Last Updated : 20 Jun, 2016 09:38 AM

 

Published : 20 Jun 2016 09:38 AM
Last Updated : 20 Jun 2016 09:38 AM

நிஜ இந்தியாவை உணர்ந்திருக்கிறார்களா இரானியும் மோடியும்?

அலசல் - கல்வி



*

மோடி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட்டபோதே சர்ச்சைகள் தொடங்கின. மனிதவள மேம்பாட்டுத் துறை போன்ற கனமான ஒரு துறைக்கு முதல் முறை அமைச்சராகும், அதுவும் கல்வித் துறையில் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் செய்திராத, வெறும் தொலைக்காட்சி நெடுந்தொடர் நடிகையாக மட்டுமே அறியப்பட்டிருந்த ஒருவரை அமைச்சராக்குவதா என்பதில் தொடங்கியது அந்தச் சர்ச்சை. இரானி அசராமல் பதில் சொல்கிறார். நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் துறைக்கு உள்ளே இரண்டாண்டுகளுக்குள் என்ன நடந்திருக்கிறது என்பதை வெளியே கிழிபடும் சத்தங்கள் தீர்மானிக்கவில்லை.

நாட்டின் முக்கியமான கல்வி நிலையங்கள் அனைத்தும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சி, ஐஐஎஸ்இஆர், என்ஐடி, நிஃப்ட், எஃப்டிஐஐ, ஜேஎன்யூ, மத்தியப் பல்கலைக்கழகங்கள், யூஜிசி, ஏஐசிடிஇ, சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி என்று கீழிருந்து மேல்வரை அனைத்து மத்தியக் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழக மானியக் குழு, கல்வியைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள், புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் அதிகாரம், பாடத்திட்டத்தை மாற்றும் அதிகாரம், கல்லூரிகளுக்கான நிதியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், ஆராய்ச்சிகளுக்கான நிதியை ஒதுக்கும் அதிகாரம், துணைவேந்தர்களை, இயக்குநர்களை நியமிக்கும் அதிகாரம் என்று அனைத்தும் இந்த அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் மனிதவளத்தை ஆக்கவோ அழிக்கவோ இந்த அமைச்சகத்தால் முடியும்.

இரானியின் பிடிவாதம்

கடந்த இரண்டாண்டுகளில் இந்த அமைச்சகம் தொடர்பாக வெளியே பெரிதும் பேசப்பட்ட அனைத்துமே இரானியையும் மோடி அரசையும் எதிர்மறையாகக் காட்டுபவை. ஐஐடி டெல்லியின் இயக்குநர் ஷிவ்காவோங்கர், இரானியுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் பதவி விலகினார். ஐஐடி மும்பை நிர்வாகக் குழுவின் தலைவர் காகோட்கர், இயக்குநரை நியமிப்பதில் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் பதவி விலகினார். ஐஐஎம் அமைப்புகளின் நிர்வாகக் குழுத் தலைவர்களை நியமிப்பதில் இரானி மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தன்னாட்சி அதிகாரம் கொண்ட, இந்தியாவின் முன்னணிக் கல்வி நிறுவனங்களில் இரானி முரட்டுத்தனமாகத் தலையிடுகிறார் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது.

இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம் (ஐசிஎச்ஆர்) தலைவராக வரலாற்று ஆராய்ச்சித் துறையில் அதிகம் அறியப் படாதவரும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பலவற்றைக் கொண் டவருமான சுதர்சன் ராவ் நியமிக்கப்பட்டார். அவர் சில மாதங் கள் கழித்துப் பதவி விலகினாலும் மாற்று ஏற்பாடுகள் இதுவரையில் செய்யப்படவில்லை. புணேவில் இருக்கும் புகழ்பெற்ற திரைப்படக் கல்லூரியின் (எஃப்டிஐஐ) தலைவராக, அதிகம் அறியப்படாத தொலைக்காட்சி நடிகரான கஜேந்திர சௌஹான் நியமிக்கப்பட்டார். இது மாணவர் களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் போராட்டத்தில் இறங்கினார். ஆனால், இரானி இதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திலிருந்து வந்த கடிதம் காரணமாக ஐஐடி சென்னையின் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் இதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையேயான போராட்டத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலையீட்டால் ரோஹித் வெமுலா என்ற தலித் ஆராய்ச்சி மாணவர் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார். இது நாட்டில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) நடைபெற்ற காஷ்மீர மாணவர்களின் கூட்டத்தில் தேசத்துக்கு எதிரான கோஷங்களும் பேச்சுகளும் வெளிப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு ஆதரவாக இருந்ததால், மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்த கண்ணையா குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் கைதுசெய்யப்பட்டார். மிகச் சமீபத்தில் நிஃப்ட் எனப்படும் ஃபேஷன் கலைக் கல்வியகங்களின் தலைவராக கிரிக்கெட் வீரரான சேத்தன் சௌஹான் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் தங்களுக்குச் சாதகமான கல்வியாளர்களைக் கல்வி நிலையங்களின் தலைவர்களாக நியமிப்பதில் தவறில்லை. ஆனால், அவர்கள் கல்வித் துறையில் சாதித்திருக்க வேண்டும் என்று மாணவர்களும் கல்வியாளர்களும் விரும்புகின்றனர். அதுவே நியாயமும்கூட. இதுபற்றிச் சிறிதுகூட ஸ்மிருதி இரானியோ மோடியோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

கவலை கொள்ளாத மோடி

பாஜக ஆதரவாளர்கள் அல்லது சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கும் மிகச் சாதாரண தகுதி கொண் டவர்களை அல்லது தகுதியே இல்லாதவர்களை மிக முக்கிய மான பதவிகளுக்கு நியமிப்பது, தன்னாட்சி அதிகாரமுள்ள அமைப்புகளின் தலைவர்களை முரட்டுத்தனமாக நடத்தி, அவர்களை அமைப்பிலிருந்து வெளியேற்றுவது, இரண்டுமே இரானியிடம் காணப்படுகிறது. இரானியின் இவ்வித நடத்தை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை கொள்வதாகத் தெரியவில்லை.

இந்தியக் கல்வி நிலையங்களில் இடதுசாரிக் கருத்தாக்கம் வெகுவாகப் பரவியுள்ளது என்பது உண்மைதான். ஜேஎன்யூ போன்ற இடங்களில் மாற்றுக் கருத்துக்கான இடம் மிகக் குறைவு. என்றாலும், இதற்கான பதில் நடவடிக்கையானது பலவிதக் கருத்துகளும் பரவக்கூடிய, ஆரோக்கியமான விவாதம் ஏற்படக்கூடிய இடமாகப் பல்கலைக்கழகங்களை மாற்றுவதாக இருக்க வேண்டுமே ஒழிய, முரட்டுத்தனமாக மாணவர்களை ஒடுக்கி ஈடுபடுவதாக அல்ல. ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஜேஎன்யூ ஆகிய இடங்களில் பிரச்சினைக்கு ஒரு காரணம், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி.

இரானியின் சாதனைகள்

இரானி ரிப்போர்ட் கார்டில் எல்லாப் பாடங்களிலுமே தேர்ச்சி பெறவில்லை என்று நினைத்துவிடக் கூடாது. மனிதவள அமைச்சகம் இரண்டாண்டுச் சாதனைகளை விளக்கி ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது. சமீபத்தில் பிஹார் கல்வி அமைச்சர் தன்னை ‘டியர்’ என்று அழைத்துவிட்டார் என்று பொங்கிய இரானி, தன் ஃபேஸ்புக் பக்கத்திலும் தான் செய்துள்ள சாதனைகளைப் பட்டியலிட்டிருந்தார். இவை பலவும் முக்கியமான சாதனைகளே. நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பெண்களுக்காகக் கழிப்பிடங்கள் கட்டியிருப்பது, பெண் கல்வியை ஊக்குவிக்க கல்வி உதவித்தொகை, உடல் ஊனமுற்றோர் கல்விக்காகச் சில வசதிகள், வடகிழக்கு மாநிலத்தில் கல்வியை ஊக்குவிக்க உதவித்தொகை போன்றவை பாராட்டப்பட வேண்டியவை.

சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் அனைத்தையும் டிஜிட்டல் வடிவில் இணையத்தில் இலவசமாக வழங்குவது இன்னொரு முக்கியமான முடிவு (தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் இதனைச் சில ஆண்டுகளாக செய்துவருகிறது.)

இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அறிவை வளர்க்கும் பாரதவானி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, பாராட்டப்பட வேண்டியது. முன்பு தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்விக் கழகம் (என்ஐஓஎஸ்) ஆங்கிலம் மற்றும் இந்தியில் பத்து, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளை நடத்திவந்தது. இப்போது பத்தாம் வகுப்புத் தேர்வுகளைத் தமிழ் வழியாகவும் எழுதலாம். இந்த முறையில் ஆங்கிலம் என்ற பாடத்தை எடுக்காமல் முற்றிலும் தமிழிலேயே ஒருவர் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதிவிட முடியும். இது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், அவ்வப்போது தலைகாட்டும் இந்தித் திணிப்பு கண்டிக்கப்பட வேண்டியது.

சில முக்கியக் கேள்விகள்

இந்த நிறை குறைகளைத் தாண்டி முக்கியமான சில கேள்விகளுக்கான பதில்களை நாம் ஆராய வேண்டும். மோடி அரசிடம் கல்வி குறித்த தொலைநோக்குப் பார்வை உள்ளதா? உலக நாடுகளை ஒப்பிடும்போது கல்வியில் நாம் எங்கு பின்தங்கியிருக்கிறோம்? நம்முடைய உயர் கல்விக்கொள்கை எப்படிப்பட்டது? ஆசிரியர் பயிற்சி குறித்த நம் நிலை என்ன? காங்கிரஸ் ஆட்சியின்போது பிஸா (PISA) என்ற உலகு தழுவிய தேர்வு 2012-ல் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற 73 நாடுகளில் இந்தியா 72-வது இடத்தில் இருந்தது. இந்தத் தேர்வுமுறையே மோசம் என்று சொல்லி, இந்தியா இந்தத் தேர்வில் பங்கெடுப்பதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது. ஆனால், இந்தத் தேர்வு காட்டும் இந்தியாதான் உண்மையான இந்தியா. ஐஐடி, ஐஐஎம் காட்டுவது நிஜமான இந்தியாவை அல்ல.

நிஜமான இந்தியாவின் கல்விக்காகச் செலவிடப்படும் தொகை மிகக் குறைவு. பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் தகுதிக் குறைவோடுதான் வெளியேறுகிறார்கள். நாடு முழுதும் பள்ளிக் கல்விக்குத் தேவையான அமைப்புகள் இருந்தாலும் வேண்டிய அளவு உயர் கல்விக்கான கல்லூரிகள் இல்லை. திறன் மேம்பாட்டில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த ஒரு நாடாக இருக்கிறோம்.

உலக அரங்கில் நாம் உயர வேண்டுமானால், அனைவருக்கும் உயர் கல்வியைச் சாத்தியப்படுத்த வேண்டும். பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லத் தேவையான திறன்களை அவசரகதியில் நம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால், டெமாக்ரபிக் டிவிடெண்ட் என்று நம் இளைஞர்களைச் சொல்வதுபோய், டெமாக்ரபிக் டிசாஸ்டர் என்று பெரும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய இளைஞர்களை நாம் உற்பத்தி செய்வோம்!

பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: badri@nhm.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x