Published : 22 Sep 2016 09:39 AM
Last Updated : 22 Sep 2016 09:39 AM
செப்டம்பர் 18 ஞாயிறு 2016, பயங்கர செய்தியுடன் விடிந்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், எல்லைப் பாதுகாப்புக் கோட்டருகில் உள்ள உரி பகுதியில் இருக்கும் ராணுவப் படைப் பிரிவின் நிர்வாகத் தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்திருந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தார்கள். பயங்கரவாதிகள், இந்திய எல்லைக்குள் ஊடுருவிய நான்கு பாகிஸ்தானியர்கள் என்கிறது செய்தி.
எப்படி நடந்தது இது? இத்தகைய தாக்குதல் நமக்குப் புதிதல்ல. நாடாளுமன்றத் தாக்குதலின்போதும் இதே கேள்வி எழுந்தது. மும்பை தாக்குதல், பத்தான்கோட் தாக்குதலின்போதும் இதே கேள்வி எழுந்தது. நாம் கோட்டை விடுகிறோமா? தெளிவான பதில் இல்லை. நமக்குள்ளேயே காட்டிக்கொடுப்பவர்கள் இருக்கலாம் என்கிற சந்தேகத்தை யாரும் பேசுவதில்லை. அப்படிப் பேசுவது, ‘அரசியல் தவறு’ (politically incorrect). வழக்கம்போல, இந்த முறையும் அந்தக் கேள்வி பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆக்ரோஷமான கண்டனக் குரல்களோடு கைகள் எதிரியை நோக்கி நீட்டப்பட்டுவிட்டன.
பல்லுக்குத் தாடை
உரி இத்தனை நாள் பாதுகாப்பாக இருந்ததே அதிசயம் என்றார் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர். காஷ்மீரின் மையப் பகுதியிலிருந்து தள்ளி ஜீலம் நதி ஓடும் மலைப் பிரதேசமான இந்த இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியை ஒட்டியிருப்பது. இரண்டு பக்கங்களிலும் போக்குவரத்து உண்டு. எனினும், பாதுகாப்புப் பணியை இந்திய ராணுவமே ஏற்றிருக்கிறது. மக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே இங்கு மோதல் இல்லை.
உரி தாக்குதலுக்கு இந்தியா கண்டிப்பாக எதிர்வினையாற்ற வேண்டும். ஆனால், எப்படி? “தாக்குதலின் பின்னணியில் இருப்போர் தண்டிக்கப்படுவார்கள்’’ என்றார் பிரதமர் மோடி. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சொன்னதாக ஒரு செய்தி வந்தது: “நம் வீரர்களின் மரணத்துக்குப் பழிவாங்குவோம்; (நாம் தேர்வு செய்யும்) தக்க சமயத்தில்.” காஷ்மீர் விவகாரங்கள் குழுவில் இருக்கும் பாஜக தலைவர் ராம் மாதவ் சொன்ன கருத்து இன்னும் வீராவேசமானது: “அவர்கள் எடுக்கும் ஒரு பல்லுக்குத் தாடையைப் பிடுங்குவோம்”.
தக்க சமயத்தில் தாக்குவோம்
அன்று இரவு எல்லா ஆங்கில சேனல்களும் ஒரே விதமான கேள்விகளைத் தங்கள் விவாத மேடையில் கேட்டன. ‘எப்போது?’ அதாவது, இந்தியா எப்போது பதிலடி கொடுக்க இருக்கிறது? எந்த வகையில் கொடுக்கும்? அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா?
ஒரு டி.வி. பாக்கி இல்லாமல் காரசாரமாக நடந்த விவாதங்களைக் கேட்டு நான் கலவரப் பட்டுப்போனேன். நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்களே கையில் குண்டுகளுடன் போருக்குக் கிளம்பிவிடுவார்கள்போல் இருந்தது. விவாத மேடைக்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள், அரசியல் ஆய்வாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அதோடு குறைந்தது இஸ்லாமாபாதிலிருந்த இரண்டு பாகிஸ்தானியர்கள்: ஒரு பத்திரிகையாளர் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. எப்படி இவர்கள் கூப்பிட்டதும் அவர்கள் வருகிறார்கள் என்று வியப்பாக இருந்தது. “காஷ்மீரில் நடக்கும் இந்திய அரசின் சர்வாதிகாரமும் ராணுவ அடக்குமுறையும் எல்லோருக்கும் தெரியும். உள்ளூரிலேயே உங்களுக்கு எதிரிகள் இருக்கும்போது எல்லாவற்றுக்கும் ஏன் பாகிஸ்தானைக் குற்றவாளியாக்குகிறீர்கள்?” என்றார்கள் அவர்கள். ஒரு டி.வி. முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபிடம் பேட்டி கண்டது. “உங்களது பிரச்சினைக்கெல்லாம் பாகிஸ்தானைக் குற்றஞ்சாட்டுவது உங்களுக்கு வழக்கமாகிவிட்டது. நீங்கள் தாக்கினால் நாங்களும் தாக்குவோம் தக்க சமயத்தில்” என்றார் அவர்.
இனி, போரால்தான் முடியும்
இந்தியத் தரப்பில் பேசியவர்களும் சளைத்தவர்கள் அல்ல. “நாமும் ஒரு தற்கொலைப் படையை உருவாக்குவோம்” என்றார் ஒரு முன்னாள் ராணுவத் தளபதி. “ராஜதந்திர முறையெல்லாம் தோற்றுவிட்டன, இனி போரால்தான் வழிக்குக் கொண்டுவர வேண்டும்” என்றார்கள் பெரும்பாலானோர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வெகு வேகமாக அதை ஆமோதித்தார்கள். “இதில் நாம் உணர்ச்சிவசப்படக் கூடாது, நிதானம் கடைப்பிடிக்க வேண்டும்” என்றவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். நாளை ஒரு போர் மூண்டால் அதற்கு முக்கியத் தூண்டுகோலாக நமது ஆங்கிலத் தொலைக்காட்சிகளே இருக்கும் என்று எனக்குத் தோன்றிற்று. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுக்கும் தாங்களே பிரதிநிதிகள் எனும் தொனியில் அவர்கள் பேசுவது கொடூரமானது.
காந்தஹார் விமானக் கடத்தல் நினைவிருக்கிறதா? அப்போது சில ஊடகங்கள் போட்ட கூச்சலில் அன்றிருந்த அரசு குழம்பி, பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை அனுப்பி கடத்தல்காரர்களுடன் நடத்திய பேரத்தில், இந்தியச் சிறையில் இருந்த மூன்று தீவிரவாதிகளை விடுவித்தது. அதன் விளைவின் தாக்கத்தை இன்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் எதிர்கொள்கிறோம். மும்பை தாக்குதலில் மிக மோசமாக நாம் பாதிக்கப்பட்டோம்.
பாகிஸ்தான் மொழியில் பேசுவோம்
பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கர வாதிகளில் ஒருவர் கையும் களவுமாக நம்மிடம் பிடிபட்டிருந்த நிலையிலும், அணு ஆயுதம் வைத்திருக்கும் பகைவனுடன் ராணுவ மோதல் ஏற்பட்டால், அதிக சேதம் விளையும் எனும் விவேகத்துடன்தான் காய்களை நகர்த்தினோம். அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை இதற்காகக் கடுமையாகச் சாடினார். “பாகிஸ்தானுடன் பேசுகையில், பாகிஸ்தானின் மொழியில் பேச வேண்டும்!” என்றார். இப்போது அவர் நாட்டுக்குப் பிரதமர். அவரைச் சுற்றியுள்ளவர்கள் நெருப்பைக் கக்கினாலும், உணர்ச்சிவசப்பட்டு சொற்களை உதிர்ப்பதில் விவேகமில்லை என்று புரிந்துகொண்டிருப்பார். வளர்ச்சியை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த அரசு உணர்ச்சிவசப்பட்டு ஒரு யுத்தத்தில் அகப்பட்டுக்கொண்டால் அதற்கு மிகப் பெரிய விலை கொடுத்தாக வேண்டும் என்பதை உணர்ந்துகொள்ள முடியாதவர் அல்ல அவர்.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான விரோதம் 1947 முதல் தொடர்வது. அடிப்படைப் பிரச்சினை காஷ்மீராகிப் போனது, நமது அரசுகள் தொடர்ந்து செய்துவரும் தவறுகளினால். காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நடந்துகொள்ளாமலே அவர்களை அந்நியப்படுத்திவிட்டன. காஷ்மீர் மக்கள் தாங்களும் இந்தியர்கள்தான் என்று நம்பத் தொடங்கும்போது பாகிஸ்தான் தானாக அடங்கும். எதிரிக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதில் அல்ல; நம்மவர்களுடனான சமாதானப் பேச்சுவார்த்தையில்தான் இருக்கிறது நம்முடைய பலமும் எதிரியின் பலவீனமும். “ஒரு பல்லுக்கு தாடையைப் பிடுங்குவோம்” என்று சொல்பவர்கள், எப்படிப்பட்டவரை தேசப் பிதாவாகக் கொண்ட நாட்டில் தாம் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். பயங்கரமான நவ காளி வெறியாட்டத்தின்போதுதான் காந்தி சொன்னார்: ‘கண்ணுக்குக் கண் பிடுங்கும் அணுகுமுறை ஒட்டுமொத்த உலகத்தையும் குருடாக்கிவிடும்!’
- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT