கும் முறையில் அடிப்படையான மாற்றங்கள் செய்ய வேண்டும். மக்கள் எண்ணத்தில் இதன் பலன் பிரதிபலிக்க ஒரு தலைமுறை ஆகலாம் என்பதால், இந்த விஷயத்தில் நமக்குப் பொறுமையும் தேவை!

இ. அண்ணாமலை, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகள், நாகரிகங்கள் துறையில் வருகைதரு பேராசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x