Last Updated : 16 Oct, 2014 02:38 PM

 

Published : 16 Oct 2014 02:38 PM
Last Updated : 16 Oct 2014 02:38 PM

அறிவோம் நம் மொழியை: நா காக்க!

ஐம்புலன்களுக்குரிய உறுப்புகள் வரிசையில் அடுத்ததாக 'நா' என்றழைக்கப்படும் நாக்கு. புலன்களைப் பொறுத்தவரை நாக்கு, சுவைக்குரியதாகப் பார்க்கப்பட்டாலும் பேச்சுடனே அதிகம் தொடர்புப்படுத்தப்படுகிறது. நாவடக்கம், நாவன்மை போன்ற எல்லாமே பேச்சு தொடர்பானவை. வள்ளுவர் 'யாகாவா ராயினும் நா காக்க', 'நாவினால் சுட்ட வடு' என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

வடமொழியிலிருந்து வந்த ரசனை என்ற சொல் ஒரு காலத்தில் நாக்கைக் குறித்திருக்கிறது. எல்லா ரசனைகளுக்கும் ஆரம்பப் புள்ளி நாக்குதான் போலிருக்கிறது!

விலங்குகளுக்கு மட்டுமல்ல, பொருள் களுக்கும் பிறவற்றுக்கும்கூட நாக்கு உண்டு. அதாவது, நாக்கைப் போன்ற பாகங்கள். மணியின் நடுவே அசைக்கப்பட்டு ஒலியெழுப்பும் பாகத்துக்கு நாக்கு என்று பெயர். தீச்சுவாலைகளுக்கும் தீ நாக்கு என்று பெயர். இது தவிர, எருமை நாக்கு என்ற பெயரில் ஒரு மீனும் இருக்கிறது.

நாக்கைக் குறிக்கும் சொற்கள், தொடர்களில் சில:

இரட்டை நாக்கு (மாற்றி மாற்றிப் பேசும் தன்மை), உடும்பு நாக்கன் (வஞ்சகன்), உள்நாக்கு (வாயின் உட்புறம் தொங்கும் சதை), கருநாக்கு (கருப்புப் புள்ளிகளையோ கரும் திட்டுக்களையோ கொண்ட நாக்கு- கருநாக்கைக் கொண்டவர் சொல்வது பலித்துவிடும் என்ற நம்பிக்கை மக்களிடையே உண்டு), கவைநாக்கு (பாம்புக்கு இருப்பது போன்ற பிளவுபட்ட நாக்கு), நாக்கில் சனி (ஒருவர் வாயைத் திறந்தாலே தீங்கு ஏற்படும் என்ற பொருள் தரும் சொல்), நாக்கில் நரம்பில்லாமல் பேசுதல் (சற்றும் யோசிக்காமல் மிகவும் கடுமையாக பேசுதல்), நாக்கு செத்துப்போதல் (சுவையை உணர முடியாததுபோல் தோன்றுதல்), நாக்கு தடித்தல் (நாக்கு மரத்துப்போதல்; வரம்பு மீறிப் பேசுதல்), நாக்கு நீளம் (மரியாதை இல்லாமலும் எல்லை மீறியும் பேசும் குணம்; சுவையான உணவை உண்பதில் அதிக நாட்டம்) , நாக்கு நீளுதல் (வரம்பு மீறிப் பேசுதல்), நாக்கு வழித்தல் (ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது என்ற பொருள் தரும் சொல்), நாக்கை வளர்த்தல் (வகைவகையாகவும் சுவையாகவும் சாப் பிடுவதில் குறியாக இருத்தல்) , நாமகள் (பிரம்மாவின் நாவில் வசிப்பதாகக் கருதப்படும் சரஸ்வதி), நாவறட்சி (தாகம்).

வட்டாரச் சொல் அறிவோம்:

4.50 மணி என்பதை ஆங்கிலத்தில் 'டென் டு ஃபை' என்றும் சொல்வார்கள். “இதுபோன்ற வழக்கு, தமிழிலும் இருக்கிறது, ஆனால், பணம் தொடர்பான வழக்கு அது” என்றார் எனது நண்பர். 40 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை நினைவுகூர்ந்தார். தஞ்சாவூர் பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது கிராமத்துப் பெரியவர் ஒருவர் எனது நண்பரிடம் பயணக் கட்டணம் எவ்வளவு என்று கேட்க, என் நண்பர் ரூ. 5.75 என்றிருக்கிறார். அந்தப் பெரியவர், “ஆக, காக்குறைய ஆறு” என்றிருக்கிறார். அதாவது, கால் குறைய ஆறு! இதுவொன்றும் ஆங்கிலத் திலிருந்து தமிழில் வந்த வழக்காக இருக் காது. மொழிகள் வெவ்வேறாக இருந்தாலும் மனிதச் சூழ்நிலைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தானே இருக்கும். அந்தச் சூழ்நிலைகளிலிருந்தே மொழியின் பயன் பாடு விரிவுகொள்கிறது. வாசகர்களே, உங்கள் வட்டாரங்களில் உள்ள இதுபோன்ற வழக்குகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

சொல் தேடல்:

'போஸ்' (pose) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்னவென்று கேட்டிருந்தோம். வாசகர்களின் பரிந்துரைகள்:

கோ. மன்றவாணன் - பாவம், பாவனை, தோற்றம், தோரணை, நிலைத்தோற்றம்.

வெங்கட சுப்புராய நாயகர் - பாவம் காட்டுதல்.

லிங்கேஷ் - தோற்றமளி.

பாலா- காட்சியளி.

'தோற்றம் கொடு', 'காட்சி கொடு' ஆகிய சொற்கள் பொருத்தமாக இருக்கு மென்று தோன்றுகிறது.

இந்த வாரக் கேள்வி:

'பேஷண்ட்' (patient) என்ற சொல்லுக்கு இணையாக 'நோயாளி' என்ற சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், 'பேஷண்ட்' என்ற சொல்லுக்கு 'சிகிச்சை பெறுபவர்' என்பதுதான் பொருள். நோய் இல்லாதவரும் (எடுத்துக்காட்டாக, கருவுற்றிருப்பவர்) சிகிச்சை பெறலாம். எனவே, 'பேஷண்ட்' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x