Published : 14 Mar 2017 10:32 AM
Last Updated : 14 Mar 2017 10:32 AM
இந்தியாவின் ஆகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசம், நாட்டின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் மாநிலமாக விளங்குவதன் காரணமாக அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல், ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் கவர்வதில் ஆச்சரியமில்லை. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள பெரும் வெற்றி, மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு ஆதரவான சக்திகளுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக இங்கு பெற்ற வெற்றியை 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் தக்கவைத்துக்கொள்வது சாத்தியமே இல்லை என்று பலரும் கருதிய நிலையில், ஏறக்குறைய 2014 வெற்றிக்கு இணையான வெற்றியை இப்போது பாஜக பெற்றிருப்பது, இந்தியா என்ற கருத்தின் (தி ஐடியா ஆஃப் இந்தியா) மீதான பலமான அடியாக மதச்சார்பற்ற, தாராளவாத சிந்தனையாளர்களால் பார்க்கப்படுகிறது.
காலனியாதிக்கத்துக்கு எதிரான, நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இந்தியா உருவெடுத்தது. மத அடிப்படையிலான தேசப் பிரிவினை கூட, இந்தியா அப்படி உருவெடுப்பதைத் தடுத்துவிட முடியவில்லை. ஆனால், அந்த நிலை இனி நீடிக்குமா என்ற ஐயத்தை பாஜகவின் இந்த வெற்றி உருவாக்கியிருக்கிறது. ‘‘2024 பொதுத் தேர்தல் வரை எதிர்க்கட்சிகள் வெற்றியை மறந்துவிட வேண்டியதுதான்’’ என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா சொல்லியிருக்கிறார். பெரிதும் பலவீனமான நிலையில் காங்கிரஸும், மூட்டையிலிருந்து சிதறிய நெல்லிக்காய்களைப் போல எதிர்க்கட்சிகளும் இருக்கும் நிலையில், அப்துல்லாவின் கணிப்பு உண்மையாகக் கூடிய வாய்ப்பிருக்கிறது.
ஒற்றைக் கட்சி ஆட்சி
உத்தர பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதுடன், 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் இரண்டு சதவீத வாக்குகளுடன் ஓரிடம் கூடப் பெற முடியாதிருந்த மணிப்பூரில் இன்று 36% வாக்குகள், 21 இடங்களை வென்றிருப்பது பாஜகவின் மற்றுமொரு சாதனை. கோவாவிலும் மணிப்பூரிலும் காங்கிரஸ் பாஜகவை விட அதிக இடங்களை வென்றபோதிலும் வாக்கு சதவீதத்தில் பாஜகவுக்கே முதலிடம். இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை காங்கிரஸுக்கு இல்லாத நிலையில், அடுத்த இடத்திலிருக்கும் பாஜக பிற உதிரிக் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியுடன் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இதோ கோவாவில் மனோகர் பாரிக்கர் முதல்வராகிவிட்டார். அதேபோல், வட கிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை அசாமை ஏற்கெனவே கைப்பற்றியுள்ள நிலையில், இப்போது மணிப்பூரில் பெற்றுள்ள வெற்றி பாஜகவின் வரலாற்றில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல். அசாம், மணிப்பூர் வெற்றி பாஜகவை முழுமையான தேசியக் கட்சியாக்குகிறது. கடந்த 20 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணி ஆட்சி மட்டுமே சாத்தியம் என்றிருந்த நிலை போய், மீண்டும் ஒற்றைக் கட்சி ஆட்சி நிலைபெறுவதற்கான அறிகுறியாக பாஜக இந்தத் தேர்தல்களில் பெற்றுள்ள வெற்றியைப் பல அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.
உத்தர பிரதேசத்தில் பாஜக பெற்றிருக்கும் வெற்றியின் மிக முக்கியமான அம்சம் அது சாதி, மத அடையாள அரசியலைத் தாண்டி இருப்பதாகச் சொல்லப்படுவதுதான். உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் மட்டுமல்லாமல் தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் அதிக மாக உள்ள பகுதிகளிலும் பெரும் வெற்றிபெற்றுள்ளதால், இப்படி கூறப்படுகிறது. ஆனால், பாஜகவின் தேர்தல் வியூகம் சாதி, மத அடையாளங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டே அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மாயாவதியின் வலுவான அடித்தளமான ஜாதவ் சமூகத்தைத் தவிர்த்த பிற தலித் சாதியினரைத் தங்கள் பக்கம் கொண்டுவந்தது, யாதவ் சமூகத்தினரைத் தவிர்த்த பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை ஒருங்கிணைத்து தங்கள் பக்கம் கொண்டுவந்தது பாஜகவின் தேர்தல் வியூகம்.
இத்தகைய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட அக்கட்சி அதிக வாய்ப்பளித்தது. அடுத்ததாக, முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பகுதிகளிலும் ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தாத பாஜக வென்றதற்கு முக்கியக் காரணம், முஸ்லிம் வாக்குகள் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கிடையே பிளவுபட்டதாகும். ஆக, சுமார் 40 45% வாக்குகளுக்காக அகிலேஷும் மாயாவதியும் போட்டியிட, மீதமுள்ள 55 - 60 % வாக்குகளைக் குறிவைத்தார் அமித் ஷா.
குறையாத ஆதரவு
இந்த வெற்றி பாஜகவின் வெற்றி என்பதை விட, பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி என்பதை அவரது எதிரிகளும் ஒப்புக்கொள்ளத் தயங்க மாட்டார்கள். ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை சொல்லிக்கொள்ளும்படியாக எந்தச் சாதனையையும் மோடி நிகழ்த்தாத நிலையில், 2014 தேர்தலில் தான் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நிலையில், அவர் ஈட்டியுள்ள இந்த வெற்றி இன்னமும் மக்கள் அவர் மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறது.
குறிப்பாக, பணமதிப்பு நீக்கம் ஊழலை ஒழிப்பதற்கான மாபெரும் நடவடிக்கை என்று பெரும்பான்மையான மக்கள் கருதுவதையே மும்பை மாநகராட்சி தேர்தலிலும், இப்போது உத்தர பிரதேசத் தேர்தலிலும் பாஜக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது. அகிலேஷ் யாதவின் மோசமான ஆட்சி பாஜகவின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்றாலும், அவருக்கு மாற்றாகப் பார்க்கப்படக் கூடிய மாயாவதியும் பெருத்த தோல்வியைச் சந்தித்திருப்பது மிகவும் கவலை தரும் விஷயம். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கைகோத்திருக்கும் பட்சத்தில், பாஜகவை வீழ்த்தியிருக்க முடியும். ஆனால், அப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
காங்கிரஸும் இடதுசாரிகளும் மிக பலவீனமாக உள்ள இந்நிலையில், அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக வலிமையான ஓர் அணியை உருவாக்குவது என்பது சாத்தியமாகாது என்றே தோன்றுகிறது. ஆனாலும், 2019 பொதுத் தேர்தலிலும் பாஜகவின் வெற்றியைத் தடுக்கவே முடியாது என்று இப்போதே எதிர்க்கட்சிகள் சோர்ந்துபோவது தேவையற்றது. இரண்டு ஆண்டுகள் என்பது அரசியலில் மிக நீண்ட காலம். 2015 பிஹார், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்கள் மோடி ஒன்றும் தடுத்து நிறுத்தப்பட முடியாத சக்தியல்ல என்பதை ஏற்கெனவே காட்டியிருக்கின்றன.
இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைத்திருக்கும் ஒரே ஆறுதல் பரிசு பஞ்சாப் மட்டுமே. பாதல் குடும்பத்தினரின் அதீத ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், பஞ்சாப் இளைஞர்களை வெகுவாகப் பீடித்திருக்கும் போதைமருந்துப் பழக்கம் ஆகியவற்றின் காரணமாக அகாலிகள் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர். ஓராண்டு முன்பு வரை அகாலிகளுக்கான மாற்று ஆம் ஆத்மி கட்சிதான் என்றிருந்த நிலை கடந்த ஆறேழு மாதங்களில் தலைகீழாக மாறியது. ஆம் ஆத்மி கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்கள். தானே பஞ்சாப் முதல்வராக வேண்டும் என்று அர்விந்த் கேஜ்ரிவால் கனவு கண்டது, பஞ்சாப் தலைவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்காமல் டெல்லியிலிருந்தே எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முயன்றது எனப் பல காரணங்களால் தனக்கிருந்த வாய்ப்பை ஆம் ஆத்மி கட்சி கெடுத்துக்கொண்டது.
அந்த 90 வாக்குகள்
மணிப்பூரில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்றது என்பது இந்தத் தேர்தலின் ஆகப் பெரும் சோகம். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்கள். ஆனால், மக்களாட்சியில் மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி என்பதே யதார்த்தம். மக்கள் தங்கள் தகுதிக்கேற்ற தலைவர்களையே பெறுகிறார்கள் என்பதே உண்மை. மணிப்பூர் மாநில மக்களின் உரிமைக்காக 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த ஒரு மாபெரும் போராளி, ஓரிரு ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருந்தால் அதைப் புரிந்துகொள்ள முடியும். வெறும் 90 வாக்குகள் பெறுவது என்பது மக்கள் எவ்வளவு நன்றியுடையவர்கள், தார்மிக எண்ணம் கொண்டவர்கள் என்பதைக் காட்டுகிறது. ஏதோ 90 பேராவது இருந்தார்களே! மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது எவ்வளவு பெரிய சோகமான நகைச்சுவை.
- க.திருநாவுக்கரசு,
சமூக-அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: kthiru1968@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT