Last Updated : 22 Jul, 2016 09:00 AM

 

Published : 22 Jul 2016 09:00 AM
Last Updated : 22 Jul 2016 09:00 AM

நீதி.. அதுவே தீர்வும்கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்!

என்னுடைய கல்லூரி நாட்களில் ஒரு பேராசிரியர் சொன்னார், “இந்திய அரசாங்கம் காஷ்மீரிகள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும். என்ன ஆகிவிடும், அதிகபட்சம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருப்பவர்கள் இந்தியாவிடமிருந்து விலகும் முடிவை எடுக்கலாம். போகட்டும். ஜம்முவாசிகள், லடாக்வாசிகள் இந்தியாவில் நீடிக்கும் முடிவையே தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான கோடிகளைப் படைகளுக்கு வாரி இறைக்கிறோம். அவர்களுக்கும் அமைதி இல்லை. நமக்கும் நிம்மதி இல்லை. எப்படியும் இந்தப் பிரச்சினையை இந்தியா தீர்த்தே ஆக வேண்டும்!”

முதல் முறையாக இப்படிக் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சராசரி இந்திய மனம் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் என்னிடம் இந்தியச் சுதந்திரப் போரட்ட வரலாற்றுடன் இணையாகவே பயணித்த காஷ்மீர் சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் படிக்கச் சொன்னார். இன்றைக்கு நாம் ‘காஷ்மீர்’ என்றழைக்கும் காஷ்மீருக்குள் உள்ளடங்கியிருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் ஆகிய மூன்று பிரதேசங்களுக்கும் இடையேயுள்ள நுட்பமான கலாச்சார வேறுபாடுகளையும் புவியியல் சூழலையும் படிக்கச் சொன்னார். இந்திய வரைபடம் காட்டும் காஷ்மீரில் உள்ளபடி சரிபாதிகூட நம் வசம் இன்றைக்கு இல்லை. நம் வசம் உள்ள 1.01 லட்சம் சொச்ச சதுர கி.மீ. காஷ்மீரின் பரப்பில், 58.33% பரப்பு லடாக் பிராந்தியத்தில் இருப்பது; 25.93% பரப்பு ஜம்மு பிராந்தியத்தில் இருப்பது; 15.73% பரப்பு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கிறது. இந்தியாவின் மாணிக்கம் என்று சொல்வதற்கும், இந்தியா இழுத்துப் பிடித்து வைத்திருப்பதற்குமான பெரிய, அரிய வளங்கள் ஏதும் பள்ளத்தாக்கில் கிடையாது. அதேசமயம், இந்தியா தலைகுனிய வேண்டிய எல்லா அவலங்களும் பள்ளத்தாக்கில் நடக்கின்றன.

நூறாண்டு கடந்த முழக்கம்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒலிக்கும் சுதந்திரக் குரலுக்குப் பின் குறைந்தது நூறாண்டு வரலாறு இருக்கிறது. 1846-ல் ஜம்முவுடன் இணைக்கப்பட்ட அடுத்த சில பத்தாண்டுகளில் டோக்ரா அரச வம்சத்துக்கு எதிராக ஒலிக்க ஆரம்பித்தது முதலாக அங்கு சுதந்திர கோஷம் கேட்டுக்கொண்டிருக்கிறது. காஷ்மீர் சுதந்திரப் போராட்டம் மதச்சார்பற்ற ஒரு தேசிய இயக்கமாக வெளிப்படையாகத் தெரிய 1939-ல் ‘முஸ்லிம் மாநாடு’ அமைப்பின் பெயரைத் ‘தேசிய மாநாடு’ என்று பெயர் மாற்ற ஆலோசனை கூறியவர்களில் ஒருவர் நேரு. 1942-ல் இந்தியா ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit India) இயக்கம் நடத்தியதுபோலவே, 1946-ல் ‘அரசனே வெளியேறு’ (Quit Kashmir) இயக்கம் நடத்தியது காஷ்மீர். 1947-ல் இந்திய ஒன்றியத்துடனான காஷ்மீர் அரசர் ஹரிசிங்கின் இணைப்பும் ‘காஷ்மீர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் பொதுக் கருத்துக்கேட்பின் முடிவே தீர்மானிக்கும்’ எனும் நிபந்தனைக்குட்பட்டே நடந்தது. ஆக, காஷ்மீர் சுதந்திரப் போராட்டத்தை இன்றைய இந்தியாவுக்கான எதிர்ப்புப் போராட்டமாக, இனப் போராட்டமாக, போராட்டக்காரர்களைத் தேச விரோதிகளாக அணுகும் பார்வை வரலாற்று அடிப்படையற்றது.

சுதந்திரத்தை வேறு எந்தச் சொல் கொண்டு கேட்பது?

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இன்றைக்கு எதிரொலிக்கும் ‘சுதந்திரம்’ (ஆசாதி) எனும் சொல் பள்ளத்தாக்குக்கு வெளியே இருக்கும் நாட்டுப்பற்று மிக்க ஒரு குடிமகரைச் சங்கடப்படுத்தலாம். கால் நூற்றாண்டுக்கும் மேலாக காலனியாதிக்கக் காலக் கருப்புச் சட்டமான ‘ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்ட’த்தின் கொடுங்கோன்மையையே அன்றாட ஆட்சிமுறையாக எதிர்கொள்பவர்களிடமிருந்து வேறு எந்தச் சொல்லை எதிர்பார்க்க முடியும்?

ஜனவரி 1989 முதல் 2016 ஜூன் வரை 94,391 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்; 22,816 பெண்கள் விதவைகள்ஆக்கப்பட்டிருக்கின்றனர்; 1,07,569 குழந்தைகள் அநாதைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்; 10,193 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறது காஷ்மீர் ஊடக சேவையகம். இது சற்று மிகையானது என்று நாம் நினைக்கலாம். அரசுத் தரப்பு எப்போதும் எண்ணிக்கையைக் குறைத்தே சொல்லிவந்திருக்கிறது. 2011-ல் காஷ்மீர் மனித உரிமை ஆணையம் வெளியிட்ட ஒரு செய்தி காஷ்மீரிகள் எதிர்கொள்ளும் ஆயுதப் படைகளின் ரத்த வெறியாட்டத்தை வெளியே கொண்டுவந்தது. வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா, பண்டிபூர், குப்வாரா மாவட்டங்களில் 38 இடங்களில் 2,730 அடையாளம் தெரியாத சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியது மனித உரிமைகள் ஆணையம். இந்தச் சடலங்கள் அனைத்தும் அடையாளம் காணப்படாத பயங்கரவாதிகள் என்ற பெயரில் பாதுகாப்புப் படையினரால் அழுத்தம் தரப்பட்டுப் புதைக்கப்பட்டவை.

பல்லாண்டு காலமாகத் தங்களுடைய பிள்ளைகளைக் காணவில்லை என்று புகைப்படத்துடன் சாலைகளில் நின்று போராடிக்கொண்டிருந்த பெற்றோர் பலர் அப்படியே உருக்குலைந்து உடைந்தழுதார்கள். ஒரு பெரிய படுகொலை. இதே சம்பவம் இன்னொரு நாட்டில் நடந்திருந்தால் ஒட்டுமொத்த நாடும் கொந்தளித்திருக்கும். காஷ்மீர் என்பதாலேயே இந்தியா சகஜமாகக் கடந்து செல்ல முடிந்தது. பதினைந்து காஷ்மீரிகளுக்கு ஒருவர், சாலைகளில் நூறு மீட்டருக்கு ஒருவர் என்கிற அளவில் பள்ளத்தாக்கில் படைகளைக் குவித்து நிறுத்தியிருக்கிறது இந்திய அரசு. கூடவே, தாம் நினைக்கும் எவர் வீட்டினுள்ளும் புகுந்து எவரையும் விசாரணை என்ற பெயரில் தூக்கிச் செல்லும், எவரையும் சுட்டுத்தள்ளும், யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லா அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறது. இப்படியாக மனித உரிமைகளின் குரல்வளை கொடூரமாக நெரிக்கப்படும் சூழலில், ஒரு சமூகம் எழுப்பும் சொல் சுதந்திரம் என்பதன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

அதிகாரம் அற்ற சுயாட்சி

இந்திய ஒன்றியத்திடம் இணைந்தபோது, ‘பாதுகாப்பு, வெளியுறவு, மக்கள் தொடர்பு, நாணயப் பரிமாற்றம்’ ஆகிய நான்கு அம்சங்களை மட்டுமே காஷ்மீர் அரசு இந்திய அரசு வசம் ஒப்படைத்தது. இந்திய - காஷ்மீர் இணைப்பின் உயிர்நாடியான இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவோ ஏனைய எந்த மாநிலங்களுக்கும் இல்லாத சிறப்பு அந்தஸ்தையும் தன்னாட்சியையும் காஷ்மீருக்கு அளித்தது. அந்த நாட்களில் காஷ்மீரின் முதல் ‘முதல்வர்’ ஷேக் அப்துல்லாவும் அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த பக்ஷி குலாம் முஹம்மதுவும் ‘பிரதமர்’ என்றே அழைக்கப்பட்டார்கள். இன்றைய நிலை என்ன? உண்மையில் காஷ்மீர் டெல்லியால் ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலமாகவே ஆளப்படுகிறது.

இம்முறை காஷ்மீரில் கொதிநிலை ஏறிய நாட்களில் பிரதமர் மோடி ஆப்பிரிக்கப் பயணத்தில் இருந்தார். அவர் நாடு திரும்பும் வரை, எந்த உறுதியான முடிவையும் எடுக்க முடியவில்லை என்கிறார்கள். முதல்வர் மெஹ்பூபாவால் எதுபற்றியும் டெல்லியுடன் ஆக்கபூர்வமாக விவாதிக்க முடியவில்லை என்கிறார்கள். சிட்டிசிங்புரா கிராமத்து இளைஞர்கள் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டார்கள் என்று குற்றஞ்சாட்டி மக்கள் போராடியபோதுதான் காஷ்மீர் ஆட்சியாளர்களால் என்ன செய்ய முடிந்தது; படையினர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ்சாட்டி சோஃபியான் பெண்கள் கொந்தளிப்போடு ஆர்ப்பாட்டம் நடத்தியபோதுதான் காஷ்மீர் ஆட்சியாளர்களால் என்ன செய்ய முடிந்தது? தன்னுடைய அடிப்படை உரிமையான உயிர் உரிமையில் ஏதும் செய்ய முடியாத ஒரு மாநில அரசின் மீதும் இந்த நாட்டின் அமைப்பின் மீதும் ஒரு மாநிலத்தின் மக்களுக்கு எவ்விதமான மதிப்பும் நம்பிக்கையும் இருக்க முடியும்?

முதல்வர் மெஹ்பூபாவின் செயல்பாடுகளை விமர்சித் திருக்கும் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா “என் ஆட்சிக் காலத்தில் நான் செய்த அதே தவறுகளையே மெஹ்பூபா இப்போது செய்கிறார். திரும்பத் திரும்ப. மேலும் பல மடங்கு” என்று குறிப்பிட்டிருக்கிறார். உமர், மெஹ்பூபா மட்டுமல்ல; காஷ்மீர் முதல்வர் நாற்காலியில் யார் அமர் ந்தாலும் இதே தவறுகளையே செய்ய நேரிடும். ஏனென்றால் மேலே டெல்லி ராஜாக்கள் அதே தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். அடுத்தடுத்து காஷ்மீரில் உருவான மிதவாத மக்கள் தலைவர்கள் எல்லோரையுமே அதிகார ஆசையைத் துருப்புச் சீட்டாக்கி தம் கைப்பாவையாக்கிக் கொள்வதையே உத்தியாக வைத்திருக்கிறார்கள் டெல்லி ராஜாக்கள். மக்கள் பெரிய நம்பிக்கையோடு வாக்களிக்கிறார்கள். முஃப்தி முஹம்மது சயீது முதல்வர் பதவியில் அமர்கிறார். அடுத்த 10 மாதங்களில் மரணிக்கிறார். முதல்வரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றோர் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டவில்லை. ஒரு 22 வயது இளைஞர், ஆயுததாரி, புர்ஹான் வானியின் இறுதிச் சடங்கில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் பங்கேற்றிருக்கிறார்கள்; தொடர்ந்து 10 நாட்களாக நடக்கும் கலவரங்களில் இதுவரை 49 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்றால் இந்தச் செய்தி நமக்கு உணர்த்துவது என்ன? தந்திரங்களால் மக்களை ஆளலாம்; இதயங்களை வெல்ல முடியாது.

ஒரு வார்த்தை நம்மிடம் இல்லையா?

காஷ்மீர் 1980-களில் எதிர்கொண்ட பயங்கரவாதம் வேறு; இன்று எதிர்கொள்ளும் சவால் வேறு. அண்டை நாட்டில் பயிற்றுவிக்கப்பட்டு, உள்ளே அனுப்பப்படும் குழுக்கள் அல்ல இன்று காஷ்மீர் எதிர்கொள்வது. இவர்கள் சொந்த மண்ணின் மைந்தர்கள்; சிறுவர்கள்; படித்த இளைஞர்கள். ராணுவத்தை எதிர்கொள்ள கையில் கற்களோடு ஓடி வரும் இளைஞர்களைப் பயங்கரவாதிகள் ஆக்கிவிடுதல் எளிது. காஷ்மீர் நம்முடன் இருக்காது.

காஷ்மீர் கலவரத் தடுப்புப் பணியில் இம்முறை ‘பெல்லட்’ ரகக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. 2010 கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர் பலியானதைத் தொடர்ந்து, அதிகம் உயிர் சேதத்தை விளைவிக்காத வகைக் குண்டுகள் என்று கூறி அறிமுகப்படுத்தப்பட்டவை இவை. ஒவ்வொரு குண்டும் பல சிறு துகள்களாகச் சிதறிக் காயம் ஏற்படுத்தும் இவ்வகைக் குண்டுகளை வெளிநாடுகளில் தூரத்திலிருந்து, கலவரக்காரர்களின் முழங்கால்களுக்குக் கீழே தாக்கும் வகையில் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. காஷ்மீரிலோ நிலைமை தலைகீழாக இருக்கிறது.பெல்லட் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கின்றனர்; ஐந்து வயது சிறுமி உள்பட. பலருக்கு முகத்தில், கண்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது; பார்வை பறிபோயிருக்கிறது. நகர் மருத்துவமனையில் நிலைமையைச் சமாளிக்க டெல்லியிலிருந்து சென்ற ‘எய்ம்ஸ்’ மருத்துவர்கள் குழு காஷ்மீர் சூழலைப் போர்ச் சூழலோடு ஒப்பிட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், வெளியிலிருந்து காஷ்மீர் மக்களை நோக்கிச் சொல்லும் வார்த்தைகள் எவ்வளவு பரிவானதாக இருக்க வேண்டும்? துளிக்கருணையின்றி தொலைக்காட்சி விவாதங்களில் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் பாஜகவினரும், சங்க பரிவாரங்களும். மறுபுறம், காஷ்மீர் தீக்குத் தொடர்ந்து எண்ணெய் வார்த்துவரும் பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தரப்பிலிருந்து வெளியிடப்படும் அறிக்கை சொல்கிறது, “இப்படிப்பட்ட சூழலில், முழு பாகிஸ்தானும் காஷ்மீரிகளின் பின் நிற்கிறது. தார்மீகரீதியாக, அரசியல்ரீதியாக, ராஜாங்கரீதியாக!”

இந்தக் கட்டுரையை முடிக்கும் தருணம் வரை காஷ்மீர் மக்களுக்குச் சொல்ல நம்முடைய பிரதமர் மோடியிடம் ஒரு வார்த்தைகூட இல்லை. அவர்கள் படைகளை வெளியேறச் சொல்லிக் கல் எறிகிறார்கள். பதிலுக்கு கடந்த 10 நாட்களில் மட்டும் மேலும் 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புகிறது அரசு. மோடி சொல்ல விரும்பும் செய்திதான் என்ன?

அதிகாரப் பகிர்வு எப்படி இறையாண்மைக்கு எதிராகும்?

மூன்று அணு ஆயுத நாடுகள் மத்தியில் இருக்கும் ஒரு பிராந்தியத்தின் எதிர்காலத்தை அதன் பூர்வகால வரலாற்று அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும்; காஷ்மீருக்குச் சுதந்திரம் அளிக்க வேண்டும் எனும் பேச்சு புவியரசியல் வியூகமற்றது. நிச்சயமாக, காஷ்மீர் என்பது இன்றைக்கு காஷ்மீர் மட்டும் அல்ல; சீனா, பாகிஸ்தான், இரு நாட்டு ராணுவங்கள், அணு ஆயுதங்கள், காஷ்மீருக்குள் வளர்ந்துவரும் மத அடிப்படைவாதம், அண்டை நாடுகள் பின்னின்று இயக்கும் ஆயுததாரிகள், முக்கியமாக இந்தியா எனும் ஒன்றியம் கோத்து வைத்திருக்கும் மாலையின் முக்கியமான முடிச்சு.

காஷ்மீர் அவிழ்ந்தால், அடுத்து பஞ்சாப் உதிரும், நாகாலாந்து உதிரும், அடுத்து தேசம் சுக்குநூறாகச் சிதறும் என்கிற இந்திய அரசின் அச்சம் அர்த்தமற்றது அல்ல. காஷ்மீருக்கு நம்மால் சுதந்திரம் அளிக்க முடியாது. அதேசமயம், இந்திய ஒன்றியத்துக்குள்ளிருக்கும் ஏனைய இந்தியர்களைப் போல, காஷ்மீரிகளின் சுதந்திர வாழ்க்கையை உறுதிப்படுத்தவிடாமல் இந்திய அரசைத் தடுப்பது எது? முதலில் அச்சத்திலிருந்து டெல்லி விடுபட வேண்டும். அடுத்து, மாநிலங்களின் உரிமையை நாளுக்கு நாள் உள்ளிழுத்து அது உருவாக்க நினைக்கும் மையப்படுத்தப்பட்ட அதிகாரக் கனவிலிருந்து விடுபட வேண்டும். இந்திய ஒருமைப்பாட்டுக்கு இவை ஒருபோதும் நல்லதல்ல.

ஒருகாலத்தில் தமிழ்நாடு தனிநாடாகிவிடும் என்று பயந்தவர்கள் உண்டு. பஞ்சாப், அஸாம், திரிபுரா, நாகாலாந்து என்று அடுத்தடுத்து இப்படிப் பிரிவினைப் பேரச்சம் சூழ்ந்திருந்த பல மாநிலங்களில் இன்றைய நிலை என்ன? அயர்லாந்து விவகாரத்தை பிரிட்டன் எப்படி எதிர்கொண்டது? க்யூபெக் விவகாரத்தை கனடா எப்படி எதிர்கொண்டது? ஹாங்காங் விவகாரத்தை சீனா எப்படி எதிர்கொள்கிறது?

மன்மோகன் சிங் ஆட்சிக் காலகட்டத்தில் ஒரு அருமையான வாய்ப்பை நாம் இழந்தோம். சிங்கின் முக்கியமான சகாக்களில் ஒருவரான ப.சிதம்பரம் காஷ்மீரின் இன்றைய கலவரம் தொடர்பாகக் கொடுத்திருக்கும் பேட்டி ஒருவகையில், காஷ்மீரிகளுக்கு நம் அரசும் சமூகமும் இழைத்திருக்கும் அநீதி தொடர்பான ஒப்புதல் வாக்குமூலம்: “காஷ்மீரிகளுக்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளையும் நம்பிக்கையையும் நாமே சிதைத்தோம்.”

ஒரு முக்கியமான பேச்சுவார்த்தையில் பேரத்தை டெல்லி தரப்பு எவ்வளவு நிராகரித்தது என்பதையும், காஷ்மீரில் படைகளை எல்லையை நோக்கி நகர்த்தும் முடிவை நோக்கி அரசு நகர்ந்தபோது, அரசுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் ராணுவத்திடமிருந்தும் எப்படியெல்லாம் எதிர்ப்புகள் வந்தன என்பதையும் சிதம்பரம் ஒரு பேட்டியில் சுட்டிக்காட்டியிருக்கிறார். “காஷ்மீர் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறை வேற்றுவோம் எனும் நம்பிக்கையை நாம் உருவாக்க வேண்டும். நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்துக்குக் குந்தகம் ஏற்படாத வகையில், அவர்களுக்கான சட்டத்தை அவர்களே உருவாக்கிக்கொள்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக நாம் இலங்கைக்குப் போதிக்கிறோம்; நாம் இங்கும் அதைச் செய்ய வேண்டும்” என்கிறார் சிதம்பரம்.

அடிப்படையில் இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம். மாநிலங்களுக்கு இன்றைக்கு டெல்லி கொடுக்கும் முக்கியத்துவம் என்ன என்பதற்கு மாநிலங்களிடை மன்றத்தை 10 ஆண்டுகளுக்குப் பின் அது கூட்டியிருப்பது ஒரு உதாரணம். பாதுகாப்பு, வெளியுறவு போன்ற மிக முக்கியமான துறைகள் நீங்கலாக ஏனைய துறைகளில் பெருமளவு அதிகாரத்தை மாநிலங்களோடு டெல்லி பகிர்ந்துகொள்ள வேண்டும். ராணுவம் எல்லைகளைப் பாதுகாக்கட்டும். எந்த ஒரு மாநிலத்தின் உள்பாதுகாப்பும் மாநிலக் காவல் துறையிடமே இருக்கட்டும். நவீனப்படுத்தப்பட்ட, அந்தந்தப் பிராந்திய மக்களைப் பெருமளவில் கொண்ட இன்றைய திரிபுராவின் காவல் துறை, ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை எப்படி முடிவுக்குக் கொண்டுவந்தது என்பதும், அமைதிச் சூழலை எப்படி இணக்கமாக உருவாக்கியது என்பதும் டெல்லி அகர்தலாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம். மேலும், ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் போன்ற ஒரு ஜனநாயக விரோதச் சட்டத்தை இந்தியா முடிவுக்குக் கொண்டுவரவும் காஷ்மீர் ஒரு வரலாற்றுத் தருணத்தை நமக்கு வழங்குகிறது. இந்தச் சமயத்தில் அந்த முடிவை எடுப்பது காஷ்மீரிகளிடம் இந்திய அரசு இழந்திருக்கும் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும் கூடுதலாக உதவும்.

அந்தந்த மாநில மக்களை அவர்களைக் கொண்டே முழுமையாக ஆள விடுவதும் உண்மையான சுயாட்சியை மாநிலங்களுக்கு வழங்குவதும் எந்த வகையிலும் இந்திய இறையாண்மைக்குக் கேடு விளைவிக்கக் கூடியது அல்ல. மாறாக இந்திய மனதில் உறைந்திருக்கும் பிரிவினை அச்சமும், அந்த அச்சம் வெளிப்படுத்தும் அடக்குமுறையும், அண்டை நாடுகளிலிருந்து போடப்படும் தூபமும் இந்தியாவின் கொடூரக் கனவை நிஜமாக்கிவிடும் அபாயம் கொண்டவை.

காஷ்மீர் போன்ற உலகின் நீண்ட காலமாக இழுத் தடிக்கும் ஒரு விவகாரத்தைத் தீர்வை நோக்கி நகர்த்த துணிச்சலும் அன்பும் நிறைந்த ஒரு பெரிய மனம் மட்டுமே நமக்குத் தேவைப்படுகிறது. கோபத்தினூடே வெளிப்படும் அன்புக்கான கோரிக்கையையும் புறக்கணிப்பின் வலியையும் புரிந்துகொள்ளும் மனம்; கல்லோடு வருபவர்களைக் கட்டியணைத்து ஆறுதல் பகிர, கைகளை நீட்டி நிற்கத் துணியும் மனம். இந்திய அரசியல் சட்டம் அப்படியான மனதுக்கு எந்தத் தடையையும் விதிக்கவில்லை. அது உறுதியளிக்கும் இந்நாட்டு குடிமக்கள் அனைவருக்குமான சமத்துவத்தையும் சமநிலையையும் காஷ்மீரிகளாலும் உணர முடிந்தால் காஷ்மீரிகள் கல்லெடுக்க என்ன தேவை இருக்கிறது? டெல்லி முதலில் நம்பிக்கையை காஷ்மீரில் விதைக்கட்டும். அது அறுவடையாகும்போதுதான் அங்கு தேசத்தின் வளர்ச்சியைப் பற்றி நாம் விவாதிக்க முடியும்!

- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x