Last Updated : 19 Dec, 2014 02:56 PM

 

Published : 19 Dec 2014 02:56 PM
Last Updated : 19 Dec 2014 02:56 PM

ஆயுதங்கள் இல்லாமல் மாற்றம் இல்லை!- விஜய் குமார் ஐபிஎஸ்

மோடி அரசிலும் விஜய் குமார் ஐபிஎஸ் பரபரப்பாக இருக்கிறார். மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக உறுதியான யுத்தத்திற்குத் தயாராகிவிட்ட அரசு, இப்போது அதற்கான வியூகங்களை விஜய் குமார் தலைமையிலான குழுவிடம்தான் வகுக்கக் கேட்டிருக்கிறது.

புதிய அரசு மாவோயிஸ்ட் விஷயத்தை எப்படிப் பார்க்கிறது? முந்தைய காங்கிரஸ் அரசுக்கும் இப்போதைய பாஜக அரசுக்கும் உள்ள அணுகுமுறை வேறுபாடுகள் என்ன?

நாம் மாவோயிஸ்ட்டுகள் விவகாரத்தை அணுகும் விதத்தில் 2009-ல் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. ‘ஒருங்கிணைந்த செயல் திட்டம்’ என்று அதைச் சொல்லலாம். அதாவது, ஒருபக்கம் படைகள் நுழையும்போதே இன்னொருபுறம் வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டுசெல்வது. முந்தைய காங்கிரஸ் அரசு கையாண்ட அதே மாதிரி அணுகுமுறையைத்தான் இப்போதைய பாஜக அரசும் முயற்சிக்கிறது.

பிரதமர் மோடி இந்த விஷயத்தை எப்படி அணுகுகிறார்? நீங்கள் அவரைச் சந்தித்தீர்களா? அரசு இந்த விஷயத்தைக் கையாள என்ன மாதிரியான வியூகத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்?

மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவதில் அவர் மிகுந்த உத்வேகத்துடன் இருக்கிறார். தொடர்ந்து அரசு பேசிவருகிறது. விரைவில் அவரைச் சந்திப்பேன் என்று நினைக்கிறேன். அரசுக்குச் சொல்லும் வியூகத்தைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள முடியாது.

இந்தப் போரில் அரசப் படைகள் எவ்வளவு பேர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்?

கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

நீங்கள் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் பொறுப்பேற்றது முதல் இன்று வரையிலான காலகட்டத்தில், ‘சிவப்புப் பிராந்திய’த்தில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் என்னென்ன? அரசின் இதுவரையிலான வியூகங்கள் வெற்றி பெற்றிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

நிச்சயமாக மாவோயிஸ்ட்டுகளை நிறைய இடங்களில் ஒடுக்கியிருக்கிறோம். உத்தரப் பிரதேசத்தில் சோனபத்ராவிலும் சந்தோலியிலும் ஒருகாலத்தில் அவர்கள் ஆதிக்கம் இருந்தது. ராஜ்நாத் சிங் அரசும் தொடர்ந்து மாயாவதி அரசும் எடுத்த கறாரான நடவடிக்கைகள் அங்கே அவர்களுடைய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. ஆந்திரத்தில் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். மேற்கு வங்கத்தில் ஒருகாலத்தில் நிறைய வன்முறைகளில் ஈடுபட்டார்கள். படைகள் அங்கு சென்ற பின், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டார்கள். நிறையப் பகுதிகளை நாம் அவர்களிடமிருந்து விடுவித்திருக்கிறோம். ஒடிஸாவும் மஹாராஷ்டிரமும்கூடக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிவருகின்றன. இன்றைக்கு எங்கே வலுவாக இருக்கிறார்கள் என்றால், சத்தீஸ்கரிலும் ஜார்கண்டிலும். மத்தியப் பகுதியில் ஒன்றை ஒன்று ஒட்டியிருக்கும் மாநில எல்லைகளைத் தொட்டுச் செல்லும் காடுகளில். தொடர்ந்து தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தால், அங்கும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றே நினைக்கிறேன்.

உங்களால் ‘விடுவிக்கப்பட்ட பகுதி’களில் இன்றைய நிலைமை என்ன? அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? அங்கெல்லாம் முற்றிலுமாக மாவோயிஸ்ட்டுகள் அகற்றப்பட்டிருக்கிறார்களா? முன்பு ஒரு பேட்டியில், “இப்படியான பகுதிகளில் முதல் பூட்ஸாக ஆயுதப் படைகள் நுழைந்தால், கையோடு அடுத்த பூட்ஸாக வளர்ச்சி நுழைய வேண்டும்; அப்போதுதான் தீர்வு கிடைக்கும்’’ என்று சொன்னீர்கள். அப்படி நடக்கிறதா?

உண்மைதான். இப்படி ஒரு பகுதிக்குள் நுழையும்போது அங்குள்ள மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத் துறை அதிகாரி ஆகியோரோடு கலந்தாலோசித்து, அங்கு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது, மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 30 கோடி அளிப்பது என்றெல்லாம் நிறைய யோசித்தோம். அந்தக் காரியங்கள் தடைபட்டுவிட்டன. ஒரு இடத்தில் நாம் சண்டை போடுகிறோம், அந்தப் பகுதியைக் கட்டுக்குள் கொண்டுவருகிறோம் என்றால், உடனே அடுத்தடுத்து அங்கே வளர்ச்சித் திட்டங்கள் வர வேண்டும். அப்போதுதான் நிரந்தரமான மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

நீங்கள் பார்த்த அளவில் அங்குள்ள மக்கள் என்ன மாதிரி சூழலில் வாழ்கிறார்கள்? அவர்களுடைய தேவைகளாக நீங்கள் உணர்வது எவற்றை? எந்தக் காரணத்தால் அவர்கள் மாவோயிஸ்ட்டுகளின் பின் நிற்கிறார்கள்?

அங்குள்ள மக்களுக்கு அநீதி நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. பழங்குடியின மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தது இருநூறு ஆண்டுகள் பின்னால் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை அப்படியே விட்டுவிட முடியுமா, இந்த நூற்றாண்டுக்கு அழைத்து வர வேண்டாமா? இதுதான் கேள்வி. நாட்டுக்குக் கிடைத்த சுதந்திரமும் வளர்ச்சியும் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும். நீங்களும் நானும் சாப்பிடும் கேக்கில் அவர்களுக்கான பகுதி அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். என் அளவில் நான் அவர்களுடைய தேவைகளாகப் புரிந்துகொண்டிருப்பவை எளிமையானவை. சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள்.

இவற்றையெல்லாம் ஆயுதங்கள் இல்லாமல் அரசால் செய்ய முடியாதா?

வளர்ச்சி அங்கே கொண்டுசெல்லப்பட வேண்டும், அதற்கு அதிகாரப் பரவலாக்கம் வேண்டும் என்பதால்தான் பஸ்தரை 7 மாவட்டங்களாகப் பிரித்தார்கள். ஆனால், வெறுமனே வளர்ச்சித் திட்டங்களால் அங்கே நுழைய முடியவில்லையே?

ஆனால், ஒரு நாட்டின் சொந்த மக்களே ஆயுதம் எடுத்துப் போராடுகையில், அவர்களுக்கு எதிராகத் துப்பாக்கியைத் தூக்குவதைவிடவும், அவர்களுடைய பிரச்சினைகள், தேவைகளைப் பூர்த்திசெய்வதுதானே நீண்ட காலத் தீர்வை அளிக்கும்?

நான் ஆயுதங்களால் மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்று சொல்லவில்லை. நிச்சயம் இது ஒரு சமூகப் பொருளாதாரப் பிரச்சினை. ஆனால், சாலைகள், பள்ளிக்கூடங்கள் கட்டுமானப் பணியைக்கூடத் தடுப்பவர்கள் துப்பாக்கிகளோடு இருக்கும் பகுதியில் எப்படி ஆயுதங்கள் இல்லாமல் உள்ளே நுழைவது? வாய்ப்பே இல்லை.

ஒரு அதிகாரியாக அல்லாமல், மாவோயிஸ்ட்டுகளின் நிர்வாகத்தை அங்கு நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அங்குள்ள மக்களுக்கும் அவர்களுக்கு இருக்கும் பிணைப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மாவோயிஸ்ட்டுகளின் வளர்ச்சிக்கு அங்கு வழிவகுத்ததாக தெந்து இலைகளுக்குக் கூடுதல் விலை அவர்கள் வாங்கித் தந்ததாகப் பலரும் சொல்வார்கள். அப்படி நடந்திருந்தால் அது நல்ல விஷயம். ஆனால், கூலி உயர்வு போன்ற விஷயங்களைத் தவிர்த்து, அவர்கள் அங்கு செய்திருப்பது என்ன? பஸ்தர் 25 வருஷங்களுக்கும் மேலாக அவர்கள் கைகளில்தான் இருக்கிறது. அரசாங்கம் வரி வசூலிப்பதைப் போல வரி வசூலிக்கிறார்கள். என்ன முன்னேற்றத்தை அவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள்? முதலில், அவர்களுடைய பள்ளிக்கூடங்களில் என்ன பாடம் கற்றுத் தருகிறார்கள்? உண்மையான முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுபவர்கள் யாராவது சிறாருக்குத் துப்பாக்கிப் பயிற்சி அளித்துப் போருக்கு அனுப்புவார்களா? நான் பேசுவது கிடக்கட்டும். டெல்லியைச் சேர்ந்த பேராசிரியர் நிர்மல்ஜித் முகர்ஜி நீண்ட காலம் மாவோயிஸ்ட்டுகள் மேல் அபிமானம் கொண்டிருந்தவர். அவரே அவர்களுடைய நடத்தையில் ஏமாற்றமடைந்து, இப்போது கடுமையாக விமர்சித்துதான் எழுதுகிறார். விஷயம் என்னவென்றால், அங்குள்ள மக்கள் காலங்காலமாகப் பின்தங்கியிருப்பதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் மாவோயிஸ்ட்டுகளுக்கும் மக்களுக்குமான உறவைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மக்களுடைய நிலைமை மாறும்போது மாவோயிஸ்ட்டுகளுடனான உறவும் அங்குள்ள சூழலும் நிச்சயம் மாறும்!

சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x