Last Updated : 08 Jun, 2017 08:50 AM

 

Published : 08 Jun 2017 08:50 AM
Last Updated : 08 Jun 2017 08:50 AM

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3: நனவான 30 ஆண்டு கனவு

பெரிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வெளிநாடுகளின் உதவி இனி தேவையில்லை!

ஜூன் 5, 2017 - இந்திய விண்வெளி அமைப்பின் (இஸ்ரோ) வரலாற்றில் ஒரு பொன்னாள். புத்தம் புதிதாக உருவாக்கப்பட்ட (ஜி.எஸ்.எல்.வி) மார்க்-3 ராட்சத ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நாள். முதல் தடவையிலேயே அது சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியை ஈட்டியுள்ளது. பொதுவில், புதிதாக உருவாக்கப்படும் ராக்கெட்டுகள் முதல் தடவையிலேயே வெற்றி காண்பது என்பது அரிது.

கடந்த 24 ஆண்டுகளாக மாடு மாதிரி உழைக்கும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 1993-ல் முதல் முறையாகச் செலுத்தப்பட்ட போது அது தோல்வி கண்டது. அதன் பிறகு அந்த ராக்கெட் ஒரு முறைகூட தோல்வி கண்டதில்லை. உலக அளவில் பார்க்கும்போது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் சாதாரணமான, சிறிய ராக்கெட்டே. ஆனால், அதை வைத்துக்கொண்டு நாம் பல வித்தைகளை செய்துள்ளோம். நிலவுக்கு சந்திரயானை அனுப்பினோம். செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பினோம். பூமியைச் சுற்றும் வகையில் பல விண்கலங்களை அனுப்பியுள்ளோம். இந்த ராக்கெட்டின் தொடர் வெற்றி குறித்து நாம் பல தடவை நிறையவே முதுகைத் தட்டிக்கொண்டுள்ளோம். ஆனால், பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் வெற்றிப் பிரகாசத்தில் ராக்கெட் துறையிலான நமது பெரிய பலவீனம் வெளியே தெரியாமல் போயிற்று.

பி.எஸ்.எல்.வி.யின் போதாமைகள்

விண்வெளித் துறையில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று செயற்கைக்கோள் தொழில்நுட்பம். இன்னொன்று ராக்கெட் தொழில்நுட்பம். ஆரம்ப முதலே நாம் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் மிக விரைவாக முன்னேற ஆரம்பித்தோம். ஆனால், ராக்கெட் தொழில்நுட்பத்தில் தேக்க நிலையில் இருந்தோம். சொல்லப்போனால் இந்தியாவில் உருப்படியான ராக்கெட் உருவாக்கப்பட்டதற்கு முன்னரே அதாவது 1979-ல் நாம் ஓரளவு எடைமிக்க பாஸ்கரா செயற்கைகோளை உருவாக்கி அதை ரஷ்யாவுக்கு எடுத்துச்சென்று ரஷ்ய ராக்கெட் மூலம் உயரே செலுத்தினோம்.

காலஞ்சென்ற மேதை அப்துல் கலாம் ஏவுகணைத் தயாரிப்பில் ஈடுபட்டதற்கு முன்னர் உருவாக்கிய எஸ்.எல்.வி. ராக்கெட் 1980-ல் வெற்றி கண்டதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது தான் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். தோல்வி காணாத ராக்கெட் என்ற பட்டப்பெயருக்குத் தகுதி கொண்ட அந்த ராக்கெட்டின் திறன் மிக மட்டானதே. அந்த ராக்கெட்டினால் அதிக பட்சம் ஒன்றரை டன் எடையைத்தான் சுமந்து செல்ல முடியும். ஆனால், இந்தி யாவோ அதை விட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏற்கெனவே தயாரித்துவந்தது. எனவே, தகவல் தொடர் புக்கான அவ்விதமான செயற்கைக் கோள்கள் அனைத்தும் கடந்த பல ஆண்டு களாக தென் அமெரிக்காவுக்கு விமானம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டுவந்துள்ளன. இந்த விஷயத்தில் செலவு மிக அதிகமே. சக்திமிக்க ராக்கெட் அப்போது நம்மிடம் இல்லை.

கிரையோஜெனிக் இன்ஜின் சக்தி

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விட மேலும் திறன் கொண்ட ராக்கெட்டை உருவாக்க நாம் முயற்சி மேற்கொள்ளாமல் இல்லை. பொதுவில் எல்லா ராக்கெட்டுகளும் ஒன்றன் மீது ஒன்றாகப் பொருத்தப்பட்ட பல அடுக்கு ராக்கெட்டுகளே. முகப்பு ராக்கெட் கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டதாக இருக்குமானால் அந்த ராக்கெட் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல்லும். ஆக்சிஜன் வாயுவை தனியே திரவமாக்க வேண்டும். ஹைட்ரஜன் வாயுவையும் திரவமாக்க வேண்டும். முகப்பு ராக்கெட்டில் உள்ள இன்ஜின் இந்த இரண்டையும் பயன்படுத்திச் செயல்படுமானால் அது அதிக உந்து திறனை அளிக்கும். இந்த இரண்டு வாயுக்களையும் கடுமையாகக் குளிர்வித்தால்தான் அவை திரவ நிலையில் இருக்கும். கிரையோஜெனிக் என்றால் ‘கடும் குளிர்விப்பு’ என்று பொருள். எனவேதான், அவ்வித இன்ஜினுக்கு அந்தப் பெயர். இது மிக சிக்கல் பிடித்த தொழில்நுட்பம். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, சீனா, ஜப்பான் ஆகியவை இந்தத் தொழில்நுட்பத்தை ஏற்கெனவே பெற்றுள்ளன.

சிரமப்பட்டு நாமாக கிரையோஜெனிக் இன்ஜின்களை உருவாக்குவதற்குப் பதில் இந்தத் தொழில்நுட்பத்தை ரஷியாவிலிருந்து பெறுவதற்காக 1991 வாக்கில் ரஷியாவுடன் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. ஆனால் அப்போது அமெரிக்காவின் போக்கு இந்தியாவுக்கு ஆதரவானதாக இல்லை. எனவே ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கு இந்தத் தொழில்நுட்பம் கிடைக்காதபடி தடுப்பதில் அமெரிக்க அரசு முனைந்தது. அப்போது பலவீனமான நிலையில் இருந்த ரஷ்ய அரசும் அமெரிக்க நிர்பந்தத்துக்குப் பணிந்தது. கடைசியில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏழு கிரையோஜெனிக் இன்ஜின்களை மட்டும் இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டது. இவற்றை இந்திய ராக்கெட்டுகளில் பொருத்திப் பயன்படுத்தியதில் திருப்தியான பலன் கிட்டவில்லை.

சொந்த கிரையோஜெனிக்

இதற்கிடையே இந்தியா சொந்தமாக கிரையோஜெனிக் இன்ஜின்களை உருவாக்கிக்கொள்வதில் ஈடுபட்டது. ஜி.எஸ்.எல்.வி. மார்க் 2 ராக்கெட்டில் இந்திய கிரையோஜெனிக் இன்ஜினைப் பயன்படுத்தியதில் வெற்றி கிட்டியது. இப்போது செலுத்தப்பட்டுள்ள மார்க் 3 ராக்கெட் அதை விடப் பெரியது. மேலும், அதிகத் திறன் கொண்ட கிரையோஜெனிக் இன்ஜின் இதில் பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவேதான், முதல்முறையாக இந்திய மண்ணிலிருந்து மூன்று டன்னுக்கும் அதிக எடை கொண்ட ஜிசாட் 19 செயற்கைக் கோளைச் செலுத்த முடிந்துள்ளது.

இந்த மார்க் 3 ராக்கெட்டை நாம் இரு வகைகளில் பயன்படுத்த முடியும். இதைப் பயன்படுத்தி 36,000 கிலோ மீட்டர் உயரத்துக்குச் செல்ல வேண்டிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளைச் செலுத்தலாம். அவ்வித நிலையில் அந்த ராக்கெட்டினால் மூன்று முதல் நான்கு டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்ல முடியும். ஆனால், சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றி வந்தால் போதும் என்றால் எட்டு டன் எடை கொண்ட செயற்கைக்கோளை இதில் வைத்துச் செலுத்த முடியும். இதையே வேறு விதமாகச் சொல்வதானால் இரண்டு விண்வெளி வீரர்கள் அடங்கிய விண்கலத்தை மார்க் 3 ராக்கெட் மூலம் உயரே செலுத்த முடியும்.

இந்தியாவின் 30 ஆண்டுக் கனவை நனவாக்கிய கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிக்கப்படுவது தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரி ராக்கெட் கேந்திரத்தில்தான் என்ற தகவலையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர், ‘பருவநிலை மாற்றம்’ உள்ளிட்ட புத்தகங்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: nramadurai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x