Published : 03 Dec 2013 12:00 AM
Last Updated : 03 Dec 2013 12:00 AM
துபை, ஐக்கிய அரபு சிற்றரசு - இருவேறு அரபு விடியல்கள் இருப்பதை உணர்த்துகின்றன.
துனீசியா, எகிப்து, சிரியா, யேமன், லிபியா ஆகிய நாடுகளில் முற்போக்கான புரட்சிகள் ஏற்பட்டது குறித்துப் படித்திருப்பீர்கள். இந்த நாடுகள் எதிலும் எல்லாத் தரப்பையும் அரவணைத்துச் செல்லும் நிலையான ஜனநாயக அரசுகள் ஏற்படவில்லை. சவூதி அரேபியாவிலும், இதர அரபு வளைகுடா மன்னராட்சி நாடுகளிலும் புரட்சியாக இல்லாமல் - தன்னெழுச்சியாகவே ஏற்பட்டுவரும் மாறுதல்கள்குறித்து நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள்.
இந்த எழுச்சிகளுக்குக் காரணம், தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட லேசான மாற்றம்தான். சவூதி அரேபியா, துபை, அபுதாபி ஆகியவற்றுக்கு ஒருமுறை சென்றாலே, இந்த மாற்றங்களைக் கண்டு பிடித்துவிட முடியும்.
ஒரு மனிதனுக்கு ஒரு ஓட்டு
ஒரு மனிதனுக்கு ஒரு ஓட்டு என்ற ஜனநாயகத்தைப் புகுத்த வளைகுடாத் தலைவர்களுக்கு இன்னமும் நேரம் கிடைக்கவில்லை. ஆனால், ‘அரபு வசந்தம்’ பிற நாடுகளில் ஏற்படுத்திய விளைவுகளைப் பார்த்த அவர்கள், தாங்கள் பதவியில் நீடிப்பது எந்த வகையில் நியாயம் என்று கவலையோடு ஆராய்கின்றனர். எதையாவது மானிய விலையில் கொடுத்துக்கொண்டோ, அப்பாவுக்குப் பிறகு மகன் என்று ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தோ இனி காலம்தள்ள முடியாது என்று புரிந்துகொண்டுவிட்டனர். பள்ளிக்கூடங்களின் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்துகிறோம், புதிய வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குகிறோம், கழிவுநீர்க் கால்வாயை எப்படித் தரமாக அமைக்கிறோம் என்பதை வைத்துத்தான் மக்கள் இனி நம்மை மதிப்பார்கள் என்பதை உணர்ந்துவிட்டனர். இஸ்ரேலை எதிர்ப்பதும் ஈரானைப் பழிப்பதும் இஸ்லாத்தைத் திணிப்பதும் இனி நம்மைக் காப்பாற்ற உதவாது என்று தெளிவடைந்துவிட்டனர்.
மடைதிறந்த இணையம்
இணையத்துக்கு நன்றி! இப்போது ஏராளமான மக்கள் தங்களுடைய கருத்துகளை இணையம் வழியாகத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். எகிப்திலும் துனீசியாவிலும் இணையத்தின் பங்களிப்பை அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டு விட்டனர். வளைகுடா நாடுகளிலோ குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். மிகவும் கட்டுப்பெட்டிகளாகக் கருதப்பட்ட இந்தச் சமூகத்தினரிடையே இப்போது ஆண்களும் பெண்களும் தங்களுக்குள்ளும் தங்களுடைய தலைவர்களிடமும் பேசுவதற்கு ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் ஆகியவை நல்ல தகவல் தொடர்பு சாதனங்களாக உருவெடுத்துவிட்டன.
“நான் இப்போது உள்ளூர் பத்திரிகைகளைப் படிப்பதில்லை… எனக்கு வேண்டிய செய்திகளையெல்லாம் ட்விட்டரே தந்துவிடுகிறது” என்று சவூதியைச் சேர்ந்த இளம் தொழில்நுட்பவியலாளர் என்னிடம் கூறினார். அரசுக் கட்டுப்பாட்டில் வெளியாகும் செய்தித்தாள்களுக்கு இனி அவ்வளவுதான் எதிர்காலம்.
ட்விட்டர், யூடியூப்
அரபு உலகில் தயாராகும் ட்வீட்டுகளில் சரிபாதி சவூதி அரேபியாவிலேயே தயாராகிவிடுகிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் ட்விட்டர், யூடியூப் பயன்படுத்தப்படும் நாடு சவூதிதான். ட்விட்டர், யூடியூப் உபயோகிப்பாளர்களில் அதிகம் பேர் வஹாபி பிரச்சாரகர்களின் ஆதரவாளர்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால், அவர்களை மையமாக வைத்து ஏராளமான அரசியல் விமர்சகர்கள், நகைச்சுவையாளர்கள், அங்கதக் கலைஞர்கள் தங்களுடைய நிகழ்ச்சிகளைத் தயாரிக்கின்றனர். சவூதி சமுதாயத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் - மறைமுகமாக மத அமைப்புகளையும்தான் - விமர்சிக்கின்றனர். இப்போது இதில் அவர்களுக்கு வரம்பே இல்லாமல் போய்விட்டது.
முற்போக்கான மன்னர்
சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா முற்போக்கானவர், மக்களிடையே மிகவும் பிரபலமானவராகத் திகழ்கிறார். ஆனால், அவருடைய அரசின் அதிகாரிகளில் சிலர் மக்களுடைய கோரிக்கைகள்மீது உடனே நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் மேலும் சிலர் ஊழலில் ஈடுபடுகின்றனர் என்றும் மக்களிடையே கருத்து நிலவுகிறது.
எனவேதான், ‘மன்னரைச் சந்திக்க நேர்ந்தால், அவரிடம் நான் சொல்வேன்’ என்றும் ‘மக்களிடமிருந்து மன்னருக்கு: ஆபத்தில் சிக்கியிருக்கிறது கல்வி’ என்றும் ‘சுகாதார அமைச்சருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?’ என்றும் ட்விட்டரில் உரையாடலுக்குப் பல தலைப்புகளை வைத்திருக்கின்றனர். சவூதி அரேபிய மருத்துவமனைகளில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்களுக்குப் பிறகு, சுகாதார அமைச்சகம் தொடர்பாக மக்களுக்கு அதிருப்தி அதிகமாகியிருக்கிறது.
கேலிச்சித்திரம்
சுமார் 10 நாள்களுக்கு முன்னால், சவூதி அரேபியாவில் இருந்தபோது கன மழை பெய்து நகரை வெள்ளக்காடாக்கியது. அந்நாட்டு செய்தித்தாளான அல்-ஷார்க்கில் ஒரே கேள்விக்கு மூன்று பேர் வெவ்வேறு பதில்களைக் கூறுவதுபோல கேலிச்சித்திரம் வரைந்திருந்தார்கள்.
‘‘ரியாத் நகரின் எல்லா வீதிகளிலும் வெள்ளம் தேங்கக் காரணம் என்ன?” என்பது கேள்வி.
அரசு அதிகாரி பதில் அளிக்கிறார்: ‘‘வீதிகளில் வெள்ளம் பெருகவில்லை, அது விஷமமான வதந்தி.’’
ஷேக் பதில் அளிக்கிறார்: ‘‘இளவரசி நோரா பல்கலைக்கழக இளம் பெண்களின் பாவத்தால்தான் அப்படி ஏற்பட்டது.’’
திருவாளர் பொதுஜனம் சொல்கிறார்: ‘‘அதற்குக் காரணம் ஊழல்தான்.’’ அப்போது எதிர்ப் பக்கத்திலிருந்து ஒரு கை மட்டும் நீள்கிறது அதில் ‘தணிக்கை’ என்று எழுதப்பட்ட வளையம் மாட்டியிருக்கிறது. இது சவூதி நாளிதழில் வந்த கேலிச்சித்திரம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில், ஓர் உயர் அதிகாரி வந்த காரும் ஆசியத் தொழிலாளி ஒருவர் ஓட்டிய காரும் மோதிக்கொண்டன. உடனே, அந்த அதிகாரி காரிலிருந்து கோபமாக இறங்கி, தன்னுடைய தலையைச் சுற்றி அணிந்திருந்த கயிற்றை எடுத்து அந்தத் தொழிலாளியை ஆத்திரம் தீர அடித்தார். அதைக் கைபேசியில் யாரோ படம்பிடித்து இணையத்தில் உலவவிட்டனர். வளைகுடா நாடுகள் அனைத்திலும் மக்கள் அதைப் பார்த்தனர்.
மக்களுக்கு இருந்த அச்சமெல்லாம் போய்விட்டது - அரசுக்கு எதிராகப் புரட்சி செய்வதற்கு அல்ல: நேர்மையான, திறமையான நிர்வாகம் வேண்டும் என்று கேட்பதற்கு அச்சமில்லாமல் போய்விட்டது.
இன்னொரு காட்சி
காற்றும் மின்னலுமாக மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. ஏழையின் வீட்டுக்கூரை அவரைப் பந்தலாகி மழைநீர் உள்ளே ஒழுகுகிறது. குழந்தையைப் படுக்கவைத்திருக்கும் தொட்டில் மீதும் மழைத் தண்ணீர் விழுகிறது. இந்த நிலையில், மழையில் நனைந்துவிட்ட தன்னுடைய வீட்டைச் சுற்றிவரும் அந்த ஏழை கூறுகிறார், “நான் ஒரு சவூதி. என்னுடைய வாழ்க்கையைப் பாருங்கள். வீடமைப்புத் துறை அமைச்சர் எங்கே? ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டித்தர மன்னர் கொடுத்த கோடிக் கணக்கான ரூபாய்கள் எங்கே? ஒழுகாத கூரையுள்ள வீட்டுக்கான என்னுடைய உரிமைகள் எங்கே? இந்த நிலையில், வீட்டுக்குள் இருந்தாலும் வீதியில் இருந்தாலும் ஒன்றுதான்.”
இதைப் போல பலவற்றை இளம் சவூதிகளிடமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் என்னுடன் பேசிய பலரிடமிருந்தும் கேட்டேன். எகிப்தில் ஆட்சி மாற்றத்தைத் தூண்டிய புரட்சிக்காரர்களைவிட இவர்கள் காரியவாதிகள், அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர் என்று தோன்றியது. கெய்ரோவிலிருந்து டமாஸ்கஸ்வரை உள்ளவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்திருப்பார்கள்.
இளம் சவூதிப் பெண்கள் கார் ஓட்டுவதற்கான உரிமையைப் பெற போராடிக்கொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் அடிநிலையில் உள்ளவரும் தன்னுடைய உரிமைகளைக் கேட்டுப் பெறுகிறார். மத சித்தாந்தத்தைத் திணிக்கும் விதம் பிடிக்காமல் நாத்திகனாகிவிட்டேன் என்று ஓர் இளைஞர் என்னிடம் கூறுகிறார். அவர் மட்டுமல்ல, மேலும் பலர் அவரைப் போல இருக்கின்றனர். சவூதியில் நாத்திகர்களா? யாருக்குத் தெரியும்?
சீர்திருத்தம் எப்படி?
சீர்திருத்தம்குறித்துச் சொன்னேன் அல்லவா? துபையில் அரசு நிர்வாக நடைமுறைகளிலேயே பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. 2021-க்குள் முடிக்க வேண்டிய இலக்குகளை அரசே நிர்ணயித்துள்ளது. 46 அமைச்சகங்களுக்கும் கட்டுப்பாட்டு முகமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இந்த அமைச்சகங்கள் கண்காணிக்கப்படும். அவை தங்களுடைய பணிகளை எப்படி நடத்துகின்றன, மக்களுடைய குறைகள் எப்படித் தீர்க்கப்படுகின்றன, இலக்குகள் எப்படி எட்டப்படுகின்றன என்று தொடர்ந்து கண்காணித்து மதிப்பிடப்படும்.
துபையில் உள்ள 15 வயது மாணவர்கள் உலக அளவில் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல தரத்துடன் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வுக்கு நன்றாகத் தயாராக வேண்டும். புதிதாகத் தொழில் தொடங்குவது மக்களுக்கு வெகு எளிதாக இருக்க வேண்டும்.
ஐ-பேட் மன்னர்
அமைச்சகங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே உணர்த்தும் அடையாளக் குறிகள் மன்னரின் கண்ணில் தெரியும்படி ஐ-பேட் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும். மன்னர் ஷேக் முகம்மது பின் ரஷீத், இதை வாராவாரம் ஆராய்ந்து கடந்த வாரத்துடன் இந்த வாரம் எப்படி என்று ஒப்பிட்டுப் பார்ப்பார்.
அரசுத் துறைகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைக் கண்காணிப்பதற்கான இயக்குநர் மரியம் அல்-ஹம்மாதி என்றாலே எல்லா அமைச்சர்களுக்கும் இப்போது சிம்மசொப்பனம்தான். ஏனென்றால், அவர் அமைச்சர்களை அவர்களுடைய செயல்திறனுக்கேற்பப் பட்டியலிட்டு மன்னருக்கு அறிக்கை அனுப்புகிறார். மன்னர் ஷேக் முகம்மத் அதைப் பார்த்து அமைச்சர்களின் செயல்களை அறிந்துகொள்கிறார். இந்த நிலையில், பட்டியலில் தன்னுடைய பெயர் கீழே இருப்பதை யாராவது விரும்புவார்களா? அரசின் ஒவ்வொரு முகமையும், தனியார் துறையும் மக்களுடைய திருப்தியையும் சேவையையும் மனதில் கொண்டுதான் செயல்பட வேண்டும் என்பதே மன்னரின் எதிர்பார்ப்பு என்று விளக்கினார் ஹம்மாதி. மக்களுக்கும் வருடாந்திர அறிக்கை தரப்படும்.
மக்களின் நன்மைக்காகவே
இது ஜனநாயகம் பற்றியதல்ல… ஆட்சிமுறை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது மக்களுடைய நன்மைக்காகவே இருக்க வேண்டும், அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றதாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்களின் விளைவே. மக்களுடைய திருப்தியையும் மகிழ்ச்சியையும் மனதில்கொண்டு ஒரு தலைவர் செயல்படத் தொடங்கினால், மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் நிர்வாகம் வெளிப்படையாகவும் மக்களுக்குப் பதில் சொல்லும் வகையிலும் நடைபெற வேண்டிய நிலை உருவாகும். யாருக்கு என்ன தேவை என்பதை ட்விட்டர் தெரிவித்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT