Published : 17 Nov 2015 09:58 AM
Last Updated : 17 Nov 2015 09:58 AM

படகு சவாரி முன்னே... பாசனம் பின்னே!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*

பழந்தமிழர் ஏரிகளைப் பராமரிக்க தனி வாரியம் அமைத்தனர். குடவோலை முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். கரை பராமரிப்பு, கலுங்கு பராமரிப்பு, காவல், நீர் பங்கீடு இவையெல்லாம் ஏரி வாரியத்தின் பணி. ஏரி வாரியத்தினர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஏரிகளில் மேடிட்ட மண்ணை தூர் வாரினர். இது ‘குழி குத்துதல்’ என்று அழைக்கப்பட்டது. ஏரி வாரியம் மட்டுமின்றி பாசனத்தைப் பராமரிக்க கழனி வாரியம், வயல் வழிகளைப் பராமரிக்க தடிவழி வாரியம், வரி வசூலைப் பராமரிக்க பஞ்ச வாரியம் என்றெல்லாம் குழுக்கள் அமைக்கப்பட்டன.

ஏரிகளைப் பராமரிப்பதற்கான செலவுகள், தானம் மற்றும் மானியமாக வழங்கப்பட்ட நிலங்களின் பாசன வருவாயில் இருந்து பெறப்பட்டது. இந்த நிலங்கள் ‘குளப்பட்டி’, ‘குளப்புறம்’, ‘ஏரிப்பட்டி’ என்று அழைக்கப்பட்டன. ஏரியில் மீன் பிடிப்போர் தங்கள் வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் ஏரி பராமரிப்புக்காக அளிக்க வேண்டும். இது ‘பாசிப் பட்டம்’ என்று அழைக்கப்பட்டது. மீன் பிடிப்போர், சலவைத் தொழில் செய்வோர் பகலில் ஏரியை காவல் காத்தனர். இரவு காவலுக்கு தனி ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இதை அகநானூறு (252),

‘துய்யகிழ் பனிமலர் உதிர வீசித்

தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்

எறிதரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்

பெருங்குளம் காவலன் போல

அருங்கடி அன்னையும் துயின் மறந்தனளே’

என்கிறது. அதாவது, ‘அடர்ந்த பனியிலும் அடைமழையிலும் நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல ஓர் அன்னை தன் தூக்கத்தை மறந்தாள்’ என்கிறது பாடல். ஏரியின் காவலனைத் தாயுடன் ஒப்பிட்டுப் பெருமை சேர்க்கும் வரிகள் இவை. அப்படியெனில் ஏரிக் காவலர்கள் எவ்வளவு விழிப்போடு இருந்திருப்பார்கள்!

நிகழ்காலத்துக்கு வருவோம். பாலுட்டி வளர்த்த அன்னையைக் கைவிட்டதுபோல ஏரிகளைக் கைவிட்டு விட்டோம். ஊருக்கெல்லாம் சோறிட்ட ஏரிகள் அநாதைகளாகப் பரிதவிக் கின்றன. தாய் மடி எங்கும் கருவேல முட்செடிகளின் வேர்கள் ஊடுருவி ரத்தம் உறிஞ்சுகின்றன. ஏரிக்கு காவல் யாருமில்லை. ஏரிகளைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் பொதுப் பணித் துறையிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏரியைப் பராமரிக்க என்று தனியாக ஒரு பணியாளர்கூட கிடையாது. கூடுதல் பொறுப்பாகதான் ஏரிகளை உதவிப் பொறியாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் சராசரியாக 30 ஏரிகளுக்கு ஒரு பொறியாளர் மட்டுமே இருக்கிறார். மைல் கணக்கில் ஊர், ஊராக நீளும் ஏரிகளை வைத்துக்கொண்டு ஒரு பணியாளர் எத்தனை ஊர்களுக்குதான் செல்வார்?

ஏனோ தெரியவில்லை, ஏரிகள் விஷயத்தில் அரசுக்கு ஏக குழப்பம். ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றுமில்லை. ஒற்றை ஏரியை எத்தனை துறைகள் கூறு போடுகின்றன தெரியுமா? ஏரிக்குள் இருக்கும் மண் கனிம வளத்துறையின் பொறுப்பு. ஏரிக்குள் இருக்கும் மீன்கள் மீன் வளத்துறையின் பொறுப்பு. ஏரியின் அடிநிலம் வருவாய்த் துறையின் பொறுப்பு. சிறிய ஏரிகளின் கரை மற்றும் கலுங்குகள் உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பு. பெரிய ஏரிகளின் கரை, கங்குகள் பொதுப்பணித்துறையின் பொறுப்பு. ஏரியிலும் அதன் சுற்றிலும் வளரும் மரங்கள் வனத்துறையின் பொறுப்பு. ஆனால், ஏரிக்கு ஒரு பிரச் சினை என்றால் மட்டும் எந்தத் துறையும் பொறுப்பு இல்லை. ஆனால், நாட்டின் இதர மாநிலங்கள் பலவும் ஏரிகளை எவ்வளவு கண்ணும் கருத்துமாக பாதுகாக்கின்றன தெரியுமா?

கர்நாடகம் ஏரி அபிவிருத்தி ஆணை யத்தை உருவாக்கி கர்நாடகா சொசைட் டிஸ் பதிவுச் சட்டம் 1959-ன் கீழ் அதனை ஒரு சொசைட்டியாக பதிவு செய்துள்ளது. அரசியல் குறுக்கீடுகள் ஏதுவும் இல்லாத தன்னாட்சி பெற்ற அமைப்பு அது. ஆட்சிகள் மாறினாலும் ஏரி பாதுகாப்பு, மறு சீரமைப்பு, மீட் டெடுப்பு, மீள் உருவாக்கம், கொள்கை வகுத்தல் எனப் பணிகள் தொடர்கின்றன.

மத்தியப்பிரதேசத்தில் 2004-ம் ஆண்டு ‘ஏரி பாதுகாப்பு ஆணையம்’ அமைத்து ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் உதவியுடன் ஏரிகளைப் பாதுகாக்கிறது. ஒடிசாவின் ‘சிலிகா அபிவிருத்தி ஆணையம்’ இந்தியாவின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்றான சிலிகா ஏரிக்கும் வங்காள விரிகுடா வுக்கும் இடையே பாதையை ஆழ மாக்கி, அதன் நீரியல் மற்றும் உவர்ப்பு அமைப்பை மேம்படுத்தியது. இதன் மூலம் அங்கு மீன்பிடித் தொழில் பல மடங்கு மேம்பட்டுள்ளது. இதற்காக அந்த ஆணையம் நீர் நிலை மேம் பாட்டுக்காக உலகளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘ராம்சர்’ விருதை 2003-ம் ஆண்டு இந்தி யாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது. மகாராஷ்டிரா அரசு பல்வேறு தனியார் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஏரி களைப் பராமரிக்கிறது. மணிப்பூரில் ‘லோகாக் ஏரி அபிவிருத்தி ஆணையம்’, ஜம்மு காஷ்மீரில் ‘ஏரி மற்றும் நீர்வழிகள் அபிவிருத்தி ஆணையம்’, உத்தரகாண்டில் ‘நைனிடால் ஏரிகள் பாதுகாப்புத் திட்டம்’, ராஜஸ்தானில் ‘ஏரி, நதி அபிவிருத்தி திட்டங்களுக்கான கொள்கை நிலைக்குழு’ என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஏரிகளைப் பாதுகாக்கின்றன. அதேபோல பல மாநிலங்களில் ஏரிகளைப் பாதுகாப் பதற்கென்றே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. கேரளா வின் ‘லிம்னாலஜி’ சங்கம், ராஜஸ் தானில் ‘ஜில் சன்ரக்‌ஷன் சமிதி’, இமாச் சலப்பிரதேசத்தில் ‘சேவ்’ (Social of appeal for vanishing environment), ஹைதராபாத்தில் ‘இந்திய நீர் நிலை உயிரியலாளர்கள் சங்கம்’ ஆகியவை ஏரிகளைப் பாதுகாக்கின்றன.

தமிழகத்துக்கு வருவோம். மத்திய அரசின் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம் (1983-89) என்று ஒன்று இருந்தது. அதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உட்பட 14 மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில் ரூ.1015.59 கோடியில் 60 ஏரிகள் சீரமைக்கப்பட்டன. மற்ற மாநிலங்கள் எல்லாம் தங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏரிகளையும் மிகப் பெரிய பாசன ஏரிகளையும் மேம்படுத்திக்கொண்டன. தமிழகமும் ரூ. 12.17 கோடியில் இரண்டு ஏரிகளை மேம்படுத்திக்கொண்டது. எந்தெந்த ஏரிகள் தெரியுமா? ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஏரிகள். விவசாயிகள் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்துகொண்டாலும் பரவாயில்லை, சுற்றுலாப் பயணிகள் படகில் உல்லாச சவாரி செல்ல வேண்டியது முக்கியம் அல்லவா!

(நீர் அடிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x