Last Updated : 25 Jan, 2017 10:10 AM

 

Published : 25 Jan 2017 10:10 AM
Last Updated : 25 Jan 2017 10:10 AM

உலகுக்குத் தலைமை வகிக்க ஒரே சாலை, ஒரே மண்டலம்

உலகப் பொருளாதாரச் சூழலை மேம்படுத்துவதே நம்முடைய லட்சியம் என்று டாவோஸில் கூடும் உலகப் பொருளாதார அரங்கு, வழக்கமான உலகச் சூழலில் கூறுவது வழக்கம். ஆனால் இப்போது அப்படிப்பட்ட காலம் இல்லை. ‘உலகமயமாதல்’ என்ற கொள்கையே இப்போது அதை பூசித்தவர்களாலும் விமர்சித்தவர்களாலும் மேலும் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. உலகமயமாதலை உலகின் எல்லாப் பகுதியிலும் சாடுகிறார்கள், வழக்கமான இடதுசாரிகளாலோ இடதுசாரி சார்பு கொள்கை உள்ளவர்களாலோ அல்ல; பெரிய பணக்காரர்களாகவும் மக்களிடையே செல்வாக்கு பெற்றவர்களாகவும் ஜனநாயக நாடுகளில் பெரிய தலைவர்களாகவும் இருப்பவர்களால்தான் கடுமையாகச் சாடப்படுகிறது.

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் நாடாக விளங்கும் சீனாவின் அதிபர் ஜி ஜின்பெங் இப்போது உலகமயமாதல் கொள்கையைத் தீவிரமாக ஆதரித்துப் பேசுகிறார், எல்லா நாடுகளும் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார். தீவிர வலதுசாரியாக இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இப்போது உலகமயமாதல் கொள்கையைக் கடுமையாக விமர்சிக்கிறார். இந்த நிலையில் உலகப் பொருளாதார நிலையை எப்படி மேம்படுத்துவது?

டாவோஸ் உலகப் பொருளாதார அரங்கு கூட்டத்தில் பங்கேற்கும் உலகின் செல்வாக்கு மிக்க நாடுகளின் தலைவர்களை மனக் கண் முன் கொண்டுவருவோம். அமெரிக்காவிலிருந்து டொனால்டு ட்ரம்ப், ரஷியாவிலிருந்து புதின், ஜப்பானிலிருந்து அபே, சீனாவிலிருந்து ஜி ஜின்பெங், இந்தியாவிலிருந்து நரேந்திர மோடி, துருக்கியிலிருந்து எர்டோகன், இஸ்ரேலிலிருந்து நேதான்யாகு; உலகின் முக்கியமான நாடுகள் அனைத்துமே ஆதிக்க சுபாவம் அதிகம் உள்ள தலைவர்களால்தான் ஆளப்படுகின்றன. இவர்கள் தாங்கள் ஆளும் நாடுகளைப் போலவே, ஒவ்வொரு விதத்திலும் தனித்துவம் மிக்க ஆளுமை கொண்டவர்கள். ஆனால் இவர்கள் அனைவரிடமும் உள்ள பொதுவான அம்சங்கள் - மக்களிடையே செல்வாக்கு, அதிதீவிர தேசியவாதம், வெளிப்படையான தன்மை, சில சமயம் முரட்டுத்தனமான பேச்சு - என்பவை.

இப்போதைய உலகில் ட்ரம்பின் அமெரிக்கா மட்டுமே அரசியல் அதிகாரம், ராணுவம், பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வலிமை வாய்ந்ததாக இருக்கிறது. புதினுடைய நிலைமையும் பரவாயில்லை ரஷியா அவருடைய முழுக்கட்டுப்பாட்டில் இருக்கிறது, அத்துடன் ட்ரம்பும் அவருக்கு நண்பராகவே இருக்கிறார். ஜப்பானில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் பிரதமர் ஷின்சோ அபே உள்நாட்டில் கடும் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கிறார். ஜி ஜின்பெங்கின் சீனாவுக்குத்தான் இப்போது உலகத் தலைமையேற்பதற்கான வாய்ப்பு அதிகமாகியிருக்கிறது. உலகின் ஒற்றை வல்லரசான அமெரிக்கா இப்போது உள்நாட்டு விவகாரங்களில் மட்டும் அதிகக் கவனம் செலுத்துவது என்று தீர்மானித்துவிட்டதால் சீனாவுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மோடி தலைமையிலான இந்தியாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன. அமெரிக்காவுடன் இப்போது நல்லுறவு நிலவுகிறது, இது மேலும் வலுப்படவே வாய்ப்பு அதிகம். பாகிஸ்தானுடன் ரஷியா நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டாலும் ரஷியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பொதுவான ஒத்துழைப்பு அம்சங்கள் பல இருக்கின்றன. இந்தியாவை நல்ல கூட்டாளியாகவும் முதலீட்டுக்கு ஏற்ற நம்பகமான நாடாகவும் கருதுகிறது ஜப்பான்.

இந்தியாவுக்கு எரிச்சலை ஊட்டும் வகையில் அவ்வப்போது பேசினாலும், விசா வழங்கும்போது சில எரிச்சலூட்டும் செயல்களைச் செய்தாலும், ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே செயல்பட்டாலும் வெளியுறவு வர்த்தகப் பற்றுவரவில் 7,000 கோடி டாலர்கள் உபரி இருப்பதால் இந்தியாவுடனான உறவை குலைத்துக் கொள்ள சீனா முயற்சி செய்யாது. தன்னுடைய நாட்டின் தொழில், வர்த்தக நலன்களைப் பாதுகாக்க காப்பு வரிகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிகப்படுத்தி, சீனா எளிதாக விற்க முடியாமல் தடைகளை ஏற்படுத்தினால், இந்தியாவுடனான வர்த்தக உறவை சீனா அதிகப்படுத்தித்தான் தீர வேண்டும்.

இந்தச் சூழலில் உலகம் தொடர்பான கண்ணோட்டத்தை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும். சீனாவுடனான உறவுகளிலிருந்தே அதைத் தொடங்க வேண்டும். இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளைக் குறிவைத்து சீனா காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. உற்பத்தித் தொழிற்சாலைகளைப் பொருத்தவரை அது உலகின் தன்னிகரில்லாத நாடாக இருக்கிறது. சுயநலம், சுயவளம்தான் அதனுடைய குறிக்கோள். உள்நாட்டு தொழில், வர்த்தக நலன்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் வேண்டாம் என்று ட்ரம்புக்கு அறிவுரை கூறுகிறது சீனா. தடையற்ற வர்த்தகம், சட்டங்களை மதித்தல், உலக வர்த்தக நியதிகள் பற்றியெல்லாம் சீனா பேசுவது ஏமாற்றுவேலை.

உலகின் புதிய தொழில்நுட்பங்களைத் தன்னுடைய நாட்டுக்குள் நுழையவிடாமல் அதுதான் தடுக்கிறது. கூகுள் முதல் ட்விட்டர் வரை அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. காப்பு வரி, வரியற்ற தடைகள் மூலம் பிற நாட்டுப் பொருள்களைத் தன்னுடைய நாட்டுக் குள் வரவிடாமல் தடுக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களின் அலுவலகங்களில் திடீர் சோதனைகளை நடத்துகிறது, தன்னுடைய கடற்படையின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற் காகவே சர்வதேசக் கடல் பரப்பில் செயற்கையாகத் தீவுகளை உருவாக்குகிறது, தன்னுடைய வசதிக்காக சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாருக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. உலகுக்குத் தலைமை தாங்கும் உரிமையை சீனம் கோருகிறது.

உலகின் பிற வல்லரசுகள் அனைத்தும் தங்களுடைய உள்நாட்டு விவகாரங்களைக் கவனிக்கும் நேரத்தில் ‘ஒரே பாதை’, ‘ஒரே மண்டலம்’ என்று சீனா பேசுகிறது. ‘64 நாடுகளை உள்ளடக்கிய 100 ஆண்டு திட்டம்’ என்று சீனத்தின் முக்கிய ஊடகத் தொடர்பாளர் கூறுகிறார். ‘நேட்டோ’ என்ற அமைப்பைப்போல சீனம் புதிதாக ஒன்றைக் கூறவில்லை.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளுடன் சீனா கொண்டுள்ள உறவானது இந்தியாவைச் சுற்றி வளைக்கும் வியூகமாகவே இருக்கிறது. இந் நிலையில் தன்னுடைய ராணுவ உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தியா தீர்மானித்தாக வேண்டும். இதைத் தொடங்குவதற்கு முன்னால் பழைய சிந்தனைப் போக்கிலிருந்து வேறு திசைக்கு மாற வேண்டும். சீனாவின் சில ராணுவ வீரர்களைச் சுட்டுக்கொல்வதால் அது அஞ்சி பின் வாங்கிவிடுமா? அல்லது தவாங் பகுதிக்காக இந்தியாவுடனான 7,000 கோடி டாலர் வர்த்தக உபரியை விட்டுக்கொடுக்க சீனா முன்வருமா? ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று தடை விதித்துவிட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பலி கொடுக்க சீனா தயாராக இருக்குமா? 1962-லிருந்து 2017-க்குள் இந்தியா வெகு தூரம் பயணப்பட்டுவிட்டது. எனவே நம்முடைய ராணுவ வியூகக் கண்ணோட்டமும் மாற வேண்டும்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணைத் தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x