Published : 10 Jun 2016 09:09 AM
Last Updated : 10 Jun 2016 09:09 AM
இஸ்ரேல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குத் தீவிரத்தன்மை கொண்ட அரசை நெதன்யாஹு முன்வைக்கிறார்
சமீபகாலமாகச் சர்வதேசச் சமுதாயத்தின் பலத்த கண்டனங்களைச் சம்பாதித்திருக்கிறது இஸ்ரேல். இஸ்ரேல் மீதான ‘பாய்காட், டிஸ் இன்வெஸ்ட்மெண்ட், சாங்க்ஷன்ஸ்’(பி.டி.எஸ்.) - ‘புறக்கணிப்பு, முதலீடு மறுப்பு, பொருளாதாரத் தடை’யை வலியுறுத்தும் பிரச்சாரம் அவற்றில் ஒன்று. ஆனால், தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் நோக்கமே இஸ்ரேலுக்கு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனர்களிடமிருந்து விலகி நிற்பதற்கான எல்லா சாத்தியங்களையும் தகர்த்துக்கொண்டே வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு ஒரு முக்கியக் காரணம்.
நெதன்யாஹுவைப் பொறுத்தவரை எந்த விஷயத்தையும் செய்து முடிப்பதில் தீவிரம் காட்டுவதில்லை. எந்த இடத்தில் இருக்கிறாரோ அதே இடத்தில் இருந்துகொண்டு, தனது எதிரிகளைச் சமாளித்துக்கொண்டு, தான் தப்பித்துக்கொள்வதை மட்டும் பார்க்கும் நபர் அவர். அவர் நடந்துகொள்வதை வைத்து, ‘இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் பிரதமர்’என்று நெதன்யாஹுவை ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழே குறிப்பிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
இதை நான் சொல்வதற்குக் காரணம், நெதன்யாஹு தலைமையில் இஸ்ரேல் மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலையை அடைந்திருக்கிறது.
அபத்தமான நடவடிக்கை
சமீபத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் மோஷே யாலோனைப் பதவி நீக்கம் செய்திருக்கிறார் நெதன்யாஹு. ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த யாலோன் நாகரிகமான மனிதர். ஆபத்து மிக்க சூழலில், ஒற்றுமையை நிலைநிறுத்தும் விதமாக இஸ்ரேல் ராணுவத்தை மக்கள் ராணுவமாக வைத்திருக்கும் உறுதியுடன் செயல்பட்டவர். அவருக்குப் பதிலாக அவிக்டார் லீபர்மேன் என்பவரைப் பாதுகாப்புத் துறை அமைச்சராக்கியிருக்கிறார், நெதன்யாஹு. லீபர்மேன் ஒரு தீவிர வலதுசாரி. இஸ்ரேலின் நடவடிக்கைகளைப் பற்றி அமெரிக்க யூதர்கள் கொண்டிருக்கும் அக்கறைகூட இல்லாதவர். ‘ஹாரெட்ஸ்’ இதழில் வெளியான செய்தியின்படி ‘உளறிக் கொட்டுபவர்’ என்று நெதன்யாஹுவின் குழுவால் சமீபத்தில் நிராகரிக்கப்பட்டவர். ராணுவ ஆய்வாளராவதற்குக்கூடத் தகுதியில்லாதவர். மேற்குக் கரையிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று சொல்லும் இஸ்ரேலியர்களைத் தேசத்துரோகிகள் என்று அறிவித்தவர். காயமடைந்து, மருத்துவ உதவி வேண்டி சாலையில் கிடந்த பாலஸ்தீன இளைஞனைத் தலையில் சுட்டுக்கொன்ற இஸ்ரேல் வீரர் எலோர் அஸாரியாவைப் புகழ்ந்துதள்ளியவர்.
யாலோனுக்குப் பதிலாக லீபர்மேனைக் கொண்டுவரும் நெதன்யாஹுவின் நடவடிக்கையைப் பற்றி ‘எடியோத் அரோனோட்’(இஸ்ரேலிய நாளிதழ்) கட்டுரையாளர் நாஹும் பார்னி இப்படிக் குறிப்பிடுகிறார். “அரசியல்ரீதியான பகை மோசமடைந்திருக்கும் நிலையில், மிதமான போக்கு கொண்ட நிர்வாகத்தை உலகுக்கு முன்னர் வைப்பதற்குப் பதிலாக, இஸ்ரேல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்குத் தீவிரத்தன்மை கொண்ட அரசையே நெதன்யாஹு முன்வைக்கிறார்”.
“இஸ்ரேலையும் நெதன்யாஹு தலைமையிலான வலது சாரிக் கட்சியான லிகுட்டையும் கைவசப்படுத்திக்கொண்ட தீவிரவாதிகளும் ஆபத்தான சக்திகளும் நமது நாட்டுக்கு ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்” என்று யாலோனே எச்சரித்திருக்கிறார். இஸ்ரேலின் முன்னாள் பிரதமரும், நெதன்யாஹு அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தவருமான எஹுத் பராக், “இஸ்ரேல் அரசை ஆபத்தான சக்திகள் கைக்கொண்டிருக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார். “நெதன்யாஹுவும், தீவிர வலதுசாரிகளான அவரது ஆதரவாளர்களும் யாலோனை மட்டுமல்ல, இஸ்ரேலிய ராணுவத்தையே அவமதித்துவிட்டனர். அது மக்களின் ராணுவம்” என்று ஹாரெட்ஸ் இதழில் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மோஷே ஆரென்ஸ் எழுதியிருக்கிறார்.
கொலைகார ‘வீரன்’
இதெல்லாம் ஆரம்பமானது மார்ச் 24-ல் நடந்த அந்தச் சம்பவத்திலிருந்துதான். அன்றுதான், காயமடைந்த பாலஸ்தீன இளைஞனை அஸாரியா சுட்டுக்கொன்றார். அந்தச் சம்பவம் காணொளிக் காட்சியாக வெளியானது. இஸ்ரேலிய வீரர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய இரண்டு பாலஸ்தீனர்களில் ஒருவர், அந்த இளைஞன். தாக்குதலில் ஒரு இஸ்ரேல் வீரருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த நிலையில், தன்னிச்சையாக முடிவெடுத்து பாலஸ்தீன இளைஞனைச் சுட்டுக்கொன்றார் அஸாரியா.
யாலோனிடமிருந்தும், ராணுவத் தலைமைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் காடி எய்ஸென்கோட்டிடமிருந்தும் உடனடியாக இதற்கு எதிர்வினை வந்தது. இஸ்ரேல் ராணுவத்தினர் நடந்துகொள்ளும் முறையல்ல இது என்றனர் இருவரும்.
அஸாரியா மீது கொலைக்குற்றம் மற்றும் மோசமான ராணுவ நடத்தை குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. நெதன்யாஹு கூட அஸாரியா ராணுவ விதிகளை மீறிவிட்டார் என்றே ஆரம்பத்தில் கூறினார். ஆனால், மேற்குக் கரையின் யூதக் குடியிருப்புப் பகுதியிலிருந்து அஸாரியாவுக்கு ஆதரவு பெருகவே, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். இந்த விவகாரத்தில் நடுநிலையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தை வலியுறுத்தினார். லீபர்மேனோ ஒருபடி மேலேபோய் அஸாரியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நீதிமன்றத்துக்குச் சென்றார்.
இந்தச் சம்பவங்கள் யாலோனையும் ராணுவத் தலைமையையும் மோசமாகப் பாதித்தன. இஸ்ரேலின் ‘ஹோலோகாஸ்ட்’ நினைவு தினம் அன்று இந்த விவகாரம் வெடித்தது. நாட்டு மக்களிடம் உரையாற்றிய ராணுவத் துணைத் தளபதி மேஜர் ஜெனரல் யாயிர் கோலான், “ஐரோப்பாவில் நடந்ததுபோன்ற பயங்கரமான சம்பவங்கள் இங்கும் நடக்கத் தொடங்கிவிட்டன” என்று கூறினார்.
அவரைக் கடுமையாக விமர்சித்தார் நெதன்யாஹு. ஆனால், ராணுவ உயரதிகாரிகள் மத்தியில் பேசிய யாலோன், “உங்கள் மனசாட்சிப் படியும், தார்மிக அடிப்படையிலும் நடந்துகொள்ளுங்கள். காற்றின் திசைக்கு ஏற்றவாறு உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளாதீர்கள்” என்று குறிப்பிட்டார்.
ஆபத்தான மாற்றம்
ஆனால், காற்றின் திசைக்கேற்ப நடந்துகொள்ளக் கூடியவரான நெதன்யாஹு, யாலோனை வெளியேற்றிவிட்டார். “இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஒன்று புரிகிறது.. தீவிரமான போக்கு கொண்டது என்றாலும் மனிதாபிமானம் மற்றும் ஜனநாயக அடிப்படையிலான கொள்கையையும் கொண்டிருந்த இஸ்ரேலின் ஆளுங்கட்சியான லிகுட் கட்சி, இன்றைக்கு அதிதீவிரமான தேசியக் கட்சியாக உருமாறியிருக்கிறது. நீதிமன்றங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி அமைப்பு, அரபு சிறுபான்மையினம், கடைசியாக ராணுவம் என்று உள்ளுக்குள்ளேயே எதிரிகளைக் கட்டமைக்கும் கட்சியாகிவிட்டது. மேற்குக் கரையை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் தங்கள் திட்டத்துக்குக் குறுக்கே எவர் வந்தாலும் அவர்களை எதிரிகளாகக் கட்டமைக்கும் போக்கைக் கொண்டிருக்கிறது” என்று ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் மத தத்துவவாதி மோஷே ஹால்பெர்ட்டால் கூறியிருக்கிறார்.
இது இஸ்ரேலில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய மாற்றம். மிகக் கூர்மையாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். வெளியிலிருக்கும் எதிரிகள் விஷயத்தில் காத்திரமான தீர்வைத் தருவதில் தோல்வியடைந்துவிட்ட லிகுட் கட்சி, தற்போது ‘உள்ளுக்குள் இருக்கும் எதிரி’கள் மீது கவனம் செலுத்துகிறது என்கிறார் ஹால்பெர்ட்டால். எல்லோரையும் எதிரிகளாக்கும் இந்தப் போக்கை முறியடிக்கவும், தார்மிக நெறிகளை அமல்படுத்தவும் ராணுவத் தலைமை தற்போது முயற்சிசெய்கிறது என்கிறார் அவர்.
ஆனால், பிரதமர் நெதன்யாஹு இதற்கு முற்றிலும் எதிராக நடந்துகொள்கிறார். இஸ்ரேலின் எதிர்காலம் குறித்த அக்கறை கொண்ட எல்லோருக்கும் இது ஒரு இருண்ட தருணம்தான்!
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’
தமிழில்: வெ.சந்திரமோகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT