Published : 20 Apr 2017 09:58 AM
Last Updated : 20 Apr 2017 09:58 AM
இருக்கிறது எனும் சொல் வெவ்வேறு பொருள்களில், வாக்கியங்களில் அமைவதைச் சென்ற இதழில் பார்த்தோம். வந்திருக்கிறான் என்பது வினைமுற்று எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பத்தியில் தரப்பட்ட எடுத்துக்காட்டுகளில் இருக்கிறது என முடியும் அனைத்து வகை வாக்கியங்களுமே வினைமுற்றுக்கள்தான் எனத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் சுட்டிக் காட்டுகிறார். ‘அது அங்கே இருக்கிறது’ என்னும் வாக்கியத்தில் ‘இருக்கிறது’ என்பது தனி வினையாகவும் ‘வந்திருக்கிறான்’, ‘செய்துகொண்டிருக்கிறார்’ ஆகியவற்றில் துணை வினையாகவும் செயல்படுவதுதான் வேறுபாடு என அவர் தெளிவுபடுத்துகிறார். பெயர் குறிப்பிடப்படுவதை விரும்பாத அந்தப் பேராசிரியருக்கு நன்றி.
ஒரு சொல், தனி வினையாக வரும்போது பிரித்தும் அதே சொல் துணை வினையாக வரும்போது சேர்த்தும் எழுத வேண்டும். ‘இருக்கிறது’ என்னும் சொல் சில இடங்களில் சேர்ந்தும் சில இடங்களில் பிரித்தும் எழுதப்படுவதற்கு இதுதான் காரணம்.
மேலும், சில சொற்களும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவை. கையை விடு, வந்துவிடு, ஆகியவற்றில் முதலில் வரும் விடு தனி வினையாக இருக்கிறது. இரண்டாவதாக வரும் விடு, இன்னொரு வினைக்குத் துணையாக அமைகிறது. துணையாக அமையும்போது அது தனது வழக்கமான பொருளில் அல்லாமல் மாறுபட்ட பொருளில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அதைச் சேர்த்து எழுத வேண்டும். பிரித்தால், தனி வினைக்கான பொருளைத் தந்து குழப்பம் ஏற்படுத்தும்.
இந்த வாக்கியங்களைப் பாருங்கள்:
அவர் ஆவடியிலிருந்து வருகிறார்.
அவர் ஆவடியில் பத்து ஆண்டுகளாக வசித்துவருகிறார்.
முதல் வாக்கியத்தில் வருகிறார் என்பது வருதல் என்னும் வினையைக் குறிக்கப் பயன்படும் தனி வினை. எனவே பிரித்து எழுதப்படுகிறது. அடுத்த வாக்கியத்தில் தொடர்நிகழ்வைக் குறிக்கும் துணை வினை. எனவே சேர்த்து எழுத வேண்டும்.
ஒரு சொல் தனிப் பொருளைத் தரும் தனி வினையாக வந்தால் பிரித்து எழுத வேண்டும். துணை வினையாக வந்தால் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும். இந்த விதியை நினைவில் வைத்துக்கொண்டால், எங்கே பிரித்து எழுதுவது, எங்கே சேர்த்து எழுதுவது என்பதில் குழப்பமே வராது.
சென்ற வாரம் எழுப்பப்பட்ட கேள்வியைப் பார்க்கலாம்.
வந்து இருந்தான் என எழுதினாலும் வந்திருந்தான் எனப் புரிகிறதே, அப்படியிருக்க இதற்கு ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்னும் கேள்வி எழலாம். பழக்கத்தின் காரணமாகவும் பின்புலத்தை அறிந்திருப்பதாலும் நாம் தவறான பயன்பாடுகளைச் சரியான பொருளில் எடுத்துக்கொள்கிறோம். ஆனால், தமிழைப் புதிதாகக் கற்பவருக்கு இதுபோன்ற பயன்பாடுகள் கண்டிப்பாகக் குழப்பம் தரும். எப்படியும் புரிந்துகொள்கிறோம் என்பதை வைத்துக்கொண்டு, இதுபோன்ற தவறான பயன்பாடுகளை நியாயப்படுத்த இயலாது.
- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT