Last Updated : 02 Oct, 2014 10:20 AM

 

Published : 02 Oct 2014 10:20 AM
Last Updated : 02 Oct 2014 10:20 AM

அறிவோம் காந்தி மொழியை...

நம் சமூகத்தில் மட்டுமல்ல, இந்திய மொழிகள் அனைத்திலும் (ஆங்கிலம் உட்பட) காந்தியும் காந்தியமும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறிப்பிடத்தக்கது. நம் சமூகத்தின்மீது பெய்த அன்பின் பெருமழை என்றே சொல்ல வேண்டும் காந்தியை. அந்த மழையின் ஈரம் சமூகத்தின் ஆழத்தில் இன்னும் தங்கியிருப்பதைப் போலவே மொழியிலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. நீங்காத ஈரம் அது!

மொழியில் காந்தி ஏற்படுத்திய தாக்கத்தை ‘காந்தி’ என்ற சொல்லிலிருந்தே ஆரம்பிக்கலாம். எத்தனையோ பெயர்கள் இருந்தாலும் வெகு சில பெயர் களையே சொற்கள்போல மக்கள் பாவிக்கிறார்கள். உண்மை பேசுபவரை ‘நீ பெரிய அரிச்சந்திரன்’, கொடை கொடுப்பவரை ‘கொடுக்குறதிலே கர்ணன்’ என்றெல்லாம் சொல்வதுண்டு. இவை பெரும்பாலும் எரிச்சலான தொனியில் சொல்லப்படுபவை. உண்மைக்கு அரிச்சந்திரன்தான் என்றிருந்த நிலையை ‘காந்தி’ என்ற பெருநிகழ்வு பெருமளவில் மாற்றியிருப்பது அதிசயமே! ‘ஆமாம், வந்துட்டாரு காந்தி’ என்று பலரும் கேலி செய்வதுண்டு.

அடுத்தது, ‘மகாத்மா’ என்ற சொல். ‘மகாத்மா’ என்ற சொல் (தமிழகத்தைப் பொறுத்தவரை) பெரும்பாலும் படித்தவர்களால்தான் பயன்படுத்தப்பட்டது. சாதாரண மக்கள் காந்தி மகான், காந்தி முனிவர் என்றெல்லாம் சொல்லியிருக் கிறார்கள். படித்தவர்கள் சில சமயம் வாஞ்சையாக ‘கிழவர்’ என்று குறிப்பிடுவதும் உண்டு. ஆனால், எல்லாவற்றையும்விட வாஞ்சையானது, அலாதியானது ‘காந்தி தாத்தா’தான். ஏனெனில், மகாத்மாக்கள், மகான்களைவிட நாம் எல்லோரும் அதிகம் நெருங்குவது நம் தாத்தாக்களிடம்தானே!

காந்திக் கணக்கை விட்டுவிட முடியுமா? கால முறையில் இந்தச் சொல்லுக்குப் பல்வேறு அர்த்தங்கள் உண்டு. தனது ஆசிரமத்துக்கு வரும் நிதிகளுக்கெல்லாம் காந்தி துல்லியமாகக் கணக்கு வைத்திருப்பார். எனவே, துல்லியமாகக் கணக்கு வைத்திருப்பதையும் முன்பு ‘காந்திக் கணக்கு’ என்ற சொல் குறித்தது. அந்தக் காலத்தில், காந்தியப் போராட்டங்களில் கலந்து கொள்ளப்போகும் தொண்டர்கள் உணவு விடுதிகளில் சாப்பிட்டுவிட்டு, ‘காந்திக் கணக்கு’ என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். தேசத்துக்காகப் போராடுபவர்களுக்கு ‘காந்திக் கணக்கு’ ஒரு சலுகையாகவே அப்போது பார்க்கப்பட்டது.

தற்போதும், கட்டணங்களையோ விலையையோ கடனையோ கொடுக்காமல் தப்பிப்பவர்கள் ‘காந்திக் கணக்கு’ என்று சொல்லிவிட்டுச் செல்வதுண்டு. முன்பு, சேவைக்கான சலுகையாக இருந்தது, இன்று ஏமாற்றுபவர்களின் வாசகமாக ஆகியிருக்கிறது. நம் கடன்கள், தவறு எல்லா வற்றையும் நம் தாத்தாவிடம்தானே போய்க் கொட்டுகிறோம் என்று காந்தியிடம் அன்பாக நாம் எடுத்துக்கொள்ளும் சலுகை போன்றும் இது அமைகிறது. ஒரு விதத்தில், ‘எல்லாவற்றையும் அந்தக் கடவுள் பார்த்துக்கொள்வார்’ என்று சொல்வோமல்லவா, அதேபோல் காந்திக்கும் ஓர் இடத்தை நாம் கொடுத் திருப்பதன் அடையாளமாகவும் கொள்ளலாம்.

காந்தி, காந்தியம் தொடர்பான சொற்கள் மூன்று விதத்தில் இருக்கின்றன. முதல் வகை, காந்தியால் உருவாக்கப்பட்டவை (எ-டு) சத்தியாக்கிரகம். இரண்டாவது வகை, ஏற்கெனவே இருந்த சொற்களுக்கு காந்தி கொடுத்த பொருள் (எ-டு) சத்தியம், அகிம்சை. மூன்றாவது, காந்தியையும் காந்தியத்தையும் ஒட்டி பிறர் உருவாக்கும் சொற்கள் (எ-டு) மகாத்மா, காந்தி குல்லாய்.

காந்தி, காந்தியம் தொடர்பான முக்கியமான சொற்களுள் சில:

அகிம்சை, ஆலயப் பிரவேசம், ஒத்துழையாமை, கதர், காந்திகிராமம், காந்தி குல்லாய், காதி, கிராம ராஜ்யம், கைத்தறி, சத்தியசோதனை, சத்தியாக்கிரகம், சத்தியம், பிரம்மச்சரியம், பஞ்சாயத்ராஜ், ராட்டை.

- ஆசை,
தொடர்புக்கு: asaithambi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x