Published : 03 Apr 2017 09:45 AM
Last Updated : 03 Apr 2017 09:45 AM

மதுவிலக்குப் பயணத்தின் மைல்கல்!

கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது அது. டாஸ்மாக் கடைகளின் இரும்புக் கதவுகளைத் தடதடவென இழுத்துப் பூட்டிக் கொண்டிருந்தார்கள், தமிழ்நாடு அரசு மதுபானக் கடை ஊழியர்கள். சம்பளம் வாங்கிய கையோடு டாஸ்மாக்குக்கு வந்திருந்தவர்கள், குறிப்பாகக் குடிநோயாளிகள் திகைத்துப்போனார்கள். வேறு வழியின்றி மது அருந்தாமல் வீடு திரும்பினார்கள். நீண்ட காலத்துக்குப் பிறகு, சம்பளம் முழுமையாக வீடு சென்றடைந்தது. மனைவி, பெற்றோர், குழந்தைகள் முகத்தில் அவ்வளவு ஆச்சரியம், பூரிப்பு, மனநிறைவு.

ஆம், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழகத்தில் தேசிய மாநில நெடுஞ்சாலையை ஒட்டி 500 மீட்டருக்குள் இருந்த அரசு மதுக் கடைகள் உடனடியாக மூடப்பட்டுவிட்டன.

சாமானிய மக்களை, ஏழைகளை, உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினரை மதுவின் அகோரப்பிடியிலிருந்து மீட்கும் முயற்சியில், உச்ச நீதிமன்றத்தின் மூலமாகக் குறிப்பிடத்தக்க ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறது பாமக.

நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரி, அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரும் நீதிப் பேரவையின் தலைவருமான பாலு தொடர்ந்த வழக்கு, பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு, இந்த நடவடிக்கைக்கு வழிகோலியிருக்கிறது. “இதற்கான முழுப் பெருமையும் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர்கள் தனஞ்செயன், ஜோதிமணி இவர்களையே சாரும்” என்று வழக்கறிஞர் பாலு சொல்வது மிகையானது அல்ல.

கடந்த 2016 மே வரை தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த தமிழ்நாடு அரசு மதுக் கடைகளின் எண்ணிக்கை 6,672. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்பு, முதல் கட்டமாக 500 கடைகள் மூடப்பட்டன. பின்பு, பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பின்பு 500 கடைகள் மூடப்பட்டன. ஆக, இறுதியாக நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 5,672. இவற்றின் மூலம் தினசரி ரூ. 65 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைத்துக்கொண்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் தற்காலிகமாக சுமார் ரூ.25 கோடி குறையும் என்று சொல்லப்படுகிறது. குடியால் நேரும் பொரு ளிழப்பை மதிப்பிட்டால் இது ஒரு பொருட்டே அல்ல.

இந்த வழக்கில் தமிழக அரசு, மக்கள் வசிப்பிடங்களிலிருந்து மதுக் கடைகள் 500 மீட்டர் தள்ளியிருக்க வேண்டும் என்கிற விதிமுறையை 100 மீட்டராகக் குறைக்க நீதிமன்றத்தில் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளது என்று ‘மெல்லத் தமிழன் இனி’ தொடரில் எழுதியிருந்தேன். சரியாக அதே வார்த்தையை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்தது. நல்ல வேளையாக, உச்ச நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, 20,000-க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் மதுக் கடைகளை நடத்துவதற்கான கட்டுப்பாட்டை நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டரிலிருந்து 220 மீட்டராகத் தளர்த்தியுள்ளது. 20,000-க்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் 500 மீட்டருக்கும் அப்பால்தான் மதுக் கடை செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பார்த்தால், இன்றைய நிலவரப்படி நெடுஞ்சாலைகளையொட்டி இருப்பதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ள 3,321 கடைகளையும் முழுமையாக மூடியதாக எடுத்துக்கொள்ள இயலாது. சுமார் 2,000 தொடங்கி 2,500 கடைகளை மட்டுமே தமிழக அரசு மூடியிருக்கும். அதேசமயம், விதிமுறைகளின் ஓட்டைகளில் புகுந்து தற்போது மூடப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள். இவர்கள் தேர்ந்தெடுக்கும் இடங்கள் பல ஊர்களில் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி வருகின்றன. அப்படி அவர்கள் மாற்று இடங்களில் மதுக் கடைகளை நிறுவ முயன்றால், நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் கிராம சபைத் தீர்மானம் (பின்னர் இதை விரிவாகப் பார்க்கலாம்). அதே சமயம், மதுக் கடைகளை மூடத் தவறினால் போராட்டம் நடத்துவோம் என்று பாமக அறிவித்திருக்கிறது.

உண்மையில், தமிழகத்தின் சாமானிய மக்களுக்குக் கிடைத்திருக்கும் சமூக, பொருளாதார விடுதலையின் முக்கியமான தொடக்கப் புள்ளிகளில் ஒன்று இது. தமிழகத்தின் பெருவாரியான குடிநோயாளிகளுக்கு உடல், மன வேதனையிலிருந்து மிக விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. ஆனால், இந்த துவக்க வெற்றி ஓரிரு நாளிலோ அல்லது ஓரிரு ஆண்டுகளிலோ கிடைத்துவிடவில்லை. ஜனநாயகத்தின் பல்வேறு அமைப்புகளும் சேர்ந்து நடத்திய கூட்டுப் போராட்டம் இது. குடிநோய்க்கு எதிராகத் தொடர்ந்து ‘தி இந்து’ மேற்கொண்டுவரும் தொடர் பிரச்சாரங்களையும் இங்கு குறிப்பிடலாம். அதேசமயம், பாமக அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடத்திய இந்த இரட்டைப் போராட்டம், ஒருவகையில் பல பிரச்சினைகளுக்கு நாம் கைக்கொள்ளக் கூடிய ஒரு முன்னுதாரணம். எப்படி நடத்தப்பட்டது இது? பார்ப்போம்!

தொடரும்...

- டி.எல்.சஞ்சீவிகுமார்

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x