Published : 19 Jul 2016 08:57 AM
Last Updated : 19 Jul 2016 08:57 AM
மாநில அரசுக்கு வரி வருவாய்தான் பிரதான வருவாய் இனம்
பட்ஜெட் என்பது அரசின் ‘ஆண்டு நிதி அறிக்கை’ என்பதையும், பட்ஜெட் அறிக்கையை விவாதித்து அதுகுறித்த சட்டங்களை சட்டப்பேரவை ஏற்படுத்தி, ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பிறகே அது நடைமுறைக்கு வரும் என்றும் பார்த்தோம்.
பட்ஜெட் என்பது ஒருவித சட்ட ஆவணம்தான். அரசுக்கென்று ‘தொகு நிதி’ ஒன்று உள்ளது. மத்திய அரசுக்கு உரியதை இந்தியாவின் தொகு நிதி (Consolidated Fund of India) என்றும், ஒவ்வொரு மாநில அரசுக்கும் உரியதை ‘மாநில தொகு நிதி’ (Consolidated Fund of State) என்றும் அழைக்கிறோம். இந்தத் தொகு நிதியின் உரிமையாளர், இந்திய குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநர். ஒரு மாநில அரசு பெறும் அனைத்து வருவாய்களும் ‘மாநிலத் தொகு நிதி’யில் வரவு வைக்கப்படும். மாநில அரசு செய்ய வேண்டிய செலவுக்கான பணமும் ‘மாநிலத் தொகு நிதி’யில் இருந்தே எடுக்கப்படும். வருவாயை ‘மாநிலத் தொகு நிதி’யில் வரவுவைக்கவும், செலவுகளுக்குப் பணம் எடுக்கவும், மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும் அல்லவா? அதற்குச் சட்டமன்றம் பல சட்டங்களை இயற்றி, ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பும். அச்சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியவுடன், மாநில அரசு அச்சட்டங்கள் கூறியபடி வருவாய் சேகரித்தும், செலவுகள் செய்தும் தங்கள் நடவடிக்கைகளைச் செய்யலாம். இதுதான் பட்ஜெட்டை உருவாக்கி நடைமுறைப்படுத்துகிற விதம்.
எதிர்பாரா செலவு நிதி
‘தொகு நிதி’ மட்டுமல்லாமல், ‘எதிர்பாரா செலவு நிதி’ (Contingency Fund) என்ற ஒன்றும் உள்ளது. ஆளுநரின் ஒப்புதலோடு ‘எதிர்பாரா செலவு நிதி’யில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் வரவாக வைக்கப்படும் (ரூ. 500 கோடி என்று வைத்துக்கொள்வோம்). மாநிலத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளுக்கு (உதாரணமாக இயற்கைச் சீற்றங்களில் பாதிப்படைந்த மக்களைக் காப்பாற்ற ) சட்டமன்ற ஒப்புதல் இல்லாமல் ‘எதிர்பாரா செலவு நிதி’யிலிருந்து மாநில அரசு செலவு செய்யலாம். ஆனால், அடுத்து கூடும் சட்டமன்றத்தில், அந்தச் செலவுகளுக்குச் சட்டமன்றத்தின் ஒப்புதல் பெற்று, ‘எதிர்பாரா செலவு நிதி’யில் அத்தொகையை மீண்டும் வரவு வைக்க வேண்டும்.
மூன்றாவதாக ‘பொதுக் கணக்கு’( Public Account ) என்று ஒன்று உள்ளது. சிறுசேமிப்புப் பத்திரங்கள், பொது வைப்பு நிதி (Public Provident Fund ) போன்ற திட்டங்க ளுக்காக மக்கள் தாமாகவே தங்கள் பணத்தை அரசிடம் கொடுத்துவைக்கிற தொகையை இந்தப் ‘பொதுக் கணக்’ கில் வரவு வைத்து, அவர்கள் கேட்கும்போது வட்டியுடன் திரும்பக் கொடுக்க வேண்டும். இதில், பொது மக்களின் பணத்தை வரவு வைக்கவும், திரும்பக் கொடுக்கவும் ஆளுநரின் அனுமதி தேவை இல்லை.
கடனுக்கென ஒரு சட்டம்
மாநில அரசு வரி, வரி அல்லாத வருவாய், கடன் என்ற மூன்று வழிகளில் வருவாய் பெற்று மாநிலத் தொகு நிதியில் வரவு வைக்கும். இதில் வரி வருவாய்தான் பிரதான வருவாய் இனமாகும். இந்திய அரசியல் சட்டம், பிரிவு 256ன்படி, உரிய அதிகாரம் பெறாமல் மாநில அரசு மக்கள் மீது வரி விதிக்கவோ, வசூலிக்கவோ முடியாது. ஒவ்வொரு ஆண்டும் வரி வருவாயைப் பெறுவதற்கென சட்டமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றி, அதற்கு ஆளுநரின் அனுமதியைப் பெற வேண்டும். இவ்வாறு வரி வருவாய் ஈட்ட ‘நிதிச் சட்டவரைவு’ (finance bill ) ஒன்று நிதி அமைச்சரால் ஆளுநர் அனுமதியுடன் சட்டமன்றத் தில் சமர்ப்பிக்கப்படும். இதனைச் சட்டமாக நிறைவேற்றி, மீண்டும் ஆளுநரின் ஒப்புதல் பெற்றே வரி வருவாய் ஈட்டும் அதிகாரத்தை அரசு பெற முடியும். சட்டமன்றத்தில் உரிய சட்டம் இயற்றாமலும், இயற்றிய சட்டங்களுக்கு ஆளுநரின் இசைவு பெறாமலும் மாநில அரசால் வரி வருவாய் ஈட்ட முடியாது. இவ்வாறு பெறப்பட்ட வரி வருவாய் ‘மாநில தொகு நிதி’யில் வரவு வைக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் பிரிவு 266 கூறுகிறது.
வரி அல்லாத வருவாய் இனங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு அரசுத் துறையும் தாங்கள் செய்கின்ற சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கலாம் (கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தேர்வுத் துறை, வேலைவாய்ப்புத் துறை என்று எல்லா அரசுத் துறைகளிலும் பல வகைகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன). சட்டத்தை மீறுவோர் மீது அபராதம் விதிக்கலாம். அரசுத் துறை வியாபார நிறுவனங்கள் லாபத்தை ஈட்டி அதனை ஈவுத் தொகையாக அரசுக்குக் கொடுக்கலாம். இவை அனைத்தும் வரி அல்லாத வருவாய்களாக ‘மாநிலத் தொகு நிதி’யில் வரவு வைக்கப்படும். வரி அல்லாத வருவாய் இனங்கள் மூலம் பெறப்படுவது மிகச் சொற்பத் தொகையாகவே இருக்கிறது. இதற்கு ‘நிதிச் சட்டம்’ இயற்ற வேண்டியதில்லை.
மாநில அரசு எவ்வளவு கடன் வாங்கலாம் என்றும் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ‘நிதி பொறுப்புச் சட்டம்’ என்று ஒன்று உள்ளது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 3% மிகாமல் கடன் வாங்கலாம். இதற்காக மாநில அரசு கடன் பத்திரங்களை அளிக்க வேண்டும்.
பணம் ஒதுக்குச் சட்டம்
அரசு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ‘மாநிலத் தொகு நிதி’யிலிருந்து பணம் எடுக்கும் அதிகாரம் வேண்டும் அல்லவா? அதற்காக ஒவ்வொரு அரசுத் துறையும் தங்களுக்கு ‘மாநிலத் தொகு நிதி’யிலிருந்து பணம் ஒதுக்க வேண்டும் என்பதைப் ‘பணம் ஒதுக்குச் சட்ட’மாக (Appropriation Act) சட்டமன்றத்தில் இயற்றி, அதற்கு ஆளுநரிடம் இசைவு பெற வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் பிரிவு 114 கூறுகிறது. இதற்காகத்தான் ஒவ்வொரு துறையும் ‘மானிய கோரிக்கை’கள் என்ற ஆவணத்தைச் சட்டமன்றத்தில் வைக்கின்றன. இதில் அத்துறையின் எல்லா திட்டங்களுக்கும் தெளிவான, மிக நுணுக்கமான வகையில் செலவுகளைப் பட்டியலிடுவர். இதனைத் தொடர்ந்து ‘பணம் ஒதுக்கு சட்ட’ மசோதா தாக்கல் செய்யப்படும்.
நிதிச் சட்டம், பணம் ஒதுக்குச் சட்டமன்றம் ஆகியவற்றுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு, பட்ஜெட் செயல்பாட்டுக்கு வரும். அதே நேரத்தில், இந்தச் சட்டங்களின் ஒரு பிரதி, இந்தியக் கணக்குத் தணிக்கை அதிகாரிக்கு (Comptroller and Auditor General of India) அனுப்பப்படும். அவர் மாநில அரசு, ‘நிதிச் சட்டத்’தில் உள்ளது போல வரி வசூலிக்கிறதா, ‘பணம் ஒதுக்குச் சட்டத்’தின்படி செலவு செய்யப்படுகிறதா என்பதை ஆய்வுசெய்வார். மாநில அரசின் வரவு - செலவுக் கணக்குகளைத் தணிக்கைசெய்து அதன் மீது ஓர் அறிக்கையை ஆளுநரிடம் வழங்குவார். அதனை ஆளுநர் சட்டமன்ற விவாதத்துக்கு வைப்பார். இந்த அறிக்கையை ஆய்வுசெய்ய சட்டமன்றத்தில் ‘பொதுக் கணக்குக் குழு’ ஒன்று உருவாக்கப்படும். ஒவ்வொரு கட்சிக்கும் சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இந்தக் குழுவில் இடம் அளிக்கப்படும். ஆகவே, எதிர்க் கட்சியினரும் இக்குழுவில் இடம்பெறுவர். துறை சார்ந்த உயர் அதிகாரி இக்குழுவின் முன் அறிக்கை மீதான விளக்கங்களைத் தருவார்.
இவ்வாறு, பட்ஜெட் தாக்கல் முதல், கணக்கு முடித்து தணிக்கை செய்து அதன் மீது ஆய்வுசெய்யும் வரை ஒவ்வொரு நிலையிலும், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் படி சட்டங்கள் இயற்றப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன. இப்பணி கட்டுக்கோப்பாக நடைபெறுவதற்கான வழிமுறைகளை நம் அரசியல் சட்டம் தெளிவாகச் செய்து வைத்திருக்கிறது.
- இராம.சீனுவாசன், பேராசிரியர்.
தொடர்புக்கு: seenu242@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT