Last Updated : 15 Feb, 2017 09:24 AM

 

Published : 15 Feb 2017 09:24 AM
Last Updated : 15 Feb 2017 09:24 AM

ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்.. மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்!

சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது; மரணம் அவரை விடுவித்துவிட்டாலும், அவருடைய தோழி சசிகலா, அவருடைய உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோர் நான்காண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்று பலரும் கூறுகிறார்கள். இருக்கலாம். கூடவே இந்திய நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களையும் இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது.

இருண்ட காலம் 1991-96

ரூ.1 லட்சம் கோடி ஊழல், ரூ.4 லட்சம் கோடி ஊழல் என்றெல்லாம் செய்திகள் அடிபடும் இக்காலகட்டத்தில், வெறும் ரூ.66.6 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனை இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சரியமாகவும், சிலருக்கு அதீதமாகவும்கூடத் தோன்றலாம். 1991-96 காலகட்டத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு இந்த வழக்கின் முக்கியத்துவம் புரியும்.

தமிழகத்தின் இருண்ட காலகட்டங்களில் ஒன்று அது. வீதிக்கு வீதி சுவர்களில் ‘அன்னையே’, ‘மேரி மாதாவே’, ‘துர்க்கையே’ என்ற பட்டங்களோடும் அந்தந்தக் கடவுளர் தோற்றங்களோடும் ஜெயலலிதா சிரித்த காலகட்டம். ஊர்கள்தோறும் ஐம்பதடி, நூறடி கட் அவுட்களில் ஜெயலலிதா நின்ற காலகட்டம். துறைகள்தோறும் ஜெயலலிதாவின் பெயரால் லஞ்சமும் ஊழலும் மலிந்திருந்த காலகட்டம். கொஞ்சம் பெரிதாக வீடு கட்டுபவர்கள் “ஜெயலலிதா சசிகலா கும்பல் கண்ணுல இது பட்டுடாம இருக்கணும்” என்று கிண்டலாகக் கூறிக்கொண்ட அளவுக்கு தோழியர் பெயரால் சொத்துக்குவிப்புகள் நடந்த காலகட்டம். எதிர்த்த அரசியல் செயல்பாட்டாளர்கள், விமர்சித்த பத்திரிகையாளர்கள், அடக்குமுறைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த வழக்குரைஞர்கள் கொடூரத் தாக்குதலுக்குள்ளான காலகட்டம். அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் தோற்கும் அளவுக்கு மக்களிடத்தில் அதிருப்தியும் கோபமும் கொந்தளித்திருந்த காலகட்டம். சசிகலா குடும்பத்தின் மீதான தமிழக மக்களின் வெறுப்பு அந்தக் காலகட்டத்தில் வேரூன்றிய விருட்சம்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் அப்போது ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்டன. பல வழக்குகளில் சசிகலாவும் கூட்டாளி. ஊழல் குற்றச்சாட்டுகள் பலவும் ஏதோ ஒரு புதிய திட்டத்தின்போது தரகுத் தொகையாக ஒரு தொகையை ஆட்சியாளர் வாங்கிக்கொள்வது போன்ற வழமையான குற்றச்சாட்டின் நீட்சி அல்ல; மாறாக, ஊழலின் நிமித்தம் அத்துமீறலில் ஈடுபடும் இயல்பைக் கொண்டவை. ஒரு உதாரணம், கொடைக்கானல் ‘பிளஸன்ட் ஸ்டே விடுதி’ வழக்கு. “இந்த விடுதிக்கு அனுமதி கொடுப்பதற்காக, விதியையே சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்து மாற்றினார்” என்பது ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டாக இருந்தது. வழக்கு விசாரணை, தீர்ப்புகளுக்கான அதிமுகவினரின் எதிர்வினையும் மோசமானது. இந்த வழக்கில் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ஜெயலலிதா தண்டனைக்குள்ளானபோது, அதைக் கண்டித்து தமிழகம் எங்கும் கலவரத்தில் இறங்கினார்கள் அதிமுகவினர். தருமபுரியில் கல்லூரி மாணவிகள் வந்த ஒரு பஸ்ஸுக்கு தீ வைக்கப்பட்டது. உயிரோடு மூன்று மாணவிகள் எரிக்கப்பட்டார்கள். பிற்காலத்தில் இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுபட்டார். இப்படி தன் மீதான ஒவ்வொரு வழக்கையும் தவிடுபொடியாக்கினார்.

ஒரு வழக்கு, ஒரு வரலாறு!

ஜெயலலிதா மீதான வழக்குகளில் சொத்துக்குவிப்பு வழக்கு மட்டும் அவர் காலைச் சுற்றிய பாம்பாக நீடித்தது. நீதிபதிகளே வெளிப்படையாக நொந்து கொள்ளும் அளவுக்குக் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இந்த வழக்கை அவர் இழுத்தடித்தார். வழக்கை விரைந்து முடிக்க விரைவு நீதிமன்றம் கூடாது என்று வாதிட்டவர் அவர். 2014 செப்டம்பர் 27 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி' குன்ஹா இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவித்ததோடு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் விதித்து அவர் தீர்ப்பளித்தபோது, ஜெயலலிதா நான்காவது முறையாக தமிழக முதல்வர் ஆகியிருந்தார். ‘நாட்டிலேயே பதவியிலிருக்கும்போது ஊழல் வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறை செல்லும் முதல் முதல்வர்’ என்ற பெயர் ஏற்கெனவே அவருக்கு இருந்தது.

மேல்முறையீட்டிற்கு அவர் சென்றார். வெறும் 21 நாட்களில் அவருக்கு ஜாமீன் அளித்தது உச்ச நீதிமன்றம். கூடவே, 18 ஆண்டுகள் நீதித் துறையை இழுத்தடித்தவரின் மேல்முறையீட்டை அடுத்த மூன்று மாதங்களுக்குள் விரைந்து முடிக்குமாறும் உத்தரவிட்டது. அடுத்த சில மாதங்களில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி நால்வரையும் நிராபராதி என்று சொல்லி விடுவித்தார். அவருடைய தீர்ப்பின் வாதங்கள் ஒவ்வொன்றும் குன்ஹாவின் வாதங் களுடன் ஒப்பிடுகையில் அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக சட்டத் துறை வல்லுநர்கள், முன்னாள் நீதிபதிகள் பலரும் அப்போதே சொன்னார்கள். எல்லாவற்றையும் தாண்டி, குமாரசாமியின் தீர்ப்பின் அஸ்திவாரமாக எது அமைந்திருந்ததோ, அந்த நியாயத்துக்கான கூட்டுத்தொகைக் கணக்கில் அவர் தவறிழைத்திருந்தார். தீர்ப்பு வந்த மறுநாளே அவர் செய்த தவறு அம்பலத்திற்கு வந்தது. ஆக, தீர்ப்பின் மையம் எதுவோ, அதுவே கேள்விக்குள்ளாகிவிட்ட நிலையில், ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசுத் தரப்பு மேல்முறையீட்டுக்குச் சென்றபோது, அதை அவசர வழக்காகக் கருதி உச்ச நீதிமன்றம் செயல்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு தனிப்பட்ட நபர் சார்ந்த வழக்கல்ல. மாறாக ஒரு மாநிலத்தின் ஏழரைக் கோடி மக்களின் நிகழ்காலம், எதிர்காலம் தொடர்பிலானது.

இந்திய நீதித் துறையின் சாபக்கேடான தாமதம் இந்த வழக்கிலும் தொடர்ந்தது. இடையிலேயே மீண்டும் தேர்தல் வந்தது. ஜெயலலிதா மீண்டும் வென்றார். ஆறாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். வெகு விரைவிலேயே உடல்நலம் குன்றி இறந்தும்போனார். இதையடுத்து, அடுத்த முதல்வர் ஆவதற்கான எல்லாக் காய்களையும் நகர்த்தி ஆட்சி அமைக்கக் கோரும் கடிதத்தையும் ஆளுநருக்குக் கொடுத்துவிட்டார் இந்த வழக்கின் அடுத்த குற்றவாளியான சசிகலா. இந்தத் தீர்ப்பு இன்னும் சில ஆண்டுகள் கழித்து வந்திருந்தால், யார் அதைக் கேள்வி கேட்க முடியும்? இன்னும் என்னென்னவெல்லாம் நடந்திருக்கக் கூடும்?

தாமத நீதி எனும் அநீதி

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில், மூன்று கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கின்றன. இவற்றில் உச்ச, உயர் நீதிமன்றங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கியிருக்கின்றன. இந்திய நீதித் துறையின் தாமதம் தொடர்பில் பேசும்போதெல்லாம் நீதித் துறைக்கான ஆட்கள் பற்றாக்குறை தொடர்பில் பேசுவது இயல்பானது. இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு, 17 பேர் எனும் விகிதத்திலேயே நீதிபதிகள் இருக்கின்றனர். நீதிபதிகளின் இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் 151, சீனாவில் 170 என்ற சூழலோடு ஒப்பிடும்போது நம்முடைய உள்கட்டமைப்பின் போதாமை புரியும் என்று கூறப்படுவதுண்டு. பிரச்சினைக்கான அடிப்படை இந்த எண்ணிக்கையில் அல்ல; மாறாக நோயின் வெளி அறிகுறிகளில் ஒன்று அது என்று நான் கருதுகிறேன்.

அரசியலமைப்புச் சட்டப்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி உறுதிசெய்யப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் சரியான நேரத்தில் அளிக்கப்படாத நீதியானது அநீதி எனும் அறவுணர்வு நம்முடைய ஆட்சியாளர்களின் பிரக்ஞையிலேயே இல்லை. இந்நாட்டு மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்து, நீதிப் பரிபாலனம் நடத்திய ஆங்கிலேயே அரசின் காலனியாதிக்க மனோபாவத்திலிருந்து விடுபடாத மனோநிலையின் தொடர்ச்சி இது. சாமானிய மனிதனை நீதிக்காக அலைக்கழிக்கும் தாமதம்தான் மறைமுகமாக ஆட்சியாளர்களை அவர்களுடைய தவறுகளிலிருந்தும் பாதுகாக்கும் கவசமாகவும் இருக்கிறது.

ஆட்சியாளர் தனி மனிதரா?

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு இங்கு ஒரு குறியீடு. லாலு பிரசாத் யாதவ் வழக்கில் என்ன நடந்தது? 1996-ல் பீகார் முதல்வராக அவர் இருந்தபோது, ரூ. 37.7 கோடி முறைகேடு நடந்ததாக வழக்குத் தொடர்ந்தார்கள். 2014-ல் இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது, 75 நாள் சிறைவாசத்திற்குப் பின், ஜாமீன் வாங்கிக்கொண்டு வெளியே வந்துவிட்டார் லாலு. வழக்கு இப்போது மேல்முறையீட்டில் இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பிந்தைய இடைப்பட்ட காலகட்டத்தில், இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் அவர் இருந்தார். ஒரு முறை அவரே பிரதமராக முற்பட்டார். பிறகு, ஐந்தாண்டுகள் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். இப்போதும் பிகாரில் நிதிஷ்குமாரின் ஆட்சி லாலுவின் தயவில்தான் நடக்கிறது.

ப.சிதம்பரம் 2009 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். “இந்த வெற்றி செல்லாது” என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர். என்னவானது வழக்கு? இடைப்பட்ட காலகட்டத்தில், மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் பொறுப்புகளில் மிக முக்கியமான முடிவுகளை எடுப்பவராகச் செயல்பட்டு, ஒருகட்டத்தில் நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் பிரதமர் பதவிக்கான பரிசீலனையிலும் சிதம்பரத்தின் பெயர் அடிபட்டது. அவரது வெற்றி நியாயமானதாகவே இருக்கலாம். அதை உறுதிப்படுத்துவதும், நிராகரிப்பதும் உடனடியாக நடந்திருக்க வேண்டியது இல்லையா?

கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள். ஆட்சியோடு தொடர்புடைய அவர்கள் சார்ந்த வழக்குகள் இழுத்தடிக்கப்பட நீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது. ஒரு குற்றவாளியிடம் மக்கள் ஆட்சிப் பரிபாலனம் பெறுவதைக் காட்டிலும் கொடுமை இல்லை. “ஜெயலலிதாவும் சசிகலாவும் முறைகேடாக சேர்த்த சொத்துகளை, முறையாகச் சம்பாதித்து சேர்த்த சொத்துகளைப் போலக் காட்டுவதற்கு போயஸ் தோட்ட இல்லத்தில் சதி செய்து செயல்படுத்தியுள்ளனர். இது ஆழ்ந்த சதியின் விளைவு” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அந்தச் சதியின் நீட்சிதான் நிழல் அதிகார மையமே நிஜ அதிகார மையமாக உருவெடுக்கும் கனவிலும் ஒளிந்திருக்கிறது. எது ஒரு குற்றவாளிக்கு இந்த அசாத்திய துணிச்சலைத் தந்தது? நீதியின் மீதான பயமின்மைக்கு அதில் முக்கியமான பங்கு உண்டு. தாமத நீதிப் பரிபாலனத்துக்கு அதில் முக்கியமான பங்கு உண்டு. தாமதமான இந்தத் தீர்ப்பு ஒருவகையில் ஜெயலலிதாவுக்கு விடுதலையைத் தந்துவிட்டது; ஆனால், தண்டனையை ஏழரைக் கோடி மக்கள் இன்று சுமக்கிறார்கள். இந்திய நீதித் துறை தன்னை ஆழமான சுயபரிசீலனைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும்!

- சமஸ்,

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x