Published : 25 Sep 2013 11:49 AM
Last Updated : 25 Sep 2013 11:49 AM
சோமாலியா என்றால் வறுமை. சோமாலியா என்றால் ஏழ்மை. சோமாலியா என்றால் என்புதோல் போர்த்திய குழந்தை போட்டோக்கள். இது ஒரு காலம். சோமாலியா என்றால் கடற்கொள்ளையர்கள் என்று வேறொரு அறிமுகம் பத்தாண்டுகளுக்கு முன்னால் இன்னொரு சுப முகூர்த்தத்தில் செய்துவைக்கப்பட்டது. பிரதி வாரம் ஏதாவது ஒரு கப்பலை சோமாலியக் கொள்ளையர்கள் கைப்பற்றி பேரம் பேசி காரியம் சாதித்துக்கொள்வது பற்றிய செய்திகள் சமீப காலங்களில் வராதிருந்ததில்லை.
சோமாலியாவுக்கு இப்போது இன்னொரு அடையாளம் சித்தித்திருக்கிறது. கபாப் தெரிந்த மனித குலத்துக்கு ஷபாப் என்ற பேர் அவ்வளவாகத் தெரிந்திருக்காது. கென்யாவின் தலைநகரமான நைரோபியில், ஒரு பெரிய சைஸ் பல சரக்குக் கடை வளாகத்தில் (ஷாப்பிங் மால் என்றும் பாடம்) இந்த அல் ஷபாப் அமைப்பினர் நிகழ்த்திய கோரத்தாக்குதலும் விளைவுகளும் உண்டாக்கியிருக்கும் அதிர்ச்சி யைக் காட்டிலும் இந்த அமைப்பு குறித்து வரத்தொடங்கியிருக்கும் வேறு பல செய்திகள் தரும் அதிர்ச்சிகள் அனந்தம்.
தாலிபன் என்றால் மாணவன். ஷபாப் என்றால் இளைஞன். அல்லது இளமை. அர்த்தமெல்லாம் கிட்டத்தட்ட அதுதான். நோக்கமும் செயல்பாடுகளும்கூட. ஒசாமா பின்லேடன் உயிரோடு இருந்த காலத்தில் ஊட்டி வளர்த்த செல்லக் கிளிகளில் அல் ஷபாபும் ஒன்று. ஆனால் வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். ஒசாமாவே அதை வலியுறுத்திய தாகவும் ஒரு சேதி உண்டு. என்னத்துக்கு அல் காயிதாவின் ஃப்ராஞ்சைசீஸ் என்ற பேரெல்லாம்? அது தானே போய் ஆப்பைத்தேடி உட்கார் வதற்குச் சமம். நீங்கள் உங்களை ஒரு சுயம்புவாகவே அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் என்று அல் ஷாபாபின் ஆதி தலைவர் ஏதன் ஹாஷி ஃபராவிடம் சொல்லியிருக்கிறார்.
சோமாலியாவிலிருந்து பாஸ்போர்ட், விசாவெல்லாம் இல்லாமல் கட்டை வண்டி பிடித்தே கந்தஹார் க்ஷேத்திரத்துக்குப் போய்ச் சேர்ந்த முதல் தலைமுறை அல் ஷபாபினருக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் ஆசீர்வாதமும் அளித்து அனுப்பிவைத்தது சாட்சாத் ஒசாமாவேதான். அதன்பிறகு இராக்குக்குக் குடி பெயர்ந்திருந்த சோமாலிய இளைஞர்களைத் திரட்டி, இராக்குக்கே போய் பயிற்சியளித்து அவர்களை இரண்டாம் செட்டாக அனுப்பிவைத்தது ஒசாமாவின் அன்றைய தளபதியான முஹம்மது அடஃப் என்கிற அடஃப் அல் மஸ்ரி.
செப்டம்பர் 11, 2001க்குப் பிறகு ஷபாபின் ஆப்கானியத் தொடர்புகள் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. 2002ல் ஒசாமா பின்லேடன் கண்ணைக் காட்டியபிறகு அதிகாரபூர்வமாக அல் ஷபாபினர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளுக்கு எதிரான அமைப்பு. பத்தாது, அறிமுகம்? யதேஷ்டம்.
விசேஷமென்னவென்றால் மற்ற பல மத்தியக் கிழக்கு தீவிரவாத இயக்கங்களைப் போல் அல்லாமல் அல் ஷபாப் தனது ராணுவத்தைக் கூடியவரை அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளில் வசிக்கும் சோமாலிய இளைஞர்களைத் திரட்டி உருவாக்க முனைந்ததுதான். எதிரி இருக்கும் இடத்தில் என் ஆளுக்கு பாஸ்போர்ட் இருக்கவேண்டும். என் தேசத்தில் அவனுக்கு விசா போதும். என்ன ஒரு அற்புதமான ஃபாரின் பாலிசி!
பெரும்பாலும் படித்த இளைஞர்கள். பெரும்பாலும் நவீன தொழில்நுட்பம் அறிந்த வர்கள். இந்த ப்ரஸ் மீட் வைக்கிற ஜோலியெல்லாம் அல் ஷபாபுக்குக் கிடையாது. என்னத்தையாவது ஒன்றைப் பண்ணிவிட்டால், காரியம் முடிந்த கையோடு மொபைலை எடுத்து ட்விட்டருக்குள் நுழைந்து போடு ஒரு 140! கென்யத் தாக்குதல் தொடர்பாக அவர்கள் போட்டிருக்கும் ட்விட்டுகளைத் தொகுத்தால் ஒரு புத்தகமே போடலாம்.
அல் ஷபாபினரின் ட்விட்டர் கணக்குகளின் வழியே அவர்கள் ஒவ்வொருவரும் பின் தொடரும் சக தீவிர அமைப்புகளைக் கவனித்தால் தலைசுற்றல் வந்துவிடுகிறது. ஒசாமா பின்லேடன் இறந்ததுடன் தீவிரவாதம் முடிந்தது என்று யார் சொன்னது? நேற்றைக்கு டெமஸ்கஸுக்குப் பக்கத்து ஊராந்திரமான இரண்டு சிறு நகரங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய கையோடு யாரோ ஒரு உத்தமோத்தமர் ஒரு ட்விட்டு போடுகிறார்: "#Breaking Tel Rakees & Tel Budha-two very strategic towns-captured completely by Mujahideen in East #Damascus." பேப்பர், டிவியெல்லாம் எந்த மூலை? ஊரைப்பிடித்த ரெண்டாவது நிமிஷம் ட்விட் வந்துவிட்டது.
சோமாலியாக்காரர்களுக்கு கென்யாவிலும் சிரியாவிலும் என்ன ஜோலி என்றெல்லாம் கேட்கப்படாது. தீவிரவாதமென்பது எம்பெருமானை நிகர்த்தது. தூணிலுமிருக்கும், துரும்பிலுமிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT