Published : 09 Jan 2017 09:57 AM
Last Updated : 09 Jan 2017 09:57 AM
தமிழர் வாழ்வில் பெரும் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கும் இலக்கியங்களில் திருக்கு றளுக்கு இணையே இல்லை என்று சொல்லி விடலாம். அத்தகைய திருக்குறள்தான் தமிழில் முதன் முதலில் அச்சான செவ்விலக்கியம் என்பது பலரும் அறியாத தகவல். 1812-ல் திருக்குறள் முதன்முத லில் அச்சேறியது. அந்தத் திருக்குறள் பதிப்புக்கு இன்னும் பல சிறப்புகள் இருக்கின்றன. புள்ளியில்லா மெய் யெழுத்துக்களுடன் அச்சிடப்பட்ட பதிப்பு அது. இத் தனைக்கும் வீரமா முனிவர் தமிழ் மெய்யெழுத்துக் களுக்குப் புள்ளியை அறிமுகம் செய்ததற்கு பிந்தைய காலகட்டம் அது. ‘திருககுறள’ என்றுதான் அதில் அச்சிடப்பட்டிருக்கும். ‘அகரமுதலவெழுததெலலா மாதி பகவன முதறறெயுலகு’ என்பதுபோல்தான் குறள்கள் அந்தப் பதிப்பில் கொடுக்கப்பட்டிருந்தன.
மிகவும் அரிய அந்தப் பதிப்பு உலகிலேயே 5 பிரதிக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. ‘அந்தப் பதிப்பைப் பார்க்க முடியாதா?’ என்று ஆசைப்படுபவர்களின் ஏக்கத்தைத் தணிக்கும் வகையில், சென்னையில் உள்ள ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்’ அந்தப் பதிப்பை எண்வயப்படுத்தி (digitalize) பார்ப்பதற்கு அப்படியே 1812-ம் ஆண்டு பிரதிபோல் இருக்கும் ஒரு பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இது தொடர்பாக ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக’த்தின் இயக்குநர் சுந்தரிடம் பேசினோம். “இந்தப் பதிப்பின் நோக்கமே ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை அடுத்தடுத்த தலைமுறைக்கு உணர்த்துவதே. 200 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட தமிழின் மிக முக்கியமான புத்தகம் எப்படி இருக்கும் என்று இன்றைய தலைமுறைக்கு உணர்த்துவதும் ஒரு வரலாற்றுக் கடமையல்லவா? இது ஒரு தொடர் ஓட்டம் போல, விட்டுப்போய்விடக் கூடாது. 200 ஆண்டுகள் கழித்து நாங்கள் செய்ததை, இன்னும் ஒரு 200 ஆண்டுகள் கழித்து வேறு யாராவது செய்ய வேண்டும். அப்போதுதான் வரலாற்றுத் தொடர்ச்சியை எதிர்காலச் சந்ததியினர் உணர்ந்துகொள்ள முடியும்” என்றார். இந்தப் பதிப்பில் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்துக் கேட்டதற்கு, “சிக்கலான, செலவுபிடிக்கக் கூடிய வேலை இது. வெகு காலம் நீடித்து நிற்கும் புத்தகமாக இந்தப் பதிப்பை அச்சிட நிறைய செலவுபிடிக்கும் என்று தெரிந்தது. இதற்கு நிதியுதவி கோரினோம். முக்கால்வாசி நிதிதான் கிடைத்தது. புத்தகம் விற்றுக் கிடைக்கும் தொகையைக் கொண்டுதான் இதற்கு ஆன செலவில் உள்ள இடைவெளியை ஈடுகட்ட வேண்டும். 1812-ம் ஆண்டுப் பதிப்பும் இப்படி நிதிதிரட்டி வெளியிடப்பட்டதுதான் என்பது ஆச்சரியமான ஒற்றுமை! அந்தக் காலத்தில் காகிதத்துக்குக் கடும் தட்டுப்பாடு இருந்தது. யாரெல்லாம் புத்தகம் வாங்க விரும்புகிறார்களோ அவர்களிடமே புத்தகப் பிரதியொன்றின் உத்தேச விலையைப் பெற்றுக்கொண்டுதான் புத்தகத்தை அச்சிடுவார்கள். இதனால், அந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் ‘இது ……….. பொததகம’ என்று அச்சிடப்பட்டிருக்கும். இன்னாரது புத்தகம் என்று அவரது பெயரை எழுதிக்கொள்வதற்கான இடைவெளியுடன் அப்படிக் கொடுக்கப்பட்டிருக்கும். இப்படி வரலாற்று ஆய்வுக்குரிய தகவல்களெல்லாம் இதுபோன்ற பழைய புத்தகங்களில் நிறைய புதைந்துகிடக்கின்றன. தற்போதைய பதிப்பு அதுபோன்ற ஆய்வுகளுக்கு மிகவும் உதவக்கூடியது. அது மட்டுமல்லாமல், மேலைநாட்டில் இருப்பது போன்ற ‘சேகரிப்பாளர் பதிப்புகள்’(Collector’s Editions) தமிழில் அநேகமாக இல்லை. தமிழில் அந்தப் போக்குக்கு இந்தத் திருக்குறள் பதிப்பை ஒரு முன்னோடி எனலாம்” என்றார்.
அருமையான முயற்சி! கெட்டி அட்டை, புத்தகத்துக் கான சிறுபெட்டி, 200 ஆண்டுகளுக்கும் மேலாக அழியாமல் இருக்கக் கூடிய ‘சில்க் கோட்டிங்’ கொடுக்கப் பட்ட தாள் என்று கண்ணில் ஒற்றிக்கொள்ளக் கூடிய பதிப்பு இது. இந்தத் ‘திருக்குறள்’ பதிப்புபோல முக்கியமான பழந் தமிழ் நூல்கள் பலவற்றுக்கும் ‘சேகரிப்பாளர் பதிப்பு’கள் கொண்டுவருவதைப் பற்றிப் பதிப்பகங்கள் யோசிக்கலாம்!
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT