Published : 05 Oct 2014 09:17 AM
Last Updated : 05 Oct 2014 09:17 AM
கோஷங்களை உருவாக்குதலில் உள்ள பெரிய அனுகூலம், கோஷங்கள் அவற்றுக்குப் பின்னுள்ள உண்மைகளை முழுக்க மறைத்து, ஒரு மாய பிம்பத்தை உருவாக்கிவிடும் என்பதுதான்.
‘இந்தியாவில் உருவாக்குவோம்!’
- நல்ல கோஷம். எதை உருவாக்கப்போகிறோம்? யாருக்காக உருவாக்கப்போகிறோம்?
உடல் முழுவதும் இயந்திரப் பாகங்கள் சுழலும் சிங்கம் படத்தை ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ (மேக் இன் இந்தியா) கொள்கையின் சின்னமாக அறிமுகப்படுத்திய மோடி, “இது சிங்கம் எடுத்துவைக்கும் முதல் அடி” என்றார். அதாவது, இந்தியா எனும் சிங்கம் இப்போது தான் தன்னைச் சிங்கமாக உணர்ந்து, முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது என்பது அவர் சொல்ல விரும்பியது. உண்மையில், எதற்காக மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று இந்தியப் பெருநிறுவனங்களின் உலகம் அவரை முன்நிறுத்தியதோ, அந்த நோக்கத்தை நோக்கி மோடி எடுத்துவைத்திருக்கும் முதல் அடி இது!
சிவப்பு நாடாவும் சிவப்புக் கம்பளமும்
முன்னதாக, ஜப்பான் பயணத்தின்போதே இந்தியாவின் புதிய தொழில் கொள்கை எப்படி இருக்கும் என்பதை மோடியின் பேச்சு உணர்த்தியது. “உங்கள் அதிர்ஷ்டத்தை இந்தியாவில் வந்து சோதித்துப் பாருங்கள். இந்தியாவில் குறைந்த செலவில், உற்பத்தியில் பல அதிசயங்கள் நிகழும். எந்தத் தொழிலதிபருமே குறைந்த செலவிலான உற்பத்தியைத்தானே விரும்புவார்? இந்தியாவில் ஏராளமான உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளனர்; வாருங்கள்!” என்று ஜப்பான் தொழிலதிபர்கள் இடையே அவர் தொடங்கிய உரையே சுரண்டலுக்கான அப்பட்டமான அழைப்பு.
சட்டை 50 ரூபாய் என்றால், கூலி எவ்வளவு?
நம்முடைய மக்கள்தொகையையும் வறுமைச் சூழலையும் பயன்படுத்திக்கொண்டு 50 ரூபாய் விலையில் ஒரு சட்டையை நாம் உலகத்துக்கு உருவாக்கிக்கொடுத்துவிடலாம். அப்படி 50 ரூபாய் அடக்கத்தில் ஒரு சட்டையை உருவாக்கு பவருக்கு அந்தச் சட்டையிலிருந்து என்ன வருமானம் கிடைக்கும்? அவருக்கு மூலப்பொருட்களை இத்தனை மலிவாகக் கொடுப்பவருக்கு என்ன கிடைக்கும்? ஒரு நாள் கண்ணியமான வருமானத்தைப் பெற இவர்களெல்லாம் எத்தனை நேரம் உழைக்க வேண்டும்? ஒரு நுகர்வோரோ வியாபாரியோ இதை யோசிக்காமல் போகலாம். அறவுணர்வும் தொலைநோக்கும் கொண்ட ஒரு பிரதமர் நிச்சயம் யோசிக்க வேண்டும்.
மூல நோக்கம் என்ன?
வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து இந்தியாவின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதே ‘இந்தியாவில் உருவாக்கு வோம்’ கொள்கையின் அடிப்படை நோக்கம் என்று அரசு கூறுகிறது. ஆனால், இக்கொள்கையின் மைய நோக்கம் எது என்பதைத் தொடக்க விழாவே காட்டிக்கொடுத்தது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்டிரி, ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார்மங்கலம் பிர்லா உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி 500 பெருநிறுவன முதலாளிகளே விழாவின் பங்கேற்பாளர்கள்.
இந்தியத் தொழில் துறையின் எதிர்காலம் இந்த 500+ பெருநிறுவன முதலாளிகளிடம்தான் இருக்கிறது என்கிற அரசின் பார்வையே மோசமானது. அவர்கள் நடுவே மோடி ஆற்றிய உரை இன்னும் ஆபத்தானது. “அரசுக் கொள்கைகள் அவ்வப்போது மாற்றப்படுவது, மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) விசாரணை எனப் பல்வேறு காரணங்களால் தொழிலதிபர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. நான் உங்கள் அச்சத்தை அகற்ற வும் நம்பிக்கையை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன். இந்த நாடு உங்களுடையது. நமது நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக வேண்டும்” என்றார் மோடி.
என்ன மாதிரியான சமிக்ஞை இது?
இந்தியாவின் பெருமுதலாளிகளை எந்த அரசாங்கத்தின் மாறுபட்ட கொள்கைகளும் எந்தக் காலத்திலும் மிரட்டியதில்லை. மாறாக, கொஞ்ச காலத்துக்கு முன் நம்முடைய பெருமுதலாளிகள் - அனில் அம்பானி, சுனில் மிட்டல், நவீன் ஜிண்டால், சஜ்ஜன் ஜிண்டால், குமார்மங்கலம் பிர்லா என்று - பலரும் சிக்கியது தொழில் விதிமீறல்களில். இன்னும் சொல்லப்போனால், நாட்டைச் சுரண்டும் ஊழல் - முறைகேடு குற்றங்களில். அதுவும் உச்ச நீதிமன்றம், தலைமைத் தணிக்கையாளர், மத்தியப் புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் உபயத்தில் சிக்கினார்கள்.
இந்நாட்டின் உயரிய நீதிசார் அமைப்புகளால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மத்தியில், “இனி உங்கள் அச்சத்தை அகற்றவும் நம்பிக்கையை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன்” என்று ஒரு பிரதமர் பேசுவது சம்பந்தப்பட்டவர்களுக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தவர்களுக்கும் என்ன மாதிரியான சமிக்ஞைகளை அனுப்பும்?
அரசாங்கம் பெருநிறுவன முதலாளிகளுக்கானதா?
அமெரிக்கப் பயணத்தில் இன்னும் வெளிப்படையாகப் பேசினார் மோடி. “அரசாங்கம் தொழில்களில் ஈடுபடக் கூடாது. அதன் வேலை தொழில்களுக்குத் துணையாக இருப்பது மட்டுமே... சில சமயங்களில் அரசாங்கங்கள் புதிய சட்டங்களை இயற்ற விரும்புகின்றன. நான் அதைச் செய்ய மாட்டேன். விரைவில் புதிய குழு ஒன்றை அமைக்க விருக்கிறேன். அதன் பணி, தேவையற்ற சட்டங்களை நீக்குவது மட்டுமே. தொழில் தொடங்க இந்தியாவுக்கு வாருங்கள்” என்றார்.
இந்தியாவில் தேவையற்ற சட்டங்கள் ஏராளமானவை இருக்கின்றன. ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் உட்பட. மோடி நீக்க விரும்பும் சட்டங்கள் இந்த ரகம் அல்ல. நோக்கியாவும் வோடஃபோனும் இங்கு மாட்டிக்கொள்ளக் காரணமாக இருக்கும் ரகச் சட்டங்கள். இந்தியாவில் சட்டப் புத்தகங்களிலாவது இன்னும் உயிரோடு இருக்கும் சுரண்டலுக்கு எதிரான சட்டங்கள். நீர், நிலம், வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்தும் தொழிலாளர்கள் நலன் சார்ந்தும் பெருமுதலாளிகளுக்குத் தடையாக இருக்கும் சட்டங்கள்/விதிகள்.
மோடி அரசின் தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறைச் செயலர் அமிதாப் காந்த் குழுவின் கையில் மட்டும் இப்படித் தூக்கிவீச வேண்டியவை என்ற பட்டியலில் 20 தொழிலாளர்கள் சட்டங்கள்/விதிகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று, ‘100 பேருக்கு மேல் பணியாற்றும் ஓர் ஆலையை மூடத் தீர்மானிக்கும் முன் அரசின் அனுமதியைப் பெற வேண்டும்’ என்பது. இந்த விதியை தூக்கிவிட்டு, ‘1000 பேர் வரை பணியாற்றுவோர் ஆலையை மூட அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை’ என்ற விதியைக் கொண்டுவர விரும்புகிறார்கள்.
அதாவது, ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் நிலத்தைக் கையகப்படுத்தி, பத்திரப் பதிவுக் கட்டணம்கூட இல்லாமல் பதிவுசெய்து கொடுத்து, தடையில்லா மின்சாரம், வரி விலக்குகள் என்று வாரி வழங்கிக் கொண்டுவரப்படும் நோக்கியா போன்ற ஒரு ஆலையில்- 999 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்போது -அவர்கள் எந்த நிலையிலும் யாருக்கும் பதில் சொல்லாமல் மூடிவிட்டு போகலாம். இது ஒரு உதாரணம். அவ்வளவே. இன்னும் நிலம் கையகப்படுத்தல் சட்டம், வன உரிமைச் சட்டம் என்று பூர்வகுடிகளின் உரிமைகளைப் பறிக்க வெறியோடு நிற்கிறது பெருநிறுவனங்கள் லாபி.
இயற்கை வளங்களைத் தாரைவார்க்கும் அரசின் நடவடிக்கைகள் அநேகமாக, நிலக்கரித் துறையைத் தேசியமயமாக்கல் பட்டியலிலிருந்து நீக்குவதிலிருந்து தொடங்கலாம். மத்திய மின்சார நெறிமுறை ஆணையம் இதற்கான பரிந்துரையை அரசுக்கு ஏற்கெனவே அனுப்பி யாகிவிட்டது.
யாருக்கான வேஷம் இது?
அமெரிக்கப் பயணத்தின்போது, மோடி அங்கு ‘அங்கிள் சாம்’ வேஷம் போட ஏதுவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று, அரசு மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை கடாசப்பட்டது. காசநோய், இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்குப் பயன் படுத்தப்படும் 108 மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தும் கொள்கையை அரசு கைவிட்டிருக்கிறது. அமெரிக்க மருந்து நிறுவன அதிபர்களை ஈர்க்க இந்த நடவடிக்கை உதவும் என்று மோடி நினைத்திருக்கலாம்.
மேடையில் மோடி டிரம்ஸ் வாசித்ததைப் பற்றியும், ஒபாமாவுடன் இணைந்து கட்டுரை எழுதியதைப் பற்றியும், அவர் உருவாக்கும் கோஷங்களைப் பற்றியும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லோர் பார்வைகளுக்கும் அப்பாற்பட்டு, மேடைக்குப் பின்புறத்தில், அரங்கேறிக் கொண்டிருக்கின்றன விபரீத ஒப்பந்த ஒத்திகைகள்.
நமக்கான தொழில் கொள்கை எது?
இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. ஆனால், அது கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்வதாக இருக்க வேண்டும். இந்தியாவின் தொழில் கொள்கையில் நிச்சயம் மாற்றம் தேவை; ஆனால், அது இயற்கையையும் சூழலையும் அறநெறிகளையும் சிதைக்காமல், நம் சமூகத்தில் தொழில்முறைக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் மாற்றமாக இருக்க வேண்டும். சுதேசி உற்பத்தியைச் சுதந்திரப் போராட்ட ஆயுதமாக முன்னெடுத்த நாடு இது. தொழில் கருவிகளைக்கூட ஓர் உயிராக, கடவுளாக வழிபடும் மரபு நம்முடையது. உயிருள்ள சிங்கத்தின் இயக்கத்தை இயந்திரப் பாகங்களின் இயக்கமாகப் பார்க்கும் நவீன இயந்திரச் சிந்தனையிலிருந்து அல்ல; நம்முடைய அறம்சார் தொழில் வரலாற்றிலிருந்தே நாம் நமக்கான பாடத்தைப் பெற முடியும்!
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT