Published : 30 Oct 2013 03:25 PM
Last Updated : 30 Oct 2013 03:25 PM
ஒரு காலத்தில் மத்தியக் கிழக்கின் மகத்தான கல்வி க்ஷேத்திரமாக இருந்த இடம் இராக். நல்ல படிப்பு படிக்க வேணுமென்றால் மாணவர்கள் எங்கெங்கிருந்தோ இராக்கை நோக்கித்தான் போவார்கள். அது நடந்து வருகிற காலம். வாகனாதி சௌகரியங்களெல்லாம் கிடையாது.
நவீன காலத்தில் மிகச் சிறந்த பல்கலைக் கழகங்களைக் கொண்ட பிராந்தியமென்றால் பாலஸ்தீனம். எத்தனை யுத்தம் நடந்தாலும், எவ்வளவு கலவரமானாலும், உயிர் தரித்திருப்பதே பிரச்னைக்குரிய சங்கதியென்றாலும் படிக்க நினைத்தால் பாலஸ்தீன் போ என்றுதான் அரேபியப் பெற்றோர்கள் தத்தமது வாரிசுகளுக்கு அறிவுரை சொல்லுவார்கள்.
காரணம், நித்ய கலவர பூமி யான பாலஸ்தீனின் அடுத்த தலைமுறையாவது நல்லபடி யாகப் படித்து முன்னுக்கு வரவேண்டு மென்று சில நல்லவர்கள் என்றோ விரும்பியிருக்கிறார்கள். பல்வேறு மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பணக்கார நல்லவர்களையும் படிப்புக்கு உதவக்கூடிய அறக்கட்டளைகளையும் அணுகி விஷயத்தைச் சொல்லி பாலஸ்தீனில் சிறந்த பல்கலைக் கழகங்கள் உருவாக வழி செய்து வைத்தார்கள்.
செலவு குறைந்த கல்வி. ஆனால் தரமான கல்வி. முகம் தெரியாத யார் யாரோ கொடுத்த நிதி உதவியில் இயங்கிக்கொண்டிருந்த அந்த பல்கலைக் கழகங்களூக்குத்தான் இப்போது கஷ்டகாலம் வந்திருக்கி றது. ரமல்லாவில் உள்ள பிர்ஜெய்த் பல்கலைக் கழக மாணவர்கள், பேராசிரியர்களை வகுப்புக்குள் நுழைய விடாமல் வாசலி லேயே வழிமறித்துக் கலவரம் பண்ணி யிருக்கிறார்கள். காரணம் என்ன வென்றால் ட்யூஷன் ஃபீஸை அதிகரித்து விட்டார்கள். இதென்ன பல்கலைக் கழகமா? பகல் கொள்ளைக் கழகமா? மரியாதையாக வாபஸ் வாங்கச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் வகுப்பு நடக்காது.
அல் நஜா என்னும் இன்னொரு பல்கலைக் கழகத்தில் இம்மாதிரியான பிரச்னை ஏதும் வந்துவிடக்கூடாது என்று ட்யூஷன் ஃபீஸை அதிகரிக்காமல் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தார்கள். நாற்பது பேர் இருக்கும் க்ளாசுக்கு எண்பது பேர். ஆயிரம் பேர் படிக்கும் கல்லூரியில் இரண்டாயிரம் பேர்.
கொதித்துப் போன மாணவர்கள், அங்கும் போர்க்குரல் எழுப்பி வீதிக்கு வந்திருக்கிறார்கள்.
மேற்குக் கரையிலும் காஸாவிலு மாக மொத்தம் 14 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இவற்றின் கட்டுப்பாட்டில் இய ங்கும் கல்லூரிகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ ர்கள். எல்லாமே இம்மாதிரியான நிதியுதவி சௌகரியங்களால் மட்டுமே இயங்கி வந்த கல்வி நிறுவனங்கள் என்பதால், நிதி வரத்து நின்று போனதில் அனைத்து இடங்களிலுமே பிரச்னை தலை தூக்கியிருக்கிறது.
பாலஸ்தீன் பல்கலைக்கழகங்களு க்கு நிதி வழங்கிக்கொண்டிருந்த பல்வேறு அறக்கட்டளைகள் மிரட்டல் காரணங்களாலும் மற்ற பல அரசியல் காரணங்களாலும் தமது பங்களிப்பை அப்படியே நிறுத்திக்கொள்ள, இப்போது பேராசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக்கூட வழியற்றுப் போய் திகைத்து நிற்கின்றன இந்த நிறுவனங்கள்.
என்ன செய்யலாம்? யாருக்கும் புரியவில்லை. படிப்பு பாதியில் பாழாய்ப் போவதை விரும்பாத மாணவர்கள் கூடுதல் கட்டணத்தைச் செலுத்துவதற்காகப் பகுதி நேர வேலை பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அது பிழையில்லை. ஆனால் அவர்களுக்கு வேலை கொடுத்து சம்பளமும் கொடுக்கக்கூடிய வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் இஸ்ரேலியருடையவை. ஜென்ம விரோதிகளான யூதர்களின் நிறுவன த்தில் உழைத்து சம்பாதித்துத்தான் நீ படித்துத் தீரவேண்டுமென்பதில்லை, தலைமுழுகிவிட்டுத் திரும்பி வா என்று பெற்றோர்கள் ஒரு பக்கம் பிறாண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பதினாலு பல்கலைக் கழகங்களையும் இழுத்து மூடிவிட்டுப் போய்விடலாமா என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள் கல்வியாளர்கள். நாளொரு பிரச்னை, பொழுதொரு போராட்டம் என்று சகிக்க முடியாத எல்லையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது இந்தச் சிக்கல்.
ஆண்டாண்டு காலமாகப் பாலஸ்தீனியப் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்று முன்னுக்கு வந்த பல தலமுறைகள் பல்வேறு அரபு தேசங்களில் உண்டு. அந்த நன்றி விசுவாசத்தில் ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு பல்கலைக் கழகத்தைத் தத்தெடுத்துக் கொள்ள முன்வந்தால் போதும்; இந்தப் பிரச்னைக்கு ஒரு விடிவு கிடைக்கும். அரபு சகோதரத்துவம் மற்ற விவகாரங்களில் பல்லிளித்தாலும் இந்த விஷயத்திலாவது உருப்படியாக எதையாவது செய்தால் நல்லது. இல்லாவிட்டால் படிப்புக்கு பாலஸ்தீன் என்கிற பேரே பழங்கதையாகிவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT