Published : 12 Apr 2017 08:30 AM
Last Updated : 12 Apr 2017 08:30 AM
வாழ்க்கையின் அபத்தத்தையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் தார்மிகக் கோபத்துடன் எதிர்கொள்ளும் கவிதைகள் உண்டு. ஆனால் அதே தீவிரத்துடன், எள்ளலும் கிண்டலுமாகப் பிறர் மனதைப் புண்படுத்தாத நகைச்சுவை உணர்வுடன் கவிதைகளை அளித்தவர் பிரெஞ்சுக் கவிஞர் ழாக் ப்ரெவெர் (Jacques Prvert).
இரண்டாம் உலகப் போர் முடிந்து, பிரெஞ்சு மக்கள் மகிழ்ச்சியாகச் சிரிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் 1946-ல் வெளிவந்த ‘சொற்கள்’ (Paroles) தொகுப்பு மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. மக்களின் மகிழ்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும் சக்திகளைக் கவிதை வாயிலாக நையாண்டி செய்தது மக்களைக் கவர்ந்தது. அதே சமயம், அவர்களைச் சிந்திக்கவும் வைத்தது (தொகுப்பின் பிரபலமான பல கவிதைகள் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘சொற்கள்’ என்ற தலைப்பில் ‘க்ரியா’ வெளியீடாக வந்திருக்கிறது).
1963-ல் வெளிவந்த இவருடைய ‘கவிதைகள்’ என்ற மற்றொரு தொகுப்பில் கவிதைகளைத் தவிர, மிருகங்களுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவு குறித்த வேடிக்கையான குட்டிக் கதைகளும் இருந்தன. அவற்றில் ஒரு கதை:
கூண்டில் குட்டிச் சிங்கம்.
மாட்டிக்கொண்ட குட்டிச் சிங்கம் ஒன்று, ஒரு கூண்டுக்குள் வளர்ந்துகொண்டிருந்தது. அது வளர வளர, கூண்டின் கம்பிகளும் வளர்ந்துகொண்டே போயின. அப்படித்தான் அது நினைத்தது. ஆனால், அது தூங்கும்போது கூண்டை மாற்றிக்கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.
அவ்வப்போது அதைக் காண வந்த மனிதர்கள் அதன் கண்களில் தூசியைத் தூவினார்கள், சிலர் குச்சியால் அதன் தலையைத் தட்டினார்கள். அது நினைத்தது: ‘இவர்கள் கெட்டவர்கள், கொடியவர்கள். ஆனால் இதைவிட மோசமாகக்கூட இவர்கள் இருக்கக்கூடும். என் அப்பா, அம்மா, சகோதரர்கள் இவர்களையெல்லாம் கொன்றுவிட்டார்கள். ஒரு நாள் என்னையும் கொல்லக்கூடும். எதற்காகக் காத்திருக்கிறார்கள், தெரியவில்லை.’
அதுவும் காத்திருந்தது... ஒன்றும் நடக்கவில்லை.
திடீரென்று ஒரு நாள்... மிருகக்காட்சி சாலை ஊழியன் வந்து, கூண்டுக்கு எதிரே இருக்கைகளைப் போடுகிறான்... பார்வையாளர்கள் வந்து உட்கார்கிறார்கள்... ஆச்சரியத்துடன் சிங்கம் அவர்களைப் பார்க்கிறது.
பார்வையாளர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள், எதற்காகவோ காத்திருப்பதைப் போல... பணியாளர் ஒருவர் வந்து எல்லோரிடமும் நுழைவுச் சீட்டு கேட்டுப் பரிசோதிக்கிறார். ஒரு சிறு சண்டை. முதல் வரிசையில் சிறிய உருவமுள்ள ஒரு ஆள் இருக்கிறார்... அவரிடம் நுழைவுச்சீட்டு இல்லை. பணியாளன் அவரை வயிற்றில் உதைத்துத் துரத்துகிறான். மற்றவர்கள் கைத்தட்டி மகிழ்கிறார்கள்.
சிங்கத்துக்கு இதெல்லாம் பெரும் வேடிக்கையாக இருக்கிறது. மனிதர்கள் நல்லவர்களாக மாறிவிட்டார்கள். போகும் வழியில் சும்மா வேடிக்கை பார்த்துவிட்டுப் போகவே வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறது: ‘பத்து நிமிடங்களாக இங்கே இருக்கிறார்கள், எனக்கு இதுவரை ஒருவிதத் தீங்கும் இழைக்கவில்லை, என்ன ஆச்சரியம்! மிகவும் எளிமையாக என் இருப்பிடத்துக்கு விஜயம் செய்கிறார்கள். அவர்களுக்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும்...’
ஆனால், திடீரென்று கூண்டின் கதவு திறந்து, ஒரு ஆள் உள்ளே நுழைந்து, ‘சுல்தான்... கம் ஆன்... எம்பிக் குதி...’ என்று கத்துகிறான்.
ரிங் மாஸ்டரை இதுவரை அறிந்திராத சிங்கத்துக்கு நியாயமான கவலை ஏற்படுகிறது. அவர் கையில் ஒரு நாற்காலி இருக்கிறது. கூண்டின் கம்பிகளின் மேல், சிங்கத்தின் தலையின் மேல், பார்த்த இடத்திலெல்லாம் அவர் நாற்காலியால் அடிக்க அதன் கால் ஒன்று உடைகிறது. நாற்காலியை அவர் விசிறியடித்துவிட்டு, பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை நோக்கிச் சுடுகிறார்.
‘என்ன இது என்று வியக்கிறது சிங்கம். ஏதோ அபூர்வமாக என்னைப் பார்க்க விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள். இங்கேயோ ஒரு பைத்தியம், ஒரு ரௌடி, கதவைத் தட்டக்கூட இல்லாமல் உள்ளே நுழைந்து, நாற்காலிகளை உடைத்து என்னுடைய விருந்தினரைப் பார்த்துச் சுடுகிறான்’. ஆகவே, அது அந்த ஆள் மேல் பாய்ந்து அவனைக் கடித்து விழுங்கத் தொடங்குகிறது: அதுகூட, அங்கே ஒரு ஒழுங்குமுறை நிலவ வேண்டும் என்பதற்காகத்தான், சாப்பிட வேண்டுமென்ற நப்பாசையினால் அல்ல.
சில பார்வையாளர்கள் மூர்ச்சையடைகிறார்கள், பெரும்பாலானோர் ஓடிவிடுகிறார்கள். மீதமுள்ளவர்கள் கூண்டை நோக்கி ஓடி, ரிங் மாஸ்டர் காலைப் பிடித்து இழுக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை.. பதற்ற நிலை என்றால் அப்படித்தான்.. வேறென்ன?
சிங்கத்துக்கு ஒன்றும் புரியவில்லை, சிலர் குடையால் அதை அடிக்கிறார்கள். ஒரே கூச்சல், குழப்பம்.
ஒரு மூலையில் இருக்கும் ஒரே ஒரு ஆங்கிலேயர் மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்: ‘நான் இதை எதிர்பார்த்தேன். இப்படி நடக்குமென்று தெரியும். பத்து ஆண்டுகளுக்கு முன்பேயே இதைச் சொன்னேன்...’
எல்லோரும் அவரை நோக்கித் திரும்புகிறார்கள்...
‘என்ன சொல்கிறீர்கள்? இப்படி நடப்ப தெல்லாம் உங்களால்தான்... அசிங்கம் பிடித்த அந்நியனே... நுழைவுச்சீட்டாவது வாங்கினீர்களா?’
இப்போது ஆங்கிலேயருக்குக் குடைகளால் தர்ம அடி கிடைக்கிறது.
‘இன்று அவருக்கும் போதாத காலம்’ என்று நினைக்கிறது சிங்கம்.
- வெ.ஸ்ரீராம், ழாக் ப்ரெவெரின்
‘சொற்கள்’, ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ உள்ளிட்டவற்றை பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர்.
தொடர்புக்கு: ramcamus@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT